வில்லிபுத்தூராழ்வாரின்
மகன் 'வரந்தருவான்' என்றுபெயர்.
இவர் தன் தந்தை வில்லிபுத்தூராழ்வாரிடமே
பாடம் கற்றுக் கொண்டு வந்தார். ஒருநாள் தன் தந்தை சொன்ன பொருளை விட்டு வேறு பொருள்
உள்ளது என மறுப்புச் சொன்னதால், அவரின் தந்தைக்கு கோபம்
வந்து மகனை விரட்டி விட்டார். மகன் வரந்தருவான் வேறு ஊருக்குச் சென்று வேறு ஒரு ஆசிரியரைக்
கொண்டு பாடம் கேட்டு வந்தார். தன் தந்தையின் கண்ணில்படாமல் வாழ்ந்து வந்தார்.
ஒருநாள், தந்தையான வில்லிபுத்தூராழ்வார் தான் இயற்றிய பாரதத்தை சபையில்
அரங்கேற்றினார். அப்போது அந்த நூலின் முதல் வார்த்தையான 'ஆக்குமாறயனாம்'
என்னும் கவியைக் காப்பாக எடுத்து பாடினார்.
அரங்கேற்ற சபையில்
இருந்தவர்கள், வில்லிபுத்தூராரை நோக்கி, 'நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பின்னர் உங்களின்
அரங்கேற்றத்தை தொடங்குங்கள்' என்றனர். என்ன கேள்வி என்றதற்கு,
'நீங்கள் அரங்கேற்றுவதோ வியாசரின் பாரதம்; அந்த
நூலில் முதலில் விநாயகரை வணங்கும் பாடலை முதலில் பாடியே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது;
அப்படி இருக்க, நீங்களோ, பொதுவான வணக்கம் மட்டுமே சொல்லி கவியை தொடங்குகிறீர்கள்; ஏன் விநாயகரை வணங்கும் கவியை சொல்லவில்லை' என்று கேட்டனர்.
அப்போது வில்லிபுத்தூரார்
பதில் சொல்ல முடியாமல் தவித்தபோது, அவரின் மகன்
வரந்தருவான் எழுந்து சபையோரைப் பார்த்து, 'இங்கு பல சமயத்தை சேர்ந்தவர்கள்
கூடி இருக்கிறார்கள்; எனவே பொதுவணக்கம் செய்வதே முறை;
மேலும் விநாயகர் வணக்கத்தை, கவி தனக்குத்தானே கூறிவிட்ட
பின்னரே, இந்த பொதுவணக்கத்தை சபையில் கூறினார்' என்று கூறி
சமாளித்தார்.
சபையில் இருந்தவர்கள், 'நீ யார்? என்று கேட்க, அவனும், நானே வில்லிபுத்தூராரின் புத்திரன் என்று கூறினார்.
அப்போதுதான் வில்லிபுத்தூராரும், வந்தது தன் மகன்தான் என்று தெரிந்து
மகிழ்ச்சி கொண்டார்.
சபையில் இருந்தவர்கள், 'அதுசரி, உனக்கு உன் தகப்பன் மனதுக்குள்,
விநாயகர் துதி பாடினார் என்று எப்படித் தெரியும் என்று கேட்டனர்.
இவர் பாடிய விநாயகர்
காப்பு இதுதான் என்று கூறி இந்த கவியை பாடினார்.
'நீடாழி யுலகத்து
மறைநாலொடைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன்
மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக மேமேரு வெற்பாகங்
கூரெழுத்தாணி தன்
கோடாக வெழுதும்பிரானைப்
பணிந்தன்புகூர்வாமரோ'
பின்னர், வில்லிபுத்தூரார் பாரதத்தை அரங்கேற்றி, தன்
மகனை அதற்கு சிறப்பாயிரம் செய்யும்படி பணித்தார்.
No comments:
Post a Comment