Wednesday, April 23, 2014

நைஷதம்

நைஷதம்:
நிஷத நாடு. இதன் அரசன் வீரசேனன். அவரின் மகன் தான் நளன். மாமன்னன்.
நளனின் மனைவி தமயந்தி. இவர்களின் மகன் இந்திரசேனன். மகள் இந்திரசேனை.
அரசனான நளன் மிகுந்த அறிவாளி. கொடையாளி, ஆண் அழகனும் கூட. இவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இந்த பூமியில் இல்லையாம். எல்லாச் சிறப்புகளும் உடையவன்.

இவன் வாலிபப் பருவத்தில் இருந்தபோதே இவ்வளவு சிறப்பும் பெற்றவன்.

தமயந்திக்கு திருமண வயதில் சுயவரம் செய்ய அவரது தகப்பன் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, நளனின் சிறப்பைப் பற்றி ஒரு அன்னப்பறவை பெருமைபட பேசிக் கொண்டிருந்ததாம், அது பேசியதை தமயந்தி கேட்கிறாள். இவளது சுயம்வரத்துக்கு இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஆனால், தமயந்தியோ. தேவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நளன் இருக்கும் இடத்தைதேடி அவனுக்கே மாலை இடுகிறாள்.  

இவர்கள் இருவருக்கும் கோலாகல திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பின் இவர்கள் இருவரும் காமனும்-ரதியும் போல வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை மற்றவர்களை பொறாமைப்படுத்துகிறது. கலிபுருஷனை வெகுவாக பொறாமைப் படுத்தியது. அவன் இவன் தம்பி புஷ்கரனை ஏவி விடுகிறான். அவன் நளனுடன் சூதாடுகிறான். அதில் அவன் வென்றும் விடுகிறான். நளன் தோற்றுப்போகிறான். இவை எல்லாம் கலியின் ஏற்பாடு. தன் தம்பியிடம் சூதில் நாட்டை பறிகொடுத்த நளன், தன் மனைவி தமயந்தியைக் கூட்டிக் கொண்டு கட்டிய துணியுடன் காட்டுக்குப் போகிறான்.

தமயந்தியோ அரண்மனையில் ராணியாக வாழ்ந்தவள். கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்கள். பஞ்சு மெத்தையில் படுக்கை. கால் தரையில் படாமல் வாழ்ந்தாள். இன்றோ கட்டிய புடவையுடன் கணவன் பின்னால் காட்டில் நடக்கிறாள். நடக்கவும் தெரியாமல் கல்லும் முள்ளும் கால்களை குத்துகின்றன. இவளை கூட வரவேண்டாம் என்றே நளன் சொல்லியும் கேளாமல், கணவனை பின்தொடர்ந்து வருகிறாள். அவனுக்கோ மனைவி படும் துன்பத்தைக் காண மனம் சகிக்கவில்லை.

ஒருநாள் இரவு, படுத்துத் தூங்கும்போது, இவளை தனியே விட்டுவிட்டு, நளன் மட்டும் தப்பிச் செல்கிறான். அப்படியாவது அவள் நாட்டுக்கு சென்று நல்ல வாழ்க்கை வாழ்வாள் என்ற எண்ணம் கணவனுக்கு. அவளோ பல இடங்களில் கணவனைத் தேடித் திரிகிறாள். அவளுக்குப் பல இடையூறுகள். கடைசியாக வேறு வழியின்றி அவளின் தகப்பனின் நாட்டுக்குச் செல்கிறாள்.

பின்னர், ஒருநாள் நளன், தமயந்தியைத் தேடிக் கொண்டு இங்கு வருகிறான். அவளைச் சந்திக்கிறான். பின்னர், அவன் சகோதரன் புஷ்கரனைப் போரில் வென்று அவனது இராச்சியத்தைத் திரும்பப் பெறுகிறான்.

இந்த கதையை மிக விரிவாக சொல்லும் நூல்தான் 'நைஷதம்'. நிஷத நாட்டு மன்னனின் கதை நைஷதம்.
இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அதற்கும் 'நைஷதம்' என்றே பெயர்.


No comments:

Post a Comment