Tuesday, April 22, 2014

பெருச்சாளி

பெருச்சாளி
--(நன்றி.  திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

ஒரு ஊரில் ஒரு விவசாயி. அவன் கஷ்டப்பட்டு ஒரு கிழங்குத் தோட்டம் போட்டிருந்தான். அவனுக்கு சனியாக வந்த பெருச்சாளி அவன் கிழங்குகளை எல்லாம் நாசமாக்கி கொண்டு வந்தது. அவனோ பரம ஏழை. 'அவனா, பெருச்சாளியா' என்ற அவல நிலை. பாவம் அவன் என்ன செய்வான்?

ஒரு பெருச்சாளிப் பொறி வாங்கி தோட்டத்திலே இடம் பார்த்து மறைவாக வைத்தான். ஆனால், பெருஞ்சாளி பெரிய கை தேர்ந்த பெருச்சாளி. தப்பிக் கொண்டே வந்தது.

ஒரு நாள் அதிகாலையில் பொறி வைத்த இடத்தில் இருந்து பெரிய சத்தம். விவசாயியின் எட்டு வயது மகன் ஓடோடிச் சென்றான் என்னவென்று பார்க்க. பொறியில் பிடிபட்டது ஒரு கருநாகம். முற்றிலும் சாகாத நிலையில் அப்படியும், இப்படியும் ஆக்ரோஷத்துடன் தலையை அடித்துக் கொண்டிருந்தது. பொறிக்குத் தெரியுமா அது பெருச்சாளியைப் பிடிக்க வைத்த பொறி என்று. கிட்ட வந்த பாம்பை தவறுதலாகப் பிடித்து விட்டது. தள்ளி நின்று புதினம் பார்த்தான் பையன். பிரண்டு, பிரண்டு அடித்த பாம்பு அவனை எட்டி கொத்தி விட்டது.

விவசாயியும், அவன் மனைவியும் குய்யோ முறையோ என்று தங்கள் தலையில் அடித்து அடித்துக் கதறினார்கள். பாம்பையும் ஒரே அடியில் கொன்று போட்டாகி விட்டது. ஊர் முழுக்க அழுதது. பையனுடைய இறந்த சடலத்தை கொண்டு போய் புதைத்தார்கள்.

பன்னிரண்டு நாள் துக்கம் அனுட்டிக்க வேண்டும். பன்னிரண்டாம் நாள், ஊர் வழக்கப்படி பந்து சனம் எல்லோரையும் கூப்பிட்டு விருந்தும் கொடுக்க ஏற்பாடு. ஏழை விவசாயிடம் என்ன இருக்கு? வெகுகாலமாக வளர்த்த ஒரே ஒரு ஆடு. அதை வெட்டி எல்லோருக்கும் விருந்து வைத்தான்.

பெருச்சாளியைக் கொல்லத் தான் பொறி வைத்தான் கமக்காரன். ஆனால் அவனுடைய பிள்ளை இறந்தது. பிறகு பாம்பும் செத்தது. அதற்குப் பிறகு அருமையாக வளர்த்த ஆடும் செத்தது.. பெருச்சாளி மட்டும் இன்னும் அவன் வயலில் ஒடிக் கொண்டே இருக்கிறது.


--(நன்றி.  திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment