Monday, February 15, 2016

கிராதார்ச்சுனீயம் (பாஞ்சாலியின் கோபம்)

கிராதார்ச்சுனீயத்தில் பாஞ்சாலியின் பேருரை:
தருமனை நோக்கிப் பாஞ்சாலி நிகழ்த்தும் பேருரை:

"என் உயிர் காதல! நீர் தரும நெறி தவறாத ஒழுக்கமுடையவர்; நானோ சின்மதிப் பெண்மை தாங்கி நின்றவள்; உம் முன்னால் அரசியல் பற்றி யாதும் பேசத் தகுதியற்றவள்; எனினும், 'மாற்றான் வலிமையுடையவன்' என்று நீர் கூறிய மாற்றமே என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசத் தூண்டியது;"

"உயிர்த்துனைவ! முன்னர் இந்திரனுக்கு இணையான இகல் வேந்தரால் நன்கு பரிபாலிக்கப்பட்ட இந்த குருநாட்டு அரசு, கடகளிற்றின் (ஆண் யானையின்) கையில் அகப்பட்ட கமழ் பூமாலை என உம்மால் கொன்றே சிதைக்கப் பட்டது; நீவிர், அரசை அன்று ஊழ்வழியால் இழந்தீர் அல்ல; பகைவனின் வாளி (அம்பு) கூர்மை உடையது என்று அறிந்தும், இரும்புச் சட்டை அணியாது பாராமுகமாய் இருந்து வருகிறீர்! 'வருமுன் காப்பது நியாயமல்லவோ! வஞ்சகனிடத்தில் வஞ்சகமாக நடக்காதவனுக்கு இவ்வுலகில் அவமானம் வந்து எய்துதல் திண்ணம் என்பதை அறியமாட்டீரா?"

"இலக்குமி சபலை (ஒரே இடத்தில் நிலை இல்லாதவள்) என்றாலும் குணமுள்ள கோமானை ஒருபோதும் விட்டு அகலுவதில்லையே! எழினலங்கொண்ட உமது உயிர் போன்ற மனையாளை (மனைவியை) மன்னவன் அவையில் மாற்றான் மானபங்கம் செய்யப் பார்த்திருந்தும் வாயடக்கி வாளாதிருந்தீரே? நாடுதோறும் விபத்துக்கள் எங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தும், நீர் மட்டும் பொறுமையை மேற்கொண்டது எதனால்?"

"நல்ல குடிப்பிறந்தார், தெய்வத்தால் தமக்கு, ஓர் இழிவு நேர்ந்தால், ஒரு நொடியும் உயிர் வாழாரே! நீர், மனிதரால் வந்த இந்த இழிவுக்கு மருந்தாக வெகுளி கொள்ளாதது ஏன்? ஒருக்கால், வெகுளி பொல்லாதது என்று விட்டு விட்டீரோ? சினம் செல்லாவிடத்து ஒருவன் அதனைக் காப்பினும், காவாது ஒழியினும் இரண்டும் ஒன்றே; சினம் செல்லுமிடத்து ஒருவன் அதனைச் செலுத்துவதற்குத் தடை என்ன? நீர் வெகுண்டால் இந்த உலகமே நடுங்கும்; இம் மண்ணுலகத்துள்ள மன்னவர் எவருமே உமக்கு வயப்படுவார்கள்; சினமில்லான் பகையும், நட்பும் ஒரு தன்மையே! அவனை உலகம் சிறு துரும்பு எனவும் மதிப்பதில்லை; இனியேனும் நீர் சினங்கொண்டு பகைவர் வலியிழக்கத் துணீவீரோ?"

"ஆருயிர்த் துணைவ! முன் நாளில், அன்னத்தின் தூவி (இறகு) பரப்பிய மென்பூஞ் சேக்கையில் படுத்துக் கண்படைகொண்டு வைகறையில் வந்திமாகதர் வாழ்த்துப்பாடத் துயில் எழும் நீங்கள், இன்று கூரிய தருப்பைப் புற்களிற் படுத்துத் துயில் கொண்டு நரிகளின் ஊளைச் சத்தம் கேட்ட பின்னர் அன்றோ கண் விழிக்கின்றீர்; இதனை நான் எவ்வாறு சகிப்பேன்? "

"முன் நாளில், எல்லா உயிரிகளிடமும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணர்க்கு முதலில் அமுது படைத்து, அவர் உண்ட பின்னரே மீதி எச்சிலை நீர் ஏற்றுக் கொள்வீர்; அதனால் உங்கள் உடம்பும், பொலிவுடன் விளங்கியது: ஆனால் இன்று, கானகத்தில் காய், கனி, கிழங்கு இவைகளை உண்டு உங்கள் திருமேனியும் மெலிவுற்றது; இதைக் காண என் மணம் படும் பாட்டை சொல்ல முடியவில்லையே!"

"மன்பதை மாட்டு இன்ப துன்பங்கள் சகடக்கால் போல மாறி மாறி வரும் என்றாலும், தெய்வீகமான இன்னல்களைப் பொறுப்பதன்றி, மனிதரால் வரும் அவைகளை விலக்க முயலாமல் பொறுத்தல் சரியானதன்று;"

"இன்னுயிர் நாயக! இதுகாறும் நீங்கள் பொறுமையை மேற்கொண்டது போதும், போதும்; இனியேனும் பகை கடப்பதற்கான உபாயங்களை ஒல்லும் வகை முயன்று சிந்தித்தல் வேண்டும்;"
 **

மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன்...

"ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!"
(குலசேகர ஆழ்வார்)



Sunday, February 14, 2016

பதஞ் செய்யும் பாரும்

பதஞ் செய்யும் பாரும் பனிவரை எட்டு
முதஞ் செய்யும் ஏழ்கடல் ஓத முதலாங்
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே!
(அகத்தியரின் திருமந்திரம்-88)
கொண்டல் வரை  நின்றிழிந்த குலக்கொடி
வண்டத்து ஊழி இரும் எண்திசை ஆதி
ஒன்றின் பதஞ் செய்தவோ என் தவப் புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே!
(அகத்தியரின் திருமந்திரம்-89)
நித்த சங்காரமும் உறக்கத்து நீண்முடம்
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதமாஞ்
சுத்த சங்காரத் தொழிலற்ற கேவலம்
உய்த்த சங்காரம் பரனருள் உண்மையே!
(அகத்தியரின் திருமந்திரம்-90)


இலயங்கண் மூன்றினும்


இலயங்கண் மூன்றினும் ஒன்று கற்பாந்த
நிலையன்றி இழிந்தமை நின்று உணர்ந்தேனோ
உலைதந்த மெல்லரி போலும் உலக
மலை தந்த மானிலந்தான் வெந்ததுவே!

(அகத்தியரின் திருமந்திரம்-87)

அங்கிசெய் ஈசன்


அங்கிசெய் ஈசன் அகலிடம் சுட்டது
வங்கிசெய் ஈசன் அலைகடல் சுட்டது
வங்கிசெய் ஈசன் அசுரரைச் சுட்டது
வங்கி அவ் வீசருக்குக் கை அம்பு தானே!

(அகத்தியரின் திருமந்திரம்-87)

அணுகினும்....


அணுகினும் சேபவனங்கியில் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணியினும் பார்மிசைப் பல்லுயிர் ஆகித்
தணியினும் என்னுடல் அண்ணல் செய்வானே!

(அகத்தியரின் திருமந்திரம்-85)

தாங்கருந் தன்மையும்


தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த அவ்வழி
தாங்கி நின்றானும் அத் தாரணி தானே!

(அகத்தியரின் திருமந்திரம்-84)

உள்ளுயிர் பாயும் உடலாகி


உள்ளுயிர் பாயும் உடலாகி நின்றார் நந்தி
வெள் உயிராகும் வெளியால் இலங்கொளி
உள்ளுயிர்க்கு உணர்வே உடலுள் பரந்து
தள்ளுயிர வண்ணந் தாங்கி நின்றானே!

(அகத்தியரின் திருமந்திரம்-83)

உற்று வனைவான்


உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறிதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே!

(அகத்தியரின் திருமந்திரம்-82)

Saturday, February 13, 2016

அன்பும் அறிவும் அடக்கமுமாய்....


அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியுமாய் நிற்கும்
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
மன்புற வைந் தினமர்ந்து நின்றானே!

(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-81)

தானொரு காலம்


தானொரு காலம் தனிச் சுடராய் நிற்குந்
தானொரு காலம் சண்ட மாருதமாய் நிற்குந்
தானொரு காலம் தண் மழையாய் நிற்குந்
தானொரு காலம் தண் மாயனுமாமே!

(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-80)

தேடும் திசை எட்டும்


தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடு மரபில் குணஞ் செய்து மாநந்தி
ஊடும் அவர் தம் உள்ளத்துள்ளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே!

(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-79)

உடலாய் உயிராய்


உடலாய் உயிராய் உலகமதாகிக்
கடலாய்க் கார்முகில் நீர் பொழிவானாய்
இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி
உடையார் பெருவிழி யண்ண நின்றானே!


(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-78)

தானே திசையொடு


தானே திசையொடு தேவருமாய் நிற்குந்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்குந்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்குந்
தானே உலகில் தலைவனுமாமே!


(அகத்தியரின் திருமந்திரம் பாடல்-77)

புகுந்து நின்றான்


புகுந்து நின்றான் வெளியாய் இருளாகிப்
புகுந்து நின்றான் புகழாய் இகழ்வாகிப்
புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப்
புகுந்து நின்றான் புந்தி பன்னி நின்றானே!


              (அகத்தியரின் திருமந்திரம் பாடல் 76)

Sunday, February 7, 2016

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம்:

பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

பெண் யானை உருவத்தை உமாதேவி கொள்ள;
கரிய ஆண் யானை வடிவத்தை சிவபெருமான் கொள்ள;
தன் திருபாதங்களை வழிபடும் அடியார்களின் இடரை நீங்குகின்ற கணபதியாகி விநாயக் கடவுள் வாழ்கிற இறையான சிவபெருமானே!

(திருவலிவலத்தில் வாழும் சிவபெருமானைத் துதித்து திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரப் பாடல்)
பிடியத னுருவுமை கொளமிகு கரியது 
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் 
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை 
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே! 
**



வயிரவநாதன்

 வயிரவநாதன்
இவ்வளவிற்கும் அவனை முழுப் பைத்தியம் என்று எல்லோரும் ஒதுக்குவது போல் அந்த தாயாரால் மட்டும் ஒதுக்கிவிட முடியவில்லை; அவளுக்கு அவன் ஒரே மகன்; செல்ல மகன்; சித்த சுவாதீனத்தில் இம்மியும் பிழையில்லாத அருமை மகன்;
ஆனால், அவனுக்கு என்னவோ, தாய், வீடு, உலகம் என்ற வேறுபாட்டைக் கிரகிக்கும் அளவுக்குப் புத்தி வளர்ச்சி அடைந்திருந்ததாகக் கூடத் தென்பட வில்லை; பசித்தால் அம்மா தர வேண்டும் என்ற நம்பிக்கை; அதற்கும் அப்பால் சிந்திக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை; தேவையும் இல்லை;
பதினேழு, பதினெட்டு வயதுக்கு ஏற்ற வளர்ச்சி; சிறிது அசிங்கமாக உப்பிய வயிறு; ஆனால் பத்தே வயது மதிக்கக்கூடியதாக, ரோமமே இல்லாத முகம்;
அவன் பள்ளியில் படித்த காலங்களில் அவனைக் காலையிலே கூட்டி வந்து பள்ளியில் விடுவாள் அந்தத்தாய்; அதற்குப் பின், பகல் எல்லாம் காவல் கிடந்து, பின்னேரம் மூன்று மணிக்குப் பள்ளி விட்டதும், சேலைத் தலைப்பால் அவன் தலையை மூடிக் கவனமாக வீட்டுக்கு அழைத்துச் செல்வாள்; ஆனால் அவனுடைய படிப்பு என்னவோ, அரிஅரி வகுப்பில் நாலு வருடம் தொடர்ச்சியாக இருந்ததோடு முடிந்து விட்டது;
ஒருநாள்... பள்ளி வாத்தியார் அந்த வழியாகப் போகிறார்;
நேரம் ஒருமணி இருக்கும்
"ஏடி செல்லம்மா.... இஞ்ச வாடி.... வாத்தியார் போறாலெல்லோ.... அந்த வேட்டியைக் கட்டிவிடன்டீ...."
அவன், குளித்த உடம்போடு உயர்ந்து நெடுக நின்று கொண்டிருந்தான்.
தாய், வேட்டி கொண்டுவர உள்ளே போயிருக்க வேண்டும்;
உடல் வளர்ச்சி அடைந்த அளவுக்கு அறிவு வளரவில்லை; இருந்தாலும் வாத்தியாருக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கக்கூடாது என்று படுகிறது அவனுக்கு;
சொந்தமாக எதையும் செய்யும் திறமையே அவனுக்கு இல்லையா? என்னுடைய மனமானது அவன் தாய் செல்லம்மா என்ற உயிருடன் பிணைந்து ஒன்றி நிற்கும் வயிரவநாதன் உருவத்தை தனித்து, இழுத்து, நிறுத்திக் கற்பனையிலே பார்க்க முயன்று கொண்டிருக்கிறது;
"எடி.... செல்லம்மா.... மூதேவி.... வேட்டியைக் கொண்டாடி..... வாத்தியார் பாக்கிறார்....."
பைத்தியம் என்று அவனை அப்படியே ஒதுக்கிவிட என்னால் முடியவில்லை; எவருமே வியக்கத்தக்க அபூர்வ சாதுர்யத்தோடு அவன் சில வேளைகளில் நடந்திருப்பதை நானே பார்த்திருக்கிறேன்; இனந்தெரியாத, கோபித்துப் பேச முடியாதபடி, பயத்தினுள் கலந்திருக்கும் ஒருவித ஆபூர்வக் கவர்ச்சியையும் நான் அவனிடத்தில் கண்டிருக்கிறேன்;
இருந்தும், ஏதோ ஒரு குறைபாடு எல்லாவற்றையும் மீறி இயங்கிக் கொண்டுதான் இருப்பதாக எனக்குப் பட்டது;

(நன்றி: பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு கதையின் சிறு பகுதி.......) 

புளிசாதம்

புளிசாதம்
நாலு முழ வேட்டி, அதன்மேல் முக்கோணப்பட மடித்து பட்டிபோல் அரையைச் சுற்றி கட்டிய ஈரிழைத்துண்டு; தலையில் ஒரு துண்டுத் தலைப்பா; தோளில் சால்வை; இதனுடன் கால்களில் தோற்செருப்பு; செவிகள் இரண்டிலும் கடுக்கண்; சொருக்கு அவிழ்ந்த குடுமியைக் சொடுக்கி முடிந்து கொண்டு அந்தக்கால மணற்கோடு கிழித்த ஒற்றையடிப் பாதையில் செல்கிறார்கள் என்றால், அவர்கள் பட்டணம் போகிறார்கள் என்று அர்த்தம்;
பயணம் செல்பவர்களைப் பின்னால் இருந்து கூப்பிடக்கூடாது; அதற்காகவே முதல்நாளே பயணம் சொல்லிவிடுவர்; சிலர், பட்டணத்தில் தனக்கு பொருள் வாங்கிவரும்படி காசு பணம் கொடுத்து தொந்தரவும் செய்வர்; இந்த இடைஞ்சலை தவிர்க்கவே, விடிவெள்ளி காலிக்கும் முன்பே பயணம் புறப்பட்டு விடுவர்; பயணத்துக்கு உதவாத சகுனப் பிழைகளைத் தவித்துக் கொள்ளவும் இந்த அகாலவேளை சாலச் சிறந்தது; அந்தக் காலத்தில்,  தும்மினால், பல்லி சொன்னால், வழியில் வெறும் குடத்தைப் பார்த்தால், பூனை குறுக்கே போனால், "முழுவியளம் சரியில்லை" என்று பயணத்தை நிறுத்த வேண்டி இருக்கும்;
ஓலைப் பெட்டியில் புளிசாதப் பொட்டலங்கள், கிணறுகளில் தண்ணீர் அள்ளுவதற்கு செம்பு, அதற்கு நூற்கயிறு இவற்றுடன் பயணம்; செலவுக்கு பணத்தை வைத்துக் கொள்ள பெரிய வல்லுவம் (wallet); வல்லுவத்தின் ஒரு அறையில் நாணயக் குற்றிகள், அடுத்த அறையில் ரூபாய்த் தாள்கள்; மற்ற அறை சற்று பெரியது, அதனுள் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புக் கரண்டகம், காசுக்கட்டி, களிப்பாக்கு, மணப்பாக்கு, என்பனவற்றோடு, பித்தளையில் செய்த வெற்றிலைச் செல்லம் என்ற வெற்றிலை பாக்கு இடிக்கும் கருவியும், குடுமி வாங்கி முள் எடுக்கும் ஊசியும்;
அப்போதெல்லாம், தீவுப்பகுதி மக்களின் பிரயாண வசதி மிகக் குறைவு; மாட்டுவண்டி தவிர்த்த வேறோர் வாகன வசதியற்ற காலம்; பிரயாணங்கள் கால்நடையாகவே இருக்கும்;
மதிய வேளை; இத்தகைய அடையாளங்களுடன் வெகு தொலைவிலிருந்து வந்திருப்பவர், தண்ணீர் எடுக்கலாமா என்று கேட்டார்; நான் செம்பில் நீர் எடுத்துக் கொடுத்தேன்; வேண்டாம் என்றார்; கிணற்றைக் காட்டினால் போதும் என்றார்; அவர் கொண்டுவந்த செம்பில் நூற்கயிறைக் கட்டி, நீர் இரைத்து, முகம், கை, கால் கழுவி, தாகம் தீர நீர் அருந்திய கையோடு, வைரவக் கோயில் திருநீற்றினை கைநிறைய அள்ளி, நெற்றி, நெஞ்சு கைகள் முகம் என்று எல்லா உறுப்புகளிலும் நிறையப் பூசிக் கொண்டார்; சந்தனத்தையும் நீரில் குழப்பி பொட்டும் இட்டுக் கொண்டார்; இப்போது அவர் மிகப் புனிதராய் ஆகி விட்டார்; இளைப்பாற சுவரில் சாய்ந்து கொண்டே, “சிவ, சிவா இப்போதுதான் தெம்பு வந்தது” என்றும் கூறிக் கொள்கிறார்;
“சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமா” என்று கேட்டேன்;
"ஆமாம், சாப்பிட வேண்டும், ஆனால் நான் கண்ட கண்ட கடைகளில் சாப்பிடும் வழக்கம் இல்லை; வீட்டிலிருந்தே புளிசாதம் கொண்டு வந்திருக்கிறேன் என்றார்; அவர் பேச்சில் அகங்காரம் தொனித்தது;
சிறிது நேரத்தில், அங்கு தலையில் தலைப்பாகை இறுக்கிய தளநாறுடன் அரையில் பட்டி இறுக்க, இரண்டு "முட்டிகளை" கைகளில் தூக்கியபடி ஒருவர் சென்றார்; அந்தக் காட்சியை இவர் பார்த்தாரோ இல்லையோ, "தம்பி, இந்த பொருள்களைக் கொஞ்சம் பார்த்துக்கோ தம்பி" என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, அவர் பின்னே சென்றார்;
மாலை மணி நான்காகியும் வரவில்லை; அவரை காணவில்லையே என்ன ஆயிற்றோ என்று அவரைத் தேடிப் போனேன்; யாரோ ஒருவர் பனை வளவில் விழுந்து கிடக்கிறார், வெளியூர்காரர் போல என்று சொன்னார்கள்;
ஆசாரங்கள் எல்லாம் வெளியில்தானா? இது மற்றவர்களுக்காக போடும் வேஷமா? நான் கொடுத்த செம்புத் தண்ணீரை வாங்க மறுத்து, தானே கிணற்றில் நீர் இறைத்து குடித்த ஆசாரசீலரா இவர்வெளிவேஷக்காரர்கள்! மற்றவர்களுக்காக வாழ்பவர்கள்!! சுயத்தை அறியாதவர்கள்!!!
கடைக்குத் திரும்பி வந்து பார்க்கிறேன்; அவரின் புளிசாதத்தை நாய் தின்று கொண்டிருக்கிறது; எத்தனை ஆசைகளுடன் அவரின் மனைவி அந்தப் புண்ணியவதி சமைத்துக் கட்டிய உணவோ?
(நன்றி: யாழ்பாணம், தில்லைச் செல்வன் அவர்களின் “அந்தக் காலத்துக் கதைகள்” என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை...)
**