Monday, April 14, 2014

சாலிவாகனன்

சாலிவாகனன்:
விக்கிரமார்கனைக் கொன்ற சாலிவாகனன் தன் பெயரால் ராஜ்ஜியத்தை நிலைநாட்டினான்.

சுலோசனன் என்னும் பிராமணனுக்கு சுமித்திரை என்னும் ஒரு புத்திரி பிறந்தாள். அவன் மணப்பருவத்தை அடைந்தபோது, காதல்வயப்பட்டு ஒருவனைக் கூடி கர்ப்பவதி ஆனாள். தன் ஒழுக்கத்திற்கு கலங்கம் உன்னால்தான் வந்தது என காதலனை திட்டினாள். அவனோ, நான் மானிடன் அல்ல; நான் ஆதிசேஷன். எனவே உனது கர்ப்பதில் இருக்கும் புத்திரன் ஒரு அரசனாக வருவான் என்று கூறி மறைந்தான்.

அவளும் தன் தகப்பனிடம் நடந்ததைக் கூறி தேற்றி இருக்கும்போது, அந்த தேசத்து அரசனுக்கு இது தெரிந்து அவளை பக்கத்து நகருக்கு கடத்தும்படி உத்திரவிட்டார். அவளும் அடுத்த ஊரில் உள்ள குலாலசேரியில் தங்கி அங்கு ஆண்குழந்தையைப் பெற்று அங்கேயே வசித்தும் வந்தாள். அந்தச் சிறுவனுக்கு 'சாலிவாகனன்' எனப் பெயர்சூட்டினர். அவனும் தினமும் அங்கு சிறுவர்களுடன் விளையாடி வந்தான். அவன் விளையாட்டு அரசன், மந்திரி, ராஜாங்கம் போன்ற விளையாட்டாகவே இருந்தது. ஐந்து வயதே நிரம்பாத இந்த சிறுவன் அரச வாழ்க்கையை பார்த்தது கூடக் கிடையாது. பின் எப்படி தெரியும் என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். 

விளையாடும் போது அந்த வழிவந்த ஒரு பிராமணர் இவனுடன் உண்மையைப் போல விளையாடினார். பிராமணர் அந்த சிறுவனான அரசனுக்கு பஞ்சாங்கம் சொன்னார். அதனால் அந்த சிறுவன், தான் ஒரு அரசன் என்பதைப் போல கருதிக்கொண்டு அவருக்கு ஒரு குடம் கொடுக்கச் சொன்னான். அவரும் அதை வாங்கிக் கொண்டு வீடு சென்றார். வீட்டில் அதை திறந்து பார்த்தபோது அந்த குடம் முழுக்க பொற்காசுகள். ஆச்சரியம்.
இந்த விபரம் மன்னருக்கும் தெரிந்தது. விக்கிரமார்க்கன் மன்னனும் இவனைப் பார்க்க வந்தார்.


இந்த நாளில், வேறு ஒரு இடத்தில், தனஞ்செயன் என்னும் வைசியன் தான் இறக்கும்போது தனது புத்திரர் நால்வரையும் அழைத்து, அவர் இருக்கும் கட்டிலின் கால்கள் நான்கிலும் தனித்தனியே வைத்திருக்கும் சொத்துக்களை நால்வரும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார்.

அவர் இறந்தபின்பு, கட்டிலின் காரங்களுக்கு அடியில் தோண்டிப் பார்த்தபோது, ஒரு பையில் மண்ணும், ஒரு பையில் உமியும், ஒரு பையில்  பொன்னும், ஒரு பையில் சாணமும் இருந்தது. இதை எப்படி பங்கிடுவது என எல்லோருமே குழம்பினர். அரசனிடம் வழக்கு சென்றது. அவரும் குழம்பிவிட்டார். பதில் சொல்ல முடியவில்லை. எனவே அந்த நான்கு புதல்வர்களும் சாலவாகனன் விளையாடும் இடம் வழியாக வீட்டுக்குத் திரும்பி வந்தனர்.

அவர்களைப் பார்த்த சாலிவாகனன், இந்த சிறு விஷயத்துக்கா மன்னர் வரை சென்றீர்கள். வாருங்கள் நான் பகிர்ந்து தருகிறேன் என்று கூறினான். பைகளை எடுத்துக் காட்டியவுடன், மண்ணை எடுத்தவன் நிலங்களையும், உமியை எடுத்தவன் தானியங்களையும், பொன்னை எடுத்தவன் ஆபரணங்களையும், சாணத்தை எடுத்தவன் மாடுகளையும் எடுத்துக் கொள்க என்று உங்கள் தந்தை குறிப்பாய் உணர்த்தி உள்ளார் என்று கூறினான்.

அதை அறிந்த விக்கிரமார்கன் மன்னன் இந்த அறிவுள்ள சிறுவனை கொல்ல எத்தனித்தார். ஆனால் அந்தச் சிறுவன் தன் சிறு படையைக் கொண்டு மன்னனை தோற்கடித்தான். பின், நருமதை ஆற்றங்கரையிலுள்ள தேசத்தை கவர்ந்து அதற்கு அரசன் ஆகினான்.


இவன் காலத்திலிருந்து சாலிவாகன சகாப்தம் உருவானது. இவன் வைத்தியசாஸ்திரம், அசுவ சாஸ்திரம், அலங்கார சாஸ்திரம் மூன்று நூல்களை உருவாக்கினான்.

No comments:

Post a Comment