Saturday, January 16, 2016

திருமகளே, நீ வரம் தர மாட்டாயா?

மாதவாச்சாரியாரின் "சங்கரவிலாசம்"
துங்க பத்திரை நதிக்கு அருகில் பம்பை என்னும் கிராமம்; மாதவாச்சாரியார் என்பவர் ஏழை; இவர் வறிய குடும்பத்தில் பிறந்ததால்இளமையிலேயே செல்வந்தவர் ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டார்; அதே பேரவாவுடன் கல்வி கற்று வந்தார்; தமது எண்ணம் விரைவில் கைகூடாது என்று நினைத்திருப்பார் போலும்!
திருமகளையும், கலைமகளையும் நினைத்து கடும் தவம் புரியப் புறப்பட்டு விட்டார்; காட்டுக்கு போகிறார்; அங்கு கடும் தவத்தில் இருக்கிறார்;
காட்டில் ஒருநாள், அரசனுக்குறிய மாடுகளை மேய்த்துக் கொண்டு திரியும், "புக்கணன்" என்னும் சத்திரியன் திரிகிறான்; அவன், இவரிடம் வருகிறான்: அந்த மாடு மேய்க்கும் புக்கணனிடம், தவத்தில் இருக்கும் இவர் தன் சாப்பாட்டு கஷ்டங்களை கூறுகிறார்: அவர் மீது இரக்கம் கொண்ட மாடு மேய்ப்பவன், "தினமும் நான் உங்களுக்கு பசும்பால் தருகிறேன்" என்று உறுதி கூறுகிறான்; ஆனால், அவரோ, "அரசனின் பசுவின் பாலை திருடித் தருவது துரோகம் இல்லையா" எனக் கேட்கிறார்:
அவனோ, "தேவைக்கு அதிகமாக உள்ள பாலைத்தான் உம்மைப் போன்ற ஒரு தவ முனிக்கு கொடுப்பது புண்ணியமே தவிர, பாவம் இல்லை" என்று பதில் சொல்கிறான்; அவரும் உடன்படுகிறார்; தினமும் பசும்பால் கொடுத்து விட்டுச் செல்கிறான்; முனிவரின் வயிற்றுப் பிரச்சனை தீர்கிறது;
ஒருநாள், அந்த மாடுமேய்க்கும் புக்கணனுக்கு முன்னர், திருமகளும், கலைமகளும் நேரில் தோன்றினர்; "நீ பால் கொடுக்கும், உன் முனிவரான மாதவருக்கு, இந்தப் பிறவில் அவர் செல்வந்தர் ஆகும் எண்ணம் நிறைவேறாது" என்று கூறி மறைகின்றனர்; அவனும் அதை முனிவர் மாதவருக்கு சொல்கிறான்; அவன் பேச்சைக் கேட்காமல், மாதவர் இன்னும் கடும் தவத்தில் இருக்கிறார்; ஒன்றும் நடக்கவில்லை;
ஒருநாள், மாதவர் கோபத்தில், தான் அணிந்திருந்த பூணூலை கழிற்றி எறிகிறார்: அன்று முதல் சந்நியாசி ஆகிவிட்டார்; இதைக் கண்ட திருமகளும் கலைமகளும் அவரின் முன்னர் தோன்றி, "இனி நீ வேண்டுவதைக் கேள்; நாங்கள் கொடுக்கிறோம்" என்று சொல்கிறார்கள்;
ஆனால் கோபத்தில் இருந்த மாதவர், "எனக்கு கலைமகள் அருளே போதும்! திருமகள் ஏதாவது எனக்கு கொடுப்பதாக இருந்தால், அதை எனக்கு உதவி செய்த மாட்டுக்கார புக்கணனுக்கு கொடு" என்று கூறுகிறார்: அவ்வாறு கலைமகள் அருள் மாதவருக்கும்; திருமகள் அருள் மாட்டுக்கார புக்கணனுக்கும் கிடைக்கிறது;
சில நாட்களில், ஹஸ்தினாபுர நாட்டின் அரசன் இறக்கிறான்; அடுத்த வாரிசு இல்லை; அக்கால வழக்கப்படி, யானையை அலங்கரித்து அதன் துதிக்கையில் ஒரு மாலையைக் கொடுத்த அனுப்புகின்றனர்; அந்த யானை, யாருக்கு மாலை இடுகிறதோ, அவரே அடுத்த அரசன் என்பது நியதி;
அதற்கு ஏற்பாடுகள் செய்தனர்; யானை பல இடங்களில் திரிந்து, மாடுமேய்க்கும் புக்கணன் இருக்கும் காட்டுப்பகுதிக்கு வந்து புக்கணனுக்கு அந்த மாலையை இட்டு அவனை அதன்மீது ஏற்றிக் கொண்டு அரண்மனைக்கு வருகிறது; அங்கு புக்கணன் ஹஸ்தினாபுத்து நாட்டுக்கு அரசன் ஆகிவிட்டான்;
அவனைப் பார்க்க ஒருநாள், மாதவர் வருகிறார்; இதைத் தெரிந்த புக்கணன் அவரை அன்புடன் வரவேற்று தன்னுடனேயே வைத்துக் கொள்கிறான்;
கலைமகள் அருள் பெற்ற மாதவர், நூல்கள் பல இயற்றுகிறார்; இவர் இயற்றிய நூல்கள் பல; அவற்றில் "சங்கரவிலாசம்" என்பது 40,000 ஸ்லோகங்களைக் கொண்டது; அதற்குபின் மாதவர் என்ற பெயர் மாதவாச்சாரியார் என்றும் வித்தியாரண்ணியர் என்றும் வழங்கப்பட்டது;
 **Friday, January 15, 2016

கலர் கலர் தேர்தல்-1933

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவது சாணக்கியம் 
ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் செய்வது ராஜதந்திரம்;
கலர் கலர் தேர்தல்-1933
பச்சை, மஞ்சள், சிவப்புப் பெட்டிகளுக்கு வாக்குச் சீட்டு போட்ட காலம்; 1933ம் ஆண்டு என்ற நினைவு; சரவணை நாகேசுவரி வித்தியாசாலையில் மூன்றாம்தரம் படிக்கிறேன்; என்னுடன் ஒத்த வயதினரும், மூப்பானவர்களும் சிறு குழந்தைகளுமான பலர், கூட்டங் கூட்டமாக பச்சை, மஞ்சள், சிவப்புக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு, வீட்டுக்கு வீடாகப் போய் வருகிறார்கள்; வீடுகள் தெருக்களில் இல்லை; அங்கொன்றும் இங்கொன்றுமாக பல வரகு மேடுகளில் இருந்தன;
பச்சைப் பெட்டிக்கு ஜே! மஞ்சள் பெட்டிக்கு ஜே! சிவப்பு பெட்டிக்கு ஜே! எங்கும் ஒரே "ஜே" கோஷம்! எல்லாரும், எல்லா நிறங்களும், ஜே போட்டுக் கொண்டு கொடிகளைத் தாங்கியபடி வீடு வீடாகப் போய் வருகிறார்கள்; வண்ணங்களில் வேறுபாடு இருந்தாலும் வார்த்தைகளில் வேறுபாடில்லை; எல்லாருக்கும் வெற்றிதான்; இவர் வாழ்க அவர் வாழ்க என்று இல்லை; வீழ்க, ஒழிக கோஷங்கள் அப்போது வழக்கத்துக்கு வரவும் இல்லை; அண்ணனுக்கும், தம்பிக்கும், தகப்பனுக்கும், மகனுக்கும், மாமனுக்கும், மச்சானுக்கும் இடையே போட்டி; யார் யாரை வீழ்த்துவது, ஒழிப்பது? வெறும் வேடிக்கைபோலவே தோன்றிய தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கிய போதெல்லாம் பெரிய மனிதர்களால் சமாதானம் செய்யப் பெற்றது;
"அடி, பிடி வேண்டாம்; பிச்சுப் பிடுங்கல் வேண்டாம்; வெல்லப் போவது யாரானாலும், உறுப்பினராவது எம்மவர்தானே! நாடாண்டதும் கர்ணனே! காடாண்டதும் அதே கர்ணனே தானே!" என்று புண்ணியவான்களால் சொல்லிக் கொடுக்கப் பட்டது; சிவப்பு பெட்டிக்கு ஜே! பச்சைப் பெட்டிக்கு ஜே! மஞ்சள் பெட்டிக்கு ஜே!
சில அபேட்சகர்களின் (வேட்பாளர்களின்) வளவுகளில் கடலையும் தேனீரும்! அடுத்த அபேட்சகர் வடையும் பாயசமும்! மற்றொரு அபேட்சகர் வீட்டில் தண்ணீர் பந்தல்! வாக்காளப் பொதுமக்களுக்கு வேட்டைதானே! யாரும் நிறங்களில் பேதங்கண்டு புறந்தள்ளியதாக இல்லை; எல்லாரும் கலந்து கொள்ளும் ஒரு வேட்டைத் திருவிழாதான்!
நான் ஒரு கைவண்டில் வைத்திருந்தேன்; எனது அக்காவின் கைவண்ணத்தால் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஓலைகளைக் கொண்டு இழைக்கப்பெற்ற சில்லுகள்; நாரினால் வளையம்; பூவரசம் தடி அச்சுக் குத்தி; பனைமட்டைத் துலா; வண்ணப் பாய்தடுக்கு பலகை; இது ஒரு அழகு வண்டில்; அதன் துலா மட்டையில் மூன்று நிறக் கொடிகளையும் கட்டிக் கொண்டு வீடுவீடாய் நானும் போனேன்;
என்னை ஒருவர் கேட்டார், "உனது பாட்டன் எந்தப் பெட்டிக்கு போடுவார்? முதலில் பச்சை என்று சொல்லி வாய்மூடாமலேயே மஞ்சள் பெட்டிக்கு ஜே என்றேன்; கேட்டவர் சொன்னார், "உன் பாட்டன், அவரின் பச்சைப் பெட்டி மகனுக்குத்தான் போடுவார்" என்றார்; மற்றவர், "இல்லையில்லை, மஞ்சள் பெட்டி மருமகனுக்குத்தான் போடுவார்" என்றார்; எனக்கு எந்தக் கவலையும் இல்லை; சிவப்பு பெட்டிக்கு ஜே! என்றேன்;
இது வேலணைக் கிராம சங்கத்துக்கு நடந்த பொதுத்தேர்தல்; வயது வந்து, "தலைவரிப்பணம்" கட்டிய ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கலாம்; இதற்குமுன், எல்லாருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை; படிப்பும், பணவசதியும் படைத்த சிலருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது; இவர்கள் மணியகாரர் தலைமையில் கூடும் கூட்டத்தில் தங்கள் இரு கைகளையும் உயர்த்திக் காட்டுவதன் மூலம் (இதுபோன்ற தேர்தல் இல்லாமல்) தமது உறுப்பினர்களை தெரிவு செய்வர்; இவ்வாறாக கரம்பனிலிருந்து அல்லைப்பிட்டி வரை உள்ள வேலணைக் கிராம சபைக்கு, இருபது உறுப்பினர்கள் வரை தெரிவு பெற்றிருப்பர்; இவர்களின் அக்கிராசனர் மணியகாரரே!
அந்தக் காலத்தில் மணியகாரரின் வீடே தீவுப்பகுதியின் நிர்வாக மையம்; பிறப்பு இறப்பு பதிவு, திருமணப் பதிவு, சுகாதார மருத்துவப் பிரிவு, கொடி கொட்டை வழங்கற்பகுதி, பயிர்ப்பாதுகாப்பு, மராமத்து, நீதிநிர்வாகம், என்று இன்னோரன்ன அலுவல்களுடன், கிராம சபை தலைமையும் சேர, அவரின் பேச்சுக்கு மறு பேச்சில்லை; சட்டங்கள் செய்வதும் அமுல்படுத்துவதுமான அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதை மாற்றக் கருதிய அரசாங்கம், கிராம சபைகளை நிறுவும் முகமாக நடைபெற்ற தேர்தல்தான் இது;

தேர்தல் வந்ததுதான் வந்தது, சமூகங்களிடையே அசூசையும் அவநம்பிக்கையும் ஒருவரையொருர் நம்பும் தன்மையும் ஒழிந்தது; சந்தேகம் வலுத்தது; எந்தப் புற்றில் எந்தப் பாம்போ யார் கண்டார்! அவநம்பிக்கையால் ஒருவர் மற்றவரை பகைமை உணர்வோடேயே பார்த்தார்;
பதவி, மக்களுக்கு சேவை செய்வதற்கன்றித் தமது பணப் பெருமை, குலப்பெருமை என்பவற்றின் சிம்மாசனமானது;
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவது சாணக்கியம்; ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் செய்வது ராஜதந்திரம்; எரியிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று பகையாளிகளிடம் சிண்டு முடிதலும், மித்ர பேதஞ் செய்தலும் தேர்தலோடு பிறந்த கலைகள்;
இவ்வண்ணமே நம்பிக்கை இன்மையில் கட்டி எழுப்பி, "வருகிறது, வருகிறது" என்ற வாக்களிப்பு நாளும் வந்தது; எனது பாடசாலையிலும் வெளி வீதிகளிலும் சனக் கூட்டம்; வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் மட்டும் வளவுக்குள்ளே; வெளியிலே நின்ற ஒரு கூட்டத்தில் பரபரப்பு காணப் பட்டது; அக்கூட்டத்தில் பல இளைஞர்கள்; வயது வந்தும், வாக்களிக்கும் தகுதி இருந்தும், வரிப்பணம் கட்டாததினால் வாக்குரிமை மறுக்கப் பட்டவர்களின் கொதிப்பு எங்கும் கேட்டது; தமது ஜாதிக்காரனின் வெற்றியைத் தாமே தீர்மானிக்க உள்ள துடிப்போடு உசாவினர்; விதானையாரின் அறிவிப்பு இதற்கொரு வழிகாட்டுவதுபோல அமைந்தது; வரிப்பணம் கட்டத் தவறியவர்களும், இப்போது வரிக் கட்டினால் வாக்களிக்கும் தகுதி கிடைக்கும் என்று அறிவிப்பு செய்தார்; உடனே ஒரு பெரிய வரிசை சேர்ந்தது; வரிப்பணம் ஒரு ரூபா; அதனுடன் தண்டப் பணமும் சேர்த்துக் கட்டவேண்டும்; விதானையாரிடம் பல ரூபாக்கள் சேர்ந்தன; எல்லாம் அபேட்சகர் ஒருவரின் புதுச் சட்டைப் பையில் இருந்தே சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது; வரிப்பணமும் குற்றப் பணமும் வசூலாக வாக்காளர் பட்டியல் நீண்டது; பலர் உள்ளே சென்று கொண்டிருந்தனர்;
சிறுக சிறுக நேரமும் போய்க் கொண்டிருந்தது; இப்போது நேரம் நண்பகலுக்கு மேல்; சனக்கூட்டம் வீதியில் குறைவு; பாடசாலைக்கு உள்ளே கூட்டம்; எல்லார் முகங்களிலும் படபடப்பும் கோபமும் என்னவோ ஏதோவென்று நினைக்கின்ற வேளையில் களேபரம் மூண்டு விட்டது; பேரிரைச்சலுக்குள் அடிபிடி; ஏன் எதற்கென்று அறிய அவகாசம் போதாது; வெளியே நின்றும் சில நல்லாயுதங்கள் பாடசாலைக்குள் பறந்தன; சிலர் உள்ளே நின்றும் வெளியே வந்தனர்; முகத்தில் பிரேதகளை, தோல்வி என்று சொல்லாமல் சொல்லியது;
இவ்வேளையில் வேலி ஓரத்தில் நின்ற என்னை ஒரு கிழட்டுக் கரம் பற்றியது; "வாடா" என்ற கையோடு அவருடன் சென்றேன்; "தேர்தல், சாதிச் சண்டையை மூட்டிவிட்டது" என்றார் என் பாட்டனார்;

(நன்றி: தில்லைச்சிவனின் "அந்தக் காலத்துக் கதைகள்" என்ற தொகுப்பிலிருந்து ஒரு பகுதி இது)
**தூக்கணாங்குருவியும், கரிக்குருவியின் "மிருத்துயுஞ்சய" மந்திரமும்

தூக்கணாங்குருவியும், கரிக்குருவியின் "மிருத்துயுஞ்சய" மந்திரமும்;
அன்று எங்கள் வளவுக்குமுன் பல இலந்தைகள் வரிசையாக நின்றன; பக்கங்களில் வேம்பு, அரசு, இலுப்பை, இப்படியாகப் பலவகை மரங்கள் நெருங்கி நின்ற இலந்தை மரக்கொப்புகளில் அநேக தூக்கணாங் குருவிக் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன; பார்க்க மனோரம்மியமான எழில் கொண்டவை;
பன்ணாடைத் தும்புகள், தென்னோலைக் கீற்றுகள், இவைகளைக் கொண்டு அடிமுடி அறிய முடியாதவாறு அழகாக அமைக்கப் பெற்ற கூடுகளவை; அக்கூடுகளும் இரண்டு வகையானவை; ஒன்று நீண்டதாயும், கங்காருவின் வயிறு போன்ற நடுப்பகுதியும், குளாய் வடிவாய் கீழே இருந்து உள்ளே வரவும் போகவும் உரிய வழியும் உடையது; மற்றது பிட்டு மூடி போல அமைந்து நடுவாக இரண்டு பக்கங்களையும் நேராக இணைத்துள்ள ஒரு கயிறும் உடையது: இவ்விருவகைக் கூடுகளும் கொப்புகளின் நுனியில் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக அமைந்திருக்கும்;
பெண் குருவி தன் நீண்ட பெரிய கூட்டின் வயிற்றறையில் முட்டையிட்டு அடைகாக்கும் பொழுதெல்லாம், ஆண் குருவி தனது சிறிய கூட்டின் நடுவே கயிற்றாசனத்தில் அமர்ந்திருந்து காவல் காக்கும்; ஏதும் அரவம் கேட்டால் அல்லது மரங்களின் கீழே நாய் பூனை போன்ற மிருகங்கள் காணப்பட்டால் ஆண் குருவி தன் பெண்ணின் கூட்டைச் சுற்றிச் சுற்றிப் பறந்து கத்தித்திரியும்; அம்மரத்தில் காகம் போன்ற வேற்றினப் பறவைகள் வந்தாலோ நிலமை வேறு; ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து அவற்றைக் குட்டிக் கலைக்கும்; இந்த வேளையில் இவைகட்கு உதவியாக எங்கிருத்தோ பறந்து வரும் ஒரு கரிக்குருவி இவைகளுடன் சேர்ந்து பகைப் பறவைகளைக் குட்டுவதை பார்த்து வியந்துள்ளேன்;
இந்த கரிக்குருவி ஒரு கிளைவையிலோ, மரத்திலோ இலைகள் குறைவாக உள்ள 'பட்ட கொம்பின்நுனியில் தனிமையாகவே இருக்கும்; சாதாகாலமும் "ச்,சு...,ச்.சு..." என்று சத்தம் இட்டுக் கொண்டிருக்கும்; இக்கரிக்குருவி சாகாவரம் பெற்றெதென்றும், அவை எப்போதும் "மிருத்துயுஞ்சய" மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது" என்று எனது பாட்டனார் சொல்லுவார்;
இந்த தூக்கணாங்குருவிகள் இரண்டும், காலை மாலை வேளைகளில் ஒன்றாக ஒரே கூட்டின் ஆசனத்தில் இருந்து கொண்டு கதைப்பதும் ஒன்றையொன்று தமது அலகுகளால் இறகுகளைக் கோதி விட்டு களிப்பதுமாக இருக்கும்; அடிக்கடி வெளியே பறந்து சென்று இரைதேடிக் கொண்டு வந்து கூட்டுள் இருக்கும் குஞ்சுகளுக்கு இரண்டு குருவிகளும் மாறிமாறி ஊட்டும்; எப்போதும் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதில் ஆணே முன் நிற்கும்; ஆண் குருவின் தலை தட்டையாகவும் சற்றுக் கறுத்தும் இருக்கும்; பெண்குருவியின் தலை சிறிதாய் பழுப்பு நிறத்தில் இருக்கும்;
(நன்றி; தில்லைச்சிவனின் "அந்தக் காலத்துக் கதைகள்" தொகுப்பிலிருந்து)
**

மிருத்யுஞ்சய மந்திரம்:

ஓம் திரியம்பகம் யஜா மகே!
சுகந்திம் புஷ்டீ வர்தனம்!
உருவா ருகமிவ பந்தனான்!
மிரித்யோ மோட்சியே மா அம்ருதாத்!

(முக்கண்ணனும் என்னை வாழ்விப்பவனுமான சிவனே போற்றி!
விளாம்பழம் முதிர்ந்ததும் தானே விழுவதைப் போல, பந்தங்களிலிருந்து என்னை விடுவித்து, 
மரண பயத்திலிருந்தும் விடுவித்து, அழிவில்லா நிலையான அமிர்தமான மோட்சத்தை அடைய 
வழி செய்வாய் ஈசுவரனே!)

தபுதாரன்கள் (widowers)

தபுதாரன்கள்
"அன்னை இறந்தால், அப்பன் சிற்றப்பன்"
அந்தக் காலத்தில் எம் தீவினர் பலர் தபுதாரன்களே; பெண்ணியில் நோய்களாலும், பிள்ளைப் பேறுகளின் போதும் மரணித்த பெண்கள் பலர்; இன்றுபோல் அன்று மருத்துவ வசதிகள் இருக்கவில்லை; ஒவ்வொரு பிள்ளைப் பேற்றின்போதும், தாய் மரண வாய்க்குப் போய் மீண்டுவருவது ஒரு அதிஷ்டமே; அவ்விதமே பெண்களின் மரண விகிதம் அதிகரித்ததால், பலர் "தபுதாரன்களாக" ஆவதும், மீண்டும் தார-தாம்பத்யம் கொள்வதும் சாதாரண நடைமுறை;
இவ்வாறு இல்லாமல் சில ராமன்களும் இருக்கத்தான் செய்தனர்; பல தசரதர்களுக்கு மத்தியில், தசரதர்களுடைய ராச்சிய பரிபாலனங்களுக்கு ஒத்தாசையாகப் பல மனைவியர் தேவைப்பட்டனர்; சம்பளம் கோராத, நம்பிக்கையுள்ள ஊழியர்கள் என்பதால் மனைவியர் பலர் இருப்பது வாழ்க்கைக்கு வசதி; சில மேட்டுக் குடியினர் "வைப்பாட்டிகள்" வைத்திருப்பதை கௌரவமாகவும், அப்படி வைப்பாட்டிகளை இல்லாதிருப்பது அகௌரவமாகவும் கருதிய காலம் அது;
பொருளாதார நலன்களில் மனைவிகளும் பிள்ளைகளும் உதவி புரிந்ததால், வசதி வாய்ப்புடன் வாழ்ந்த குடும்பங்கள் ஆங்காங்கே இருக்கவும் செய்தன; அக்கால விவசாய சமுதாயத்தில், ஆடுமாடுகள் மேய்த்தல், பராமரித்தல், வயல் வேலைகள் செய்தல், கறிப்பாட்டுக்கு கடலை போதல், குத்துதல், இடித்தல், சமைத்தல், என ஏகப்பட்ட வேலைகள், ஏழை எளியதுகளால் சம்பளம் கொடுத்து வேலை செய்விக்க முடியாது; அப்படியே முடிந்தாலும், முதலாளிகளுக்கு குடிமை-அடிமைகளாய் இருப்பவர்கள் சாதாரண மக்களுக்கு கூலிக்கு வேலை செய்ய முன் வர மாட்டார்கள்; இந்த சூழலில் ஆணும் பெண்ணும் பிள்ளைகளும் வேலை செய்தால்தான் குடும்ப வண்டியைச் சீராக ஓட்ட முடியும் என்ற நிலையில் ஒருவன் பல பெண்களை மணம் முடிக்க வேண்டிய அவசியமாகவும் இருந்தது; பலபிள்ளைகள் பெற்ற குடி பாழ் போகாது என்றும் சொல்வர்;
மனைவி இறந்தபின், கணவன் மறுமணம் செய்வதுபோல, கணவன் இறந்தபின் மனைவியும் மறுமணம் செய்து கொள்வதுண்டு: இதனை ஆட்சேபிப்பவர் இல்லை; அண்ணன் இறந்து போனால், அண்ணன் பெண்டில் தம்பியையும், தம்பி இறந்து போனால், தம்பி பெண்டில் அண்ணனையும் மணம் முடிப்பது சாதாரண வழக்கம்தான்; இவ்வழக்கம் மேட்டுக் குடியினரைவிட, சாதாரண மக்களிடம் அதிகமாகவே இருந்தது;
"தந்தை இறந்தால், தாய் சிற்றன்னை"என்று சொல்லாமல், "அன்னை இறந்தால், அப்பன் சிற்றப்பன்" என்கிறார்கள்;

ஒருத்தி ஒருவனுக்கு மனைவியாகவோ அல்லது வைப்பாட்டியாகவோ இருப்பதுண்டு: ஆனால் "பரத்தை" பற்றிய உலகப் பொதுக்கருத்துக்கு அமைவான வரலாறு எம்மூரில் இருக்கவில்லை; ஒருத்தி ஒருவனுக்கு உரியவள்; ஒருவன் சிலருக்கு உரியவன்; இதுதான் நிலை;
(நன்றி; தில்லைசிவனின் “அந்தக்காலத்துக் கதைகள்”) 

தறுதலை வழக்கு

தறுதலை
இரண்டு உலகப் போர்களையும், 1914ம் ஆண்டு பஞ்சத்தையும் நேரில் அனுபவித்தவர் எனது பாட்டனார்; பனைமரத்தின் சோத்துப் பகுதியை, இடித்த மாவுப் பிட்டினையும், ஈச்சை மரத்தாணிச் சுவையினையும் சொல்லிச் சொல்லி மகிழ்வார்; ஆயிரம் பிறைகண்ட இவரின் வாழ்வில், கடைசி 20 வருடங்கள் எனது பிரதம பாதுகாவலராக இருந்தவர்;
காலந்தான் மாறிக் கொண்டு போகின்றதே தவிர, கருத்துக்களில் அதிக மாற்றம் இல்லை; இன்றுள்ள அதிகார வர்க்கம் தமக்கு வேண்டாதவர்கள் மேல், இல்லாததும் பொல்லாததும் சொல்லி, வழக்குகளைச் சோடித்துக் குற்றவாளி கூட்டில் நிறுத்துவது போல, அக்காலத்திலும் இருந்தது; ஊரில் உள்ள எல்லா மக்களும் தமக்கு அடங்கியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் கிராமத் தலைமைக்காரன் முதல் பிரதேச மணியக்காரன் வரை உள்ளவர்களின் கருத்து; தமது பேச்சுக்கு எதிர்வாதம், இவர்கள் விரும்பாதது; ஏன் என்ற கேள்வி கேட்கக் கூடாது;
ஊரில் தனிப்பட்ட ஒருவர், செல்வாக்குடன் இருப்பதும் குழுக்களாக இயங்குவதும் பயங்கரவாதம். இது அதிகாரிகளுக்குப் பிடிப்பதில்லை; தனிநபர், செல்வாக்குள்ள ஒருவரை எப்படியும், வீழ்த்தித் தமது காலடிக்குகீழ் கொண்டு வரப் பார்ப்பார்; அல்லது வழக்குகளில் மாட்டிச் சீரழிவர்;
இந்த வகையான வழக்கொன்று எனது பாட்டனாரான 31 வயது இளைஞர் மேல் போடப் பட்டது;
ஒன்பது சகோதரர்களுக்குக் கடைக்குட்டித் தம்பி இவர்; நல்ல அழகன்; ஓரளவு கல்வியும், விவேகமும், தாய் தந்தை சகோதர சகோதரிகள் இவர்களின் செல்லப் பிள்ளை; இத்தகைய பரிவாரங்களுடன் ஊரில் உள்ள பல இளைஞர்கள் தோழமையும் உண்டு; இவர் கூட்டத்தில் எல்லா ஜாதியினரும் இருந்தனர்; யாழ்பாணத்தில் ஏனைய பகுதிகளில் உள்ளதைப் போல தீண்டாமை எங்கள் ஊரில் இருக்கவில்லை; எங்கள் ஊர் மக்கள் திருந்தி விட்டார்கள் என்று அர்த்தமில்லை; குறைந்த அளவில் உள்ள தீண்டாத மக்கள், பரந்த சொந்த நிலங்களில் சொந்த தொழில்களோடு வாழ்ந்ததே காரணம்;
என்ன இவன் சின்னத்தம்பி எங்களுடைய பிள்ளைகளையும் கெடுக்கிறானே என்று சாதிமான்கள் புலம்பல்;
காட்டில் வெளிகளில் புல்லுச் செருக்குதல், எருப் பொறுக்குதல், விறகு தரித்தல், போன்ற செயல்களும், அரசு அதிகாரியான மணியகாரரின் கட்டுப்பாட்டினை மீறிச் செய்ய முடியாது;
தறுதலை வழக்கு;
தறுதலை வழக்கு என்றால், அதன் முதல் குற்றச்சாட்டு, 30 வயதுக்கு மேற்பட்டும் மணம் முடிக்காமல் இருப்பது; இரண்டாவது குற்றச்சாட்டு, ஒருவர் தொழில் துறையின்றி இருப்பது; மூன்றாவது குற்றச்சாட்டு, நிலபுலம் சொத்துக்கள் இல்லாமல் இருப்பது; இந்த மூன்றும் இல்லையென்றால், அக்காலத்தில், அவன் "தறுதலை" எனச் சொல்லி அவனை சிறைக்கு அனுப்பி விடுவர்; வேலையில்லை, மனைவியில்லை, சொத்தில்லை என்றால் சிறை என்றால், இப்போது சிறைக் கூடங்களில் நிலையை எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லையா?
அக்காலச் சட்டப்படி, என் பாட்டனார் தறுதலை; கோட்டானை (கோர்ட் ஆர்டர்) பிறபிக்கப் பெற்று கட்டளை அதிகாரியும் (அமீனா) வந்து செல்கிறார்; ஆனால் கூடவே நிற்கும் என் பாட்டன் சின்னத்தம்பியை யாரும் காட்டிக் கொடுக்கவில்லை;
இவரே, தானாகவே முன்வந்து கோர்ட் கட்டளையைப் பெற்று, தன் தந்தையிடம் செல்கிறார்; கப்பரிடம் காண்ப்பிக்கப் படுகிறது; அடுத்த சில தினங்களில் சத்திரியப் புலத்தில் 30 பரப்பு சின்னத்தம்பிக்கு முதுசொம் உறுதி முடிக்கப் பெற்றது; காத்திருந்த மச்சாள் சின்னாக்சிகையால் சோறு வாங்கித் தின்ற சின்னத்தம்பி அவள் கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறு, கோர்ட் கட்டளைச் சட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது;
இதுவரை பிரம்மசாரியம் காத்த சின்னத்தம்பிக்கு ஒரு கால்-கட்டு; இதனால் அவரைச் சுற்றிவரும் நண்பர் கூட்டம் குறைந்துவிடும் என நம்பியவர்கள் ஏமாந்தார்கள்;
(நன்றி; தில்லைசிவனின் “அந்தக்காலத்துக் கதைகள்”)

**

நீதிமானாக இருந்தால் மட்டும் போதாது!

நீதிமான், வல்லமை உள்ளவனாகவும் இருக்க வேண்டுமாம்!
எனது பாட்டனாரிடம் பலர் வருவார்கள்; திருமணப் பேச்சுக்கு ஆதரவு கேட்பவர்கள்; மணவிலக்கைக் கோருபவர்கள்; சேர்த்து வைக்க வேண்டுபவர்கள்; எல்லைப் பிரச்சனை, பங்குப் பிரச்சனை; இவை அல்லாமல் மற்ற பல பிரச்சனைகள்; மத்தியட்சம் செய்து வைப்பதில் சமர்த்தர்; அப்போது சொல்லுவார், "மத்தியட்சம் செய்பவர் நீதிமானாக இருந்தால் மட்டும் போதாது; வல்லமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்; எங்கும் நீதியை நிலை நாட்ட, வல்லமைதான் பயன் படுத்தப் படுகிறது; வலுவற்ற ஆட்சியால் நீதியை நிறுத்த முடியாது" என்று கூறியவர், நான் இப்போது வலுவிழந்து விட்டேன்; கேட்பவர் கேட்கட்டும், கேளாதவர் போகட்டும்; ஆனால் ஒன்று, ஒரு ஊருக்கு ஒரு சண்டியன் வேண்டும்; சண்டியன் தான் சமாதானம் செய்து வைப்பான்; நீதி வழங்குவான்; முற்காலத்தில் குழுமங்களின் தலைவனாக சண்டியன் ஒருவனே இருந்தான்; அவனே அரசன்; அவன் கப்பம் வாங்கினான்; காவல் காத்தான்; அவர்களைத்தான் அழகிகளும் விரும்புவார்கள்" என்றார்;
இதை இப்போது நினைக்கிறேன், "வீரனுக்கே பேரழகி உரியவள்" என்ற சங்க சான்றோர் வார்த்தை என் காதுகளில் ஒலிக்கிறது;
பிற்காலத்தில் எங்கள் ஊரில் சில சண்டியர்கள் இருந்தார்கள்; இவர்களைப் பார்த்தால் கோமாளிகளைப் பார்ப்பதுபோல இருக்கும்; மிடாக் குடியர்கள்; சண்டித்தனம் எல்லாம் கள்ளுக் கொட்டிலடியில்தான்; அவர்கள் போலீஸைக் கண்டு உபசரிப்பதைப் பார்த்தால் பெரும் கண்றாவி; சண்டியன்கள் என்றால் இப்படித்தான் காக்கா பிடிக்க வேண்டுமா!
அந்தக் காலத்தில், மணியக்காரருக்குத்தான், போலீஸ் அதிகாரங்களும் இருந்தன; இவர் இட்டதுதான் சட்டம்; எதிர் பேச்சிருக்கக் கூடாது; சாதி ஒழுங்குக் கட்டுப்பாடும் அவர் கையில்தான்; நீதி செய்வதிலும் சாதிப் பாகுபாடுகள்;
(நன்றி; தில்லைசிவனின் “அந்தக்காலத்துக் கதைகள்”)

**

Wednesday, January 6, 2016

விசில்-ப்ளோயர்

"காட்டிக் கொடுப்பவனையும் காப்பற்ற வேண்டும்"
எங்காவது நடக்கும் தவறுகளை யாராவது காட்டிக் கொடுப்பர்; இவர்களை whistle-blower விசில் ப்ளோயர் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்; “உஷார் படுத்தியவர்” என்றும் எடுத்துக் கொள்ளலாம்; இவர்கள் எட்டப்பன்கள் இல்லை; தவறைக் காட்டிக் கொடுப்பவர்கள்; எனவே இவர்களை பாதுகாக்க வேண்டும்; இவர்களுக்கென்று தனியே சட்டம் ஏதும் இதுவரை இல்லை;
எனவே இந்திய சுப்ரீம் கோர்ட், இந்த விசில் புளோயர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் திட்டங்கள் பற்றி மத்திய அரசு தனது அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது; 2016 ஜனவரியில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரனைக்கு வரும்போது நல்ல தகவல்கள் கிடைக்கும்;
விக்கிலீக்ஸ் என்னும் விசில்ப்ளோயரான “ஜூலியன் அசான்ஜி” இந்த மாதிரி வேலையைச் செய்து இப்போது அவஸ்தையில் உள்ளார்;


பட் லைன்க்கே

பட் லைன்க்கே (பஞ்சாபி பாடல்)
பஞ்சாபி பாடகர் ஜிப்பி கிரெவால் பாடிய புதிய பாடல்தான் இந்த “பட் லைன்க்கே”;
இது யூ-ட்யூப்பில் மிகவும் பிரபல்யமாகி விட்டது; 5 லட்சத்துக்குமேல் பார்க்கப்பட்ட பாடலாம் இது; பேஸ்புக், டிவிட்டர்- போன்ற எல்லா சோசியல் சைட்டுகளிலும் பிரபல்யமாகி வருகிறது;

இதற்கு இசை அமைத்தவர் பிரபல Dr. ஜூயஸ்.

Entrepreneur

 புதிய தொழில் செய்ய முனையும் பெண்களே!
மத்திய அரசு ஒரு ஸ்டார்ட்-அப் திட்டத்தை கொண்டு வருகிறது; அதன்படி, 10 ஆயிரம் கோடியை மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒதுக்குகிறதாம்; குறைந்தபட்சம் 2.5 லட்சம் தொழில்முனைவோருக்கு இதில் பண உதவி கிடைக்குமாம்; இவை அனைத்தும் பெண்களுக்கும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளதாம்;
புதிய தொழில் முனைவோர்கள் இந்த திட்டப்படி பலன் பெறுபவராக இருந்தால், அதை உடனடியாக தெரிந்து உபயோகப்படுத்திக் கொள்க!
“The Stand Up India Scheme” will be a refinance window through Small Industries Development Bank of India (SIDBI); The Scheme is intended to facilitate at least two such projects per bank branch,  on an average one for each category of entrepreneur.


ஓக்ஸ்வாகன் எலெக்ட்ரிக் கார்

Volkswagen all-electric van
ஓக்ஸ்வாகன் எலெக்ட்ரிக் கார்
ஜெர்மன் கம்பெனியான ஓக்ஸ்வாகன், தனது புதிய தயாரிப்பான எலெக்ட்ரிக் காரை வெளியிடுகிறதாம்;
இந்தக் கார் எலெக்ரிக் சார்ஜ் மூலம் ஓடும்; ஆல்-வீல் டிரைவ் என்னும் எல்லாச் சக்கரமும் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் தன்மையானது; ஒருமுறை சார்ஜ் செய்தால், மணிக்கு 150 கி.மீ, வேகத்தில் 300 மைல்கள் தூரம் வரை ஒரே நேரத்தில் செல்லும் சக்தி உடையதாம்;
இந்த கார்கள், விற்பனைக்கு வந்தால், உலகில் இதுவே முதல் எலெக்ட்ரிக் காராக இருக்குமாம்.
பெட்ரோல், டீசல் புகையே இல்லாத கார்!
வாழ்த்துக்கள் ஓக்ஸ்வாகனுக்கு!


Monday, January 4, 2016

Surname சர்-நேம்

Surname சர்-நேம்
ஜப்பான் பெண்கள் இனி கணவரின் பெயரையே சர்-நேம்-ஆக (துணைப் பெயராக) வைத்துக் கொள்ள வேண்டுமாம்; தங்களின் திருமணத்துக்கு முன்னர் (சிறுமியாக இருந்தபோது) பெற்றோர் வைத்த பெயரை மட்டும் வைத்துக் கொள்ள கூடாது; இப்படி, ஜப்பான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது; எல்லா ஜப்பான் பெண்களுக்கும் இந்த தீர்ப்பீன் மீது அதிருப்தி உள்ளதாம்;
நல்லவேளே, தமிழ்நாட்டில் இது சட்டமாக இல்லை; ஆனாலும், கணவர் பெயரையோ, அவரின் பெயரின் முதல் எழுத்தையோ மனைவி தன் பெயருக்கு முன்னால் இனிசியலாக வைத்துக் கொள்வது பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது; இது தவறுதான்; அதிகமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது;
இங்கு தமிழ்நாட்டில், பெண்கள் பிறந்து, ஒரு பெயர் வைத்து, அவர் வளர்ந்து பள்ளியில் சேர்க்கும்போது, தன் தகப்பனின் பெயரின் முதல் எழுத்தை இனிசியலாக வைத்து விடுவார்கள்; பள்ளி படிப்புச்சான்றிதழ்களில் அந்தப் பெண்ணின் தகப்பனின் பெயரின் முதல் எழுத்து இனிசியலாக இருக்கும்; அல்லது சில சமுதாயத்தில், தகப்பனின் பெயரை, அந்தப் பெண்ணின் பெயருக்கு அடுத்து சர்-நேம்-ஆக வைத்துக் கொள்கிறார்கள்;
அதற்குப்பின், அந்த பெண்ணுக்கு திருமணம் செய்தபின், கணவன் வீட்டில், நடக்கும் எல்லா செயல்களுக்கும், (பாங்க் கணக்கு திறப்பது, பாஸ்போர்ட் எடுப்பது, ஓட்டு அட்டை வாங்குவது, ரேஷன்கார்டு வாங்குவது, சொத்துக்கள் வாங்குவது, பாங்க் லோன் வாங்குவது, கார், பைக் வாங்குவது) என இப்படி பல செயல்களைச் செய்யும்போது, அந்த பெண்ணின் இளமைகாலப் பெயரான மெய்டன் பெயருடன், கணவனின் பெயரின் முதல் எழுத்தை இனிசியலாக வைத்து விடுகிறார்கள்; அந்த பெண்ணின் தகப்பனின் பெயர் இனிசியலாக இருந்ததை, வேண்டுமென்றே எடுத்து விடுகிறார்கள்;
இப்படி செய்வதால், குழப்பம்தான் மிஞ்சும்; பொதுவாக, படிக்காத பெண் விஷயத்தில் இது அவ்வளவாக பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை; ஏனென்றால், அந்த பெண்ணுக்கு எந்த ரெக்கார்டுகளிலும் அவரின் மெய்டன் பெயருடன் தகப்பனாரின் இனிசியல் இருக்காது; எனவே அவர் கணவன் வீட்டுக்குப் போனபின்னர், ஒரு சொத்தை வாங்கும்போது, தன் கணவனின் இனிசியலை வைத்துக் கொள்வார்; அப்போதுதான் அவர் பெயருக்கு ஒரு அங்கீகாரமே கிடைக்கிறது; எனவே இதில் சிரமம் ஏதும் இருப்பதில்லை; பின்னாளிலும் சிரமங்கள் வருவதில்லை;
ஆனால், பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்த பெண், தன் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் அனைத்திலும், தன் மெய்டன் பெயருக்கு முன்னால், தன் தகப்பனின் இனிசியலை போட்டுத்தான் சான்றிதழ்கள் இருக்கும்;