Thursday, April 3, 2014

திருமகளும் மாதவாசாரியாரும்

துங்கபத்திரை நதிக்கரை ஓரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் இந்த மாதவாசாரியர் (வித்தியாரண்ணியர்).

இவர் வறிய குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே செல்வந்தராக வேண்டும் என்ற பேர அவா கொண்டவர். அதனால் கல்வி கற்று தெளிந்தார். இருந்தபோதும் இவர் செல்வந்தர் ஆகவே முடியவில்லை. எனவே காட்டில் சென்று திருமகளையும், கலைமகளையும் வேண்டி கடும் தவம் புரிந்தார்.

ஒருநாள், காட்டிலே அரசனின் மாடுகளை மேய்த்துத் திரிபவனாகிய புக்கணன் என்பவனைக் கண்டு, தான் அனுபவித்துவரும் கஷ்டங்களை எடுத்துச் சொன்னார். புக்கணன், அவர்மீது இரக்கம் கொண்டு, அவருக்கு தினமும் பசும்பால் தருவதாக வாக்களித்தான். ஆனால், அவரோ, இது அரசருக்குச் சேரவேண்டிய பால், இதை நான் எடுத்துக் கொள்வது துரோகம் என்று மறுத்தார். ஆனால், புக்கணனோ, 'அரசரின் மாடுகளிலிருந்து மிக அதிகமாக பால் கிடைக்கிறது, அவருக்கு தேவைக்கும் மேலாகவே உள்ளது; எனவே அதில் ஒரு சிறு பகுதியை உம்மைப் போல தவம் இருப்பவருக்கு கொடுப்பது, உண்மையில் அரசருக்கு ஒரு புண்ணியமே' என்று சமாதானம் கூறினான். அவரும் அதற்கு உடன்பட்டு, தினமும் பாலை பெற்று அருந்தி வந்தார். அவரின் வயிற்றுப் பிரச்சனை தீர்ந்தாலும், அவரின் செல்வந்தர் கனவு நிறைவேறாமல் இருப்பது கண்டு மனம் வருந்தினார்.
வெகுகாலம் தவத்துக்குப் பின்னர் திருமகளும், கலைமகளும் இவர் முன் தோன்றி, 'மாதவரே இந்தப் பிறவியில் உமக்கு  செல்வந்தர் ஆகும் கொடுப்பினை இல்லை' என்று கூறி மறைந்தனர். ஆனாலும் மாதவர் விடாது கடும் தவத்தில் இருந்தார். ஒரு நேரத்தில் அவர் அதிக கோபம் கொண்டு, தாம் அணிந்திருந்த பூணூலை கழற்றி வீசிவிட்டுச் சந்நியாசி ஆனார்.

இதை அறிந்த திருமகளும், கலைமகளும் மறுபடியும் அவர் முன் தோன்றி, 'உனக்கு என்னதான் வேண்டும் கேள்’ என்றனர்.  எனக்கு கலைமகளின் அநுகிரகம் மட்டும் போதும்; இனி எனக்கு திருமகள் அநுகிரகம் வேண்டாம்' என்று வெறுப்பாக சொல்லி விட்டார். ஆனாலும் திருமகளிடம் ஒன்றை மட்டும் வேண்டிக் கேட்டுக் கொண்டரார். 'எனக்கு கிடைக்காத திருமகளின் அநுகிரகம், எனக்கு பால் தந்த மாடுமேய்க்கும் புக்கணனுக்கு கிடைக்க அருள்புரிக' என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஆகுக என்று இருவரும் கூறி மறைந்தனர்.
இந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்களில், ஹஸ்தினாபுரத்தின் அரசன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டான். மந்திரிகள், மாற்று அரசனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில், பட்டத்து யானையை அலங்கரித்து, அதன் துதிக்கையில் ஒரு பூமாலயைக் கொடுத்து, அரசனை தேர்ந்தெடுத்துவர அனுப்பி வைத்தனர். அது பல நாடு, காடுகளில் திரிந்து, புக்கணன் மாடு மேய்த்துவரும் காட்டை அடைந்தது.

புக்கணன் அப்போது காட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். யானை அவனுக்கு கங்கைநீரைச் சொரிந்து மாலையை இட்டது. அவனை தூக்கிக் கொண்டு வந்து அரசனாக்கியது.


சில நாட்கள் கழித்து, மாதவாசாரியர், புதிதாக அரசனாக மாறிய மாடுமேய்த்த புக்கணனை காண்பதற்காக அவன் இருக்கும் அரண்மனைக்கு சென்றார். நிச்சயம், புக்கணன் தன்னை அதே அன்புடன் வரவேற்பான் என்று எண்ணிக் கொண்டார். அவனும் அவ்வாறே மிக்க அன்புடன், தானே நேரில் வந்து மாதவாசாரியாரை எதிர்கொண்டு வரவேற்று அதே அன்பு, மரியாதையுடன் நடத்தினான். இருவரும் அவ்வாறு நட்புடன் இருந்து வந்தபோது, ஒருநாள் புக்கணன், மாதவாசாரியாரிடம், ‘உலகில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும் நூல்களை செய்து மக்கள் பயன் பெற உதவ வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான். அதன்படி மாதவாசாரியாரும் எண்ணில்லாத வியாக்கியானங்களை எழுதிப் பிரகடனப்படுத்தினார். அவைகளில் இவர் செய்த ‘சங்கரவிலாசம்’ நாற்பதினாயிரம் சுலோகங்களை உடையது. இதன் பின்னரே மாதவாசாரியருக்கு ‘வித்தியாரண்ணியர்’ என்ற பட்டப் பெயரும் ஏற்பட்டது.


No comments:

Post a Comment