Monday, November 30, 2015

போப்பின் வருத்தம்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சந்தோஷமாக இருக்குமா? போப் கவலை!

போப் வருத்தப்படுகிறார்; எங்கு பார்த்தாலும் சண்டை; உலகில் ஒரு பக்கமும் அமைதியாக இருப்பதாகத் தெரியவில்லை; கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது; விளக்குகளை ஏற்ற வேண்டும்; கொண்டாடத்தை ஆரம்பிக்க வேண்டும்; 

ஆனால் எல்லோரும் சண்டையில் (போரில்) இருந்தால் எப்படி ஆரம்பிப்பது? எல்லாமே போலித்தனமான போராகவே இருக்கிறது; எதற்கு சண்டை என்றே தெரியவில்லை; ஏன் இப்படி இந்த உலகம் மாறிவிட்டது? இந்த உலகத்துக்கு அமைதி பற்றிய எண்ணமே இல்லையா? இல்லை அதைப்பற்றி புரிந்து கொள்ளவில்லையா? பாவம் மனிதர்கள்!

வாட்டிகன் நகரில் பிரசங்கம் செய்தபோது, போப்பாண்டவர் தெரிவித்த கவலையான வார்த்தைகள்.....

சைனா புல்லட் ரயில்

புல்லட் ரயில்
சைனாவின் வட-மேற்குப் பகுதியில் உள்ள ஜின்சாங்க் பகுதியிலிருந்து இரான் வரை செல்லும் புல்லட் ரயிலை விடுவதற்கு சைனா தயாராகிறது; இந்த அதிவேக ரயில், கசகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெஸ்கிஷ்தான், துர்க்மெனிஸ்தான் வழியாக இராக்கின் டெஹ்ரான் நகருக்கு வந்து செல்லுமாம்; இது பொருள்களை ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும் என சைனா ரயில் கம்பெனியின் தலைமை என்ஜினியர் சொல்கிறார்;

கோணல் புத்தி


ரஷ்யாவில் உள்ள 22 வயது வாலிபருக்கு திருமணம் ஆகவில்லை; எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவும் பிடிக்கவில்லையாம்; ஆனாலும் வாழ்க்கை போரடித்ததாம்; கோணல் புத்தி வேலை செய்தது; ஒரு Pizza பிசா-வை வாங்கி, அதை திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறார்; ஏன் என்று கேட்டால், இந்த பிசா நம்மை வெறுக்காது; ஆனால் மனிதர்களுக்குள் இருக்கும் உறவில் அன்பு-வெறுப்பு இவைகள் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கின்றன; அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்கிறது; பீசாவுடன் வாழ்ந்து விட்டால் இந்த மனித வெறுப்பு எல்லாம் இல்லாமல் வாழலாம் என நினைத்தாராம்; எத்தனை நாளைக்கு பீசாவை திங்காமல் வைத்திருப்பான் என்று தெரியவில்லையே! ஆனால் அரசு அதிகாரிகள் இந்த திருமணத்துக்கு அனுமதி கொடுக்கவில்லையாம்; நல்ல வேளை பீசா தப்பித்தது; 


Thursday, November 26, 2015

மொபைல் போன் பேச்சும் இனி ஆதாரமே!

மொபைல் போன் பேச்சும் ஒரு ஆதாரமே!

மொபைல் போன் பேச்சை மொபைலிலேயே டேப் செய்து வைத்திருந்ததை ஒரு சட்ட ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்வி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் எழுந்தது; ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்த பிரச்சனை ஏற்பட்டது;

குற்றவாளிக்கும் அந்த சிறுமி வீட்டாருக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்சனை இருந்து வந்தது; அதனால், அந்த குற்றவாளிமீது இந்த பொய் வழக்கை போட்டிருப்பதாக குற்றவாளி சொல்கிறார்; அதற்கு ஆதாரமாக மொபைல் போனில் பேசிய பேச்சை டேப் செய்யப்பட்டு அந்த சீடியை ஆதாரமாக கொடுக்கிறார் குற்றவாளி; அதை கீழ்கோர்ட்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

சுப்ரீம் கோர்ட், இந்த சீடி ஆதாரத்தை ஏற்றுக் கொண்டது; அது உண்மையான ஆட்கள் பேசிய குரல்தானா என்று மட்டும் பரிசோதித்துக் கொண்டால் போதும்; அதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் இந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது;
குற்றவாளி, இந்த டேப்பை கோர்ட்டுக்கு கொடுத்து, அவர் இந்த வழக்கில் நிரபராதி என்று வாதாடுகிறார்;

எனவே இனி டேப் செய்யப்பட்ட சீடிக்களை ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம் என முடிவாகி உள்ளது; இதையே கீழ்கோர்ட்டுகளும் பின்பற்றலாம்;Sunday, November 22, 2015

சிறு தெய்வத்தின் சொத்து (minor Deity)

சிறுதெய்வம், தன் பெயரில் நிலம் வைத்துக் கொண்டு விவசாயம் பார்க்கலாமா?

கோயில்களில் உள்ள சாமியும் மனிதனைப் போலவே சொத்துக்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்; இதை சட்டம் அங்கீகரிக்கிறது; சாமியும் உயிருள்ள மனிதனைப் போலவே "living person" என்றே சட்டம கருதுகிறது; எனவேதான் எல்லாக் கோயில்களிலும் உள்ள சாமிகள் பெயரில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றன; வங்கிக் கணக்குகள் இருக்கின்றன; ஆபரணங்கள் இருக்கின்றன; 

ஆனால் இப்போது புதுமையாக ஒரு பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் அணுகி உள்ளது!

ஒரு கோவிலில் பெரிய சாமி இருக்கும்; அதுதான் தலைமை கடவுள்; அந்த கோவில் அந்த சாமிக்காக ஏற்பட்டது; ஆனாலும் அந்த கோவிலில் துணை கடவுள்கள் இருப்பார்கள்; இவர்களுக்கு சொத்து எதுவும் இருக்காது; பெரிய கடவுளுக்கு கிடைக்கும் வருமானத்தில், இந்த சின்ன கடவுளுக்கும் பூஜைகள் நடக்கும் அவ்வளவே!

இந்த சின்ன கடவுள்கள் சொத்து ஏதும் வாங்கமுடியுமா? அதன் பெயரில் சொத்துக்களை வைத்திருக்க முடியுமா? என்ற கேள்விகள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் எழுப்பப் பட்டது;

ஏற்கனவே அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த ராமர் கோயில் வழக்கில், சிறு தேவதைகள் பெயரில் (Minor Deity) மூன்றில் ஒரு பங்கு உரிமை உள்ளதை கோர்ட் அங்கீகரித்துள்ளது; 

ஆனால் ராஜஸ்தான் ஐகோர்ட் ஒரு வழக்கில், இந்த சின்ன தெய்வங்கள் பெயரில் இருந்த விவசாய நிலங்களை அது வைத்து பயிர் செய்ய முடியாது; நிலங்களை வைத்திருக்க அந்த சிறு தெய்வங்களுக்கு உரிமை இல்லை என்றும் அதை அரசு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கூறியது;  

இப்போது இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்துவிட்டது; 

அந்த ராஜஸ்தான் வழக்கில் உள்ள நிலத்தை அந்த சிறு தெய்வத்துக்கு பூஜை செய்யும் பூஜாரி விவசாயம் செய்து வருகிறார்; அதில் வரும் வரும்படியைக் கொண்டு பூஜை செய்கிறாராம்;

சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது என்று தெரியவில்லை;
பொறுத்திருப்போம்;
**

Saturday, November 21, 2015

சாம்பெட்ரி Champetry

சாம்பெட்ரி Champetry

சாம்பெட்ரி Champetry  என்ற வார்த்தை கோர்ட்டுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தை; ஒரு வழக்கை நானே முடித்து தருகிறேன்; அதற்கான செலவையும் நானே பார்த்துக் கொள்கிறேன்; கேஸ் ஜெயித்தவுடன் அந்த சொத்தில் எனக்கு இவ்வளவு பங்கு கொடுத்துவிட வேண்டும்; அல்லது இவ்வளவு பணம் கொடுத்துவிட வேண்டும் என்று சட்டத்துக்கு புறம்பாக ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்வதை சாம்பெட்ரி என்கிறார்கள்; அமெரிக்காவில் இப்படி ஒரு அக்ரிமெண்டை போட்டுக் கொள்ளலாம்; ஆனால் பிரிட்டனிலும், இந்தியாவிலும் இது தவறு;

நாம், இந்தியாவில், ஆங்கிலேய கோர்ட் முறையையே பின்பற்றி வருகிறோம்; இதில் வக்கீல் தொழில் என்பது ஒரு புனிதமானது என்றே கூறப்பட்டுள்ளது; பணம் சம்பாதிக்க இங்கு வரக்கூடாது என்பதே அதன் உண்மையான அர்த்தம்; அப்படியென்றால்? உண்மையிலேயே இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இந்த வக்கீல் தொழிலைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது; எனவே ஒரு வழக்குக்கு எவ்வளவு பீஸ் கொடுக்க வேண்டும் என்று எங்கும் வரையறை செய்யவில்லை;

பழைய காலத்தில், (பிரிட்டீஸ் ஆட்சியில்), கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்களுக்கு ஒரு கறுப்பு அங்கி கொடுத்திருப்பார்கள்; ஓவர் கோட்டுடன், இந்த வக்கீல் அங்கியையும் அணிந்து கொண்டுதான் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும்; இதை இப்போது கவுன் என்று சாதாரணமாகச் சொல்கிறார்கள்; உண்மையில் அதன் பெயர் ரோப்ஸ் Robes; இந்த ரோப்ஸ்க்கு, முன்பக்கம் பட்டன் இருக்காது, பெரிய கைகள் இருக்கும்; இதன் முன்பக்கம் இரண்டு ரிப்பன்கள் தொங்கும்; பட்டனுக்குப் பதிலாக அதை இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும்; அது ஒரு நிரந்தர உடை இல்லை என்பதால் இப்படி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்; இது இல்லாமல், மேலும் ஒரு சிறப்பு உண்டு; அந்த ரோப்ஸ்க்கு பின் பக்கத்தில் வரிவரியாக துணியை மடக்கி வைத்து ஒரு அடுக்குபோல தைத்திருப்பார்கள்; சாதாரண வக்கீல் இத்தகைய அடுக்க வைத்த ரோப்ஸ் கவுனைத்தான் போட வேண்டும்; சீனியர் வக்கீல் அல்லது பாரிஸ்டர் பட்டம் பெற்ற வக்கீல்கள் அணியும் ரோப்ஸ்-ல் இந்த அடுக்குக்குப்பதிலாக ஒரு மேலே ஒரு ப்ளாப் துணியும் இருக்கும்;

இவைகள் எல்லாம் இல்லாமல், இந்த ரோப்ஸ்க்கு பின் பக்கத்தில் ஒரு சிறிய பையை தைத்து அதை தொங்க விட்டிருப்பார்கள்; பார்ப்பதற்கு பழங்கால பாட்டிகள் வைத்திருக்கும் சுருக்குப்பை போலவே இது இருக்கும்; இந்த பையில்தான் வழக்குக்கு வருபவர்கள் தான் கொடுக்க நினைக்கும் பணத்தை போட்டுவிட்டு செல்வார்களாம்; அது எவ்வளவு என்று அந்த வக்கீலுக்குத் தெரியாது; ஏனென்றால் அந்த பை, அவரின் கவுனுக்கு பின்பக்கம் இருக்கும்; அவர் சாம்பருக்கு (அறைக்கு) சென்றபின்னரே அந்த கவுனைக் கழற்றி அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; இதன் சிறப்பு என்னவென்றால் – யார் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று தெரியாமலேயே எல்லோருக்கும் ஒரே மாதிரியான தன் சட்ட வாதத்தை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த, உன்னத நீதி இங்கு பின்பற்றப்படுகிறது; ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், வக்கீல் ஒரே கண்ணோட்டத்துடன் வழக்கை நடத்த வேண்டும் என்ற உயரிய கோட்பாடு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது;

ஆனால், இப்போது இந்த பையை காணவில்லை; கவுன் இருக்கிறது; கோட்பாடும் இல்லாமல் போய்விட்டது; வக்கீலுக்கு பீஸ் கொடுக்க பயந்து கொண்டே கோர்ட்டுக்கு போகமுடியாமல் தவிப்பவர்கள் ஏராளம்;

வக்கீலுக்கு எவ்வளவு பீஸ் கொடுக்க வேண்டும் என சில விதிமுறைகள் இருந்தாலும் அவை நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய்விடுகின்றன;

அமெரிக்காவில், இதற்கு ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்து உள்ளார்கள்; வக்கீலுக்கு மார்க் போடுவது; அவர் எவ்வளவு பீஸ் வாங்குவார்; எப்படி சட்டம் தெரிந்துள்ளார்; கோர்ட்டில் அவரின் வாதம் எப்படி இருக்கும்; கேஸ் கொடுத்தவரிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வார் என்று பல விஷயங்களை வைத்து அவருக்கு மார்க் உண்டு; அதை அவரிடம் கேஸ் நடத்திய பார்ட்டிகளே சொல்ல வேண்டும்; இந்த வக்கீலிடம் என் அனுபவம் எப்படி இருந்தது என்று; அதை வெப் சைட்டில் போட்டு விடுவார்கள்; எந்த வக்கீல் நல்ல வக்கீல் என்றும், எந்த வக்கீல் அநியாய பீஸ் வாங்கும் வக்கீல் என்றும் ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிவிடும்;

இங்கும் வக்கீல்களை மதிப்பீடு செய்யும் முறை இதேபோல வந்தால், அதன் புனித தன்மை காப்பாற்றப்பட்டுவிடும் என்றே நம்புகிறேன்.
                   _________________


சோசியல் பாய்காட் தடை சட்டம்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்
அதிகமான ஊர்களில் இந்த பழக்கமான “ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல்”  இன்னும் உள்ளது; இதை ஒரு தண்டனையாக கொடுக்கப்படுகிறது; தன் பஞ்சாயத்து தீர்ப்பை மதிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த தீர்ப்பை அந்த பஞ்சாயத்தின் தலைவர் வழங்குவார்; ஏமாந்தவர்கள், துணை ஆட்கள் இல்லாதவர்கள் இவர்களை மட்டும் இப்படி பழிவாங்கிவிடுவர்; ஆள், அம்பாரம் இருப்பவர்களை இந்த பஞ்சாயத்து ஒன்றும் செய்துவிடாது; அவர்களுக்கு இந்த ப்ஞ்சாயத்து வாலை ஆட்டிக் காண்பிக்கும்;
இது ஒருவகையில் கொடுமைதான்; சில குடும்பங்கள் இந்த தண்டனையை அனுபவிக்க முடியாமல் மடிந்தும் இருக்கிறது; ஊரிலேயே வாழவும் முடியாமல் போய் உள்ளது;
இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, மகாராஷ்டிர அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டுவரப் போகிறது; அந்த சட்டப்படி, இப்படிப்பட்ட பஞ்சாயத்து தீர்ப்புகள் “சட்டப்படி செல்லாது” என்றும் அந்த தீர்ப்பை கொடுப்பது “தண்டனைக்குறிய குற்றம் ஆகும்” என்று ஒரு சட்டத்தை கொண்டுவருகிறது; அதன்படி, எந்த பஞ்சாயத்தாவது இப்படி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் தீர்ப்பை கொடுத்தால், அதில் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், ஏழு வருட் சிறை தண்டனையும் உண்டு;
இந்த சட்டத்துக்குப் பெயர் Maharastra Prohibition of Social Boycott Act, 2015. இந்த சட்ட வரைவை (Draft) அரசு வெப்-சைட்டிலும் வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது;
தமிழக அரசும் அதை பார்த்து ஒரு புதிய சோசியல் பாய்காட் தடை சட்டத்தை கொண்டுவரலாம்; ஏற்கனவே இருக்கிறதா என்று தெரியவில்லை; இல்லை என்றே நினைக்கிறேன்;
                                               _______________பறவைகளுக்கு பறக்கும் சுதந்திரம் வேண்டும்!

விலங்குகளுக்கும் அடிப்படை உரிமை

அடிப்படை உரிமை என்பது Fundamental Right; இதை ஜனநாயகத்தை பின்பற்றும் எல்லா நாடுகளும் அந்த நாட்டு மக்களுக்கு வழங்கி உள்ளன; தனிமனித உரிமைகள் இவைகள்; இது மனிதனுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமா? விலங்குகளுக்கும் இந்த உரிமை கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது;

பறவைகளுக்கும் அடிப்படை உரிமை உண்டு; அதை கூண்டில் அடைத்து வைக்க மனிதனுக்கு உரிமை இல்லை; ஒரு வழக்கில், குஜராத் ஐகோர்ட் இத்தகைய தீர்ப்பை பறவைகளுக்கு வழங்கி உள்ளது; அதை எதிர்த்து அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு வந்தது. வெள்ளிக்கிழமை விசாரனை நடந்த்து; அதில் சுப்ரீம் கோர்ட் தனது முடிவைப் பின்னர் சொல்வதாக சொல்லியுள்ளது.

பறவைகளை கூண்டில் அடைத்துவைப்பது, இறக்கைகளை வெட்டிவிடுவது; இறக்கைகளை செலோ டேப் கொண்டு ஒட்டி விடுவது, காலில் பெரிய வளையம் மாட்டி அவைகளை பறக்கவிடாமல் செய்வது, இப்படிப்பட்ட கொடுமைகளை செய்கிறார்களாம்;

இறைவன் பறவைகளை இயற்கையாக பறந்த திரியவே படைத்துள்ளான்; அதை அடைத்து வைப்பது எந்த வகையில் நியாயம்; அவைகள் உரிமைகள் பாதிக்கப்டுகின்றன என குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு கொடுத்துள்ளது;

இயற்கை கொடுத்த வரத்தை யார் கட்டுப்படுத்தினாலும் அது உரிமை மீறலே!!
________________


Wednesday, November 4, 2015

கனடாவின் மூன்று மந்திரிகள் இந்தியர்கள்!

கனடாவின் மூன்று மந்திரிகள் இந்தியர்கள்!
கனடா நாட்டின் மக்கள் சபைக்கு மொத்தம் 338 எம்.பி.க்கள்; இதில், இப்போது நடந்து முடிந்த தேர்தலில், லிபரல் பார்ட்டி 184 எம்.பி. சீட்டுகளை வென்று நேற்று புதன்கிழமை ஆட்சி அமைத்துள்ளது; அதன் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடவ் 23வது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்; அவருடன் 23 மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்; அதில் 13 பேர் பெண் மந்திரிகள்; அதிலும் சிறப்பாக மூன்று மந்திரிகள் டர்பன் என்னும் தலைபாகை கட்டிய பஞ்சாபி சீக்கியர்கள்;
டர்பன் கட்டிய ஹர்ஜித் சஞ்ஞன் என்பவர் இராணுவ மந்திரியாகவும், டர்பன் கட்டாத அமர்ஜீத் ஷோகி என்பவர் Infrastructure என்னும் உள்கட்டமைப்பு மந்திரியாகவும், டர்பன் கட்டிய நவ்தீப் பெயின் என்பவர் Innovation, science and economic development என்னும் புதிய வழிமுறைகள், விஞ்ஞானம், பொருளாதார வளர்ச்சி மந்திரியாகவும் புதிய பொறுப்புகளை ஏற்கின்றனர்;
சஞ்ஞனுக்கு 42 வயது; அமர்ஜீத் இந்தியாவில் டிரைவராக இருந்தவர்; நவ்தீர் பெயின் பேராசிரியராக இருக்கிறார்;
**
நினைவுகளும் கூடவே....

நினைவுகளும் கூடவே....
இந்தியாவைவிட கனடா நாடு சுமார் மூன்று மடங்கு நிலப்பரப்பில் பெரியது; இந்தியா 32 லட்சம் சதுர கி.மீ; கனடா 1 கோடி சதுர கி.மீ. கனடாவில் இப்போதுதான் தேர்தல் நடந்த முடிந்து அங்கு லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; அதன் புதிய பிரதமராக Justin Trudeau ஜஸ்டின் ட்ரூடவ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்; இவருக்கு 42 வயதுதான் ஆகிறது; திருமணம் ஆகி மூன்று குழந்தைகளும் உள்ளன; கடைசி குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு இயல்பாக திரிகிறார்; இவர் கனடாவின் 23வது பிரதமராம்;
நேற்று இவரும் இவர் மனைவியும் குழந்தைகளும் பார்லிமெண்ட் கட்டிடத்துக்குள் சென்றுள்ளனர்; கட்டிடத்தில் யாருமே இல்லை; கட்டிடத்தின் ஒவ்வொரு பிரமாண்ட அறையும் சுற்றிச் சுற்றி வருகின்றனர்; ஒரு ஹாலில் வந்தவுடன் அங்கு நின்று, தன் இரண்டு விபரம் தெரிந்த குழந்தைகளிடமும் ஒரு போட்டோவைக் காட்டி (portrait) கேட்கிறார்; “இவர் யாரென்று தெரிகிறதா?” அங்கு இவ்வாறு பல போட்டோ பிரேம்கள் உள்ளன; எல்லாமே முன்னாள் பிரதம மந்திரிகளின் போட்டோக்களாம்; மகனும், மகளும் பதில் சொல்கிறார்கள், “தாத்தா! நம்ம தாத்தா பியர் Pierre” என்று.
ஆம், உங்களின் தாத்தாதான் என்று, இப்போது புதிதாய் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடவ் தன் குழந்தைகளிடம் ஆமோதிக்கிறார்;
“இன்று அவர், (தாத்தா) நம்மைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பார்; நாமும் அவரைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருப்போம்” சரிதானே?
அவ்வாறு சொல்லியபடி, அந்த போட்டோவை கொஞ்ச நேரம் தழுவிக் கொண்டிருந்துவிட்டு, “சரி போகலாமா?” என்று அங்கிருந்து நகருகிறார்கள்.
இவரின் தகப்பனார், கனடாவில் 1968 முதல் 1984 வருடங்கள்வரை பிரதமராக பதவி வகித்தவர்;
நினைவுகளில் சில....

**

Sunday, November 1, 2015

ஆஸ்திரேலியாவின் தாஜ்மஹால்!

ஆஸ்திரேலியாவின் தாஜ்மஹால்!
ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் மெல்பர்ன் நகரம்-MELBOURNE;  ஆஸ்திரேலியாவிலேயே இந்த நகரம்தான் இரண்டாவது பெரிய நகரமும் கூட; சுமார் 10 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது; நம்ம சென்னை வெளி ஏரியாவுடன் சேர்த்தே சுமார் ஆயிரம் கி.மீ. பரப்பளவுதான்! அப்படியென்றால், சென்னையைக் காட்டிலும் இந்த மெல்பர்ன் நகரம் பத்து மடங்கு பெரியது;
அதுபோல, ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்துக்கு தலைநகர் பெர்த்-PERTH. இது ஆஸ்திரேலிய நாட்டிலேயே நான்காவதாக உள்ள பெரிய நகரம்; இது சுமார் 6,500 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது; சென்னையைக் காட்டிலும் ஆறு மடங்கு பெரிய நகரம்; ஆஸ்திரேலிய வரைபடத்தைப் பார்த்தால், அதில் மேற்கு கரையோரம் இருக்கும் பெரிய நகரம்தான் இந்த பெர்த் நகரம்;
இந்த பெர்த் நகரத்தில், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பணக்காரரும் அவர் மனைவியும் வசிக்கிறார்கள்; இவர்களை ஓஸ்வால் குடும்பம் என்பார்கள்; இவர்கள் பெரிய உரத் தொழிற்சாலை நடத்தி வருகிறார்கள்; உரத்துக்குத் தேவையான அமோனியாவை திரவ நிலையில் தயாரிக்கும் பெரிய கம்பெனி; பணக்காரர் என்றால், “உங்க வீட்டுப்பணம், எங்க வீட்டுப்பணம் எல்லாம் கிட்ட நிற்காது”, அவ்வளவு பெரிய செல்வந்தர்; ஆஸ்திரேலியாவிலேயே ஒருசில பெரும் பணக்காரர்களில் இவர் முன்னனியில் இருப்பவர்; இரண்டு பில்லியன் ஆஸ்திரேலியா டாலர் சொத்து இருந்ததாம் (கணக்கை நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள்);  
இவருக்கு என்ன ஆசையோ தெரியவில்லை, ஒரு பிரமாண்டமான கட்டிடத்தை, அதாவது தாஜ்மஹால் என்று சொல்லும் அளவுக்கு கட்டிவிட வேண்டும் என்று ஆசை! அதை அவர் வசிக்கும் வீடாகவே வைத்து வசித்துக் கொள்ள நினைத்தாராம்; பெர்த் நகரில் உள்ள முக்கியமான பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெரிய நிலத்தை சுமார் 165 கோடிக்கு வாங்கினாராம்; (நிலத்துக்கு மட்டுமே அவ்வளவு விலை); அதில் தன் தாஜ்மஹால் என்னும் அரண்மனையை கட்டத் துவங்கி இருக்கிறார்; இவருக்கு, நம்ம ஊர் பழமொழியான “சிறுக கட்டி பெருக வாழ்” என்ற பொன்மொழியை சொல்லிக் கொடுக்க ஆள் இல்லைபோலும்! கட்டிடம் என்றால் பிரமாண்டம்; உள்ளேயே சாமி கும்பிட கோயில்; 17 கார்கள் தானாகவே போய் நிற்கும் இடங்கள்; உடற்பயிற்சிகூடும்; இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்! இதுவரை 265 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம்;
சுமார் பத்து வருடங்களுக்குமுன், 20 வயதுள்ள பங்கஜ்-ராதிகா ஓஸ்வால் தம்பதிகள் கொஞ்சம் பணத்துடன் ஆஸ்திரேலியா பெர்த் நகருக்கு வந்தவர்கள்; அப்போது இவர்களை யாருக்கும் தெரியாது; வந்த வேகத்தில் பணம் கொட்ட ஆரம்பித்தது; அடுக்கிக் கொண்டே போகலாம்...
ஆனால், அதிஷ்டம் பத்து வருடத்தில் பறந்துவிட்டது; 2010ல் தொழிலில் நஷ்டம்; எல்லாப்பக்கமும் அடி; மரண அடி; அரசாங்கத்துக்கு வரிகட்டக் கூட முடியவில்லையாம்;
பெர்த் நகரில் கட்டிக்கொண்டிருந்த “தாஜ்மஹாலை” கட்ட முடியவில்லை; நம்ம ஊரில், சிமெண்ட் பூச்சுவேலை இல்லாமல் இருக்கும் கட்டிடத்தைப் போல அப்படியே போட்டுவிட்டார்; வாழ்ந்தவன் கெட்டால், அதே ஊரில் வாழ முடியாது; ஓஸ்வால், துபாய்க்கு மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பி விட்டார்; ஏதாவது புரோக்கர் வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்திருப்பார்போலும்!
பெர்த் நகரில் பாதி கட்டிய நிலையில் உள்ள “தாஜ்மஹாலை” போய் பார்க்க கூட முடியவில்லை; கட்டிடம் நாளாக நாளாக பாழடைந்து வருகிறது; சீட்டு விளையாடுபவர்களுக்கு கொண்டாடம்; ரௌடிகள் ஒளிந்து கொள்ள ஒரு வசதியான கட்டிடமாக இருந்திருக்கிறது; பணக்காரர்கள் வசிக்கும் ஏரியாவில் இந்தக் கட்டிடம்; அங்கு வசிப்பவர்கள் இந்த கட்டிடத்தை இடிக்கும்படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறார்கள்; ஆனால் ஓஸ்வாலுக்கு மனசே ஆறுதல் அடைய மாட்டேன் என்கிறது; மறுத்துப் பார்க்கிறார்; நான் வந்து மீண்டும் கட்டிவிடுவேன் என கனவு; முடியவில்லை; வேறு வழியில்லாமல் கட்டிடத்தை இடிப்பதற்கு ஒப்புக் கொள்கிறார்;
ஒரு பாங்க் மட்டும் இவருக்கு 900 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரைக் கடனாக கொடுத்திருந்ததாம்; அந்த பேங்க் இப்போது ஓஸ்வால் மீது கோர்ட்டில் வழக்குப் போட்டிருக்கிறது; சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது;
பணம் என்ற இறக்கை இருந்தால் குதிரை தரையில் ஓடாது, பறக்கத்தான் செய்யும் போல!

**

பென்காசி தாக்குதலும் கிலாரி கிளிண்டனும்

“பென்காசி தாக்குதலும் கிலாரி கிளிண்டனும்”
லிபியா நாட்டில் உள்ளது பென்காசி நகரம்; இங்கு அமெரிக்கத் தூதரகம் உள்ளது; அதில் அந்த லிபியா நாட்டுக்குத் தூதுவராக அமெரிக்க தூதுவர் (தூதர்) கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் பதவியில் இருந்தார்;
2012ம் வருடம் செப்டம்பர் 11; திடீரென்று லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அங்குள்ள சில பயங்கரவாதிகள் தாக்கினர்; அப்போது அங்கிருந்த அமெரிக்க தூதரக கட்டிடத்தில் இருந்த அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், மற்றும் அமெரிக்க உயர் அதிகாரியான சீன் ஸ்மித் உள்ளிட்ட நான்கு அமெரிக்கர்கள் இந்த தாக்குதலில் பரிதாபமாக உயிர் இழந்தனர்;
பொதுவாக அமெரிக்க தூதரகங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அந்த அமெரிக்கநாடு செய்திருக்கும்; ஆனால் இங்கு ஏதோ பாதுகாப்பு குறைபாடு இருந்ததால்தான் இவ்வாறு அமெரிக்க தூதரே தாக்குதலில் உயிர் இழக்க நேரிட்டது என அமெரிக்க மக்கள், அமெரிக்க அரசாங்கத்தின் மீதே கோபத்தில் இருந்தனர்; அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் கிலாரி கிளிண்டன்; இவர் மீதும் அமெரிக்க மக்கள் கோபத்தில் இருந்தனர்;
லிபியா நாட்டில் கடாபி ஆட்சி; அங்கு கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி செய்கிறார்கள் என்பதும் தெரியும்; அப்படிப்பட்ட சூழலில், ஏன் அமெரிக்க அரசும், வெளியுறவுத்துறை அமைச்சரான கிலாரி கிளிண்டனும் அந்த பென்காசி நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போதிய பாதுகாப்பை முன்கூட்டியே ஏற்படுத்தவில்லை என்ற கேள்வி அமெரிக்க மக்களிடம் இன்னும் இருந்து வருகிறது; இந்த கிலாரி அம்மையார் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்; (அமெரிக்க அதிபர் ஒபாமா இருக்கும் கட்சிதான் இது); இதில் அமெரிக்க எதிர்கட்சி குடியரசு கட்சி; இந்த எதிர்க்கட்சி கிலாரி கிளிண்டன் அம்மையார் மீது குற்றச்சாட்டை அடுக்கியது;
இந்த பென்காசியில் உள்ள அமெரிக்கு தூதரகத்தில், அங்குள்ள பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது கிலாரி அம்மையாருக்கு தெரிந்தும், அதை வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்றும் பெரிய குற்றச்சாட்டு அவர்மீது இன்றும் இருந்து வருகிறது.
இப்போது, கிலாரி அம்மையார், ஜனநாயக கட்சியில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு நிற்க உள்ளார்; அமெரிக்காவில் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தால், அதை அமெரிக்க பார்லிமெண்ட் கமிட்டி விசாரனை செய்யும் என்பது மரபு; எனவே அந்த கமிட்டியைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு, இந்த கிலாரி அம்மையாரை சரமாரி கேள்விகளைக் கேட்டு பென்காசி படுகொலை சம்மந்தமாக விசாரனை செய்தது; கிலாரி அம்மையாரும் 23.10.2015ல் இந்த குழுவின் முன்னர் ஆஜராகி அதற்கு சளைக்காமல் பதில் அளித்தார்; “இந்த பயங்கர நிகழ்வு எனக்கு முன்கூட்டியே தெரியாது; நான் எதையும் மறைக்கவும் இல்லை; அரசியல் காரணமாக எதிர்கட்சி என்மீது பழி போடுகிறது; இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை ஏதும் இல்லை” என்று தன்னிடம் இருந்த ஆதாரங்களுடன் மறுத்தார்;
கிலாரி அம்மையார் கட்சியைச் சேர்ந்தவர்களான ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்த அம்மையாரின் துணிச்சலான ஆதாரத்துடன் கூடிய பதிலை புகழ்ந்துள்ளனர். விசாரனைக்குழு என்ன செய்யப் போகிறதென்று தெரியவில்லை!
நடிகர் கவுண்டமணி சொன்னதுபோல, அரசியலில் இதெல்லாம் சகஜமாகத்தான் இருக்கும்போல!
**