Tuesday, December 31, 2013

மன்மதன்

மன்மதன்:

விஷ்ணுவின் மானச புத்திரன் மன்மதன். மன்மதனின் பாரி (மனைவி) ரதி. மன்மதன் என்பதன் பொருள் மனதுக்கு கிளர்ச்சியைக் கொடுப்பவன் என்பது. மன்மதனை பிரம்ம புத்திரன் என்று கூறுவாரும் உளர்.
ரிக் வேதம் பிரமசைத்தன்னியத்திலே முதலில் எழுந்தது ‘இச்சை’ என்று கூறியுள்ளது. காம-இச்சைக்கு அதிதேவதையாகிய மன்மதனே புராணங்களில் பெரும்பாலும் பேசப்படுபவன்.
மன்மதன் அழகோடு கூடிய யவ்வனத்தை (இளமையை) அதிகரித்து நின்று ஆண் பெண்ணைச் சேர்த்து பிரஜாவிருத்திக்கு (மக்கள் உற்பத்திக்கு) உபகாரம் செய்யும் அதிகாரமூர்த்தி. மன்மதன் அரூபியாய் (உருவம் இல்லாமல்) வசந்தகாலம், நிலாமணிமேடை, மணற்குன்று, பூஞ்சோலை, சந்திரோதயகாலம், புஷ்பம், வாசனை, அழகு இவைகளை தனக்கு பரிவாரமாகக் கொண்டிருப்பவன்.
தாரகாதி அசுரரால் வருந்திய தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதன் சிவபெருமான் மீது காமபாணங்களைச் செலுத்தி அவர் நெற்றிக்கண்ணுக்கு இரையாகி அங்கமிழந்து அநங்கன் என்னும் பெயர் கொண்டான்.
மன்மதன் பாரியாகிய ரதிதேவி, பார்வதியை கெஞ்சி தன் குறைகளைக் கூறினாள். பார்வதி, ரதியைத் தேற்றி, “உன் கணவன், கிருஷ்ணனுக்கு பிரத்தியுமனன் என்னும் பெயரோடு புத்திரனாகப் பிறப்பான். அந்தச் சிசுவை சம்பராசுரன் கவர்ந்து போய் கடலில் போடுவான். அந்த சிசுவை ஒரு மீன் கவர்ந்து விழுங்கும். அந்த மீனை ஒரு வலைஞன் பிடிப்பான். அந்த மீனை பிடித்துவந்து சம்பரனுக்குக் கொடுப்பார்கள். நீ அப்போது சம்பரன் வீட்டு வேலைக்காரியாக இருப்பாய். அப்போது இந்த மீனை நீ அறுத்து அதில் உள்ள சிசிவை எடுத்து கொள்வாய் அவனே உன் கணவன் மன்மதன். நீ அவனுடன் வாழ்வாய்” என்று கூறியருளினார்.

இந்தச் சரித்திரம் “வாமன பாகவத விஷ்ணு புராணங்களில்” கூறப்பட்டுள்ளது. ஸ்காந்த புராணத்திலே கூறப்பட்ட இந்த சரித்திரம் சற்று விகற்பமானது.

Monday, December 30, 2013

GB Law Firm


M/s. GB Law Firm, (G.Balakrishnan & B.Shyam), Advocates,
Office: at No.9, Kondi Chetty Street, Opp. to High Court, Chennai-1.
Mobile: 9566123399/ 9790857581 Mail <gbadvocate80@gmail.com>

Friday, December 27, 2013

நீலியின் நீலிக்கண்ணீர்

நீலியின் நீலிக்கண்ணீர்:

பழையனூர் வணிகன் மனைவி. இவள் விவாகமாகிச் (திருமணமாகிச்) சிறிது காலத்தில் இறந்து திருவாலங்காட்டிலே பேயாய் திரிந்தாள். இவள் இறந்தவுடன் இவளின் கணவன் வேறு ஒருத்தியை இரண்டாந்தாரமாக மணந்து மகிழ்ச்சியாக இருந்தான். இறந்த முதல் மனைவியான நீலி இதை தாங்கமுடியாமல் பேயாகித் தவித்தாள்.
ஒருநாள் அவளுடைய நாயகன் அக்காட்டுவழியே தனித்துச் சென்றபோது, இந்த நீலிப்பேய் அவனுடைய இரண்டாம் மனைவியைப் போல வடிவங்கொண்டு ஒரு கள்ளிக் கட்டையைப் பிள்ளையாக்கி மருங்கிலே (இடுப்பில்) தாங்கிக் கொண்டு அவனைத் தொடர்ந்தாள். 
இதைத் அறிந்துகொண்ட அவளின் கணவன் அவ்வடிவத்தை பேயென நிச்சயித்து அப்பேயினது வஞ்ச மொழிகளுக்கு இணங்காது ஒடினான். அந்தப் பேயும் “இது முறையோ, இது முறையோ என்று கூவிக்கொண்டும், என்னை காட்டில் விட்டுவிட்டுச் செல்ல நினைத்தீரோ?” என்றும் அழுது கேட்டுக் கொண்டே வந்தது. 
அவ்வாறே பின்தொடர்ந்தே காஞ்சீபுரத்தையடைந்து அங்கே அம்பலத்தில் கூடியிருந்த (மரத்தடியில் கூடியிருந்த பஞ்சாயத்து சபையினரை) வேளாளரிடத்துச் சென்று தனது வழக்கைச் சொல்லிற்று.
அம்பலத்து வேளாளர் இருவர் இந்த வழக்கைக் கேட்டுப் பேயைப் பார்த்து, ‘நீ கூறுவதற்கு சாட்சி யாதென்று’ வினவ, அதற்கு அந்தப் பேய், ‘நான் இக்குழந்தையை விடுக்கின்றேன், அது அப்பா என்றழைத்து இவரின் மடிமீது ஏறும் பாருங்கள்’ என்றாள். 
அப்பிள்ளையும் அவ்வாறே செய்து 'அப்பா' என்றழைத்து அவனிடம் ஒடியது. 
கணவனான வணிகனோ, ‘இது பேய்க்கூத்து’ என்றான். 
இதுகேட்ட வேளாளர், ‘இது உண்மையானால் நாங்கள் பிணையாவோம் (பொறுப்பாய் இருப்போம்); நீயும் இவளும் இந்த அறையினுள் போய் சிறிது நேரம் பேசிவாருங்கள்’ என்றனர்.
வணிகனும் அவர்களின் பேச்சை மறுக்க முடியாமல், அவனும் பேயும் அறைக்குள்ளே சென்றனர். 
அந்தப் பேய், கதவைச் சாத்திக்கொண்டு அவன் உயிரைப் பறித்து மறைந்தது. 
வேளாளர் எண்பதின்மரும் (18 பேரும்) கதவைத் திறந்து பார்த்தபோது, அவன் இறந்ததைக் கண்டு, ‘எங்களின் பேச்சால்தான் உயிர் போனது’ என்று கூறி அவர்களும் தீப்பாய்ந்து உயிர் துறந்தனர். 
சிவபிரான் அவர்களின் சத்திய நெறிக்கிரங்கி எல்லோரையும் எழுப்பி வேளாளர் வாக்கைக் காத்தருளினார். 
இவ்விஷயம் தொண்டை மண்டல சதகத்திலும் சேக்கிழார் புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.
இதுமுதல், 'ஏமாற்றிக் கண்ணீர்விடும் பெண்களின் கண்ணீரை 'நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்' என்று கூறும் இந்தப் பழமொழியும் வந்தது.

நாராயணன்:

நாராயணன்:

விஷ்ணு. நாரம்=ஜலம். அதிற்போந்தமையின் நாராயணன்.
மகா பிரளயத்தில் சமஸ்தமும் அப்பு ரூபமாக ஒடுங்கிய பொழுது அதில் விஷ்ணு தோன்றி உலகனைத்தையும் தோற்றுவித்தார் என்பது வேதபுராணங்களின் கருத்து.
இந்நாராயணபதம் விஷ்ணுவுக்கு மாத்திரமன்று சிவனுக்கும் பெயராகச் செல்லும் என்பர். 
ஜகம் அப்புவில் ஒடுங்கிய கற்பத்தில், அதனை மீளவும் அந்த தத்துவத்தினின்று தோற்றுவித்த பரப்பிம்மத்தினது புருஷ அம்சமே நாராயணன் எனப்பட்டது. 
நாரம் என்பது அப்புவினது மூலப்பகுதி. அது மண்டலமிட்டு எழுந்தாடும் சர்ப்ப வடிவினை உடையாதாய் இருக்கும். அதன் சக்திபாகம் சங்கினது வடிவை உடையாதாய் இருக்கும். 
அப்புவினிடத்து விளங்கும் புருஷ அம்சம் ஆதிசேஷன் என்னும் சர்ப்பத்தைப் பாயலாகக் கொண்டு அறிதுயில் செய்யும் நாராயணனாகக் கூறப்படும். 
ஒடுங்காது எஞ்சி நின்று, மீளவும் சகத்துக்கு ஆதி காரணமாய் கிடந்தது அப்புவினது மூலப்பகுதி ஆனதால் அஃது ஆதிசேஷன் எனப்பட்டது. சேஷம்=எஞ்சியது. அப்புவினது மூலப்பகுதி மண்டலமிட்டு எழுந்தாடும் சர்ப்ப வடிவினதென்பது அப்புவினது அணுவை எடுத்துச் சோதித்தால் இனிது புலப்படும். 
அவ்வணுவானது ஸ்தூல நிலைவிட்டுச் சூக்குமித்துச் சூக்குமித்துப் போய் ஏழாவது நிலையை அடையும்போது இவ்வடிவைப் பெறும். கமல வடிவுடைய அப்புவினடத்தே பிரமாவாகிய சிருஷ்டி புருஷன் தோன்றுவான். 
அவையல்லாமல், அப்புவின் மூலப்பகுதியை ஆதிசேஷன் என்றும், அப்புவுக்கு குறி கமலம் என்றும், கூறிய நமது பூர்வ வேதாந்த சித்தாந்த நூலாசிரியர்களது பூத பௌதிக ஞானமும் புத்தி நுண்மையும் அநுபவமும் பெரிதும் பாரட்டப்படத்தக்கன என்பது இக்கால ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெளியிட்ட பரீக்ஷாவிஞ்ஞானங்களை  ஊன்றி கவனிக்குமிடத்து நன்கு துணியப்படும். 

நாரதன்:

நாரதன்:

இவர் முந்திய மகா கற்பத்தில் உபவருகன் என்னும் கந்தருவனாக இருந்து பிரமசிரேஷ்டர் என்னும் பிராமணர் செய்த யாகத்துக்குப் போய் அங்கே வீணா கானம் செய்து அங்கு வந்திருந்த ஒரு கன்னிகையை வசியஞ் செய்து அவளைப் புணர்ந்து போயினர். 
அஃதுணர்ந்த பிராமணர் அவரைச் சூத்திர வருணத்தில் பிறக்க என்று சபிக்க, அவ்வாறே சூத்திரனாகப் பிறந்து மகாதவஞ் செய்து பிரமமானச புத்திரராகப் பிந்திய கற்பத்தில் பிறந்தவர். 
இவர் கலகப்பிரியர். 
இவர் தக்ஷப்பிரஜாபதி பிள்ளைகள் யாவருக்கும் ஞானோபதேசம் செய்து சிருஷ்டிக்கு பிரதிகூலம் செய்ய, அதுகண்ட தக்ஷன் சந்ததியில்லாதவராய் நிலையற்று அலைக என்று இவரைச் சபித்தான். அதனாலே திரிலோகங்களிலும் செல்பவராயினர். இவர் தான் காதினால் கேட்டவற்றை பிறருக்குச் சொல்லாமல் இருப்பதில்லை. 
தேவசபை, இராஜசபை, வேள்விச்சாலை, முதலிய எல்லாவிடத்தும் தடையின்றிச் செல்லும் சுவாதீனம் உடையவர். தனியிடங்களில் அகப்பட்டுத் திக்கற்று இருப்பவர்களுக்கு வெளிப்பட்டு உபாயமும் பின்நிகழ்வதும் கூறுபவர். 
தூதுபோய்ச் சாதுரியமாகப் பேசுவதிலும் வல்லவர். தரும நூலிலும் சிறந்தவர். வீணையிலே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். 
கிருஷ்ணனது அவதாரத்தைக் கஞ்சனுக்கு உணர்ந்தினவரும், ராமாயணத்தை வால்மீகிக்கு உரைத்தவரும், இந்த தேவ ரிஷியே. இவர் சம்பந்தப்பட்டாத வைதீக சரித்திரங்கள் மிகச்சிலவே.

நாடிக் கிரந்தம்:

நாடிக் கிரந்தம்:

பதினைந்து நாடி கிரந்தங்கள் உள்ளன. 

அவை 
 1. சூரியநாடி, 
 2. சந்திரநாடி, 
 3. குசநாடி, 
 4. புதநாடி, 
 5. சுக்கிரநாடி, 
 6. குருநாடி, 
 7. சாமிநாடி, 
 8. ராகுநாடி, 
 9. கேதுநாடி, 
 10. சர்வசங்கிரநாடி, 
 11. பாவநாடி, 
 12. துருவநாடி, 
 13. சாவநாடி, 
 14. சுகநாடி, 
 15. தேவிநாடி என்பன. 


இந்த நாடி கிரந்தங்களிலே உலகத்திலேயுள்ள மாந்தர் பெரும்பாலோருக்கு ஜாதகங்களும் பலன்களும் கூறப்பட்டுள்ளது. 

Saturday, December 21, 2013

வருகுவது தானே வரும்!

வருகுவது தானே வரும்!
ஔவையார்: சோழியப் பிராமணராகிய பகவனார் என்பவருக்கு ஆதி என்பவள் வயிற்றிலே பிறந்து, காவிரிபூம்பட்டிணத்திலே பாணர்சேரியிலே வளர்ந்து தமிழ் புலமை உடையவராக விளங்கியவர்.
பகவனாரும் அவர் மனைவி ஆதியும் செய்து கொண்ட சங்கேதப்படி, அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை எல்லாம் அவைகள் பிறக்கும் இடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவர். ஔவையை பெற்றவுடன் இந்த சிசுவை எவ்வாறு விட்டுச் செல்வேன் என்று ஆதி கலங்கினாள்.
உடனே ஔவையாராகிய அச்சிசு ‘எவ்வுயிரும் காப்பதற்கோ ஈசன் உண்டோவில்லையோ – அவ்வுயிரில் யானுமொன்றிங் கல்லேனோ–வவ்வி–அருகுவதுகொண்டிங் கலைவானேனன்னாய் – வருகுவது தானே வரும்’ என்னும் பாடலை அற்புதமாகக் கூறக் கேட்ட தாய் அவ்விடத்திலிருந்து சென்றாள்.
ஔவையாருக்கு அதிகமான், திருவள்ளுவர், கபிலர் என மூவர் சகோதரர்கள். உறுவை, உப்பை, வள்ளி என மூன்று சகோதரிகள். ஔவையார் தமிழ் புலமையோடு மதிநுட்பமும் உடையவர். இல்லற ஒழுக்கத்தை விரும்பாது தவத்தையே மேற்கொண்டொழுகினார். சிறிது காலம் மதுரையிலும், சிறிது காலம் சோழ நாட்டிலும், சிறிது காலம் சேர நாட்டிலும், நெடுங்காலம் அதிகனிடத்திலும், எஞ்சிய காலம் முனிவர் வாசங்களிலும், வசித்தவர்.
அரசர்களையும் பிரபுக்களையும் பாடி அவர்கள் கொடுக்கும் பரிசில்களை பெற்று வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்டோர் அதிகன், சேரமான் வெண்கோ, தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், உக்கிரப்பெருவழுதி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, முதலியோர்.
தமது தேகமெலிவைக்கண்டு இரங்கி அதிகன் கொடுத்த கருநெல்லிக்கனியை வாங்கியுண்டவர். இக் கருநெல்லிக்கனி யாருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதன்று. இதை உண்டவர்க்கு திடகாத்திரமும் தீர்க்காயுளும் தரும் இயல்புடையது. அத்தகைய அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாது ஔவைக்கு கொடுத்த அதிகன் சிறப்புடையவன்.
‘பெருமலைவிடரகத் தருமிசைக்கொண்ட
சிறியிலைநெல்லித் தீங்கனிகுறியா
தாதனின்னகத் தடக்கிச் சாதனீங்க வெமக்கீந்தனையே’
--என புறநானூறில் வரும் பாடல் தெளிவுறுத்தும்.
அதிகன் மீது கொண்ட அன்பினால் அவனின் தூதுவராக தொண்டைமானிடம் சென்ற ஔவையிடம், தொண்டைமான் தனது வலிமையைக் காட்ட நினைத்து தனது ஆயுத சாலையைத் திறந்து காட்ட, இவ்வாயுதங்களெல்லாம் நெய்யிட்டு மாலைசாத்திப் பூசிக்கப்படுவனவாயக் கதிர்கான்று விளங்குகின்றன. அதிகனுடைய ஆயுதங்களோ பகைவரைக் குத்தித் தினந்தோறும் பிடியும் நுதியுந்சிதைந்து கொல்லனுடைய கம்மிய சாலையின்கண்ணவாம்’ என்று கூறி தொண்டைமான தலைகுனிவித்த ஔவை மதிநுட்பமுடையவர்.

திருமூலர், தினம் ஒன்றுக்கு, மனிதனிடம் எழும் 21,600 சுவாசங்களையும் 730 ஆக அடக்கி, மூவாயிரம் வருடம் உயிரோடிருந்தார். அதுபோல, ஔவையும் நெல்லிக்கனியால் 800 வருடங்கள் உயிருடன் இருந்தார். இந்த உண்மை யோகசாஸ்திரம் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு புலப்படாது. 

மையாடிய கண்டன்

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தான மெனிரே.

மையாடிய கண்டன் = நீலநிறம் பொருந்திய மிடற்றை உடையவன்;
கையாடிய = துதிக்கை ஆடிய
ரி உரி மூடிய = கரிய தோல் மூடிய
செய்யாடிய  = வயலில் ஆடிக் கொண்டிருக்கிற
குவளைம்மலர் நயனத்தவளோடும் = குவளை மலர் போன்ற கண்களை உடையவளோடும்;

நெய்யாடிய பெருமானிடம் =  (பஞ்ச கௌவியத்தில் ஒன்று நெய்) நெய்யில் ஆடிய;

மந்திர மாவது நீறு

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான்றிருநீறே.

மந்திரமாவது நீறு = மனதில் தியானிப்பவரைக் காப்பதும்;
வானவர் மேலது = தேவர்களைக் காப்பதும்;
சுந்தரமாவது = அழகிய மேனியைக் காப்பதும்;
துதிக்கப்படுவது = எப்போதும் வணங்கக்கூடியதும்;
தந்திரமாவது = முக்திக்கு உபயோகமாக இருப்பதும்;
சமயத்திலுள்ளது = ஏற்ற தருணத்தில் உதவியாக உள்ளதும்;
செந் துவர்வாய் உமை பங்கன் = சிவப்பு பவளம் (துவர்) போன்ற வாய் கொண்ட உமையின் கணவனான சிவனே;

திருவாலவாயான் திருநீறே = திரு ஆலவாயில் (மதுரையில்) குடிகொண்டனின் திருநீறே.

பாண்டியமன்னன் (வம்ச சேகரபாண்டியன்) மதுரை நகரத்தை உருவாக்க வேண்டி அவனுக்கு எல்லைகளைக் காட்டி அருளும்படி சோமசுந்தரக் கடவுளை வேண்டினான். அவரும் தான் அணிந்திருந்த பாம்பினால் எல்லை காட்டி அருளினார். அதலால், பாம்பினால் எல்லை காட்டியதை திரு ஆலவாய் (பாம்பு) என்று மதுரையை அழைப்பர்.

Thursday, December 19, 2013

கர்ப்பத்தின் கருவையும் கொல்க!

கர்ப்பத்தின் கருவையும் கொல்க!
உத்தரை: என்பவள் விராடனின் மகள். உத்தரனின் தங்கை (பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின் போது, பசுநிரைகளை கவர்ந்த கௌரவர்களுடன் அர்ச்சுனன் தயவில் சண்டையிட்டு மீண்டவன் இந்த உத்தரன்).
இந்த உத்தரை  என்பவள் அபிமன்யூவின் பாரி. இவளின் மகன் தான் ‘பரிக்ஷித்து’. 
அசுவத்தாமன் கோபம் கொண்டு, 'பாண்டவ வம்சம் எங்கிருந்தாலும் கொல்க' என்று விடுத்த பாணம், அபிமன்யூவின் மனைவி உத்திரை அப்போது கர்ப்பமாக இருந்தாள். அசுவத்தாமன் விடுத்த பாணமானது பாண்டவ வம்ச அர்ச்சுனன் மகனான அபிமன்யூவின் மனைவியான இந்த உத்திரையின் கர்ப்பத்திலிருந்த கருவையும் தேடியதாம் (அதாவது உத்திரை வயிற்றில் கரு ஏதும் உருவாகி உள்ளதா எனவும் பரீக்ஷித்து பார்த்ததாம்).

ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் தயவால், அந்த பாணத்தால் அந்த கருவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவேதான் அந்த குழந்தைக்கு பரீக்ஷித்து என பெயரும் ஏற்பட்டதாம். 

மரியாதை தெரியாதா?

மரியாதை தெரியாதா?
உக்கிரசிரவன் என்பவன் சௌனகாதி ரிஷிகளுக்கு சகல புராண இதிகாசங்களும் உபதேசித்தவன்.
ஒருநாள் இவன் முனிகணங்களுக்கு உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கையில் பலராமர் அங்கு வந்தார். அவருக்கு இவன் வரவேற்று உபசாரம் பண்ணாமல் இருந்ததால், பலராமர் கோபித்துக் கொண்டு தமது கையிலிருந்த தர்ப்பையினால் இவனை கொன்றார்.

அப்போது அங்கிருந்த முனிகணங்கள் இவரை வேண்டி இரங்க, அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். 
எவ்வளவு கற்றிருந்தாலும், கண்டிப்பாக மரியாதையும் கற்றிருக்க வேண்டும்.

எது பொய்ப்பினும் ஆரிஷம் பொய்த்ததில்லை.

எது பொய்ப்பினும் ஆரிஷம் பொய்த்ததில்லை.
ரிஷிகள்:
ரிஷி என்பதன் பொருள் ‘சத்தியதரிசி’.
ரிஷிகளில்: பிரம்மரிஷி, தேவரிஷி, மகாரிஷி, பரமரிஷி, காண்டரிஷி, சுருதரிஷி, ராஜரிஷி, என ஏழுவகை ரிஷிகள் உள்ளனர்.
வசிஷ்டர்     = இவர் ஒரு பிரம்மரிஷி,
நாரதர்     = இவர் ஒரு தேவரிஷி,
வியாசர்   = இவர் ஒரு மகாரிஷி.
எக்கருவிகொண்டும், எத்துணை சிறந்த மதியூகிகளுக்கும் காண்பதற்கும் உணர்வதற்கும் அரியனவான, ‘மாயா சொரூபமாய் தூல நிலை முதல் சூக்கும நிலைவரை விரிந்து கிடக்கும் சராசரங்களின் தத்துவ சொரூபங்களை யெல்லாம்’ உள்ளவாறு கண்டவர்களும், அவைகளை உலகுக்கு வெளியிடவர்களும், இந்த மகா ரிஷிகளே ஆவார்கள்.
ரிஷிகள் வாக்கு ஆரிஷமெனப்படும். எது பொய்ப்பினும் ஆரிஷம் பொய்த்ததில்லை.


ரிஷியசிருங்கன் (இவர் கால் பட்ட நிலமெல்லாம் மழை!)

ரிஷியசிருங்கன்: (இவர் கால் பட்ட நிலமெல்லாம் மழை)
ரிஷியசிரருங்கன் ஒரு ரிஷி. 
இவர் ‘கலைக்கோட்டு மகாரிஷி’ என தமிழில் வழங்கப்படுபவர்.
அங்கதேசத்து அரசன் தனது நாட்டில் மலையில்லாமையால் வருந்தும்போது, இந்த ரிஷியின் கால் பட்டால் நாட்டில் மழை உண்டாகுமென கேள்விப்பட்டு, சில பெண்களை அவரிடம் அனுப்பினார்.
அந்த ரிஷி, இதற்கு முன் எப்போதும் பெண்டிரை கண்டிராதவர் என்பதால், அந்த பெண்களை அதிசயித்து பார்த்தார். அந்த பெண்கள் அவர்களின் ஆசிரமத்து வரும்படி கேட்டுக் கொண்டனர். இவரும் ‘எங்கே ஆசிரமம்’ என கேட்டார். இதோ இதோ  ஆசிரமம் என்று பொய் சொல்லி அவர்களின் நாட்டுக்கே அந்த ரிஷியை அழைத்து வந்துவிட்டனர்.

உடனே நாடு முழுவதும் மழை பொழிந்தது. அந்த அரசன் தனது புத்திரியை மணக்கும்படி வேண்ட, அந்த ரிஷியும் அவ்வாறே மணந்தார். 

நரசிம்மா! வா!!

நரசிம்மா! வா!!

கசியபனுக்கு திதி வயிற்றில் பிறந்த புத்திரர் இருவர். இரணியகசிபன், இரணியாக்ஷன் என இருவர்.  
இரணியகசிபன் கொடிய தவம் செய்து பிரம்மாவிடம், ‘தன்னை தேவரும், மனிதரும், விலங்கினங்களும் அசுரரும் கொல்லாதிருக்க’ வரம் பெற்று அதனால் கர்வமுண்டாகி, தன்னையே இந்த உலகம் கடவுளாக வழிபட வேண்டுமென வகுத்து, அவ்வாறு நடக்காதவரை கொடுமைபடுத்தி வந்தான்.
ஆனால் அவன் மகன் பிரகலாதன் தனது தந்தையை பொருட்படுத்தாமல் விஷ்ணுவை வழிபட்டு வந்தான். இதுபொறுக்கமாட்டாமல், இரணியகசிபன் தனது மகன் பிரகலாதனை வாளை ஓங்கி வெட்ட எத்தனித்து, ‘நீ வழிபடும் விஷ்ணு உன்னை காப்பாற்றட்டும்’ என வெட்டினான். உடனே விஷ்ணு ஒரு தூணிலிருந்து வெளிப்பட்டு நரசிங்க ரூபத்தோடு தோன்றி அவனைக் கொன்று பிரகலாதனை காத்தருளினார்.

(தேவர்களோ, மனிதர்களோ, விலங்கினங்களோ கொல்ல முடியாத வரத்தை வாங்கி, அதனால் கர்வமுற்று, தன்னை யாரும் அழிக்க முடியாது என அநியாயம் செய்துவந்தவன். எனவே, இவனைக் கொல்ல இறைவன் மாற்றுவழியை உபயோகிக்கிறார். பாதி மனிதனும் பாதி விலங்கும் கொண்ட ‘நரசிம்ம அவதாரத்தை’ விஷ்ணு எடுத்து, விலங்கின் நகங்களால் இரணியகசிபனைக் குதறிக் கொன்றார். யாருமே தன்னைக் கொல்லமுடியாது என்ற அகங்காரத்தில் இருந்தவனுக்கு, கடவுள் மாற்றுவழியில் தீர்வு சொன்னார் போலும்!)

இரணியாக்ஷன்:
இரணியாக்ஷன் பூமியை பாயாகச் சுருட்டி சமுத்திரத்தில் ஒழித்துவைத்தான். அப்போது விஷ்ணு வராகமாகி அவனைக் கொன்றார்.

நானுமறியேன், அவளும் பொய்சொல்லாள்!

நானுறியேன், அவளும் பொய்சொல்லாள்!


இரட்டைப் புலவர்கள். இருவரும் சகோதரர்கள்.
இவர்களில் ஒருவர் அந்தகராகவும் (கண்தெரியாதவர்), மற்றவர் முடவராகவும் பிறந்த சகோதரர்கள். கவிப் புலமை மிக்கவர்கள். 
இவர்கள் காஞ்சிபுரத்தில் பிறந்து தமிழில் மிக்க வல்லவராகி, முடவரை, அந்தகர் (குருடர்) தோள்மீது ஏற்றிக் கொண்டு, முடவர் வழிகாட்ட ஊர்காடோறுஞ் சென்று கவிபாடி பெருங்கீர்த்தி பெற்றவர்கள். இவர்கள் செய்த நூல்கள் தைவீகவுலா முதலியன. 
இப்புலவர்களே ‘நானுமறியேன், அவளும் பொய்சொல்லாள்’ என்னும் பழமொழியை வெளிப்படுத்தி தாம் ஆராயாத விஷயங்களையும் சரஸ்வதி அருளால் செய்யுள் வாயிலாக ஆங்காங்கும் வெளியிட்டு வந்தவர்கள்.

இந்திரனும் பதவி இழந்தான்!

இந்திரனும் பதவி இழந்தான்!

இந்திரன் தேவர்களின் அரசன். கசியப்பிரஜாபதிக்கு அதிதி மூலம் பிறந்த புத்திரன். இவனின் ராஜதானி (தலைநகரம்) அமராவதி. இவன் கிழக்கு திக்கு பாலகன். இவனின் ஆயுதம் வச்சிரம். இவனின் பாரி சசிதேவி. வாகனம் ஐராவதம் (யானை). இவனின் மகன் ஐயந்தன்.
கொலை செய்தால் அது பிரமகத்தி தோஷம்: இந்திரன், தான் இந்திர பதவியில் இருக்கும்போது, துவட்டப்பிரமாவினது புத்திரன் விசுபரூபனையும் விருத்திராசுரனையும் கொன்ற தோஷமாகிய பிரமகத்தி காரணமாக தனது தேவேந்திர பதவியை இழந்தான்.
அப்போது நகுஷன் தனது தபோபலத்தால் இந்திர பதவியே பெற்றான். இதுகண்டு இந்திரன் அசுவமேத யாகம் செய்து மீண்டும் அதே இந்திர பதவியைப் பெற்றான்.
இந்த இந்திரபதம் என்னும் இந்திரபதவி நூறு அசுவமேதம் செய்தவனுக்கு மட்டுமே கிடைக்கும் மிக உயர்ந்த பதவியாகும் இந்த இந்திரபதம். பல இந்திரர்கள் இதுவரை இருந்துள்ளார்கள்.
இந்திரனின் பெண்ணாசை: ஒருமுறை இந்திரன், கௌதம முனிவரின் பத்தினி அகலிகை மீது இச்சை கொண்டு அவளை அடைய நினைத்தபோது முனிவரால் சபிக்கப்பட்டு உடலெல்லாம் ஓட்டையாகி திரிந்தான்.
இந்திரன் மழைக்கடவுள்: இதற்கு முன் இருந்த இந்திரர்கள் பூர்வத்தில் சிறகுகள் உடையவாராய் இருந்தனர். இவர்கள் பறந்து பறந்து வந்து, நகரங்களை அழித்து வந்து மலைகளை தடுத்து வந்தனர். இந்திரன் மேகங்களை வாகனமாக உடையவன். இந்திரனே மலையை காலந்தோறும் பெய்விப்பவன்.
யோகிப் பொங்கல் இவனுக்குத் தான்: இதனால் இந்திரனை மகிழ்விக்க வருடந்தோறும் பொங்கலிடுவதும் விழா எடுப்பதும் பண்டைய வழக்கம். மகரசங்கராந்திக்கு முதல்நாளில் ‘போதிப் பொங்கல்’ வழிபடப்படுகிறது. இதை போகிப் பொங்கல் என்றும் வழங்குகின்றது. போகி=இந்திரன். 
இந்திரனின் ஜம்பம் கிருஷ்ணனிடம் செல்லவில்லை: கிருஷ்ணன் யாதவர்களிடம் இருக்கும்போது இப்பொங்கல் வந்தது. யாதவர்கள் எல்லாம் திரண்டு இந்திரனுக்கு வேள்வி வழிபாடு செய்தார்கள். இது இந்திரனுக்கு சேரவிடாதபடி தடுத்து அதை கிருஷ்ணனே ஏற்றுக் கொண்டான். இதனால் கோபமடைந்த இந்திரன் மேகங்களை திரட்டி கல்மழை பொழிந்து யாதவர்களின் பசுநிரையை கொல்லும் பொருட்டு ஏவினான். ஆனால் கிருஷ்ணன் கோவர்தன மலையை குடையாகப் பிடித்து பசுநிரையையும் யாதவர்களையும் காத்தான்.

இந்திரனை குமரக்கடவுள் காத்தான்: மற்றொரு முறை, சூரபர்மன் என்பவன் தேவர்களை எல்லாம் சிறை செய்தபோது, இந்திரனை மீன் சுமக்க வைத்தபோது, இந்திரன்  இந்த சித்திரவதையிலிருந்து தப்பிக்க சீர்காழிக்கு ஒடி மறைந்தான். குமரக் கடவுள் (முருகன்) இந்த சூரனை கொன்று அழித்த பின்னர், இந்திரன் தனது நிம்மதியாக அமராவதியை அடைந்தான். இவன் மகள் தான் தெய்வயானை.

கஜேந்திர மோட்சம்

கஜேந்திர மோட்சம்

 இருஷபன் பௌத்திரனின் (பேரனின்) பெயர் இந்திரத்துயுமனன். இவன் பரதனின் புத்திரன். இவன் தாய் சுமதி.
இவன் ஒருநாள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது அங்கே அகத்தியர் வந்ததை கவனிக்காமல் அவருக்கு உபசாரம் செய்யாமல் இருந்ததால், அகத்தியர் கோபம் கொண்டு இவனை யானையாக ஆகுமாறு சபித்துவிட்டார்.

அதனால் இவன் யானையாகி சுற்றித் திரியும்போது, தண்ணீர் தாகத்தால் ஆற்றில் இறங்கி தண்ணீர் குடிக்கும்போது, அதிலிருந்த முதலையானது அந்த யானையைப் பிடித்திழுக்க, அந்த யானையானது ‘ஆதிமூலமே’ என கூவியழைக்க நாராயணன் வந்து தனது சக்கராயுதத்தால் முதலைக் கொன்று யானை உருவத்திலிருந்த இந்திரத்துயுமனை உருமாற்றி காப்பாற்றினார். இந்தக் கதை ‘கஜேந்திர மோட்சம்’ எனப்படும்.

பூமியைத் தாங்கும் ஆதிசேஷன்!

ஆதிசேஷன்: இவனே பூமியை தாங்குபவன்!
கந்துருவை மூத்த மகன் ஆதிசேஷன்: கசியப பிரஜாபதிக்கு கந்துருவையிடத்தில் பிறந்த மூத்த புத்திரன். இவன் தனது தாய் கந்துருவை என்பவள் அவளின் சக்களத்தியான விநதைக்குச் செய்த அக்கிரமத்தை சகிக்காதவனாக திருகோகர்ணம், கந்தமாதனம், முதலிய திவ்விய தேசங்களுக்குச் சென்று மகா தவங்களைச் செய்தான். பிரமா அவன் தவத்தை மெச்சி பூபாரத்தை தாங்கும் பலத்தை அவனுக்கு அநுகிரகித்தார். பின்னர், ஈசுவர பிரசாதத்தால் விஷ்ணுவுக்கு ஆயிரம் பணா முடியுடைய சர்ப்பசயனமும் சர்ப்பங்களுக்கு ராஜாவும் ஆகினான். இவன் பிருகு முனிவரால் சபிக்கப்பட்டு பலராம அவதாரம் பெற்றான்.


விநதை மகன் அநூரு என்கிற அருணன்: இவன் கசியப பிரசாபதிக்கு விநதையிடத்து பிறந்த புத்திரன். கருடன் இவன் தம்பி. இவனைப் பற்றிய ஒரு கதையும் உண்டு. விநதை, தனது சக்களத்தி கந்துருவைக்கு முதலிலேயே புத்திரன் பிறந்துவிட்டான் (அவன் தான் ஆதிசேஷன்) என கோபம் கொண்டு, தனது அண்டம் பரிபக்குவமடைய நாளாயிற்றே என்று அந்த அண்டத்தை (வளராத கருவை) உடைத்துவிட, அதன் காரணமாக அநூரு தொடை முதலிய கீழ் அங்கங்கள் இல்லாமல் பிறந்தான். தனது அங்ககீனத்துக்கு தனது தாயே காரணம் எனத் தெரிந்து, கத்தருவைக்கு (அவளின் சக்களத்திக்கு) அடிமை ஆகும்படி சபித்து விட்டு, சூரியனிடத்தில் சாரதியானான். 

அசரீரி எங்கிருந்து சொல்லும்?

அசரீரி எங்கிருந்து சொல்லும்?
ஆகாஷவாணி: (அசரீரி):

கர்மசாக்ஷியாக அந்தர லோகத்திலே நிற்கின்ற ஒரு சக்தி. இதன் பெயர்தான் அசரீரி.
இந்த அசரீரி ஒலிவடிவாய் இருந்து ஆபத்து வேளையிலே சான்றுரை பகர்வது. 
திருவள்ளுவர் தமது நூலை அரங்கேற்றிய காலத்தும், சீதையினது கற்பை ராமர் ஐயுறும்போதும், பிறநேரங்களிலும் இந்த அசரீரி வாக்கு யாவராலும் கேட்கப்பட்டது. 

ஆகமங்கள் (மந்திர, தந்திர, சித்தாந்தங்கள்)

ஆகமங்கள்:

ஈசுவரனால் அருளிச் செய்யப்பட்ட தந்திர சாஸ்திரங்கள்.  அவை சைவ, வைஷ்ணவ ஆகமங்கள் என இருவகைப்படும்.

வைஷ்ணவ ஆகமங்கள்: பாஞ்சராத்திரம், வைகானசம் என இரண்டு.  சோமகாசுரன் வேதங்களைச் சமுத்திர நடுவில் கொண்டுபோய் மறைத்தபோது, விஷ்ணு தன்னுடைய பூசார்த்ததமாக பூசாவிதையை சாண்டில்யவிருஷிக்கு ஐந்து ராத்தியிரியில் உபதேசித்தமையால் பாஞ்சராத்திரம் என பெயர் பெற்றது. வைகானசம் துறவற முதலிய ஒழுக்கங்களும் யோகஞான சித்திகளும் கூறுவது.

சைவ ஆகமங்கள்: காமியம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டுமாம். இவை சதாசிவ மூர்த்தியினது ஈசான முகத்தினின்றும் தோன்றின. தத்துவ சொரூபமாகிய விக்கிரங்கங்கள், ஆலயங்கள், பூஜைகள் என்னும் இவற்றின் உண்மைப் பொருள்கள் இந்த ஆகமங்களால் உணர்த்தப்படும்.

இவ்வாகமங்கள் மந்திரமெனவும். தந்திரமெனவும், சித்தாந்தமெனவும் பெயர் பெறும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோடியாக இருபத்தெட்டுமிருபத்தெட்டுக் கோடி கிரகந்தங்களுடையது. இவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என தனித்தனி நான்கு பாதங்கள் உடையனவாயிருக்கும்.
இவற்றுள் ஞானபாதம் பதி-பசு-பாசம் என்னும் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும்; யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களையுடைய சிவயோகத்தையும்; கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரணம், சந்தியாவந்தனம், பூஜை, ஜெபம், ஹோமம், என்பனவற்றையும், சமய விஷேச நிருவாண ஆசாரியாபிஷேங்களையும்; சரியாபாதம் பிராயசித்தம், சிராத்தம், சிவலிங்க இலக்கணம் முதலியவைகளையும் உபதேசிக்கும்.

ஆகமம் என்பது: பரமாப்தரினின்றும் வந்தது என பொருள்படும். இந்த ஆகமங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசுவகன்மம் ஈறாகிய உபாகமங்கள் (உப-ஆகமங்கள்) இருநூற்றேழுமாம். மூல ஆகமங்கள் இருபத்தெட்டும் வேதம்போல சிவனால் அருளிச் செய்தமையால் சைவர்களுக்கு இரண்டும் முதல் நூல்களாகும். 

எட்டுத் திக்கும் .....

எட்டுத் திக்கும் .....

அஷ்டதிக்கு பாலகர்கள்:

கிழக்கிலிருந்து முறையே, இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், என எண்மர்.

அஷ்டதிக்கஜம் (எட்டு யானைகள்):

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பநந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என எட்டு யானைகள் முறையே கிழக்கிலிருந்து எட்டுத் திக்குக்கும் எட்டு.
இவற்றில் பெண் யானைகளும் எட்டு. அப்பிரம், கபிலை, பிங்கலை, அநுபமை, தாமிரபருணி, சுப்பிரதந்தி, அங்கனை, அஞ்சனாவதி.

எட்டு ஆண் யானைகளும் எட்டுத் திக்கு பாலகர்க்கும், எட்டு பெண் யானைகள் அவர்களின் தேவியருக்கும் முறையே வாகனங்களாகும்.

அன்னப் பறவை

அன்னப் பறவை:


இதை வடமொழியில் ஹம்சம் என்பர். பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் பாலைமட்டும் பிரித்து உண்ணும் இயல்புடைய தெய்வப்பறவை. 
பிரம்மாவுக்கு வாகனமாக உள்ளது. 
இதன் நடையழகு மிகச் சிறப்பு வாய்ந்ததால், புலவர்கள் பெண்களின் நடையை இதற்கு உவமையாக ஒப்பிட்டு பாடுவர். 

அல்லிராணி

அல்லிராணி
சித்திரவாகன் என்னும் பாண்டியனின் புத்திரி. கல்வி அறிவிலும், வில்வித்தையிலும், மதிநுட்பத்திலும் சிறந்து விளங்கி, தந்தையினது அனுமதியுடன் பாண்டி நாட்டின் தென்பாகத்துக்கு அரசியாகி, இலங்கையில் ஒருபாகத்தை வென்று கடலிலே முத்துவாருவித்தவள்.
அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையின் பொருட்டு பாண்டி நாட்டை அடைந்தபோது, இவளைக்கண்டு சித்திரவாகன் அனுமதியுடன் இவளை மணம் புரிந்தான்.

சித்திராங்கதை என்னும் பெயருடையவளும் இவளே என்பர்.

அர்ச்சுனன் வெற்றிக்கு பின்னால் . . ..

அர்ச்சுனன் வெற்றிக்கு பின்னால் . . ..
பாண்டு மகாராஜாவுக்கு குந்தியிடத்தில் தேவேந்திரன் அருளால் பிறந்த புத்திரன் தான் இந்த அர்ச்சுனன். பாண்டவர்களுள் மத்தியமன் (அதாவது ஐவரில் மூன்றாவது மகன்). வில்வித்தையில் இணைஇல்லாதவன். இவன் பாரத யுத்தத்தில் ஒரேதினத்தில் ஏழு அக்குரோணி சேனா வீரர்களை சங்கரித்தவன் (ஜெயித்தவன்).
இவனின் அவதாரம்: நரன்’ என்னும் தேவரிஷி பாரதயுத்துக்காக அர்ச்சுனனாக அவதரித்தான் என்று கூறுவர். இவனுக்கு வில் காண்டீபம். சங்கு தேவதத்தம். இவனுக்கு பாரியர் (மனைவிகள்) திரௌபதி, உலூபி, சித்திராங்கதை, சுபத்திரை என நால்வர்.
அர்ச்சுனன் துரோணாச்சாரியாரிடம் வில்வித்தை பயின்றான். அப்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அர்ச்சுனனின் சாமர்த்தியத்தைக் கண்டு பொறாமை கொண்டு, அவனின் வேலையாட்களிடம் அர்ச்சுனனுக்கு விளக்கு இல்லாமல் போஜனம் படைக்க வேண்டாம் என்று கட்டளையிட்டான். ஒருநாள் அர்ச்சுனன் உணவு அருந்தும்போது விளக்கு அணைந்தது. அப்போது வெளிச்சமில்லாமலும் தனது கைகள் வேலை செய்வதைக் கண்ட அர்ச்சுனன், அதேபோல் வில் வித்தையும் இருளில் தன் கைகள் செய்யும் என கருதி இருளில் வில்வித்தை கற்று வந்தான். துருபதனை போரில் வென்று சிறை எடுத்து அவனை துரோணாச்சாரியார் முன் குருதட்சனையாக கொண்டுவந்து நிறுத்தினான். பாண்டுவாலும் வெல்லமுடியாத யவனராஜனை வென்றவனும் இவனே. வில்லாளர்கள் எல்லாம் திகைத்து நாணும்படி, ஒரே அம்பினால் மீன் எந்திரத்தை வீழ்த்தி திரௌபதையை மணம் புரிந்து வில்லுக்கு விஜயன் என பெயர் பெற்றவனும் இவனே.

பசுபதா அஸ்திரம் பெற்ற கதை: இவன் பாசுபதா அஸ்திரம் பெறும் பொருட்டு மகாதவம் செய்தான். ஒரு மூகன் பன்றி உருக்கொண்டு அவன் தவத்தை கலைக்க எத்தனித்தபோது, சிவன் வேடன் உருக்கொண்டு இதை துரத்தினான். சிவன் ஒரு கனை விடுத்தான். அர்ச்சுனனும் ஒரு கனை விடுத்தான். இரு கனைகளினாலும் பன்றி இறந்தது. சிவன், பன்றியை நான்தான் கொன்றேன் என்று விளையாட்டுக்காக சொன்னார். அர்ச்சுனன் தான் கொன்றதாகச் சொன்னான். இருவக்கும் பெரிய சண்டை நேரிட்டு, பின்னர் சிவன் தனது சுயரூபம் காட்டி பாசுபதம் என்ற அஸ்திரத்தை பெற்றான். இவன் பொருட்டேதான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை அருளினார்.

அம்மி தரையில், அருந்ததி வானத்தில்

அம்மி தரையில், அருந்ததி வானத்தில்
அருந்ததி என்பவள் கர்த்தமன் மகள். வசிஷ்ட்டனின் மனைவி. இவளுக்கு அரஞ்ஜோதி என்றும் பெயர் உண்டு. இவள் மகாபதிவிரதை. நட்சத்திர ரூபமாய் இருக்கிறதால், திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மணமகனாய் வந்தவன் இவளை சுட்டிக்காட்டி ‘அருந்ததி போல இருப்பாயாக’ என்று கூறுவான். எப்போதும் வானமண்டலத்தில் தெரியும் நட்சத்திரம் என்பதால் அவளை உதாரணமாக காட்டுவார்களோ?
அருந்ததி நட்சத்திரம்: துருவ நட்சத்திரங்களுக்கு சமீபத்திலே சப்தரிஷி நட்சத்திர கணம் இருக்கிறது. 2700 வருடங்களில் இது ஒரு வட்டம் சுற்றி வரும். இந்த சப்தரிஷி நட்சத்திர கணங்களுக்கு நடுவே தான் வசிஷ்ட நட்சத்திரம் உள்ளது. அதை அடுத்துள்ளது அருந்ததி நட்சத்திரம். கணவனான வசிஷ்டனும் மனைவியான அருந்ததியும் அருகருகில் வானமண்டலத்திலும் உள்ளனர்.

பிரம்மச்சாரி பீஷ்மர் ஒரு பெண்ணால் இறந்தார்

பிரம்மச்சாரி பீஷ்மர் ஒரு பெண்ணால் இறந்தார்
காசி ராஜனுக்கு மூன்று புத்திரிகள்: 1) அம்பை, 2) அம்பிகை, 3) அம்பாலிகை.
அம்பை காசி ராஜனின் மூத்த புத்திரி. இவள் கன்னியாய் இருக்கும்போது இவளது தந்தை இவளுக்கு சுயவரம் வைத்து, இவளை சாளுவ ராஜனுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டான்.
இது தெரியாமல், பீஷ்மன் பலவந்தமாக இவளையும் இவளுடைய இரண்டு தங்கைகளான அம்பிகை, அம்பாலிகை ஆகியோரையும் (அவர்களின் விருப்பத்தைக்கூடக் கேட்காமல்) வலிந்து கவர்ந்து கொண்டு வந்து, தனது தம்பியாகிய விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்ய எத்தனித்தபோது, மூத்த பெண் அம்பை. ‘தான் ஏற்கனவே விவாக-தத்தம் பண்ணப்பட்ட பெண்’ என்று சொல்லியதால், அவளுக்கு நிச்சயித்த சாளுவ மன்னனிடமே திருப்பி அனுப்பி வைத்தார் பீஷ்மர். இவ்வளவு நடந்தபின், சாளுவ மன்னனும் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான்.
திரும்பியும் பீஷ்மரிடமே வந்து, ‘பீஷ்மரே! எனக்கு நிச்சயித்த சாளுவ மன்னனும் என்னை ஏற்க மறுத்து விட்டார்; நீரே என்னை வலுவில் கடத்தி வந்தீர், எனவே நீரே என்னை ஏற்க வேண்டும்’ என்றாள். தனது பிரமச்சாரிய விரதத்துக்கு எதிராக அவளைத் மணம்முடிக்க முடியாது என்பதால், பீஷ்மரும் மறுத்து விட்டார்.
அவள் இவ்வாறு அலைகழிக்கப் பட்டதால் மனம் உடைந்து உயிர்துறந்து, அடுத்த பிறவியில் ரூபதன் மகளாக ‘சிகிண்டி’ என்னும் பெயரோடு பிறந்து, தன்னை அலைக்கழித்த பீஷ்மரை பழிவாங்க தீவிரமானாள். பீஷ்மரை பாரத யுத்தத்தில் கொன்றவள் இவள்தான்.

அம்பிகையும், அம்பாலிகையும் காசி ராஜனின் மற்ற இரு புத்திரிகள். அம்பையின் தங்கைகள் ஆவர். இவர்கள் விசித்திரவீரியனை மணந்து மனைவியர் ஆனர். இவர்களில் அம்பிகை மூத்தவள். இவள் விசித்திரவீரியன் இறந்த பின், தேவரநியாயம்பற்றி, மாமியார் சத்தியவதியினது அனுமதி கொண்டு, வியாசரைக் கூடி திருதராஷ்டிரன், பாண்டு என்பவர்களை மகன்களாக பெற்றாள்.

Wednesday, December 18, 2013

துர்வாசரின் முன்கோபத்தின் கதி

துர்வாசரின் முன்கோபத்தின் கதி
அம்பரீஷன் என்பவன் இரண்டாம் நாபாகன் மகன். நபகன் பௌத்திரன் (பேரன்). இவன் சுத்த ஹரி பக்தன். இந்த அம்பரீஷன் துவாதசி விரதத்தை அநுஷ்டித்து வரும் நாளில், ஒருநாள் துர்வாச முனிவர் அவனிடம் சென்று இன்றைக்கு உன்னிடத்திலே போஜனம் என்று சொல்லி யமுனா நதிக்கு ஸ்நானம் செய்ய போனார்.
அவ்வாறு போனவர் வர தாமதம் ஆனது கண்டு, விரத முகூர்த்தம் (விரத நேரம்) தப்பிவிடப் போகிறதென்று பயந்து ஆசமனத்தை முடித்து விட்டான். அம்பரீஷன் தன்னை மதிக்கவில்லை என்று கண்டுகொண்ட துர்வாசர்  கோபித்து, தனது சடையிலொன்றை எடுத்து அம்பரீஷனை பஸ்பமாக்குக என்று எறிந்தார்.
இதுகண்ட விஷ்ணு தனது சக்கரத்தை ஏகி துர்வாசரின் சடையை எரித்துவிடுமாறு ஏவினார். இதைகண்ட துர்வாசர் தப்பித்து ஓட, விஷ்ணுவின் சக்கரமும் அவரை விடாமல் துரத்தியது. கடைசியில் முனிவர் பிரமாதி தேவர்களிடம் சரண் அடைந்தார். அவர்கள், இதை அம்பரீஷனால் மட்டுமே தடுக்க முடியும் என யோசனை சொன்னார்கள். பின்னர் துர்வாசர் அம்பரீஷனிடமே கெஞ்சினார். அவன் சக்கரத்தை வணங்கி இதை தடுத்தான்.
  

பிரம்மம் ஒக்கட்டே (அத்வைதம் –Advaitha)

பிரம்மம் தவிர வேறில்லை (அத்வைதம் –Advaitha)
அத்வைதம் (அத்துவைதம்):
இது ‘பிரம்மம் அன்றி வேறில்லை’ என்ற கொள்கையை சிந்தாந்தமாகக் கொண்ட வேதாந்த மதம்.

பிரம்மம், அவித்தை என இரண்டு நிலை.
அவற்றுள், பிரம்மம் என்பது சத்தியம், ஞானநந்தாத்மகம், நிர்விகாரம், நிர்வயம், நித்தியம், நிர்த்தோஷம், விபு என ஏழு லக்ஷணங்களை உடையது.
அவித்தை என்பது அபாரமார்த்திகம், சதசத்துவிலக்ஷணம், சடம், சவிகாரம், சாவயனம், அநாதிசாந்தம், அஞ்ஞானரூபம் என ஏழு லக்ஷணங்களை உடையது.

பஞ்சபூதங்கள் அவித்தையுடைய காரியங்கள். அவற்றின்றும் திரிகுண கலவையாகி சத்துவ குணத்தின் கூறாகிய ஞானேந்திரியம் ஐந்தும் அந்தக்கரணம் நான்கும் உண்டாகின்றன. ரசசால் கன்மேந்திரியங்கள் ஐந்தும் பிராணன் ஐந்தும் உண்டாகின்றன. இவையெல்லாம் சூக்குமதேக காரணம். தமோ குணத்தின் கூறாகிய அபஞ்சீகிருத பூதங்களினாலே பஞ்சீகிருத பூதங்கள் உண்டாம். இவையே ஸ்தூல தேகமாம். பிரபஞ்ச நாசம் பிரளயம் எனப்படும்.

மோக்ஷ சாதனம் எனப்படுவது ‘நித்தியா நித்திய வஸ்து விவேகம் விஷயபல வைராக்கியம் முமூட்சுதுவம்’  என்பன. இவற்றால் ‘பிரம்மம் தவிர வேறில்லை’ என காண்பது மோக்ஷம்.
அத்துவைதாநந்தன்
வேதாந்த நூலுக்கு வியாக்கியானம் செய்தவர். இவர் சதாநந்தருக்கு குரு.

 அத்வைதம் -விளக்கம்;
அத்வைதம் = அ+துவைதம் (துவைதம் என்றால் இரண்டு எனப்படும். அதாவது பரமாத்மா (பிரம்மம்), ஜீவாத்மா (உயிர்களில் இருக்கும் ஆத்மா).
ஆனால், அத்வைதம் என்றால் ‘இரண்டல்ல, ஒன்றே எனப்பொருள். அந்த ஒன்றானது பரமாத்மா எனப்படும் பிரம்மம்.

ஸ்ரீவெங்கடாசலபதியை மனதுருகிப் பாடிய ஸ்ரீஅன்னமாச்சார்யாவும்,  ‘பிரம்மம் ஒக்கட்டே, பரப்பிரம்மம் ஒக்கட்டே’ என்றே பாடியுள்ளார்.