Saturday, October 31, 2015

இந்திராகாந்தியின் அரசியல் வாரிசு பிரியங்காவா?

இந்திராகாந்தியின் அரசியல் வாரிசு பிரியங்காவா?
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு; அவரின் ஒரே மகள் இந்திரா; இவர் பிரதமராக இருந்தபோது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மூத்த மகன் ராஜிவ் பிரதமரானார்; ராஜிவ் 1991ல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விடுதலைப் புலிகளால் வெடிகுண்டு வைத்துக் கொள்ளப்பட்டார்;
இந்திரா இறந்தபோது அவரது பேத்தி பிரயங்காவுக்கு 12 வயதுதான்; இப்போது பிரயங்காவின் வயது 43; 
ஆனால், இந்திராவின் அரசியல் ஆலோசகர் எம்.எல்.பொத்தேதார் கூறுகிறார், "இந்திரா இறப்பதற்கு மூன்று நாட்களுக்குமுன்பு, தனக்குப்பின் தன் பேத்தி பிரியங்காவே பிரதமராகத் தகுதியானவர்" என்று அந்த அம்மையாரே கூறினாராம். இப்போது சொல்கிறார். எவ்வளவுதூரம் இது உண்மை என்று தெரியவில்லை.
பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா; இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து ஹரியானா மாநிலத்தில்  .... நிறுவனத்துக்கு நிலம் விற்ற வகையில் முறைகேடு உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்; (அதை ஒரு ஐஏஎஸ் அதிகாரி ...... சொல்லி உள்ளார்); குர்கான் நகரில் ராபர்ட் வாத்ராவுக்கு வர்த்தக ரீதியிலான திட்டத்தை செயல்படுத்து லைசென்ஸ் வழங்கப்பட்டதை, அவர் .... நிறுவனத்துக்கு 58 கோடிக்கு விற்றுவிட்டாராம்; இதற்கு வரி செலுத்தவில்லையாம்
ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், அவரைப்பற்றிய நல்ல அபிப்பிராயத்தை ஒரு கூட்டம் உருவாக்கிக் கொண்டே இருக்கும்; அதற்கு நேர் எதிராக, மற்றொரு கூட்டம், எதிர் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்; குறைவான தவறுகள் செய்தவர்களை மக்கள் மனதில் கொள்வது இந்தியர்களின் வாடிக்கையாகும்.
பொதுவாக, இந்தியாவில் அரசியலும், ஊழலும், ஒட்டிப்பிறந்த ரெட்டைக் குழந்தைகளாகவே ஆகிவிட்டன; மிதமிஞ்சிய அதிகாரங்கள் குவிந்து இருக்கும் இடங்களில் ஊழல் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் அதிகமே!  Power tends to corrupt, and absolute power corrupts absolutely. இந்தியாவில் சட்டங்கள் மூலம், இத்தகைய அதிகார மையங்கள் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது அதில் மிதமிஞ்சிய அதிகாரங்களைக் குவித்திருக்கலாம். “தானே முதலாளியாகவே இருந்தாலும், தான் ஒரு தொழிலாளியாகவே தன்னை நினைத்துக் கொள்ளாதவரை கட்டுப்பாடு என்பதே இருக்காது” என்பதே இதுவரை உலகம் கண்டுவந்த உண்மையும்கூட. சர்வாதிகார நாடுகள் எல்லாம் அழிந்துவிட்டன; காரணம், அவைகள் மிதமிஞ்சிய அதிகாரத்தை தன் எஜமானுக்குக் கொடுத்துவிட்டன; ஜனநாயக நாடுகள் பல வாழ்கின்றன, சில தத்தளிக்கின்றன; காரணம்; இவைகள் அதிகாரத்தை அளந்து கொடுப்பதில் தவறிவிட்டதே காரணம்;
மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு சுயகட்டுப்பாடு வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் பொருள். அதிகாரம் இல்லை என்றாலும் பதவி என்பது செத்த பாம்பாக ஆகிவிடும்; மிதமிஞ்சிய அதிகாரம் என்பது கயிறு இல்லாத காளையாகிவிடும்;
இந்தியாவில் எப்படிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பதை இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்லி உள்ளது. அதை எடுத்துச் செய்பவர்களுக்கு மட்டுமே சுய கட்டுப்பாடு அவசியம்;
இந்திராவின் பேத்தி என்ற முகவுரையுடன் அரசியலுக்கு வரும் பிரியங்காவுக்கு எப்படிப்பட்ட மனநிலை உள்ளது என்பதை அவரே வெளிப்படுத்திய பின்னரே, அவர் இந்தியாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் கொள்கையை முடிவு செய்யமுடியும்.

**

கனடாவின் புதிய பிரதமர்:

கனடாவின் புதிய பிரதமர்:
கனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ட்ருடவ் (43 வயது) JUSTIN TRUDEAU தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்; இவர் முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனாம் (1968-84 வரை பிரதமராக இருந்த பியரி ட்ருடவ்-ன் மகன்); இவர் பிறந்தது 25, டிசம்பர் 1973ல், ஓ கிறிஸ்துமஸ் நாளில்; வயதில் ரொம்ப சின்னவராகத்தான் இருக்கிறார்; 2005ல் திருமணம் செய்து கொண்டார்;  மனைவியின் பெயர் சோபியா கிரிகோரி Sophie Gregorie. இவர்களுக்கு மூன்று குழந்தைகள்;
உலகின் மிகப் பெரிய நாடுகளில் 2-வது நாடு கனடா; இதற்கு 201.10.2015ல் தேர்தல் நடந்தது; 338 பார்லிமெண்ட் தொகுதிகள் உள்ளன;
இதில் லிபரல் கட்சி 182 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது; இதனால் இக்கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ருடவ், கனடா நாட்டின் புதிய பிரதமராக பதவிக்கு வருகிறார்;
இவருடன் எதிர்த்து போட்டியிட்ட பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான "கன்சர்வேட்டிவ் கட்சி" பெரும் தோல்வி அடைந்ததாம்; இதற்கு மொத்தமே 99 இடங்கள் மட்டுமே கிடைத்ததாம்; இவர், நாட்டின் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளாராம்; இது இல்லாமல், அவர் பிரதமாக இருந்தவரை, அமெரிக்காவுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளாராம்;
ஆனால், புதிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடவ், அமெரிக்காவுடன் நேசக்கரம் நீட்டுவாராம்; பொருளாதாரத்தை மேம்படுத்துவாராம்; மக்கள் எதிர்பார்க்கிறார்கள்;
கனடா மக்களுக்கும் அதன் புதிய பிரதமருக்கும் வாழ்த்துக்கள்!
**

வாழ்க சென்னை ஐகோர்ட்!

சென்னை ஐகோர்ட்டின் வக்கீல் சங்கத்தின் 125-ம் ஆண்டு விழா:

100 ஆண்டுகளைக் கடந்தால் நூற்றாண்டுவிழா அல்லது சென்டனியல்-Centennial; அதுபோல், 125 ஆண்டுகள் ஆனதால் அதற்கு குவாஸ்க்வி சென்டினியல் விழா Quasquicentennial என்கிறார்கள்; சென்னை ஐகோர்ட்டின் வக்கீல்கள் சங்கத்துக்கு பெயர் The Madras High Court Advocates Association or MHAA. அது தனது 125-வது பிறந்த தினத்தை குவாஸ்க்வி சென்டினியல் விழாவாக இன்று கொண்டாடியது. அதில், இந்த வக்கீல் சங்கத்தைச் சேர்ந்த 50 வருட வக்கீல் அனுபவம் கொண்டவர்களையும், அடுத்து 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்ட வக்கீல்களையும் அழைத்து சால்வை அணிவித்து பட்டயமும் கொடுத்து கௌரவப்படுத்தியது. பாரம்பரியமிக்க இந்த சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பதுவே ஒரு சமுதாய மரியாதைதான் என்பதையும் மறுக்க முடியாது என்று பல மூத்த வக்கீல்கள் கூறி பெருமைப்பட்டுக் கொண்டனர். 


நமது சென்னை ஐகோர்ட் ஒரு பாரம்பரியமிக்க ஐகோர்ட்; அதை இன்னும் மெட்ராஸ் ஐகோர்ட் என்றே அழைக்கிறார்கள்-Madras High Court. சென்னை ஐகோர்ட்டுக்கு என்ன சிறப்பு என்றால், பழைய பரந்த இந்தியாவை, பிரிட்டீஸ் மன்னர்கள், ராணிகள் ஆண்ட காலத்தில், இந்தியா ஒரு காலனி நாடாக அவர்களின் ஆளுமையின் கீழ் இருந்து வந்தது; 

1862ல் இந்தியாவில் வாழும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கடமையில், விக்டோரியா மகாராணி ஒரு "உரிமை சாசனத்தை" எழுதிக் கொடுக்கிறார். உரிமை சாசனம் என்பதுதான் Charter. அந்த சார்ட்டரின் படி, இங்கு மூன்று ஐகோர்ட்டுகளை உருவாக்கி அதற்கு நீதிபதிகளையும் நியமித்து அவர்கள், விக்டோரியா மகாராணிக்காக இந்தியாவில் நீதி பரிபாலனம் செய்ய முழு உரிமையும் கொடுக்கப்பட்டது; அப்படி ஒரு சார்ட்டர் மூலம் உருவாக்கப்பட்டதுதான் சென்னை ஐகோர்ட்டும்; இது உருவாகிய நாள்: 26 ஜூன் 1862ல். இதேபோல் பம்பாய் ஐகோர்ட்டும், கல்கத்தா ஐகோர்ட்டும் உருவாக்கப்பட்டது; எனவேதான் இந்த மூன்று ஐகோர்ட்டுகளையும் "சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள்" என்கிறார்கள்; இந்தியாவில் உள்ள மற்ற ஐகோர்ட்டுகள் எல்லாம், ஒரு "சட்டம்" ஏற்படுத்தி அதன் மூலம் உருவானவை. ஆனால் சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள் மட்டும் ராணியால் "உரிமை சாசனம்" எழுதிக் கொடுத்து உருவானவை. இதனால்தான் இந்த ஐகோர்ட்டுகளுக்கு ஒரு சில தனி சிறப்பு உரிமைகளும் இன்றும் உண்டு. மற்ற ஐகோர்ட்டுகளுக்கு அந்த சிறப்பு உரிமை ஏதும் இல்லை; உதாரணமாக, கடல்வழி கப்பல் விவகாரங்களை இந்த சார்ட்டர்டு ஐகோர்ட்டு மட்டுமே விசாரிக்கும் உரிமை கொண்டது; சென்னை ஐகோர்ட், தன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் (சென்னை மாநகராட்சி பகுதிகளில்) தனது ஒரிஜினல் அதிகாரவரம்பை Original Jurisdiction வைத்துள்ளது. மற்ற ஐகோர்ட்டுகளுக்கு இப்படியில்லை; பெங்களூரில் உள்ள ஐகோர்ட்டுக்கு, பெங்களூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிவில் வழக்கை "நேரடியாக" விசாரிக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை. உள்ளூர் மாவட்ட கோர்ட்டில்தான் அப்படிப்பட்ட வழக்குகளை போடமுடியும், விசாரிக்க முடியும். 

மற்றொரு சிறப்பு;- உயில் சம்மந்தப்பட்ட வழக்குகளை சார்ட்டர்டு ஐகோர்ட் என்னும் சென்னை ஐகோர்ட் போன்றவைகள்தான் விசாரிக்கும் தனி அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற ஐகோர்ட்டுகள் இப்படிப்பட்ட அதிகாரத்தை வைத்திருக்கவில்லை; ஏனென்றால், அந்த ஐகோர்ட்டுகள் எல்லாம் "சட்டத்தால் உருவாக்கப்பட்டவை". எனவே அதற்கு அத்தகைய அதிகாரங்களை கொடுக்காமல் அதற்கு கீழ் உள்ள கோர்ட்டுகளுக்கு கொடுத்து விட்டார்கள்; ஆனால் சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள் பிரிட்டீஸ் விக்டோரியா மகாராணியின் உரிமை சாசனத்தால் உருவாக்கப்பட்ட கோர்ட்டுகள் ஆகும். எனவே அப்போதே, ராணி, இத்தகைய மிதமிஞ்சிய சில அதிகாரங்களை இந்த ஐகோர்ட்டுகளுக்கு வழங்கிவிட்டார்; அதனால்தான், நமது மெட்ராஸ் ஐகோர்ட் என்பது பழம்பெருமை வாய்ந்தது என்று நாம் அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம். வாழ்க சென்னை ஐகோர்ட்!