Wednesday, April 23, 2014

இரகசியம் காக்க முடியாத நாரதர்

நாரதன்:
நாரதன், இதற்கு முந்திய மகா கற்பத்தில், 'உருவருகன்' என்னும் கந்தருவனாக இருந்தார். பின், பிரமசிரேஷ்டர் என்னும் பிராமணர் செய்த யாகத்துக்கு போய், அங்கு வந்திருந்த ஒரு கன்னியை வசியம் செய்து அவளைப் புணர்ந்தார். இதை தெரிந்து கொண்ட அந்த பிராமணர், இவரை ஒரு சூத்திரனாக பிறப்பாய் என சபித்து விட்டார். அவ்வாறே இவர் சூத்திரனாப் பிறந்து அந்தப் பிறவியில் மகா-தவம் செய்து வந்தார். அதற்குப் பின்னர் ஏற்பட்ட கற்பத்தில் பிரம மானச புத்திரராகப் பிறந்தார்.

இவர் தக்ஷப் பிரஜாபதி பிள்ளைகள் அனைவருக்கும் ஞான உபதேசம் செய்து, இந்த பிரபஞ்ச சிருஷ்டிக்கு எதிராகச் செயல்பட, அதைக் கண்ட தக்ஷன் கோபம்கொண்டு 'நீர் சந்ததி ஏதும் இல்லாமல், நிலையற்றவராக அலைந்து திரிக' என்று சாபம் கொடுத்தார்.  அதனால்தான் அவர் மூன்று லோகங்களிலும் சஞ்சரித்து திரிவார். 

இவரின் பழக்கமே, யார் எது சொன்னாலும், அதை பிறருக்கு சொல்லிவிடுவார். இவர் வாயில் இரகசியம் ஒன்றும் கிடக்காதாம். இவர் தேவ சபை, இராஜ சபை, வேள்வி சபை இவைகளுக்கு யாரும் அழைக்காமலேயே செல்லும் சுவாதீனம் உடையவர்.

யாராவது தனியாக அகப்பட்டு, திக்கற்றவர்களாக இருந்தால், அங்கு இவர் தோன்றி அவர்களுக்கு தன்னை வெளிக்காட்டி, அவர்களுக்குறிய உபாயங்களையும், (உதவிகளையும்) பின்னர் நிகழப்போகும் விபரங்களை முன்னரே தெரிவித்தும் விடுவாராம்.

யாருக்காவது தூதுவராகப் போனால் அதை திறம்படச் செய்வதில் வல்லவர். பேச்சு சாதுரியம் மிக்கவர். இவர் தரும நூல்களை கற்று சிறந்து விளங்கினவர். வீணை வாசிப்பதில் இவருக்கு நிகர் வேறு யாருமே மூவுலகிலும் இல்லையாம்.

ஸ்ரீகிருஷ்ணனது அவதாரத்தை, அவன் தோன்றுவதற்கு முன்னரே, கஞ்சனுக்கு உணர்த்தினவர் இவரே.
இராமாயணத்தை வான்மீகிக்கு உரைத்தவரும் இவர்தான். இவர் ரிஷிகளில் தேவ ரிஷி வகையைச் சேர்ந்தவர்.
சரித்திரங்களில் இவர் சம்மந்தமில்லாதவை மிகக் குறைவே.

நாரதீயம்:
பதினெட்டு புராணங்களுள் ஒன்று இந்த நாரதீயம். இது நாரதப் புரோக்தம் எனப்படும். பெரிய கற்ப தர்மங்களை கூறுவது.  இது 25,000 கிரந்தங்களை உடையது. உப புராணங்களுள் இதுவே மிகப் பெரியது.

ராக தாள லட்சணங்களை குறித்து சொல்லும் நாரதர் செய்த நூலுக்கும் நாரதீயம் என்று பெயர்.

No comments:

Post a Comment