Saturday, April 26, 2014

நாள் என் செய்யும்


நாள் என் செய்யும் வினை தான் என்செயும் எனைநாடி வந்த
கோள்என் செயும்கொடுங் கூற்றென் செயும்குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன்னே வந்து தோன்றிடினே.

Friday, April 25, 2014

கார்டியன் முடிச்சு (Gordian Knot)

கார்டியன் முடிச்சு (Gordian Knot)
கிரேக்க புராணங்களில் கூறப்பட்டுள்ள கார்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸ் என்பவனால் போட்டுவைக்கப்பட்ட முடிச்சாகும்.

கோர்டியஸ் அரசன் ஆவதற்கு முன், அவன் ஒரு சாதாரண குடியானவனாக இருந்தான். ஒருநாள் அவன் தன் மாட்டுவண்டியை ஓட்டிக் கொண்டு முதல்முறையாக ப்ரிகியா நகரத்துக்கு வருகிறான். அவ்வாறு நகரத்துக்குள் நுழையும்போது தெய்வ வாய்மொழிப்படி (அசரீரி வாக்குப்படி) அவனை அந்த நகரத்து மக்கள் மன்னனாக ஏற்றுக் கொண்டனர். கோர்டியஸ், தன் நன்றிக் கடனாக, அவனின் மாட்டுவண்டியை சீயஸ் (Zeus) என்ற கடவுளுக்கு அர்பணித்து விட்டான். அப்போது அந்த வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து  அந்த நுகத்தடிக் கயிறால் ஒரு 'முடிச்சு' போட்டுவிட்டான். அந்த முடிச்சானது கடும் சிக்கல்கள் கொண்ட ஒரு நூதன முடிச்சு. 'அந்த முடிச்சை அவிழ்ப்பவர், ஆசியாவுக்கு மகுடாதிபதி ஆவார்' என்றும் சொல்லிச் சென்றான்.

எவ்வளவோ பேர் அந்த முடிச்சை அவிழ்க்க முனைந்து தோற்றுப் போயினர். வெகுகாலமாக அந்த வண்டி அந்த இடத்திலேயே இருக்கிறது. இருந்தும் அந்த முடிச்சை அவிழ்க்க யாராலும் முடியவில்லை.

அங்கு வந்த மாவீரன் அலெக்ஸாண்டர் இதனைக் கேள்விப்பட்டு அந்த வண்டியின் முன் வந்து நின்றான். அந்த முடிச்சை நிதானமாகப் பார்த்தான். ஏதோ நினைத்துக் கொண்டவனாக, தன் உடைவாளை உருவி, ஒரே வீச்சில் அந்த முடிச்சை இரண்டாக வெட்டினான். கயிறு சிதறியது.

(குழப்பமான விஷயங்களுக்கு இந்த முடிச்சை உதாரணமாகக்  காட்டி 'கார்டியன் முடிச்சுப் போன்ற குழப்பம்' என்பர்.)
Gordian Knot: A knot tied by Gordius, king of Phrygia, held to be capable of being untied only by the future ruler of Asia, and cut by Alexander the Great with his sword. (in 1579)
(நன்றி; திரு அ.முத்துலிங்கம் அவர்களின் வம்சவிருத்தி சிறுகதை தொகுப்பிலிருந்து)


Wednesday, April 23, 2014

புத்தி தத்துவம்

விதியை வெல்லும் பிள்ளையார்:

ஒரு செயல் பலித்துவிடுவதும் (நடந்து விடுவதும்) பலிக்காமல் போவதும் விதி வசத்தால் மட்டுமே.

எனவே ஒரு நல்லசெயல் நடக்காமல் கெடுவதற்கு இரண்டு காரணம். 1. ஊழ் (விதி), 2.புத்தி (சொந்த அறிவு).

ஊழ் வருவதை முன்னரே அவரவர் புத்தியைக் கொண்டு தெளிந்து அதற்குறிய உபாயங்கள் மூலம் அதிலிருந்து விலிகிக் கொள்ள வேண்டும்.

இந்த புத்தி நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்றால், நமக்குள் ஏற்கனவே உள்ள 'புத்தி தத்துவத்தால்' மட்டுமே. இந்த புத்தி தத்துவத்துக்கு அதி தெய்வம் கணேசர் என்னும் பிள்ளையார் என்னும் கணபதி என்னும் விக்னேஷ்வர். இவர் சகல விதமான உயிர்களிடத்திலும் புத்தி தத்துவமாய் விளங்குகிற புத்தி எல்லாவற்றுக்கும் ஆதாரமாய், மூலமாய் விளங்குபவர். இவரை தியானிப்பதால் நமக்கு புத்தி விரிவடைவதும், தேவைப்படும்போது நல்ல உபாயங்கள் தோன்றுவதும் ஆன நல்ல  விளைவுகளை ஏற்படுத்துவார். இந்த புத்தி தத்துவம் இல்லாமல் ஒரு செயலையும் செய்ய முடியாது. நாம் எடுத்த காரியங்கள் முடிவுக்க வர வேண்டும் என்றால் இந்த புத்தி தத்துவம் நமக்குத் தேவை.

புத்தி தத்துவத்தை மிகுந்த ஞாபக சக்திக்கு உதாரணமாக்குவர். யானையை மிகுந்த ஞாபக சக்திக்கு உதாரணமாக்குவர். யானையானது 'கண்டது, கேட்டது, உற்றது, உணர்ந்தது, ஆகிய நான்கையும் ஒரு சிறிது கூட,எவ்வளவு காலம் ஆனாலும் மறக்காமல் நினைவில் கொள்ளும். இது எவ்வளவு வலிமை உடையதாகவும், பருத்த உடல் கொண்டதாகவும் இருந்தாலும், பழகியவருக்கு யானை ஒரு சிறு ஆட்டிக் குட்டிதான்.

எண்ணம் வேறு, புத்தி வேறு. சித்தி=சித்தம்/எண்ணம். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும், எண்ணம் சிதறும்போது அல்லது எண்ணம் எவ்வாறு இருந்தபோதிலும், புத்தியைக் கொண்டு ஜெயிக்கலாம்.

சித்தியும்., புத்தியும் பிள்ளையாரின் இரண்டு ஆற்றல்கள்.


தேவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் ஏதாவது ஒரு இடையூரால் தடையாகி வந்ததால், சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். அவர் தனது முகத்திலிருந்து ஒரு புத்திரனை தோற்றுவித்தார். அதை உமாதேவியார் கண்டு, இவன் யானைத்தலையும், தேவர்களின் கரங்களும், பூதத்தின் உடலும் பெறுக என்றாள். சிவன், அவரை, கணங்களுக்கு தலைவராக இருக்கும்படி அனுப்பினார். 

அவர், தன்னை வழிப்பட்டுத் தொடங்கும் செயல்கள் எல்லாம் இடையூறு ஏற்படாமல் காப்பதாக வாக்களித்தார். கணங்களின் தலைவர் என்பதால் கணபதி ஆனார். விக்கினங்களை (இடையூறுகளை) காப்பவர் விக்னேஷ்வரர். இவரைப் பற்றி வராக புராண வரலாறு விரிவாகக் கூறும். 


இரகசியம் காக்க முடியாத நாரதர்

நாரதன்:
நாரதன், இதற்கு முந்திய மகா கற்பத்தில், 'உருவருகன்' என்னும் கந்தருவனாக இருந்தார். பின், பிரமசிரேஷ்டர் என்னும் பிராமணர் செய்த யாகத்துக்கு போய், அங்கு வந்திருந்த ஒரு கன்னியை வசியம் செய்து அவளைப் புணர்ந்தார். இதை தெரிந்து கொண்ட அந்த பிராமணர், இவரை ஒரு சூத்திரனாக பிறப்பாய் என சபித்து விட்டார். அவ்வாறே இவர் சூத்திரனாப் பிறந்து அந்தப் பிறவியில் மகா-தவம் செய்து வந்தார். அதற்குப் பின்னர் ஏற்பட்ட கற்பத்தில் பிரம மானச புத்திரராகப் பிறந்தார்.

இவர் தக்ஷப் பிரஜாபதி பிள்ளைகள் அனைவருக்கும் ஞான உபதேசம் செய்து, இந்த பிரபஞ்ச சிருஷ்டிக்கு எதிராகச் செயல்பட, அதைக் கண்ட தக்ஷன் கோபம்கொண்டு 'நீர் சந்ததி ஏதும் இல்லாமல், நிலையற்றவராக அலைந்து திரிக' என்று சாபம் கொடுத்தார்.  அதனால்தான் அவர் மூன்று லோகங்களிலும் சஞ்சரித்து திரிவார். 

இவரின் பழக்கமே, யார் எது சொன்னாலும், அதை பிறருக்கு சொல்லிவிடுவார். இவர் வாயில் இரகசியம் ஒன்றும் கிடக்காதாம். இவர் தேவ சபை, இராஜ சபை, வேள்வி சபை இவைகளுக்கு யாரும் அழைக்காமலேயே செல்லும் சுவாதீனம் உடையவர்.

யாராவது தனியாக அகப்பட்டு, திக்கற்றவர்களாக இருந்தால், அங்கு இவர் தோன்றி அவர்களுக்கு தன்னை வெளிக்காட்டி, அவர்களுக்குறிய உபாயங்களையும், (உதவிகளையும்) பின்னர் நிகழப்போகும் விபரங்களை முன்னரே தெரிவித்தும் விடுவாராம்.

யாருக்காவது தூதுவராகப் போனால் அதை திறம்படச் செய்வதில் வல்லவர். பேச்சு சாதுரியம் மிக்கவர். இவர் தரும நூல்களை கற்று சிறந்து விளங்கினவர். வீணை வாசிப்பதில் இவருக்கு நிகர் வேறு யாருமே மூவுலகிலும் இல்லையாம்.

ஸ்ரீகிருஷ்ணனது அவதாரத்தை, அவன் தோன்றுவதற்கு முன்னரே, கஞ்சனுக்கு உணர்த்தினவர் இவரே.
இராமாயணத்தை வான்மீகிக்கு உரைத்தவரும் இவர்தான். இவர் ரிஷிகளில் தேவ ரிஷி வகையைச் சேர்ந்தவர்.
சரித்திரங்களில் இவர் சம்மந்தமில்லாதவை மிகக் குறைவே.

நாரதீயம்:
பதினெட்டு புராணங்களுள் ஒன்று இந்த நாரதீயம். இது நாரதப் புரோக்தம் எனப்படும். பெரிய கற்ப தர்மங்களை கூறுவது.  இது 25,000 கிரந்தங்களை உடையது. உப புராணங்களுள் இதுவே மிகப் பெரியது.

ராக தாள லட்சணங்களை குறித்து சொல்லும் நாரதர் செய்த நூலுக்கும் நாரதீயம் என்று பெயர்.

நைஷதம்

நைஷதம்:
நிஷத நாடு. இதன் அரசன் வீரசேனன். அவரின் மகன் தான் நளன். மாமன்னன்.
நளனின் மனைவி தமயந்தி. இவர்களின் மகன் இந்திரசேனன். மகள் இந்திரசேனை.
அரசனான நளன் மிகுந்த அறிவாளி. கொடையாளி, ஆண் அழகனும் கூட. இவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இந்த பூமியில் இல்லையாம். எல்லாச் சிறப்புகளும் உடையவன்.

இவன் வாலிபப் பருவத்தில் இருந்தபோதே இவ்வளவு சிறப்பும் பெற்றவன்.

தமயந்திக்கு திருமண வயதில் சுயவரம் செய்ய அவரது தகப்பன் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, நளனின் சிறப்பைப் பற்றி ஒரு அன்னப்பறவை பெருமைபட பேசிக் கொண்டிருந்ததாம், அது பேசியதை தமயந்தி கேட்கிறாள். இவளது சுயம்வரத்துக்கு இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஆனால், தமயந்தியோ. தேவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நளன் இருக்கும் இடத்தைதேடி அவனுக்கே மாலை இடுகிறாள்.  

இவர்கள் இருவருக்கும் கோலாகல திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பின் இவர்கள் இருவரும் காமனும்-ரதியும் போல வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை மற்றவர்களை பொறாமைப்படுத்துகிறது. கலிபுருஷனை வெகுவாக பொறாமைப் படுத்தியது. அவன் இவன் தம்பி புஷ்கரனை ஏவி விடுகிறான். அவன் நளனுடன் சூதாடுகிறான். அதில் அவன் வென்றும் விடுகிறான். நளன் தோற்றுப்போகிறான். இவை எல்லாம் கலியின் ஏற்பாடு. தன் தம்பியிடம் சூதில் நாட்டை பறிகொடுத்த நளன், தன் மனைவி தமயந்தியைக் கூட்டிக் கொண்டு கட்டிய துணியுடன் காட்டுக்குப் போகிறான்.

தமயந்தியோ அரண்மனையில் ராணியாக வாழ்ந்தவள். கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்கள். பஞ்சு மெத்தையில் படுக்கை. கால் தரையில் படாமல் வாழ்ந்தாள். இன்றோ கட்டிய புடவையுடன் கணவன் பின்னால் காட்டில் நடக்கிறாள். நடக்கவும் தெரியாமல் கல்லும் முள்ளும் கால்களை குத்துகின்றன. இவளை கூட வரவேண்டாம் என்றே நளன் சொல்லியும் கேளாமல், கணவனை பின்தொடர்ந்து வருகிறாள். அவனுக்கோ மனைவி படும் துன்பத்தைக் காண மனம் சகிக்கவில்லை.

ஒருநாள் இரவு, படுத்துத் தூங்கும்போது, இவளை தனியே விட்டுவிட்டு, நளன் மட்டும் தப்பிச் செல்கிறான். அப்படியாவது அவள் நாட்டுக்கு சென்று நல்ல வாழ்க்கை வாழ்வாள் என்ற எண்ணம் கணவனுக்கு. அவளோ பல இடங்களில் கணவனைத் தேடித் திரிகிறாள். அவளுக்குப் பல இடையூறுகள். கடைசியாக வேறு வழியின்றி அவளின் தகப்பனின் நாட்டுக்குச் செல்கிறாள்.

பின்னர், ஒருநாள் நளன், தமயந்தியைத் தேடிக் கொண்டு இங்கு வருகிறான். அவளைச் சந்திக்கிறான். பின்னர், அவன் சகோதரன் புஷ்கரனைப் போரில் வென்று அவனது இராச்சியத்தைத் திரும்பப் பெறுகிறான்.

இந்த கதையை மிக விரிவாக சொல்லும் நூல்தான் 'நைஷதம்'. நிஷத நாட்டு மன்னனின் கதை நைஷதம்.
இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அதற்கும் 'நைஷதம்' என்றே பெயர்.


நவராத்திரி

நவராத்திரி:
ஆஸ்வயுஜ மாதத்தில் (ஐப்பசி) சுக்கில பிரதமை நாள் முதலாக ஒன்பது ராத்திரிகளை 'நவராத்திரி' என்பர்.

கிருதயுகத்திலிருந்து இது நடந்துவருகிறதாம். கிருதயுகத்தில் வாழ்ந்த சுகேதன் என்னும் ஓர் அரசன் தனது அரச பதவியை இழந்து தனது மனைவிகளுடன் காட்டுக்குச் சென்றான். அங்கே அங்கிரசன் என்னும் ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து தான் இராச்சியத்தை இழந்ததை வருத்தத்துடன் தெரிவித்தான்.

அந்த ரிஷி, சுகேதன் அரசனுக்கு சில பூஜை முறைகளை சொல்லிக் கொடுத்து உபதேசித்தார். அவர் சொல்லிய அந்த பூஜா முறைகள் நவராத்திரி பூஜை எனப்படும். இந்த பூஜையை பக்தியோடு செய்து வந்தால் தனது இழந்த ராச்சியத்தையும், இழந்த செல்வங்களையும் திரும்பப் பெறலாம் என்று அந்த ரிஷி உபதேசித்து அதை செய்யும் முறையையும் சொல்லிதந்தார்.  அந்த அரசனும் அவ்வாறே செய்து இழந்தவைகளை அனைத்தையும் திரும்பப் பெற்றான்.

அதனால், அரசன் கட்டளைப்படி, அப்போதிலிருந்து வருடந்தோறும் இதை கொண்டாடி வருகின்றனர்.


துர்க்கை, லக்ஷூமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் முறையே ஒருவருக்கு மூன்று நாட்கள் வீதம் மூவருக்கும் ஒன்பது நாட்களும் பூசித்து, ஒன்பதாம் நாள் ஆயுதங்களையும், பூஜை புத்தகங்களையும் ஆராதித்தும், அடுத்த பத்தாவது நாளில் தஜமி திதியை வெற்றிக்காக விஜயதசமியாக கொண்டாடுகின்றனர்.

ரோஹினம்

ரோஹினம்:
இது ஒரு மலை. இந்த மலையில் இரத்திரனங்கள் அதிகமாக உள்ளதாம்.

இது ஒரு மரம் என்றும் சொல்வர். இது அலம்ப தீர்த்தக் கரையில் உள்ளதாம். இதிலே வால்கில்லியர் தலைகீழாக தொங்கி தவம் செய்து வந்தார். கருடன் அவருக்கு அமிர்தம் கொண்டுவருமாறு சென்றது. 

அது தனக்கு வழியில் பசிக்கும் போது சாப்பிடும் உணவாக ஒரு யானையைக் கொண்டு சென்றது. அந்த யானையை தூக்கிக் கொண்டு முனிவர் தொங்கும் மரத்தில் இளைப்பாற உட்கார்ந்தது. அந்த மரம்  ஒடிந்தது. அந்த மரம் கீழே விழுவதற்கு முன்பே அந்த மரத்தையும் சேர்த்து தூக்கிக் கொண்டு கருடன் பறந்தது. அது அவ்வாறு பறந்து நிஷ்புருஷ மலையில் இறங்கி அந்த யானையை தின்றது.


அவ்வாறு அந்த மரத்தை அங்கு விட்டதால் அந்த மரத்தில் தொங்கிய வாலகில்லியரும் கருடன் சேர்ந்த அந்த மலையில் போய்ச் சேர்ந்தார். அங்கு தனது தவத்தை தொடர்ந்தார். 

Tuesday, April 22, 2014

Sri Venkatesa Perumal


பெருச்சாளி

பெருச்சாளி
--(நன்றி.  திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

ஒரு ஊரில் ஒரு விவசாயி. அவன் கஷ்டப்பட்டு ஒரு கிழங்குத் தோட்டம் போட்டிருந்தான். அவனுக்கு சனியாக வந்த பெருச்சாளி அவன் கிழங்குகளை எல்லாம் நாசமாக்கி கொண்டு வந்தது. அவனோ பரம ஏழை. 'அவனா, பெருச்சாளியா' என்ற அவல நிலை. பாவம் அவன் என்ன செய்வான்?

ஒரு பெருச்சாளிப் பொறி வாங்கி தோட்டத்திலே இடம் பார்த்து மறைவாக வைத்தான். ஆனால், பெருஞ்சாளி பெரிய கை தேர்ந்த பெருச்சாளி. தப்பிக் கொண்டே வந்தது.

ஒரு நாள் அதிகாலையில் பொறி வைத்த இடத்தில் இருந்து பெரிய சத்தம். விவசாயியின் எட்டு வயது மகன் ஓடோடிச் சென்றான் என்னவென்று பார்க்க. பொறியில் பிடிபட்டது ஒரு கருநாகம். முற்றிலும் சாகாத நிலையில் அப்படியும், இப்படியும் ஆக்ரோஷத்துடன் தலையை அடித்துக் கொண்டிருந்தது. பொறிக்குத் தெரியுமா அது பெருச்சாளியைப் பிடிக்க வைத்த பொறி என்று. கிட்ட வந்த பாம்பை தவறுதலாகப் பிடித்து விட்டது. தள்ளி நின்று புதினம் பார்த்தான் பையன். பிரண்டு, பிரண்டு அடித்த பாம்பு அவனை எட்டி கொத்தி விட்டது.

விவசாயியும், அவன் மனைவியும் குய்யோ முறையோ என்று தங்கள் தலையில் அடித்து அடித்துக் கதறினார்கள். பாம்பையும் ஒரே அடியில் கொன்று போட்டாகி விட்டது. ஊர் முழுக்க அழுதது. பையனுடைய இறந்த சடலத்தை கொண்டு போய் புதைத்தார்கள்.

பன்னிரண்டு நாள் துக்கம் அனுட்டிக்க வேண்டும். பன்னிரண்டாம் நாள், ஊர் வழக்கப்படி பந்து சனம் எல்லோரையும் கூப்பிட்டு விருந்தும் கொடுக்க ஏற்பாடு. ஏழை விவசாயிடம் என்ன இருக்கு? வெகுகாலமாக வளர்த்த ஒரே ஒரு ஆடு. அதை வெட்டி எல்லோருக்கும் விருந்து வைத்தான்.

பெருச்சாளியைக் கொல்லத் தான் பொறி வைத்தான் கமக்காரன். ஆனால் அவனுடைய பிள்ளை இறந்தது. பிறகு பாம்பும் செத்தது. அதற்குப் பிறகு அருமையாக வளர்த்த ஆடும் செத்தது.. பெருச்சாளி மட்டும் இன்னும் அவன் வயலில் ஒடிக் கொண்டே இருக்கிறது.


--(நன்றி.  திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

Friday, April 18, 2014

சதுர் யுகங்கள்

யுகங்கள் நான்கு (சதுர் யுகம்)
1. கிருத யுகம் = 17,28,000
2. திரேத யுகம் = 12,96,000
3. துவாபர யுகம் = 8,64,000
4. கலி யுகம் = 4,32,000
இவை மொத்தம்  43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.

ஒரு சதுர் யுகம் (43,20,000 மனித வருடங்கள்) கழிந்தால் பிரம்மனுக்கு ஒரு பகல். அதே கால அளவு ஒரு இரவு. இப்படியாக 360 பகல் இரவு காலங்கள் கழிந்தால் பிரம்மாவுக்கு ஒரு வருடம்.

இவ்வாறு நூறு வருடங்கள் சென்றால் பிரம்மாவின் ஆயுள் முடியும்.

இதில் முற்பகுதி 50 வருடம் பாத்தும கற்பம் என்று பெயர். பிற்பகுதி 50 வருடத்திற்கு வராக கற்பம் என்று பெயர்.

இப்போது நடந்து கொண்டிருப்பது வராக கற்பம்.

பிரம்மாவுக்கு ஒரு பகலில் 15 மனுக்கள் அரசு செய்வார்கள். அந்த மனு அந்தரம் ஒன்றில் தேவேந்திரன், சப்தரிஷிகள், முதலியோர் பிறப்பார்கள்.

பிரமாவுக்கு இரவு வரும்போது பிரளயம் உண்டாகும். இந்த பிரளயத்தில் மூன்று உலகங்களும் அழிந்துவிட்டு, மகர் உலகத்தில் உள்ளவர் புதிதாகப் பிறப்பார்கள்.



நாடி கிரந்தம்

நாடி கிரந்தம் மொத்தம் 15. 
இவைகளில் உலகத்திலுள்ள  மனிதர்கள் பெரும்பாலோரின் ஜாதகங்களும் பலன்களும் உள்ளன.

பதினைந்து நாடி கிரந்தங்கள்:
1. சூரிய நாடி
2. சந்திர நாடி
3. குச நாடி
4. புதன் நாடி
5. சுக்கிர நாடி
6. குரு நாடி
7. சாமி நாடி
8. ராகு நாடி
9. கேது நாடி
10. சர்வசங்கிரக நாடி
11. பாப நாடி
12. துருவ நாடி
13. சாவ நாடி
14. சுக நாடி
15. தேவி நாடி


திரௌபதி

திரௌபதி
துருபதன் மகள்.
பாண்டவர் மனைவி
பூர்வஜென்மத்தில் நளாயனன் என்னும் ரிஷியின் மகள். இவளுக்கு இந்திரசேனை என்னும் பெயர். இவளை மௌத்கல்லியன் என்னும் ரிஷிக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

அவள் கணவனோ, இவளின் பதிவிரதை தன்மையை சோதிக்க விரும்பி, தானே குஷ்டரோகி ஆகிக் கொண்டான். ஆனாலும் அவளோ எந்தவித வெறுப்பும் காட்டாமல் அவனுடைய தேகத்தை தொட்டு மருந்து போட்டு கவனித்து வந்தாள்.

அவளின் பணிவிடையைக் கண்டு மகிழ்ந்த கணவன், அவளிடம், 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டான். நீர் மிக அழகான வாலிபனாக ஆகி என்னுடன் ஐந்துமுறை கலக்க வேண்டும் என்று கேட்டாள். அவ்வாறே அவனும் செய்தான். அவன் சிறு காலத்தில் இறந்துவிட்டான்.  அவளும் இறந்து விட்டாள்.

இவள், மறு ஜென்மத்தில், காரொசனுக்கு மகளாகப் பிறந்து பசுபதியை நோக்கித் தவம் இருந்தாள். பசுபதி இவள் முன் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார். முன்பிறவியில் கணவனின் ஏக்கத்தில் இருந்தவள், 'எனக்கு கணவர் வேண்டும்' என்று கேட்டாள். அதை 'பதிந்தேகி, பதிந்தேகி' என்று ஐந்து முறை கேட்டாள். பதி வேண்டும் என்று அர்த்தம். பசுபதியும் அவ்வாறே வரம் அருளினார்.

மறு ஜென்மத்தில் இவள் ஐந்து கணவனைப் பெற்றாள்.
இவள் யாகத்தில் பிறந்ததாள் யாக்கியசேனை என்றும், துருபதன் மகள் என்பதால் திரௌபதி என்றும், பாஞ்சால ராஜன் மகள் என்பதால் பாஞ்சாலி என்றும் பல பெயர்களைப் பெறுவாள். ஆனால் அவளின் தந்தை இட்ட பெயர் 'கிருஷ்னை'.

திரௌபதி யுதிஷ்டிரனுக்கு பெற்ற மகன் பிரதிவிந்தியன்.
வீமனுக்குப் பெற்ற மகன் சுருதசேனன்,
அர்ச்சுன்னுக்கு பெற்ற மகன் சுருதகீர்த்தி.
நகுலனுக்குப் பெற்ற மகன் சதானீகன்.

சகாதேவனுக்குப் பெற்ற மகன் சுருதகன்மன்.

Thursday, April 17, 2014

திரிசங்கு சொர்க்கம்

திரிசங்கு சொர்க்கம்;

மனித உடலோடுதான் சொர்க்கத்தை அனுபவிக்க முடியுமா? அல்லது உடலை விட்டுப் பிறந்த ஆன்மா சொர்க்கத்தை அனுபவிக்கு முடியுமா?

அரிசந்திரனின் தந்தை திரிசங்குவுக்கு இந்த சந்தேகம் இருந்ததா? இவர் இந்த மனித உடலுடனேயே சொர்க்கம் சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே அவரின் குலகுருவான வசிஷ்டரிடம் சென்று கேட்டுக் கொண்டார். அவரோ அவ்வாறு செல்லக் கூடாது என்றும் உடம்பில் இருந்து உயிர் பிறந்த பின், ஆன்மா மட்டுமே சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும் என்றும் அதனால் நீ உன் உடம்புடன் சொர்க்கம் செல்ல அனுமதி மாட்டேன் என்றும சொல்லிவிட்டார். வசிஷ்டரின் வார்த்தையில்  திருப்திபடாத திரிசங்கு, வசிஷ்டரின் மகனிடம் சென்று தன் விருப்பத்தை தெரிவித்தார். அவரோ, நீ குருவின் வார்த்தையை கேட்க மறுத்து என்னிடம் ஏன் வந்தாய்? என்று திட்டிவிட்டார்.

ஒருவழியாக, கடைசியில் விசுவாமித்திரிடம் சென்று தன் விருப்பதைத் தெரிவித்தார்.

விசுவாமித்திர் இந்த திரிசங்குவின் விருப்பத்தை நிறைவேற்று வதற்காகவே மேலுலகில் உள்ள சொர்கத்துக்கும், பூமிக்கும் இடையில் ஒரு தனி சொர்க்கத்தை ஏற்படுத்தி   அதற்கு 'திரிசங்கு சொர்க்கம்' என்றும் பெயரிட்டு அதை திரிசங்குவுக்கு மட்டும் கொடுத்தார். அந்த திரிசங்கு சொர்க்கத்தில், திரிசங்கு மன்னர் தன் உடம்போடு சென்றாராம்.


திரிசங்கு சொர்க்கம் பூலோகத்துக்கு மேலே, ஆனால் மேலே உள்ள சொர்க்கலோகத்துக்கு கீழே, இரண்டும் கெட்டான் நிலையில் (பூமியிலும் இல்லாமல், உண்மைச் சொர்க்கத்திலும் இல்லாமல், இடையில்) ஏற்படுத்தியதால் இது 'திரிசங்கு சொர்க்கம்' என்று வழங்கப்பட்டு வருகிறது. 

Tuesday, April 15, 2014

சுக்கிரன்

சுக்கிரன்:
பிரம மானச புத்திரர்களுள் ஒருவர். பிருகுவின் பௌத்திரன். இவர் அசுரர்களின் குரு. இவரின் மகள் தெய்வயானை. இவரின் தாய் தேவ லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தபோது விஷ்ணுவால் கொல்லப்பட்டாள். இவர் அசுரர்களின் மந்திரி எனவும் சொல்லப்படுபவர்.


இவர் மகாபலி சக்கரவர்த்தியிடம் மந்திரியாக இருந்தபோது, விஷ்ணு வாமனனாக அவதாரம் செய்து மகாபலியிடம் மூன்று அடி மண் வேண்டும் என கேட்டபோது, இந்த சுக்கிரன், 'இது விஷ்ணுவின் வஞ்சகம், நீ நம்பாதே' என்று மன்னனுக்கு சொல்லிக் கொடுத்ததால், விஷ்ணு, இந்த சுக்கிரனின் ஒரு கண்ணை எடுத்துவிட்டான். 

சுக்கிரன், இறந்த உயிரை எழுப்பும் வல்லமை உடையவன். இந்த சுக்கிரன் இருக்கும் மண்டலம் அப்பு மண்டலம். சுக்கிரன் மழைக்கு அதிபதி. சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் இருந்தால் ராஜயோகம் உண்டு.

பஞ்சீகரணம்

பஞ்சீகரணம்: ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக் கொண்டு, மற்றொரு கூறை நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு பூதங்களுக்கு கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும்.

ஆகாயம் துவாரமாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களை திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம் செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது.

ஆகாயம் வட்டவடிவம்;
வாயு அறுகோணம்;
தேயு முக்கோணம்;
அப்பு பிறை வடிவம்;
பிருதிவி சதுரம்;

ஹ-ய-ர-வ-ல என ஆகாயம் முதல் ஐந்து பூதங்களுக்கும் முறையே இது அக்ஷரமாகும்.

சிரார்த்தம்

சிரார்த்தம்: பிதிர் கன்மம். பிர்தேவதைகளுடைய திருப்திக்காக செய்யப்படும் பிண்ட கருமம்.

இது சுப-கருமமாகவும், அசுப-கருமமாகவும் செய்யப்படும். சுப-கருமத்தில் செய்யும் சிரார்த்தம் 'நாந்தி' 'அப்பியுதம்' என்றும்; அசுப-கருமத்தில் செய்யப்படும் சிரார்த்தம் 'நேகம்' என்றும் பெயர்.
அவற்றுள், பிரேத சிரார்த்தம் என்பது பிரேத திருப்தியின் பொருட்டு செய்யப்படுவது.

பைதிருக சிரார்த்தம் பிதிர்தேவதைகளின் பொருட்டு செய்யப்படும். பிதிர் தேவதைகள் வசுருத்திர ஆதித்திய பதப்பேறுடையவர்களா இருப்பவர்கள். காசி, கயை, பிரயாகை, குருக்ஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புஷ்கலக்ஷேத்திரம், முதலியன சிரார்த்த கருமங்களுக்கு சிறந்த ஸ்தலங்கள். இவற்றில் கயாவில் செய்வது மிகுந்த பலனளிக்கும்.


இறந்த தினம், அமாவாசை, மகாளயபக்ஷ முதலிய நாட்கள் சிரார்த்தத்துக்கு உரிய காலங்கள்.

காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம்

சரஸ்வதி ஒரு யாகத்துக்கு வர நேரமானதால், பிரம்மா, காயத்திரி என்ற இடைக்குல கன்னியை இரண்டாம் மனைவியாக கொண்டார் என்பர்.
வேதசாரமாகிய காயத்திரி சூத்திரமே கன்னிகையாக உருவகம் செய்யப்பட்டது. இதை உதய-அஸ்தமன காலங்களில் ஓதுவர்.

காயத்திரி மந்திரம் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பொருந்தும் என்பதால் சைவரும், வைஷ்ணவரும் தமது என்று கூறி ஓதிவருவர்.


காயத்திரி மந்திரம்: வேதம் பசுவாகவும், அதன் சாரம் பாலாகவும், சூத்திரமான அதனை கரப்பது இடைக்குல கன்னியாகவும் உருவகம் செய்துள்ளனர்.

Monday, April 14, 2014

சான்மலி தீவு (ஆஸ்திரேலியா)

சான்மலி தீவு (ஆஸ்திரேலியா):

இது சப்த தீவுகளில் ஒன்று. சுரா சமுத்திரத்தில் இது உள்ளது.இங்கு முள் இலவ மரங்கள் அதிகமாக உள்ளதால் இதற்கு சான்மலி என்று பெயர் வந்ததாம்.

இங்கு ஏழு மலைகளும் உள்ளன. அவை, குமுதம், உன்னதம், பலாஹம், துரோணம், கங்கம், மகிஷம், ககுத்துமான் என ஏழு மலைகள் உள்ளன.
இங்குள்ள நதிகளும் ஏழு. அவை, யோனி, தோயை, விதிருஷ்ணை, சந்திரை, சுக்கிலை, விமோசினி, நிவர்த்தி என்னும் ஏழு நதிகள்.

அங்கு வசிப்பவர்கள் நிறத்தினால் நான்கு வகைப்படுவர். அவர்களை கபிலர், அருணர், பீதர், கிருஷ்ணர் என நான்கு வகையாக பிரிப்பர்.

அவர்கள் கடவுளை வாயு பகவானிடம் தியானித்து அவிகளை வழிபாடு செய்பவர்கள். தற்போதுள்ள ஆஸ்திரேலிய தீவுதான் இது.

முன்னர், அநுமான் சஞ்சீவி மலையை கொணர்ந்தது இந்த தீவிலிருந்துதான்.

சாலிவாகனன்

சாலிவாகனன்:
விக்கிரமார்கனைக் கொன்ற சாலிவாகனன் தன் பெயரால் ராஜ்ஜியத்தை நிலைநாட்டினான்.

சுலோசனன் என்னும் பிராமணனுக்கு சுமித்திரை என்னும் ஒரு புத்திரி பிறந்தாள். அவன் மணப்பருவத்தை அடைந்தபோது, காதல்வயப்பட்டு ஒருவனைக் கூடி கர்ப்பவதி ஆனாள். தன் ஒழுக்கத்திற்கு கலங்கம் உன்னால்தான் வந்தது என காதலனை திட்டினாள். அவனோ, நான் மானிடன் அல்ல; நான் ஆதிசேஷன். எனவே உனது கர்ப்பதில் இருக்கும் புத்திரன் ஒரு அரசனாக வருவான் என்று கூறி மறைந்தான்.

அவளும் தன் தகப்பனிடம் நடந்ததைக் கூறி தேற்றி இருக்கும்போது, அந்த தேசத்து அரசனுக்கு இது தெரிந்து அவளை பக்கத்து நகருக்கு கடத்தும்படி உத்திரவிட்டார். அவளும் அடுத்த ஊரில் உள்ள குலாலசேரியில் தங்கி அங்கு ஆண்குழந்தையைப் பெற்று அங்கேயே வசித்தும் வந்தாள். அந்தச் சிறுவனுக்கு 'சாலிவாகனன்' எனப் பெயர்சூட்டினர். அவனும் தினமும் அங்கு சிறுவர்களுடன் விளையாடி வந்தான். அவன் விளையாட்டு அரசன், மந்திரி, ராஜாங்கம் போன்ற விளையாட்டாகவே இருந்தது. ஐந்து வயதே நிரம்பாத இந்த சிறுவன் அரச வாழ்க்கையை பார்த்தது கூடக் கிடையாது. பின் எப்படி தெரியும் என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். 

விளையாடும் போது அந்த வழிவந்த ஒரு பிராமணர் இவனுடன் உண்மையைப் போல விளையாடினார். பிராமணர் அந்த சிறுவனான அரசனுக்கு பஞ்சாங்கம் சொன்னார். அதனால் அந்த சிறுவன், தான் ஒரு அரசன் என்பதைப் போல கருதிக்கொண்டு அவருக்கு ஒரு குடம் கொடுக்கச் சொன்னான். அவரும் அதை வாங்கிக் கொண்டு வீடு சென்றார். வீட்டில் அதை திறந்து பார்த்தபோது அந்த குடம் முழுக்க பொற்காசுகள். ஆச்சரியம்.
இந்த விபரம் மன்னருக்கும் தெரிந்தது. விக்கிரமார்க்கன் மன்னனும் இவனைப் பார்க்க வந்தார்.


இந்த நாளில், வேறு ஒரு இடத்தில், தனஞ்செயன் என்னும் வைசியன் தான் இறக்கும்போது தனது புத்திரர் நால்வரையும் அழைத்து, அவர் இருக்கும் கட்டிலின் கால்கள் நான்கிலும் தனித்தனியே வைத்திருக்கும் சொத்துக்களை நால்வரும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார்.

அவர் இறந்தபின்பு, கட்டிலின் காரங்களுக்கு அடியில் தோண்டிப் பார்த்தபோது, ஒரு பையில் மண்ணும், ஒரு பையில் உமியும், ஒரு பையில்  பொன்னும், ஒரு பையில் சாணமும் இருந்தது. இதை எப்படி பங்கிடுவது என எல்லோருமே குழம்பினர். அரசனிடம் வழக்கு சென்றது. அவரும் குழம்பிவிட்டார். பதில் சொல்ல முடியவில்லை. எனவே அந்த நான்கு புதல்வர்களும் சாலவாகனன் விளையாடும் இடம் வழியாக வீட்டுக்குத் திரும்பி வந்தனர்.

அவர்களைப் பார்த்த சாலிவாகனன், இந்த சிறு விஷயத்துக்கா மன்னர் வரை சென்றீர்கள். வாருங்கள் நான் பகிர்ந்து தருகிறேன் என்று கூறினான். பைகளை எடுத்துக் காட்டியவுடன், மண்ணை எடுத்தவன் நிலங்களையும், உமியை எடுத்தவன் தானியங்களையும், பொன்னை எடுத்தவன் ஆபரணங்களையும், சாணத்தை எடுத்தவன் மாடுகளையும் எடுத்துக் கொள்க என்று உங்கள் தந்தை குறிப்பாய் உணர்த்தி உள்ளார் என்று கூறினான்.

அதை அறிந்த விக்கிரமார்கன் மன்னன் இந்த அறிவுள்ள சிறுவனை கொல்ல எத்தனித்தார். ஆனால் அந்தச் சிறுவன் தன் சிறு படையைக் கொண்டு மன்னனை தோற்கடித்தான். பின், நருமதை ஆற்றங்கரையிலுள்ள தேசத்தை கவர்ந்து அதற்கு அரசன் ஆகினான்.


இவன் காலத்திலிருந்து சாலிவாகன சகாப்தம் உருவானது. இவன் வைத்தியசாஸ்திரம், அசுவ சாஸ்திரம், அலங்கார சாஸ்திரம் மூன்று நூல்களை உருவாக்கினான்.

Saturday, April 12, 2014

துர்வாச முனிவர்

துர்வாச முனிவர்:
மகா கோபக்காரர். அந்த அளவுக்கு சிறந்த மகா ரிஷி.

இவர் அத்திரி என்பவருக்கும் அநசூயை என்பவளுக்கும் பிறந்த புத்திரன். இவரின் சகோதரர் சோமதத்திரேயர்.
இவரின் கோபத்தை உலகில் உள்ள அனைவரும் அறிந்திருந்ததால், அதையே கோபத்துக்கு உதாரணமாகச் சொல்லி வருகின்றனர்.

ஒருமுறை, தாம் நீட்டிய மாலையை, இந்திரன் அவன் வைத்திருந்த யானைத் தோட்டியை நீட்டி வாங்கியதோடு, அவன் அணிந்து கொள்ளாமல் அவனின் யானையின் மத்தகத்தில் போட்டுவிட்டான்.


இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் இந்திரனின் மொத்த செல்வமும் அழியவேண்டும் என்று சபித்ததோடு அவை திருப்பாற்கடலுக்கு அடியில் போய் ஒழிந்து கொள்ளுமாறும் சபித்து விட்டார்.


அப்சரஸ் அழகிகள்

அப்சரஸ் அழகிகள்
இவர்கள் தேவகணங்கள். (தேவ உலகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்).
அப்சரஸ் பெண்கள்:
1. மேனகை
2. ரம்பை
3. கிருதாசி (ஊர்வசி)
4. திலோத்தமை
இந்த அப்சரஸ்கள் பாற்கடலில் பிறந்தவர்கள்.  கசியபன் புத்திரிகள் என்றும் சொல்லுவார்கள். இவர்களை கந்தருவ பெண்கள் என்றும் சொல்வார்கள்.
இவர்கள் 14 வகைப்படுவர்.

மேனகை
விசுவாமித்திரன் தவத்தை அழிக்குமாறு இந்திரன் இவளை ஏவிவிட, அவளும் விசுவாமித்திரரிடம் சென்று, அவரின் தவத்தைக் கலைத்து அவருடன் கூடி 'சகுந்தலை' என்ற பெண்ணைப் பெற்றாள்.

ரம்பை
இந்திரன் சபையில் ஆடும் அப்சரப் பெண். இவள் மகா அழகி. இவள் நளகூபரன் மனைவி.

ஊர்வசி
நர-நாராயணர்கள் பதரிகா ஆசிரமத்தில் தவம் செய்யும்போது, அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்து தேவதாசிகள் சென்று எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
நாராயணன் கோபம் கொண்டு இந்த தேவதாசிகளின் அழகைக் குறைக்க நினைத்து, அவர்களைக் காட்டிலும் பலமடக்கு அழகுள்ள இந்த ஊர்வசியை தனது தொடையிலிருந்து தோற்றுவித்தார். அதைப் பார்த்த அந்த தேவதாசிகள் தங்கள் அழகு, இவள்முன் குறைந்துவிட்டதாக கருதி ஓடிவிட்டனர். தொடையில் பிறந்ததாள் இவளை ஊர்வசி என்றனர்.

திலோத்தமை:

பிரம்மா ஏனையப் பெண்களைச் சிருஷ்டிசெய்து கொண்டிருக்கும்போது, இந்த பெண்ணை சிருஷ்டிக்க நினைத்து அதற்காக திலப் என்னும் பிராமணம் (உறுதி) எடுத்து சிருஷ்டித்ததால் இவளுக்கு திலோத்தமை என்ற பெயர் வந்ததாம். திலோத்தமை பாற்கடலில் பிறந்தவள். 

அநுமன் பிறந்த கதை

அநுமன் பிறந்த கதை

அஞ்சனை என்பவள் ஒரு அப்சரப் பெண். இவள் ஒரு சாபத்தால், குஞ்சரன் என்னும் வானரனுக்கு புத்திரியாகப் பிறந்தாள்.

இவள் அப்சரப் பெண் என்பதால், நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தை எடுக்கும் ஆற்றல் கொண்டவள்.
அவ்வாறு ஒருமுறை இவள் மனித உருவம் கொண்ட அழகிய பெண்ணாக உருவெடுத்தாள். அப்போது வாயு பகவான் அங்கு வந்ததைக் கண்டு அவனுடன் இந்த பெண் கூடி பெற்ற புத்திரனே அநுமன்.
பின்னர் அவள் வானர உருவத்தில் கேசரி என்னும் வானரனைத் திருமணம் செய்து கொண்டு அவனுக்கு மனைவியாக வாழ்ந்தாள்.


அநுமன் மிக்க ஆற்றல் உள்ளவர். அஞ்சனை வயிற்றில் வாயு பகவானுக்குப் பிறந்த இந்த அநுமன் தேவ அம்சம் பொருந்தியவர் என்பர். இவர் கல்வி அறிவிலும் சிறந்தவர். இவர் வாலியின் அக்கிரமங்களை சகித்துக் கொள்ள முடியாமல் தற்செயலாக ஸ்ரீராமரை அடைந்து அவரைக் கொண்டு வாலியை கொன்று அவன் தம்பிக்கு முடிசூட்டியவன். 

பின்னர் ராமருக்கு அடிமைபூண்டு அவருக்கு தூதராகி சீதையைத் தேடி இலங்கைக்கு தாவிப் போய் சீதையைப் பார்த்து, இராமருக்கு தெரிவித்து, சீதையை மீட்க சேதுபந்தனம் செய்து அந்த வழியே சேனைகளை நடத்தி போரிட்டு மீட்டவர். கடைசிவரை ராமரின் பக்தராகவே இருந்தவர்.

கடவுளின் பெயர் உயிரைக் காக்கும்

உயிர்காக்கும் கடவுள் பெயர்:

கன்னியாகுப்சம் என்ற ஊரில் ஒரு பிராணமன் இருந்தான். இவனின் மனைவி ஒரு சூத்திரப் பெண். இவனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் நாராயணன். இந்த பிராமணனோ மகா பாதகன்.

இவனின் வாழ்நாள் முடிவுக்கு வந்தது. எமன் இவனின் உயிரை எடுத்துச் செல்ல வந்தான். இவனின் கடைசி மூச்சில் தன் மகன் நாராயணனை கூவி அழைத்தான்.

ஆனால் வந்த எமனோ, நாராயணின் பெயரைக் கேட்டதால் இவனின் உயிரை விட்டுவிட்டுச் சென்றான்.

அந்தப் பிராமணன் மீண்டும் உயிர் பெற்ற மிகுந்த பக்தியுடையவனாகி நீண்டநாள் வாழ்ந்தான்.

லிங்கபுராணம்

லிங்கபுராணம்


அக்கினி கற்பத்தின் இறுதியில் இந்த ஜீவன்கள் (ஆன்மாக்கள்) அடையப் போகும் சிறப்பு, ஐஸ்வர்யம், இன்பம், மோக்ஷம் இவைகளையும், அதி-ரகசிய ஞானமாகிய சிவலிங்கங்களையும் விரிவாகக்கூறும் புராணம். இது மொத்தம் 11,000 கிரந்தங்களை கொண்டது.