Saturday, January 18, 2014

ஊழ் வெல்லும் புத்திக் கடவுள் விநாயகர்:

ஊழ் வெல்லும் புத்திக் கடவுள் விநாயகர்:
தேவர்களும், ரிஷிகளும், தாங்கள் செய்யும் செயல்கள்  எல்லாவற்றிலும் இடையூறு ஏற்பட்டுக் கொண்டு தடையாகிக் கொண்டே வந்தது.
அவ்வாறு எந்தத் தடையும் ஏற்படாமல் இருக்க வழி ஏற்படுத்தும்படி தேவர்களும், ரிஷிகளும் சிவனிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவனின் முகத்தில் ஒரு ஜோதி தோன்றியது. அந்த ஜோதியானது அருகிலிருந்த உமாதேவியரது கண்கள் கூசுமளவு இருந்ததாம். அது கண்ட உமாதேவியார், "அந்தப் புத்திரனுடைய திருமேனி, யானைத் தலையும், தேவ கரங்களும், பூத உடம்பும், பொருந்துவதாக" என கூற, அவ்வாறே விநாயகர் உருவானார். சிவபிரான் அவரைக் கணங்களுக்கு தலைவராய் இருந்து அவரை வழிபட்டுத் தொடங்கும் எந்தக் காரியமும்இடையூறு வராமல் இனிது முடியும் என்ற அதிகார தெய்வமாகும்" என்று உரைத்தார்.
அவர் கணங்களுக்குத் தலைவர் ஆனதால் "கணேசர், கணபதி" ஆனார். விக்கினங்களை காப்பதால் "விக்னேஷ்வரர்" ஆனார்.  இது வராக புராண வரலாறு.
செய்யும் தொழில் நடப்பதும், நடக்காமல் தோல்வி அடைவதும் ஊழ்வசத்தாலும், புத்தி வசத்தாலும் ஆனது. 
ஆகவே ஊழ் மூலம் வருவதையும், புத்தி மூலம் வருவதையும் முன்னரே நாடித் தெளிந்து, அதற்குறிய உபாயங்களால் (மாற்றுவழிகளால்) விலக்கிக் கொள்ளலாம். ஆதலால், இந்த புத்தி தத்துவத்துக்குத் தெய்வம் "கணேசர்". அவரே சகல உயிர்களிடத்தும் விளங்குகின்ற புத்தி எல்லவற்றுக்கும் ஆதார ஸ்தானமாக உள்ளவர். அவரைத் தியானிப்பதால், புத்தி விரிதல் அடையும், மற்றும் அதற்குறிய உபாயமும் தோன்றும். இல்லையென்றால் எடுத்து கருமங்கள் (செயல்கள்) கைகூடாது.
எனவே கணேசருடைய தலையை யானைத் தலையாகப் பாவித்து, யானை ஞாபக சக்தியில் மிகச் சிறந்தது என்றும்; யானை தான் கண்டது, கேட்டது, உற்றது எல்லவற்றையும் ஒரு சிறிதைக்கூட ஒரு காலத்திலும் மறக்காமல் இருக்கும் இயல்புடையது என்றும்; யானை மிக்க வலிமை உடையது என்றும்; அந்த அளவுக்கு மிகுந்த சாந்தமுடையது என்றும்; யானைக்கு இணக்கமாக நடப்பவர்களுக்கு யானையே வசப்படும் என்றும்; ஆகிய சிறந்த குணநலங்களை உடையது.
யானையின் நுதல் பிரணவ வடிவாக இருப்பதால் அதை அடையாளப் படுத்துகிறதாம்,
அதன் பாசம் வியாபகத்தையும், அங்குசம் அருளையும், ஐங்கரமும் தனித்தனி ஒவ்வொரு குறிப்பினையும், பாதம் இரண்டும் சித்தி, புத்தியையும், பரந்த செவிகள் சர்வ தத்துவத்தையும், ஒரே நந்தம் பரஞானத்தையும், ஒடிந்த தந்தம் அபயத்தையும், லம்போதரம் பொறையுடைமையையும் உணர்த்தி இருக்கிறதாம்.
கஜாசியன்:

விநாயகக் கடவுளுக்கு கஜாசியன் என்ற பெயரும் உண்டு. தக்ஷ யாக பங்க காலத்திலே வீரபத்திரராலே இவரின் தலை கொய்யப்பட்டபோது, தேவர்கள் சிவனை நோக்கி, விநாயகர் சர்வ காரியங்களுக்கும் விக்கினம் வராமல் காப்பவராதலால் அவரை எழுப்பித்தருள வேண்டும் என்று பிராத்திக்க, அவர் உத்திரதிசையிலே (வடக்கு திசையிலே) தலைவைத்து யார் உறங்குகின்றாரோ அவர் தலையை கொய்து கொண்டு வந்து பொருத்தினால் எழுவார் என்று சொல்ல, அவ்வாறே வேறு யாரையும் காணது, ஒரு யானை மட்டும் அங்ஙனம் நித்திரை செய்வதைக் கண்டு அதன் தலையைக் கொய்து கொண்டுபோய் பொருத்த, அன்று முதல் கஜாசியன் ஆனார். இதுபற்றி வேறு பல கதைகளும் உண்டு.

No comments:

Post a Comment