ஆன்மா, உயிர், மனம்
தாதாசாரியார் என்ற பண்டிதர் காஞ்சிபுரத்திலே அப்பைய தீக்ஷிதர் காலத்தில் இருந்து வந்த ஒரு பண்டிதர். இவர் ஒரு வைஷ்ணவ பிராமணர். அப்பைய தீக்ஷிதர் மீது பொறாமை உடையவராய் தமக்கு நட்பினனான அவ்வூர் அரசனை வசியம் பண்ணிக் கொண்டு, தீக்ஷிதரை அவன் சமூகத்தில் வரவழைத்து அவரோடு வாதம் புரிந்தும் அவர்முன் வாதத்தில் நிற்கமுடியாமல் தோற்றவர்.
தீக்ஷிதருக்கோ மத்தியான காலத்திலே வயிற்றுவலி வருவது இயல்பு. அவ்வேளையில் அவரோடு வாதம் புரிந்து வெல்லக் கருதி, அரசன் சபைக்கு வரவழைத்து வாதம் புரிய தலைப்பட்டபோது தீக்ஷிதர் தமது உத்திரீயத்தை எடுத்து அரசன் முன்னே வைத்துவிட்டு வாதம் புரிந்தார். வயிற்றுவலி அந்த உத்தரீயத்தைப் பற்றிநின்று அதனை முடக்கி அலைத்தது.
அதுகண்ட அரசன் அதிசயித்து அதன் காரணத்தை வினவ, தீக்ஷிதர் தனது பழைய வினைப்பயனை தானே விரும்பி அநுபவித்து வருவதாகவும், அங்ஙனம் செய்யாதிருந்தால் அடுத்த பிறவியில் அது தொடரும் என்றும், அதனால் இந்த வயிற்றுவலியை நான் என்னைவிட்டு நீக்கிக் கொள்ளவில்லை என்றார். இதைக்கேட்ட அரசன் அவர் மீது பேரன்பு கொண்டு தாதாசாரியுடைய வஞ்சக எண்ணத்தை எடுத்துக்கூறி, தாதாசாரியைக் கண்டித்து அவனின் நட்பையும் துறந்தான்.
ஆன்மாக்கள் தனது முன்ஜென்ம கர்மாக்களை, அடுத்த பிறவியில் ஒரு உடலில் வந்து அனுபவித்து வருகின்றன. அவைகளை அனுபவிப்பதற்காகவே அவைகள் இந்த உடலைத் தேடி மறுபிறவிகளை எடுக்கின்றன.
அப்படியானால் நம்மில் இருக்கும் இந்த ஆன்மாவும் அதுவாகவே தேர்ந்தெடுத்துக் கொண்ட உடல்தானோ இந்த உடலும்?
அப்படியானால், இப்போது நாம் வாழும் இந்த வாழ்வும் நமது முயற்சியால் ஏற்படவில்லையா? நமது ஆன்மாவின் வாழ்வுதானா? நான் வாழும் வாழ்வு அந்த ஆன்மா வாழும் வாழ்வுதானா?
அப்படியானால் இந்த நான், எனது என்பதே இந்த ஆன்மாதான் தன்னை அப்படி கூறிக் கொள்கிறதா?
அப்படியானால் ஆன்மா மட்டுமேதான் இந்த பிரபஞ்சத்தில் நிலையானதா? ஆன்மாவுக்கும் இறைநிலைக்கும் மட்டுமேதான் இந்த தொடர்பு உண்டா?
No comments:
Post a Comment