பாலன் இவனென பரிவெய்திடேல்:
திருஞான சம்மந்தர்
சிறு பிள்ளை. மதுரைக்கு வந்துள்ளார். பாண்டிய மன்னனின் வெப்புநோயைப் போக்குவதற்காக
வந்தவர்.
ஆனால் அப்போது மதுரையில்
சமண சமயம் தலைத்தோங்கி உள்ளது. மன்னர்கூட அந்த சமண மதத்தைச் சேர்ந்தவர்தான். சமணர்கள்
எவ்வளவோ போராடியும் பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் தீர்க்க முடியவில்லையாம். எனவே திருஞான
சம்மந்தர் வந்துள்ளார். இவர் சைவ சமயம் சார்ந்தவர்.
இதைக் கண்ட சமணர்கள்
கூட்டமாக வந்து மொய்த்துக் கொண்டனர். திருஞானசம்மந்தரோ சிறுபிள்ளை. சைவர். "எங்களாலேயே தீர்க்க முடியாத இந்த
நோயை ஒரு சிறுவன் எப்படி தீர்க்க முடியும்; முதலில் எங்களுடன் மதம்பற்றி வாதம் செய்யட்டும்; பின்னர், நோய் நீக்குவதைப் பற்றி யோசிப்போம்" என்று கூறித் தடுத்தனர்.
இதைக் கண்ட பாண்டிய
மன்னனின் மனைவி, "வாதமெல்லாம் வேண்டாம். பாவம்,
திருஞானசம்மந்தர் ஒரு சிறுவர். அதிலும் சைவரில் அவர் ஒருவரே இங்கு இருக்கிறார்.
அவருக்குத் துணைக்குக் கூட ஆளில்லை. முதலில் எனது கணவரின் நோயைத் தீர்க்கட்டும். பிறகு
சமய வாதங்களை வைத்துக் கொள்ளலாம்" என்று தடுத்து விட்டார்.
ஆனால், திருஞான சம்மந்தர் பாண்டியன் மனைவியைப் பார்த்து,
"பெருந்தேவியே! நான் பாலகன் என்று நீங்கள் வருந்தவேண்டாம். ஆலவாயன்
(ஈசன்) இங்கு இருக்கும்போது நான் இந்த ஈனர்களுக்கு பயப்படமாட்டேன்" என்று அவருக்கு ஆறுதலாகக் கூறி இந்தப் பாடலை பாடினார்.
"மானினேர்விழி
மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவ
னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே."
மானின் நேர்விழி
= மானைப் போல மிரட்சியான பார்வையைக் கொண்ட
வழுதிக்கு மாபெருந்தேவி
= பாண்டியனுக்கு பெருந்தேவியானவளே!
பால்நல்வாய் = பால்மணம்
மாறாத வாயையுடை இந்தப் பாலகன் மீது
நீ பரிவெய்திடேல்
= நீ பரிதாபப் பட வேண்டாம் தாயே!
ஆனைமாமலை அதியாய இடங்களில்
பல இன்னல்களைச் சேர்க்கும் இந்த ஈனர்களுக்கு நான் எளியவன் அல்லன்.
No comments:
Post a Comment