சித்தின்றிச் சடமில்லை, சடமின்றி
சித்துமில்லை
திருமூலர் செய்தருளிய நூல்
திருமந்திரம்.
இது, சரியை, கிரியை, யோகம், ஞானம்,
என்னும் நான்கு பாதங்களையும் எடுத்துக் கூறுவது.
வேத-ஆகமப் பொருளை ஆராய்ந்தவர்க்கே
இந்நூல் நன்கு புலப்படும். இது மூவாயிரம் மந்திரங்களையுடையது.
‘சித்தின்றிச் சடமும்,
சடமின்றிச் சித்தும் இல்லை’ என்பது இதன் சித்தாந்தம்.
திருமூலநாயனார்:
நந்திதேவர் மாணக்கராகிய “சிவயோகியார்”
என்பவர், அகத்தியரைக் காணும் பொருட்டுத் தெற்கு நோக்கிச் சென்றார்.
அவர் அவ்வாறு செல்லும் வழியிலே,
திருவாவடுதுறையில் ‘மூலன்’ என்னும் ஓர் இடையன் காட்டுவழியில் இறந்துகிடந்தான்.
அவன் இறந்ததை அறிந்த அவன் மேய்த்த பசுக்கள் கதறி அழுதன. அவ்வாறு அவைகள் கதறி அழுவதைக்
கண்டு பரிவுற்று, சிவயோகியார் அந்த இறந்த உடம்பில் பிரவேசித்து, அவனைப் போலவே
அவைகளை மேய்த்து ஆற்றிவிட்டு வந்தார்.
அவர் திரும்பி வந்து தனது
சரீரத்தைத் தேடியபோது, அவரின் சொந்த உடம்பைக் காணாததால், அந்த மூலன் உடம்பிலே இருந்துகொண்டே
மூவாயிரம் வருடம் யோகம் சாதித்த இவர், வருடத்திற்கு ஒரு மந்திரமாக மூவாயிரம்
மந்திரங்களை அருளிச் செய்தவர். அவற்றின் தொகுதியே ‘திருமந்திரம்’ எனப்படும்.
அண்ட-பிண்டங்களின் தத்துவ
சொரூபத்தை அநுபவ பிரத்தியக்ஷமாக உணர்ந்து உலகத்துக்கு வெளியிட்ட மகா ஞானிகளுள்ளே
இவர் தலைமை பெற்றவர். இவருடைய உபதேசமெல்லாம் பெரும்பாலும் ரூபகமும் (உருவகமும்)
பரிபாஷையுமாகவே இருக்கும். ‘சித்தின்றிச் சடமும், சடமின்றிச் சித்தும் இல்லை’
என்பது இவரின் சித்தாந்தம்.
'அணுவுளவனுமவனுளணுவுங் (அணுவுள் அவனும், அவனுள் அணுவும்)
கணுவற நின்ற கலப்பஃதுணரா
இணையிலியீச னவங்குமாகித்
தணிவற நின்ற சராசரந்தானே’.
சீவனுக்கு வடிவம் கூறிய
திருமந்திரம் இதோ;
‘மேவிய சீவன் வடிவது சொல்லிடிற் (சீவனின் வடிவு சொல்வதென்றால்)
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
(பசுவின் ஒரு முடியை நூறாக்கி)
மேவியகூறதுவாயிர மாயினா (அதை ஆயிரம் ஆக்கி, அதை)
லாவியின் கூறு நூறாயிரத் தொன்றே’ (நூறாயிரம் ஆக்கி கிடைப்பதில் ஒன்று).
பஞ்சேந்திரியங்களையும் அடக்குதல்
கூடாதென்பதும், அடக்குங்கால் அறிவில்லாத சடத்தின் கதியாம் என்பதும், அவை தாமே
அடங்கும் உபாயமறிவதே அறிவு என்பதும், அவர் கூறிய திருமந்திரம். அது இதோ:
‘அஞ்சுமடக்கடக்கென்பரறிவிலார்
ரஞ்சு மடக்கும்மரமிங்கில்லை
யஞ்சுமடக்கிலசேதனமாமென்றிட்
டஞ்சுமடக்காவறிவறிந்தேனே’.
இவர் கூறும் ஞானபூஜை வருமாறு:
‘உள்ளம் பெருங்கோயிலூனுடம்பாலயம்
வள்ளற்பிரானார்க்கு வாய்
கோபுரவாயில்
தெள்ளத்தெளிந்தார்க்குச் சீவன்
சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும்
காளாமணிவிளக்கே’.
No comments:
Post a Comment