Wednesday, January 22, 2014

பித்தா! பிறைசூடி பெருமானே.......

பித்தா! பிறைசூடி பெருமானே.......
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அவரின் திருமணத்தன்று சிவன் காட்சி அளிப்பதாக வாக்குக் கொடுத்தார். அவ்வாறு சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமண நாளன்று, சிவன் ஒரு வயதான பிராமணர் வேடத்தில் வந்து சேர்ந்தார்.

திருவெண்ணெய் நல்லூரில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் திருமணம் நடக்கிறது. அப்போது அந்த வயதான பிராமணர் அங்கு வந்து திருமணத்தை நிறுத்தும்படி கட்டளையிடுகிறார். ஏன் என்று கேட்டதற்கு, 'இந்த சுந்தரமூர்த்தி நாயனார் எனது அடிமை' என்று கூறுகிறார். எல்லோரும் திகைத்து நிற்க, வயதான பிராமணரோ 'இதோ பாரும், அவர் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தை' என்று ஓலையைக் காண்பிக்கிறார். ஆம், அதில் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது.

ஆனால் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 'பிராமணரே! நீர் யாரென்றே எனக்குத் தெரியாது; இதற்கு முன், உன்னை நான் எங்குமே பார்த்ததே இல்லையே, பின் எப்படி, நான் உமக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருக்க முடியும்?' என்று புலம்புகிறார். என்னைத் தெரியாதா? நீதான் என்னை வரச் சொன்னாய் என்று கூறினார்.

சரி அதைவிடு. “நீ என்னைப் புகழ்ந்து ஒரு தமிழ்ப் பாடல்பாடு, நான் உன்னை விடுதலை செய்கிறேன்” என்று வயதானவர் கேட்டார்.
“உம்மை யாரென்றே எனக்குத் தெரியாதே! பின் எப்படி, நான் உம்மைப் புகழ்ந்து பாடுவது?” என்று சுந்தரமூர்த்தி நாயனார் பெரியவரை பரிதாபமாப் பார்க்கிறார்.

“என்னைத் தெரியாதா உமக்கு?” 
“நீதான், ஏற்கனவே என்னைப் ‘பித்தன்’ என்று சொல்லித் திரிகிறாயே! அப்படியே, பித்தனென்றே பாடு” என்று சொல்லிவிட்டு, அந்த வயதான பிராமண வேடத்தில் இருந்த சிவன், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார்.
"சுந்தரா! இப்போது என்மீது ஒரு தமிழ்ப்பாட்டுப் பாடு" என்று கேட்கிறார்.

சுந்தரமூர்த்தி நாயனாரும் மகிழ்ந்து அது சிவன்தான் எனத் தெளிந்து, ‘பித்தா பிறைசூடி பெருமானே . .. ..  என்ற திருப்பதிகத்தை பாடினார்.

(இதுதான் சுந்தரமூர்த்தி நாயனார் முதன்முதலில் பாடிய தேவாரம்)

"பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருடுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.

(பித்தா பிறைசூடிய பெருமானே, அருளாளா, எத்தான்=எந்தவகையிலும் மறவாமல் நினைக்கிறேன் மனத்தில் உன்னை வைத்தேன். பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரில் உறையும் அத்தா (தந்தையே) உனக்கு ஆளாய் அல்லேன் (அடிமை இல்லை என) இனி நான் கூறமுடியுமோ?)


1 comment:

  1. பிறை என்றால் என்ன ஐயா

    ReplyDelete