Sunday, October 9, 2016

“I am not a baby killer”

“I am not a baby killer”--  mother cries.

அமெரிக்காவில், ஆறு வயது சிறுவன், தாயின் கொடுமையால் இறந்து விட்டதாக அல்லது கொலை செய்யப்பட்டதாக அந்த தாயை சட்டம் சிறையில் தள்ளுகிறது;

இந்த நிகழ்வு பெண்களின் வாழ்க்கைச் சோகத்தை விவரிப்பதால், இங்கு எழுத வேண்டிய முக்கியத்துவம் பெறுகிறது;

அவளின் 20 வயதில் அவளுக்குத் திருமணம் ஆகிறது; அவள் பெயர் பெர்கின்ஸ்; ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறாள்; என்ன பிரச்சனையோ தெரியவில்லை, அவசரப்பட்டு அந்தக் கணவனை விட்டு விலகி விடுகிறாள்; அவளும், மகனுமாக தனியே வசிக்கிறார்கள்; இந்த உலகில் பெண்கள் தனியே வசிப்பது என்பது கொஞ்சம் கடினமாக விஷயம்தான்; அதாவது தனது சொந்த பந்தங்கள் இல்லாமல், ஆதரவு இல்லாமல் தனியே வசிப்பது சிரமம்;

எப்படியோ, ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன; அங்கு ஒரு "வீடு-இல்லாதவர் வசிக்கும் அரசு இல்லத்துக்குச்" செல்கிறாள்; அங்கு ஒரு வாலிபனைப் பார்க்கிறாள்; அவன் பெயர் ஸ்மித்; ஏதோ ஒரு ஈர்ப்பு; என்றாலும் அவனிடம் உறுதி கேட்கிறாள்; என்னையும் என் மகனையும் நன்றாகப் பாத்துக் கொள்வாய் என்ற உறுதி தெரிந்தால்தான் நான் உன்னுடன் வாழ்வேன் என்கிறாள்; அவன் சத்தியம் செய்கிறான்; “பொய் உலகில், சத்தியங்கள் பொய்யாகிவிடும்!”

அவளும் மகனும் அவனுடன் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள்; அவனை முன்னே பின்னே தெரியாது; அவன் குணம் தெரியாது; குலம் தெரியாது; வாழ்க்கை முறை தெரியாது; ஆண் என்ற ஒரு அடையாளத்தைத் தவிர!

ஒருநாள் இவளின் அன்பு மகன் இறக்கிறான் அல்லது கொலை செய்யப் படுகிறான்; இவளை போலீஸ் அள்ளிக் கொண்டு போகிறது; விசாரனை, விசாரனை; தானே தன் மகனை விளக்குமாற்றால் (துடைப்பத்தால்) அடித்ததாகவும் அதில் அவன் இறந்து விட்டான் என்றும் வாக்குமூலம் கொடுக்கிறாள்; இப்போது சிறையில் வாழ்க்கை!

உண்மை வேறுவிதமாக இருக்கிறது; கொடுமைக்கார காதலனிடமிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் இருந்திருக்கிறாள்; இப்போது கதறுகிறாள், “என் அன்பு மகனை நான் கொலை செய்யவில்லை” I am not a baby killer: “ஒருவேளை, நான் ஏற்கனவே என் காதலனிடமிருந்து தப்பிச் சென்றிருந்தால், என் குழந்தை இன்று உயிரோடு இருந்திருப்பான்என்று கதறல்!

என் காதலன் கெட்டவன் என்று முன்னரே தெரிந்தும் அவனுடன் தொடர்ந்து வசித்து வந்தது என் தவறுதான்! அப்போதே அவனை விட்டு வெளியேறி வந்திருந்தால், என் மகனை நான் இழந்திருக்க மாட்டேன் என்கிறாள்;

“இந்த ஒரு வருடமாக என் காதலனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தபோதே தெரிந்து கொண்டேன் அவன் நல்லவன் இல்லை என்று; எனக்கு அவனிடமிருந்து தப்பிச் செல்ல வழி தெரியவில்லை; வேறு வழியின்றி அவனுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்; ஒரு நாள் என் மகனை, என் காதலன் அடித்து பாத்ரூமில் உள்ள கதவில் தலைகீழாக தொங்க விட்டிருந்தான்; என் உயிரே போய் விட்டது; அவனை திட்டி, என் மகனை இறக்கி விடும்படி கெஞ்சினேன்: அவன் என்னை மிரட்டினான்; பேசாமல் போய் சோபாவில் உட்கார்ந்து டிவியைப் பார்; அல்லது பைபிளைப் படி; உன் மகன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு பக்கெட்டில் கக்கூஸ் போய் இருக்கிறான்; அவனுக்கு எவ்வளவு கொழுப்பு? என்று உறுமுகிறான்; பெத்த மனம் கேட்கவில்லை; ஒருவாறு கெஞ்சி, தொங்க விடப் பட்டிருந்த என் ஆறு வயது மகனை இறக்கி, என்னுடன் கட்டிலில் படுக்க வைத்திருந்தேன்; மயங்கித் தூங்குகிறான் என்றுதான் நினைத்திருந்தேன்; கொஞ்ச நேரத்துக்குப் பின்னரே தெரிந்தது அவன் மூச்சு நின்றுவிட்டது என்பது; தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்; காப்பாற்ற முடியவில்லை;

என் மகனை இழந்து விட்டேன்; என்னைக் காப்பாற்றிக் கொள்ள, நானே கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு சிறையில் இருக்கிறேன்; ஆனாலும் போலீஸ் என் வாக்குமூலத்தை நம்பவில்லை; என் மகன் நோஞ்சானைப் போல இருப்பான்; அவனின் தகப்பனும் அப்படித்தான் இருந்தான்; நான் ஏதோ என் குழந்தையை சரியாக சாப்பாடு போட்டு கவனிக்கவில்லை என்றும் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் காண்பிக்கவில்லை என்றும், அப்படி ஒரு வசதி இருந்தபோதும் அதை நான் உபயோகிக்காதது என் தவறு என்றும், என் அஜாக்கிரதையால் குழந்தை உடல்நலம் இல்லாமல் இருந்து வந்திருக்கிறது என்றும், சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது; மேலும் விசாரனையில் என் கம்யூட்டரை ஆராய்ந்து பார்த்தது; அதில் நான் ஏதோ போதை மருந்து உபயோகிப்பதாகவும் சந்தேகித்தது; என்ன சொல்வேன்? எல்லாக் கேள்விகளுக்கும் மௌனமே என்னிடமிருந்த பதில்கள்!
வீணாகப் போய்விட்டேன்; ஒரு "வீணாப் போனவனைத்" தேடி நானே என் தலையில் மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டேன்; இப்போது சிறையில்!

என் பிரச்சனையை அதில் உள்ள நியாயத்தை நீங்கள் என் நாற்காலியில் உட்கார்ந்து பார்த்தால் மட்டுமே, என் மீதுள்ள நியாயம் உங்களுக்கு விளங்கும்” என்று கதறுகிறாள்;
“Until you walk a mile in my shoes, you have no right to judge me.”

(எல்லோருக்கும் ஒரு நியாயம் கண்டிப்பாக இருக்கும்; ஆனால்  ஆரம்பத்தில் நீ முடிவெடுத்த தவறான செயலே மற்ற பின்விளைவுகளுக்கு அடிப்படைக் காரணம் என்பது உனக்கு புரியாதுதானே!)
**

No comments:

Post a Comment