Sunday, October 2, 2016

நட்ஷெல்

அபிமன்யூ
மகாபாரதக் கதைகளில் “அபிமன்யூ கதை” மிகவும் உருக்கமானது என்று சொல்வார்கள்!

அபிமன்யூ என்பவன் அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்தவன்; சுபத்திரை என்பவள் கிருஷ்ணனின் தங்கை;

சுபத்திரை கர்ப்பமாக இருக்கிறாள்; வயிற்றில் அபிமன்யூ கருவில் இருக்கிறான்; கிருஷ்ணன் ஒருநாள் இரவு சுபத்திரைக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்; சுபத்திரை, கிருஷ்ணன் சொல்லும் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்;

கிருஷ்ணன், “சக்கரவியூகம்” என்னும் போர் முறையைப் பற்றிச் சுபத்திரையிடம் கதையாகச் சொல்கிறான்; மிகத் தந்திரமான போர்முறை இது; எதிரிகளின் படைக்குள் உள்ளே நுழைந்து சென்று, போரிட்டு, அதே முறையில் மீண்டு வெளியில் வருவது; எதிரியின் சக்கர வியூகத்துக்குள் போகவும் முடியாது; போனால் திரும்ப வரவும் முடியாது; அப்படியொரு சிக்கலான போர் முறைத் தந்திரமே இந்த சக்கரவியூகம்!

கிருஷ்ணன் இந்தக் கதையை சுபத்திரைக்குச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சுபத்திரையின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் அபிமன்யூ காது கொடுத்துக் கேட்கிறான்! தாய் விழிப்புடன் இருக்கும்போது கருவில் இருக்கும் குழந்தையும் விழிப்புடன் இருக்குமாம்! விஞ்ஞான உண்மைதான்!

கிருஷ்ணன், சக்கரவியூகத்தை உடைக்கும் முறையைச் சொல்லி விட்டான்; சுபத்திரை கேட்டுக் கொண்டாள்; சுபத்திரை வயிற்றில் உள்ள கருவான அபிமன்யூவும் இதைத் தெள்ளத் தெளிவாகக் கேட்டுக் கொண்டான்;

சுபத்திரைக்கு தூக்கம் வந்துவிட்டது; மெதுவாக தூங்க ஆரம்பிக்கிறாள்; கிருஷ்ணன், சக்கர வியூகத்திலிருந்து வெளியேறும் தந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கிறான்; சுபத்திரை  ஆழ்ந்த தூக்கத்திற்குள் சென்று விட்டாள்; கருவில் இருக்கும் அபிமன்யூவுக்கு கிருஷ்ணன் சொல்லும் எதுவும் கேட்கவில்லை; சக்கர வியூகத்திலிருந்து வெளியேறும் தந்திரம் அபிமன்யூவுக்கு தெரியாமலேயே போய் விடுகிறது; தாய் தூங்காமல் இருந்திருந்தால் வெளியேறும் தந்திரமும் கற்றுக் கொண்டிருப்பான்! விதி! விளையாடி விட்டது!

அபிமன்யூ வாலிபன் ஆகி விட்டான்! மகா பாரதப் போர் நடக்கிறது; துரியோதன் படைகள் சக்கர வியூகம் அமைத்து சண்டையிடுகிறது; அன்று அபிமன்யூ போருக்கு போகிறான்; இவனுக்கு சக்கர வியூகத்தை உடைத்து அந்தப் படைகளை சிதறடித்து உள்ளே நுழையும் தந்திரம் தெரியும்; நுழைந்தே விட்டான்; உள்ளே நுழையத்தானே சிரமம்! நுழைந்து விட்டால், தன் தந்தையர்கள் இருக்கிறார்கள் எதிரி படைகளை உடைத்து சின்னா பின்னப்படுத்த என்ற தைரியம் அபிமன்யூவுக்கு!

துணிச்சலாக உள்ளே நுழைந்து எதிரிகளை சிதறடித்தான்; வெளியேறும் வகை தெரியவில்லை! சிக்கிக் கொண்டான்! விதியின் விளையாட்டு! அபிமன்யூ கொல்லப்படுகிறான்! அர்ச்சுனனின் மகன் கொல்லப் படுகிறான்! சுபத்திரையின் மகன் கொல்லப் படுகிறான்!

இந்த உலகில் எந்தக் குழந்தையும் ஒரு விபரமும் இல்லாமல் பிறப்பதில்லை! அவை கருவுக்கு வரும்போதே விஷய-ஞானத்துடனேயே வருகிறது என்கிறது விஞ்ஞானமும் மெய்ஞானமும்! கருவில், தாயின் வயிற்றில் அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கிறதாம்!

ஜெர்மன் நாட்டு தத்துவ மேதை சொல்கிறார், “ஒரு பசுமாடு கன்றுக் குட்டியை ஈனும் போது, (பெற்றெடுக்கும்போது), அது தன் குட்டியை நாக்கால் நக்க மட்டுமே செய்கிறது; ஆனால் கன்றுக் குட்டி, தன் தாயில் மடுவில் பால் கிடைக்கிறது என்ற அறிவுடன், தன் தாயின் பின்னங்கால்களுக்கு நடுவில் உள்ள மடுவை முட்டி முட்டி பால் குடிக்கிறது; இந்த அறிவை அந்த கன்றுக் குட்டிக்கு யார் சொல்லிக் கொடுத்தது என்ற கேள்வியுடன் இந்தப் பிரச்சனையை அணுகிறார்; எல்லா உயிர்களும் (ஆன்மாக்களும்) இயல்பிலேயே அடிப்படை அறிவைக் கொண்டே இங்கு பிறக்கின்றன! அந்த அறிவைக் கொண்டே வளர்கின்றன! பிறந்தபின்னர், இந்த உலகில், மேலும் அறிவை பெற்று ஆன்மாவை பலப்படுத்துகின்றன என்று கருதுவதற்கு சாத்தியம் உள்ளது என்கிறார்;

அப்படியென்றால், கருவில் உள்ள குழந்தை அறிவுடன், கான்சியஸ் என்னும் தன்நிலை உணர்வுடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லைதான்!

இப்படியான ஒரு கருத்தைக் கொண்டு, Ian McEwan ஐயன் மெக்கேவன் ஒரு புதிய நாவலை உருவாக்கி உள்ளார்; கருவில் உள்ள குழந்தை வெளியில் நடப்பதை கவனிப்பதும், உணர்வதும், கேட்பதும் செய்யும் என்று சொல்கிறார்;  இது கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் கதையைப் போலவே பின்னப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்;

அந்தக் கதைக்குப் பெயர் -Nutshell (நட்ஷெல்); ஒரு 28 வயது அழகான பெண் திருமணம் செய்து கொள்கிறாள்; கணவருடன் இருக்கும்போதே, கணவனின் தம்பியிடம் தகாத உறவு வைத்துக் கொள்கிறாள்; அவள் கணவன் மூலம் கர்ப்பமாகி இருக்கிறாள்; அவள் வயிற்றில் ஒரு குழந்தை கருவாக உருவாகி வளர்கிறது; அது வெளி உலகில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கேட்டுக் கொண்டும், உணர்ந்து கொண்டும் வளர்கிறது; தன் தாயின் நடவடிக்கைகளை அது உணர்ந்து கொள்கிறது, கவனித்து வருகிறது; தன் கணவரின் வீடான ஒரு பெரிய பங்களாவில் வசிக்கிறாள் அவள்; ஆனால், கணவனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறாள்; அவள் கணவன் ஒரு பாழடைந்த வீட்டுக்கு வாடைக்குப் போய் அங்கு தங்கி இருக்கிறான்;

இந்த கருவில் வளரும் குழந்தை இந்த விபரங்களை எல்லாம் கேட்டுக் கொண்டும் உணர்ந்து கொண்டும் தாயின் வயிற்றுக்குள் இருக்கிறது; அவளும், தன் காதலனும், தன் கணவனைக் கொல்ல சதி செய்கிறார்கள்; அதையும் அந்த கருவில் வளரும் குழந்தை கேட்டுக் கொண்டே இருக்கிறது; அந்த கருக்குழந்தை நினைக்கிறது, “எது சொன்னாலும், எந்த திட்டம் தீட்டினாலும், எல்லாம் இந்தக் காற்றில் சுற்றிக் கொண்டேதான் இருக்கும்; சீனாவின் பீஜின் நகரத்தின் மேலே சுற்றிக் கொண்டிருக்கும் அடர்ந்த புகையைப் போல!” என்று நினைக்கிறது அந்தக் குழந்தை;

**

No comments:

Post a Comment