Saturday, October 1, 2016

டொனால்டு டிரம்பும், ஹிலாரி கிளின்டனும்

டொனால்டு டிரம்புக்கும், ஹிலாரி கிளின்டனுக்கும் போட்டி; யார் அமெரிக்காவின் அதிபராக வரவேண்டும் என்பதில் இந்தப் போட்டி; அங்குள்ள ஒரு வழக்கப்படி, இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து வாதம் செய்து கொள்வார்கள்; இப்படிப்பட்ட வாத-பிரதிவாதம் மூன்று நாட்களுக்கு முன் இருவருக்கும் நடந்தது; அதை நாடே பார்த்துக் கொண்டிருந்தது; சுமார் 100 மில்லியன் மக்கள் பார்த்தார்களாம்;
நாட்டின் பொதுவான பிரச்சனைகளை இருவரும் அலசிப் பேச வேண்டும்; அதில் யார் பேச்சு சிறந்தது என்று மக்கள் தீர்மானித்து அவர்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்; இதுதான் அதன் நடைமுறை;
ஆனால், டிரம்பும், கிளின்டனும், பொதுப் பிரச்சனையைக் காட்டிலும், அவர்கள் இருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை ஆவேசத்துடன் பேசிக் கொண்டனர்; இது ஒட்டுமொத்த மக்களையும் முகம்சுளிக்க வைக்கும் செயல்;
டிரம்ப் அவரின் வருமான வரி செலுத்திய விபரத்தை வெளியிடவில்லை என்று கிளின்டன் குற்றம் சாட்டுகிறார்; வருமானவரி தணிக்கையில் உள்ளபோது அதை வெளியிட முடியாது என டிரம்ப் சொல்கிறார்; அதில் ஏதோ சூட்சமம் இருக்கும்போல! அதனால்தான் கிளின்டன் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்;
அதேபோல, கிளின்டன் உடல் நிலையையும், பென்காசி மெயில் பிரச்சனையையும் டிரம்ப் அள்ளி வீசினார்;
இருவருமே ஏதோ தவறு செய்துள்ளதைப் போலவே நடந்து கொண்டுள்ளனர்; இந்த தவறுகளில் எது குறைவானது, எது பெரியது என தீர்மானிக்கும்படி மக்கள் உள்ளனர்; ஆக, சரியான ஆளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம் இல்லாமலேயே போய்விடுகிறது; ஜனநாயகத்தின் சிறப்பு இதுதான் போலும்! கட்சிகள் நல்லவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவரை, பிரபல்யமானவரை நிறுத்தி ஓட்டைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவரை, ஜனநாயகம் ஒரு கேளிக்கூத்தே!
**


1 comment:

  1. ஆக, சரியான ஆளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடம் இல்லாமலேயே போய்விடுகிறது; ஜனநாயகத்தின் சிறப்பு இதுதான் போலும்!
    உண்மைதான் ஐயா

    ReplyDelete