Thursday, October 6, 2016

1-வது திருவிளையாடல்

1-வது திருவிளையாடல்:
துவஷ்டாவின் மகனை இந்திரன் கொன்று விடுகிறான்; எனவே துவஷ்டா, இந்திரனைப் பழிவாங்க நினைத்து, ஒரு யாகம் வளர்க்கிறார்; அந்த யாகத்தில் விருத்திகாசுரன் என்னும் ஒரு அசுரனை வரவழைக்கிறார்; இந்திரனைக் கொல்லும்படி அந்த அசுரனிடம் துவஷ்டா கேட்கிறார்; மகனைக் கொன்ற இந்திரனை பழிவாங்க வேண்டுமாம்!
இந்திரனுக்கும் விருத்திகாசுரனுக்கும் பெரிய சண்டை நடக்கிறது; அதில் அந்த விருத்திகாசுரனை, இந்திரன் கொன்று விடுகிறான். தேவர்கள், யாரையாவது கொன்று விட்டால், அவர்களுக்கு “பிரம்மஹத்தி தோஷம்” எற்பட்டுவிடும்; எனவே, அரசுனைக் கொன்ற இந்திரனுக்கும் இந்த “பிரம்மஹத்தி தோஷம்” பிடித்துக் கொண்டது; இந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டுமாம்; சிவனை வழிபட்டால் அந்த தோஷம் போய்விடுமாம்!
ஆனால், இந்திரனுக்கு இந்தப் பாவம் வந்ததால் அவன் ஒளி இழந்து தெளிவின்றி இருக்கிறான்; எனவே அவ்வாறு தெளிவில்லாமல், சிவனைத் தேடி அலைந்து திரிந்தபோது, வழிதவறி கடம்பவனம் என்னும் பகுதியை அடைகிறான். (இந்தக் கடம்பவனம் தான், பழைய மதுரை என்று பெயர்); அங்கு சிவனை கண்டு அவரிடம் தனக்கு அருள் புரியுமாறு வேண்டுகிறான் இந்திரன்;
சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக பூக்களைத் தேடுகிறான் இந்திரன்; ஒரு பூச்செடியைக்கூட அங்கு பார்க்க முடியவில்லை; எல்லாமே கடம்ப-மரங்களாகவே உள்ளன; சிவனை வணங்க பூக்கள் கிடைக்கவில்லையே என்று வருந்துகிறான்;
ஆனால், ஆச்சரியமாக, அங்குள்ள ஒரு குளத்தில் மட்டும் பொன்னால் செய்யப்பட்ட தாமரை மலர்கள் (பொற்றாமரை) பூத்திருக்கின்றன. அதைக் கொண்டு இந்திரன், சிவனுக்கு பூஜை செய்து மகிழ்கிறான்; அவனின் பிரம்மஹத்தி தோஷம் விலகி விடுகிறது; அந்த பொன்னால் ஆன தாமரை மலர்களை, சிவனே அங்கு அப்போது தோற்றுவித்து, இந்திரனின் கவலை போக்கி இருக்கிறார்;
இப்படி, அந்த பொற்றாமரை மலர்களை சிவனே தோற்றுவித்து, இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவன் தனது முதல் திருவிளையாடலை நடத்தி இருக்கிறார்;
(இந்திரனுக்கும் விருத்திகாசுரனுக்கும் நடந்த சண்டையின் விபரம்):-
இந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் பெரும் சண்டை நடக்கிறது; இருவரும் மற்போர் புரிகிறார்கள். இந்திரன் தோற்று விட்டான்; எனவே இந்திரன் தப்பித்து ஓடி, விஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்து விட்டான்; அவரிடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டுகிறான். ஆனால், விஷ்ணுவோ, “இந்திரா! நீ, கடலில் தவம் செய்யும் ஒரு முனிவரை போய்ப் பார்த்து அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்; உன் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற அவரால்தான் முடியும்” என்று கூறுகிறார்.
உடனே, கடலுக்கு அடியில் தவம் செய்யும் அந்த முனிவரைச் சென்று இந்திரன் சந்திக்கிறான்; தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறான் இந்திரன்;
முனிவரோ-- "இந்திரா! இந்த உடம்பைக் காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய்? எதற்காக இப்படி பயந்து சாகிறாய்? இந்த உடம்பில் இருந்து உயிர் பிரிந்து போன பின்னர், இந்த உடலை யாரும் தேடமாட்டார்கள்;”
“இந்த உடல் வீட்டில் கிடந்தால் உன்னைப் பெற்றவர்கள் (தாய், தகப்பன்) இந்த உடல் தங்களுக்குத்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவர்; இந்த உடல் காட்டில் கிடந்தால், நாய், நரிகள் தங்களுக்குத்தான் சொந்தம் என சொந்தம் கொண்டாடும்; இந்த உடல், பிணியால் கிடந்தால் (நோய்வாய்ப்பட்டு கிடந்தால்) யமனும், பேயும் தங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவர்;
இப்படிப்பட்ட இந்த உடம்பை, நீ உனக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி அதைக் காப்பாற்ற என்னிடம் வருகிறாயே? உண்மையில் இந்த உடம்பு யாருக்குச் சொந்தம்? சொல் பார்க்கலாம்? என்று கேள்வியை எழுப்புகிறார்.
உண்மையில் இந்த உடம்பானது, துன்பப்படுபவர்களுக்கு உதவுவதற்காக இறைவன் படைத்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்!
எனவே என்னிடம் உள்ள இந்த என் உடம்பும் எதற்கும் பிரயோசனப்படாது; எனவே என் உடம்பை எடுத்துக் கொள்; அதிலுள்ள எலும்புகளைக் கொண்டு சண்டையிட்டு உன் எதிரி விருத்திராசுரனைக் கொன்றுவிடு” என்று முனிவர் இந்திரனிடம் கூறுகிறார்;
அவ்வாறே இந்திரனும் அந்த முனிவரைக் கொன்று, அவரின் உடம்பில் உள்ள எலும்புகளை வைத்துக் கொண்டு, எதிரியான விருத்திகாசுரனை கொன்று அழிக்கிறான். அதனால்தான் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. அதற்குப் பரிகாரம் தேடிய போதுதான் சிவன் பொற்றாமரை மலர்களை உருவாக்கி, அதைக் கொண்டே, இந்திரன், சிவனை அர்ச்சனை செய்து, வழிபட்டு, அவனின் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்கிறான்;
(மதுரையில் சிவன் செய்த விளையாட்டுக்கள் “திருவிளையாடல்” எனப்படும்.)
**

No comments:

Post a Comment