பழைய காலத்தில், சில நிலங்கள் அரசிடம் (முன்னர் மன்னரிடமும், பின்னர் பிரிட்டீஸ் அரசிடமும்) இருந்தது. இதை அரசின் நிலம் அல்லது அயன் நிலம் என்பர். அயன் என்றால் பிரம்மா என்று பொருள். அதாவது அதை முதலில் உருவாக்கியவன் என்ற பொருளில் இருக்கலாம். எனவே அயன் நிலம் என்பது அரசு தன் வசம் உரிமையை வைத்துக் கொண்டு, குடியானவருக்கு பயிர் செய்ய கொடுத்த நிலம் என்று புரிந்து கொள்ளலாம். அந்த நிலங்களையும் குடியானவருக்கு ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டதால், அந்த நிலங்களை அடையாளம் காணும் விதமாக அயன் நஞ்சை, அயன் புஞ்சை என்று சொல்வர்.
இனாம் நஞ்சை, இனாம் புஞ்சை:
சில நிலங்களை, மன்னர்கள், அல்லது ஆட்சியாளர்கள், இனாமாக தனி நபருக்கும், கோயில்களுக்கும் கொடுத்து விட்டனர். இதை இனாம் எஸ்டேட் என்பர். இனாம் எஸ்டேட் ஒழிப்பு மூலம், அந்த நிலங்களை குடியானவருக்கே ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டனர். இந்த வகை நிலங்களை இனாம் நஞ்சை, இனாம் புஞ்சை என்று சொல்வர்.
ஜமீன் நஞ்சை, ஜமீன் புஞ்சை:
சில நிலங்களை, மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள், நேரடி வசூல் செய்ய முடியாத நிலையில், ஜமின்தார்களின் பொறுப்பில் கொடுத்து விட்டனர். அவர்கள் மகசூல் வசூல் செய்து அரசுக்கு கொடுப்பார்கள். அதை ஜமீன் எஸ்டேட் என்பர். இந்த ஜமீன் முறையையும் ஒழித்து, குடியானவருக்கே ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டது அரசு. இந்த வகை நிலங்களை இன்றும் ஜமீன் நஞ்சை, ஜமீன் புஞ்சை என்று சொல்வர்.
No comments:
Post a Comment