Thursday, September 9, 2021

விருத்திரா அசுரன் - சிவனின் முதல் திருவிளையாடல்

 விருத்திரா அசுரன்


விருத்திர அசுரன் - விருத்திரன் என்றால் போர்வை போல மூடிக்கொண்டிருப்பவன் என்று பொருளாம். இந்த விருத்திரனுக்கும், இந்திரனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். இந்திரன் நீரைக் கொடுப்பவன். விருத்திரன் அந்த நீரைக் குடித்து விடுபவன் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளதாம். இந்திரன் வானில் இருந்து நீரை மழையாகக் கொடுப்பான். விருத்திரன் பூமியில் ஏரிமலைக் குழம்புகளாக இருந்து, அந்த நீரைக் குடித்து விடுவான். 


த்ரிசிரஸ் -  துவஷ்டா என்பவரின் மூத்த மகன் பெயர் த்ரிசிரஸ். த்ரிசிரஸ் என்றால் மூன்று தலை உடையவன் என்ற பொருள். துவஷ்டா, இந்த த்ரிசிரஸ் என்ற மூத்த மகனை, இந்திரனைக் கொல்வதற்காகவே படைத்திருக்கிறார். ஆனால் அவனை இந்திரன் கொன்று விடுகிறான். 


விருத்திரன் என்னும் விருத்திர அசுரன் -  அதற்கு பழி வாங்குவதற்காக, துவஷ்டா, தனது இரண்டாவது மகனை யாகத்தின் மூலம் படைக்கிறார். அவன் பெயர் விருத்திரன் என்னும் விருத்திர அசுரன். விருத்திரன் என்றால், பூமியை மூடிக் கொண்ருப்பன் என்று பொருளாம். வானத்தில் இருத்து அனுப்பும் எல்லா நீரையும் உறிஞ்சிக் குடித்து விடும் இயல்புடைய பூமி நிலப்பரப்பைக் கொண்டவன். இதை எரிமலை குழம்பு என்றும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 


துவஷ்டா - துவஷ்டா என்பது வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வம். சித்திரை நட்சத்திரத்துக்கு அதிபதி இந்த துவஷ்டா என்று ஜோதிடம் சொல்கிறது. ஜோதிடத்தில் இந்த சித்திரை நட்சத்திரம் இருக்கும் கன்னி ராசி என்று சொல்லும் ராசி மண்டலத்துக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. நாம் பார்க்கும் இந்த சூரிய மண்டலம் இந்த கன்னி ராசி மண்டலத்தில் இருந்து தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அதாவது, இந்த பூமியானது சூரியனைச் சுற்றி வருவதால், இந்த பூமி, சூரியனில் இருந்து பிரிந்து வந்த பகுதி என்பர் ஆராய்ச்சியாளர்கள். அதன்படி பார்த்தால், இந்த சூரிய மண்டலம் கன்னி ராசி மண்டலத்தைச் சுற்றி வருவதால், அது கன்னி ராசி மண்டலத்தில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்பது ஆராய்சியாளர்கள் முடிவு. இந்த கன்னி ராசி மண்டலமானது விர்கோ கிளஸ்டர் (Virgo Cluster) என்ற பகுதியில் அண்டவெளியில் உள்ளது. அது உர்ஸா மேஜர் (Ursa Major) என்ற அண்டவெளியில் உள்ளது. 


சித்திரை நட்சத்திரம் - ஆக, சித்திரை நட்சத்திரத்துக்கு அதிபதி இந்த துவஷ்டா என்றால், இந்த பூமியில் உள்ள நாமும் அதன் பொருள்களும், சித்திரை நட்சத்திரப் பகுதியில் ஒரு பகுதி என்று கொள்ள வேண்டும். இப்படிச் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து இந்த சூரிய மண்டலமும் அதில் உள்ள இந்த பூமியும் தோன்றியதால், நாம் சித்திரையை முதல் மாதமாக கொள்கிறோம். துவஷ்டாவின் எதிரியான இந்திரன் இந்த பூமியை அழிக்காமல் இருக்க அவனுக்கு (இந்திரனுக்கு) இந்திர விழா எடுக்கிறோம் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவது குறிப்படத்தக்கது. 


துவஷ்டாவின் இரண்டு மகன்கள் - இந்த துவஷ்டாவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் த்ரிசிரஸ். இவனை இந்திரன் கொன்று விட்டான். இளைய மகன் விருத்திர அசுரன். தந்தை துவஷ்டா, தன் மூத்த மகனைக் கொன்ற இந்திரனைப் பழி வாங்கவே, இந்த இரண்டாவது மகனான விருத்திர அசுரனைப் படைக்கிறார். இவன் பூமியில் இருக்கிறான். (இவனை எரிமலை என்று உருவகம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்). 


உயிர்களின் படைப்பு - இந்திரன் பெரும் மழையைப் பொழிவித்து, வெள்ளத்தால் பூமியை மூடி, இந்த விருத்திர அசுரனையும் கொன்று விடுகிறான். அதனால், உலகத்து உயிர்கள் எல்லாம் மடிந்து விட்டன. எனவே இந்திரன், படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு பயந்து, வெள்ள நீரில் உள்ள தாமரையில் ஒளிந்து கொள்கிறான். இந்த தாமரையில் லட்சுமி இருக்கிறாள் என்பர். இந்த லட்சுமி, சுக்கிரன் என்ற கிரகத்துக்கு அதிதேவதை. இந்த சுக்கிரன் புலன் நுகர்ச்சிகளுக்கு உரியவன். சுக்கிரன் கிரகத்தின் கடவுளான லட்சுமியின் அருள் இருந்தால், இந்திரிய (ஐம்புலன் நுகர்ச்சிக்கான) சுகங்கள் எல்லாம் கிடைக்கும் என்கிறது ஜோதிடம். எனவே இந்திரன் ஒளிந்து கொண்ட தாமரையில், பிரம்மா வந்து, மீண்டும் உயிர்களைப் படைக்கிறார் என்று ஒரு வகையில் பொருத்தமாக இந்த விளக்கத்தை ஆராய்ச்சியார்கள் கூறுகிறார்கள். 


சிவனின் முதல் திருவிளையாடல் - துவஷ்டா, தன் மூத்தமகன் த்ரிசிரஸ் என்பவனை கொன்ற இந்திரனைப் பழிவாங்கும் பொருட்டு, தனது இளைய மகனான விருத்திர அசுரனைப் படைக்கிறார். அவனையும் இந்திரன் கொன்று விடுகிறான். அவன் பிரம்மனின் கோபத்துக்கு ஆளாகிறார். அதாவது இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம். துஷ்டா பிராமணனாக இருக்க வேண்டும். அப்படி இந்திரன் ஒளிந்து அலைந்து திரிந்த போது, மதுரை என்னும் கடம்பவனத்துக்கு வருகிறான். இங்கு அவனுக்கு சிவன் அருள் புரிகிறார். எனவே சிவனை வணங்குவதற்காக, அவன் பூக்களைத் தேடித் திரிந்த போது, சிவனே அவனுக்கு ஒரு பொற்றாமரை குளத்தை உருவாக்கி அங்கு தாமரை மலர்களைக் கொடுக்கிறார். இதுவே சிவனின் முதல் திருவிளையாடல் என்பர்.


விருத்திர அசுரன் & இந்திரன் போர் - இந்திரனுக்கும், துவஷ்டாவின் இளைய மகன் விருத்திர அசுரனுக்கும் போர் நடக்கிறது. இந்திரனால், விருத்தி அசுரனை வெல்ல முடியவில்லை. இந்திரன் தோற்று, விஷ்ணுவிடம் வந்து சரண்டைகிறான். விஷ்ணு, "பாற்கடலில் அடியில் உள்ள முனிவரின் முதுகு எலும்பை வைத்து, சண்டையிட்டால், விருத்திர அசரனைத் தோற்கடிக்கலாம்" என்று ஒரு வழியைச் சொல்கிறார். 


இந்திரனும், அவ்வாறு அந்த முனிவரை அணுகி அவரின் முதுகு எலும்பை கேட்கிறான். அவரும் அதற்கு உடன்பட்டு இறப்பதற்கு சம்மதிக்கிறார். அப்போது, இந்த உடல் நமக்கு எப்போதும் பயன்படாது என்ற கருத்தில் ஒரு பாடலாகச் சொல்லப்படுகிறது. நாம் இறந்து விட்டால், இந்த உடலை, நாயும், நரியும், தனக்குச் சொந்தம் எனச் சொல்வர். பெற்றவர்களான தந்தையும், தாயும், இந்த உடல் தனக்குச் சொந்தம் எனச் சொல்வர். எமனும், பேயும் தனக்குச் சொந்தம் எனச் சொல்லும்.  இப்படி மனம் போனவர்கள் எல்லாம் இந்த உடலைச் சொந்தம் கொண்டாடுகிறார்களே, உண்மையில் இந்த உடல் யாருக்குச் சொந்தம்? என்று கேட்கிறார். எனவே, இந்த உடலில் நன்றாக வாழும்போது, யாருக்காவது உபயோகமாக இருந்துவிட்டுப் போகிறேன் என்று கூறி, இந்திரனுக்காக இறக்கத் துணிகிறார். 


"நாய் நமதென, நரி நமதென, பிதா-தாய் நமதென, நமன் நமதென, பிணி-பேய் நமதென, மனமதிக்கும் பெற்றிபோலாய் நமதெனப்படும் யாக்கை யாரதே."


வச்சிராயுதம் - இந்த முனிவர் இறந்தவுடன், அவரின் முதுகெலும்பை எடுத்து, விஸ்வ கர்மாவிடம் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு வச்சிராயுதம் செய்து, இதைக் கொண்டே இந்த விருத்திர அசுரனிடம் சண்டையிட்டு அவனை இந்திரன் கொன்றான் என்கிறது திருவிளையாடல்.

 

**


No comments:

Post a Comment