Wednesday, September 15, 2021

மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் 1963

மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் 1963

The Madras Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act, 1963

மேஜர் இனாம் & மைனர் இனாம்:

மன்னர்கள் காலத்தில், அந்த மன்னர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு இனாமாக நிலங்கள் கொடுக்கப்பட்டன. இதை ஒரு பட்டயம் மூலம் (செப்புத் தகட்டில் எழுதிக் கொடுப்பது) கொடுத்தார்கள். இதில், ஒரு கிராமம் முழுவதையுமோ அல்லது பல கிராமங்களையோ இனாமாக கொடுத்தார்கள். அப்படி பல கிராமங்களை இனாமாகக் கொடுத்தால் அதை மேஜர் இனாம் (Major Inam) என்று சொல்வர். மேஜர் இனாமை பொதுப் பெயராக இனாம் என்று சொல்வர். ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பகுதி நிலங்களை மட்டும் இனாமாக கொடுத்தால் அதை மைனர் இனாம் (Minor Inam) என்பர்.

மைனர் இனாம் ஒழிப்புச் சட்டம் 1963

இப்படி இனாமாகப் பெற்ற நிலங்களின் உரிமையாளர்களை “இனாம்தார்” என்பர். இந்த இனாம்தார்கள், தங்களின் நிலங்களை குடியானவரிடம் பயிர் செய்ய விட்டு விட்டனர். குடியானவரிடமிருந்து ஒரு பகுதி வருமானத்தை பெற்றுக் கொண்டு வந்தனர். இது காலங்காலமாக நடந்து வந்தது. 

மேல்வாரம் & குடிவாரம் உரிமை:

இப்படிப்பட்ட இனாம் சொத்துக்களில் (நிலங்களில்) இனாம்தாரருக்கு நிலத்தின் உரிமை இருக்கும். இதை மேல்வாரம் உரிமை என்பர். அந்த மண்ணின் மேல் உள்ள உரிமையை மேல்வாரம் என்பர். 

அதேபோல, அந்த இனாம் நிலங்களை பயிரிட்டு வரும் குடியானவருக்கு, பயிர் செய்யும் உரிமை மட்டும் இருக்கும். நிலத்தில் எந்த உரிமையும் இருக்காது. அந்த பயிர் செய்யும் உரிமையை “குடிவாரம்” என்பர். 

மேல் வாரம் & குடி வாரம் என இருவாரம் உரிமைகள்:

 இனாம் சொத்துக்களுக்கும், (அதேபோல ஜமீன் சொத்துக்களுக்கும்) இருவகையான உரிமையான மேல்வாரம், குடிவாரம் என இரு உரிமைகள் இருக்கும். இதில் மேல்வாரம் உரிமை, நிலத்தின் உரிமையாளருக்கு இருக்கும். குடிவாரம் உரிமை, அந்த நிலத்தை பயிர் செய்பவருக்கு இருக்கும். பயிர் செய்பவரை அந்த நிலத்தை விட்டு காலி செய்ய முடியாது. அதன் மகசூல் வருமானத்தை மட்டுமே பெற மண்ணின் உரிமையாளருக்கு உண்டு. 

மேல்வாரம் உரிமையை, நிலத்தின் சொந்தக்காரர், தனியே விற்க முடியும், அடமானம் வைக்க முடியும். பயிர் செய்யும் குடியானவரின் சம்மதம் தேவையில்லை. அதேபோல, பயிர் செய்யும் குடியானவர், தனது குடிவார உரிமையை தனியே விற்க முடியும், அடமானம் வைக்க முடியும். நிலத்தின் சொந்தக்காரரின் அனுமதி தேவையில்லை.

இனாம் ஒழிப்பு:

 மேல்வாரம் & குடிவாரமண் என இரு வார உரிமைகளுடன், இரண்டு உரிமையாளர்கள் ஒரு நிலத்துக்கு இருந்து வந்தனர். இதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதிக விளைசல் வருமானம் கேட்பது, குடியானவருக்கு நிலத்தில் எந்த உரிமையும் இல்லாமல் இருப்பது போன்றவை பிரச்சனைகளுக்கு காரணங்கள்.


எனவே, அரசு, 1963-ல் இந்த இனாம் ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, நிலத்தை பயிர் செய்யும் குடியானவருக்கே நிலத்தை முழு உரிமையுடன் சொந்தமாக்கி விடுவது என்றும், மேல்வார உரிமையாளருக்கு ஒரு நஷ்ட ஈட்டை கொடுத்து விடுவது என்றும் முடிவானது. 


**



No comments:

Post a Comment