Friday, December 15, 2017

இந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்

EVM -VVPAT  (Electronic Voting Machine - Voter Verifiable Paper Audit Trail.
தேர்தல் என்பது மக்களாட்சி வந்த பின்னர் ஏற்பட்டதே! அதற்கு முன் காலங்களில் மன்னராட்சி முறையே!
மக்களாட்சியில் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறையை பல நாடுகள் அறிமுகப்படுத்தின. ஆரம்ப காலங்களில், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருந்தனர். எனவே கலர் பெட்டிகளை வைத்தனர். எந்தக் கலர்ப் பெட்டி யார் வேட்பாளர் என்று மட்டுமே பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்னர், சின்னங்கள் என்ற பெயரில் படங்களை அறிமுகப்படுத்தினர். பின்னர் சின்னங்களுடன், பெயர்களையும் எழுதி அவர்களுக்கு ஒரு எண்ணையும் குறிப்பிட்ட சீட்டுக்களை கொடுத்தனர்.
காலம் வேகமாக மாறிவிட்டது.
இப்போது பட்டனைத் தட்டினால், ஓட்டு விழும். ஆனாலும் பெயரும், சின்னமும், அடையாளத்துக்காகத் தேவைப்படுகிறது.
ஆனாலும், இது முழுக்க முழுக்க நம்பிக்கையுடன் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்து கொண்டேதான் இருக்கிறது.
குறிப்பாக, எதிர்கட்சிகள், "இயந்திர ஓட்டு முறையில் தில்லு முல்லுக்கு வாய்பிருக்கிறது" என்று கூறும். ஆளும் கட்சிகள் அதை மறுக்கும்.
அந்த இயந்திர ஓட்டிப் பெட்டியில் பட்டன் இருக்கிறது. அதைத் தட்டினால், அதற்குறிய சின்னத்துக்கு வாக்குப் போய் சேரும். அதைச் சரிபார்க்க வேறு வழி இல்லை என்பதால், ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினர். அதுவே, ஓட்டுப் போட்டவருக்கு ஒரு சீட்டு வரும். அதில் அவர் நினைத்த சின்னத்துக்குத் தான் ஓட்டு விழுந்ததா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், அந்தச் சீட்டை வெளியே எடுத்துக் கொண்டு வர முடியாது. வெளியே விட்டால், யாருக்கு ஓட்டுப் போட்டார் என்று தெரிந்துவிடும். அது குழப்பத்தை உண்டாக்கிவிடும்.
ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சி ஒரு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் வைத்தது. அதன்படி, ஓட்டு இயந்திரத்தில் வரும் சீட்டை சேகரித்து வைத்து, இயந்திரம் சொல்லும் ஓட்டு எண்ணிக்கையும், சீட்டில் காண்பிக்கும் ஓட்டு எண்ணிக்கையும் ஒத்துப் போகிறதா என்று சரி பார்க்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று கேட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அதை மறுத்து விட்டது. (அந்த வழக்கு இன்று நடந்தது).
VVPT என்றால் Voter Verifiable Paper Audit Trail என்று பெயர். ஒருவர் பட்டனில் போட்ட சின்னத்துக்குத் தான் அந்த ஓட்டு சேர்ந்தது என்பதை உறுதி செய்யும் சீட்டு அது.
இந்த முறையானது, இந்தியாவில் இப்போது இரண்டாவது தடவையாக குஜராத்திலும், ஹிமாசல பிரதேசத்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. முதன் முதலில், மகாராஷ்டிராவில் உள்ளூர் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோவா மாநில தேர்தலில்  முதன் முதலாகப் பயன்படுத்தப் பட்டது.
இனி வரும் காலங்களில் இது போன்ற சீட்டுடன் கூடிய இயந்திர ஓட்டு முறையே இருக்கும் என தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது.
பொதுவாக, எந்த முறையாக இருந்தாலும் அதனதன் பாதகங்கள் உண்டு. இந்த முறையிலும் பாதகங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது. இயந்திரங்கள் தவறே செய்யாது என்றும் சொல்லமுடியாது. இயந்திரங்களை தயார் செய்யும் வல்லுனர்களும் தவறே செய்ய மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இயல்பான தவறுகள் பராவாயில்லை. பெரும் அளவில் முறைகேடு இருந்தால், இந்த வகை ஓட்டு முறையும் தவறானதே என்பதை மறுப்பதற்கில்லை. சந்தேகம் என வந்துவிட்டால், சம்மந்தப்பட்டவர்கள் அதை தீர்க்க வேண்டும் என்பதே உலக நடைமுறை.

 **

Wednesday, June 21, 2017

சண்முக கவசம் பாடல்-20

நமைப் பறு கிரந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெம்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்கு முன் உறுவலிப்போடு
எழுபுடைப் பகந்தர் ஆதி
இமைப் பொழுதேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-20

சண்முக கவசம் பாடல்-19

தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோசகம் மெய்
சுவறவே செய்யும் மூலச்
சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எவையும் என் இடத்து எய்தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-19

சண்முக கவசம் பாடல்-18

இணக்கம் இல்லாத பித்த
எரிவு மா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம்
மூலவெண் முளை தீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாலம் என்று அறையும் இந்தப்
பிணிக்குலம் எனையாளாமல்
பெருஞ் சத்தி வடிவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-18

சண்முக கவசம் பாடல்-17

டமருகத் தடிபோல் நைக்கும்
தலை இடி கண்டமாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று
எறிந்தவன் கைவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-17

சண்முக கவசம் பாடல்-16

ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிரகக் கோள் காக்க
சுமவிழி நோய்கள் தந்த
சூலையாக் கிராண ரோகம்
திமிர் கழல் வாதம் சோகை
சிரமடி கர்ண ரோகம்
எமையணு காம லோபன்
இருபுயன் சயவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-16

சண்முக கவசம் பாடல்-15

சலத்திலும் வன் மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான்
நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க
பாவகி கூர் வேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-15

சண்முக கவசம் பாடல்-14

ஙகரமே போல் தழீஇ
ஞானவேல் காக்க வன்புள்
சிகரி தேள் நண்டுக் காலி
செய்யனே றாலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான்
நளி வண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால் எற்கோர்
ஊறிலாது ஐவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-14

சண்முக கவசம் பாடல்-13

கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடி நாய் புலி மா யானை
கொடிய கோணாய் குரங்கு
கோலமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை எதனாலேனும்
நான் இடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க
சானவி முளைவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-13

சண்முக கவசம் பாடல்-12

ஔவியம் உளர் ஊண் உண்போர்
அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவரானாலும்
திடமுடன் எனை மற்கட்டத்
தவ்விய வருவாராயில்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கையயில் காக்க காக்க!


பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-12

சண்முக கவசம் பாடல்-11

ஓங்கிய சீற்றமே கொண்டு உவணி வில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எக்கம் தடி பரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக் கைவேல் காக்க காக்க!


பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-11

Monday, June 19, 2017

சண்முக கவசம் - பாடல்-10

ஒலி எழ உரத்த சத்தத்தொடு வரு பூதப்பிரேதம்
பலிகொள் இராக்கதப் பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனை வேல் காக்க!
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலி உள மந்தர தந்தரம்
வருத்திடாது அயில்வேல் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-10

சண்முக கவசம் - பாடல்-9

ஐயுரு மலையன் பாதத்து அமர் பத்து விரலும் காக்க,
பையுறு பழநி நாத பரன் அகங்காலைக் காக்க,
மெய் உடல் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க!
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-9

சண்முக கவசம் - பாடல்-8

ஏரகத் தேவன், என் தாள் இரு முழங்காலும் காக்க,
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீர் அலை வாய்த்தே காக்க,
சீரிய குதிக்கால் தன்னைச்
திருச்சோலை மலையன் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-8

சண்முக கவசம் - பாடல்-7

எஞ்சிடாது இடுப்பை, வேலுக்கு இறைவனார் காக்க காக்க,
அஞ்சுகனம் ஓர் இரண்டும் அரன் மகன் காக்க காக்க,
விஞ்சிடு பொருள் காங்கேயன்
விளர் அடித் தொடையைக் காக்க,
செஞ்சரண் நேச ஆசான்
திமிரும் முன் தொடையைக் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-7

சண்முக கவசம் - பாடல்-6

ஊண் நிறை வயிற்றை மஞ்சை ஊர்தியோன் காக்க,
வம்புத் தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க,
குய்ய நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க,
பீஜ ஆணியைக் கந்தன் காக்க,
அறுமுகன் குதத்தைக் காக்க.


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-6

சண்முக கவசம் - பாடல்-5

உறுதியாய் முன் கை தன்னை
உமை இள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என் கைத்தலத்தை மா முருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால் மருகன் காக்க
பின் முதுகைச் சேய் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-5

சண்முக கவசம் - பாடல்-4

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க,
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க,
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க
என்றன் ஏசிலா முழங்கை தன்னை
எழில் குறிஞ்சிக் கோன் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-4

சண்முக கவசம் - பாடல்-3

இரு செவிகளையும் செவ்வேள்
இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நா பல்
முழுது நல் குமரன் காக்க,
துரிசு அறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க,
திருவுடன் பிடரி தன்னை
சிவசுப்பிரமணியன் காக்க.


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-3

சண்முக கவசம் - பாடல்-2

ஆதியாம் கயிலைச் செல்வன்
அணி நெற்றி தன்னைக் காக்க
தாது அவிழ் கடப்பம் தாரான்
தான் இரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன்
துரிசு இலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன்
நாசியை நயந்து காக்க.

(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-2

சண்முக கவசம் - பாடல்-1

அண்டமாய் அவனி ஆகி 
அறிய ஒணாப் பொருள் அது ஆகித் 
தொண்டர்கள் குருவும் ஆகித் துகள் அறு தெய்வம் ஆகி
எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன
திண் திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க.


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-1

Friday, March 31, 2017

The Magic Flute மந்திரப் புல்லாங்குழல்

The Magic Flute
ஜெர்மன் நாட்டில் மிகப் பழங்காலத்தில், கிராம நாடகக் கொட்டகையில் போடப்பட்ட பிரபலமான நாடகம் இது; நம்ம ஊர் நாடகக் கொட்டை போலவே அங்கும் இதுபோன்ற நாடகங்கள் நடத்தி வந்திருக்கின்றனர்; இது நடந்தது 1791-ல்; இந்த கதை-பாட்டு-நடிப்பு நாடகத்தை ஜெர்மன் நாட்டினர் “ஓபரா” என்கிறார்கள்;
மேஜிக் புளூட்: இது ஒரு எகிப்திய கற்பனை கதை என்கிறார்கள்; டாமினோ என்ற இளவரசன் இருக்கிறான்; அவன் காட்டில் தனியாக மாட்டிக் கொள்கிறான்; அங்கு, அவனை ஒரு பெரிய பாம்பு துரத்துகிறது; அதனிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடிகிறான்; எங்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறான்; காட்டை விட்டு வெளியே வருகிறான்; அங்கு மூன்று பெண்கள் இருக்கிறார்கள்; அவர்கள் “நைட் குயின்” என்ற இரவு ராணியின் வேலைக்காரப் பெண்கள்; அவன் பயந்து ஓடிவந்ததைப் பார்த்து ஆறுதல் கூறி அரவனைக்கிறார்கள்; அவர்களுடன் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் ஒரு இளம் பெண்ணின் படத்தை காண்பிக்கிறார்கள்; அந்த படத்தில் உள்ள பெண் நைட்குயின் என்ற ராணியின் மகள்; இளவரசி; அவள் பெயர் “பமினா”; படத்தில் மிக அழகாகத் தெரிகிறாள்; இவனுக்கு இயல்பாகவே அந்த படத்தில் உள்ள பமினா மீது காதல் ஏற்பட்டுவிடுகிறது; அவளை, இவன், நேரில் பார்த்ததில்லை; இவனை அந்த வேலைக்காரப் பெண்கள் அரசி நைட் குயினிடம் அழைத்துச் செல்கிறார்கள்;
அங்கு, அரண்மனையில் அவனுக்கு உபசரிப்பு பலமாக நடக்கிறது; ராணி, அவனைச் சந்தித்து ஒரு உதவி கேட்கிறாள்; “அவள் மகளான இளவரசி பமினாவை அந்த பக்கத்து நாட்டில் உள்ள ஒரு சாமியாரான சரஷ்டிரோ என்ற கொடியவன் கடத்திச் சென்று விட்டதாகவும், அவளை எப்படியாவது மீட்க வேண்டும்” என்று கேட்கிறாள்; அப்படி அவளை இவன் மீட்டுவிட்டால், அந்த இளவரசி பமினாவையே இவனுக்கு திருமணமும் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறாள் ராணி நைட்குயின்;
இவனுக்கும் அந்த இளவரசி பமினா மீது காதல்தான்; எனவே உடனேயே ஒப்புக் கொள்கிறான்; இவன் தேடுவதற்குப் புறப்படும்போது, அந்த அரண்மனை வேலைக்கார பெண்கள், இவனுக்கு ஒரு புளூட் என்னும் புல்லாங்குழலைக் கொடுக்கிறார்கள்; அந்தப் புல்லாங்குழல் ஒரு மேஜிக் புல்லாங்குழல்; அதை எடுத்துக் கொண்டு புறப்படுகிறான்;
அவனைப் பின்தொடர்ந்து ஒரு, பறவை பிடிக்கும் நரிக்குரவன் வந்து கொண்டே இருக்கிறான்; அவன் பெயர் பாபாகினோ; அந்த நரிக்குரவனிடம், அரண்மனை வேலைக்காரிகள், ஒரு வெள்ளி மணியைக் கொடுத்து விடுகிறார்கள்; அந்த மணியும் ஒரு மேஜிக் மணி; நரிக்குறவன் சொல்கிறான், “உன்னை, அந்த காட்டில் திரிந்த பாம்பிடமிருந்து நான்தான் காப்பாற்றினேன்” என்கிறான்;
காடுமேடுகள் கடந்து டாமினோ திரிகிறான்; ஒரு இடத்தில் இளவரசி பமினாவை சந்திக்கிறான்; அவளைப் பார்த்தவுடனேயே இவனுக்கு காதல் வந்துவிடுகிறது; இளவரசியும், இவனைப் பார்த்தவுடன், இளவரசிக்கும் காதல் வந்துவிடுகிறது;
இவளைக் கடத்தி வைத்திருப்பனான, சாமியார் சரஷ்டிரோ ஒரு கொடியவன் என்றே சொல்லி அனுப்பி இருந்தார்கள்; ஆனால், இவன் பார்க்கும் சாமியார் மிக நல்லவராகத் தெரிகிறார் என்று இவனுக்கு ஒரு சந்தேகம்; அவருடன் பேசிப் பார்க்கிறான்; அவர் உண்மையில் ஒரு நல்ல சாமியார் தான்; சாமியார் சொல்கிறார், “இந்த இளவரசி பமினாவின் தாயாரான நைட்குயின் ஒரு பேராசைக்காரி; அவள் மொத்த உலகத்தையுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற பேராசை உண்டு; அதனால்தான் நான் அவளிடமிருந்து அவள் மகள் இளவரசி பெமினாவை காப்பாற்றி இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறேன்” என்று கூறுகிறார்;
நீ, இந்த இளவரசி மீது காதல் கொண்டுள்ளாய் என்று எனக்குத் தெரிகிறது; எனவே உனக்கு நான் மூன்று பரீட்சை வைக்கிறேன்; அதில் வெற்றி பெற்றால், அவளை உனக்கே கொடுத்து விடுகிறேன்” என்று கூறுகிறார்;
முதல் சோதனை: சைலன்ஸ் – Silence. அமைதி சோதனை; டாமினோ நெடுநேரம் அமைதியா இருக்கிறான்; ஆனாலும், அப்போது இளவரசி பமினோ எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாள்;
இரண்டாவது சோதனை: பையர் – Fire. நெருப்பு சோதனை; நெருப்பில் நிறுத்திகிறார்; அதிலும் எந்த பதட்டமும் இல்லாமல் இருக்கிறான்; வெற்றி பெறுகிறான்;
மூன்றாவது சோதனை: வாட்டர் – Water. தண்ணீர் சோதனை; அதிலும் வெற்றி பெறுகிறான்;
அந்த மூன்று சோதனையிலும் அவன் வெற்றி பெறுவதற்கு காரணம் அவன் கையில் வைத்திருக்கும் மந்திர புல்லாங்குழலே!
அவனுக்கே இந்த இளவரசியை கொடுத்து விடுகிறார்;
ராணி நைட்குயின், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, கோபம் தலைக்கேறி, சாமியாரின் கோயிலை உடைத்து விடும்படி ஆணை இடுகிறாள்;
அப்போது, ஒரு பெரிய சத்தத்துடன் ஒரு இடி விழுகிறது; அது ராணி நைட்குயின் தலைமேலே விழுந்து அவள் இறக்கிறாள்; அவள் நரகத்துக்கு போகிறாள்;
நல்லவர்கள் வாழ்வார்கள்; கெட்டவர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்பதை 400 வருடங்களுக்கு முன்னர் இப்படித்தான் மக்களுக்கு விளக்கி வந்துள்ளனர்;
(இது பெரிய கதை; இங்கு சுருக்கமாக உள்ளது)

**

Tuesday, March 7, 2017

Homage to martyrs

Major Gen Somnath Jha (retd)
மேஜர் ஜெனரல் சோம்நாத் ஷா அவர்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார்; இவர் இப்போது ஒரு புது வேலையைத் துவக்கி உள்ளார்;
இந்தியா முழுவதும் சைக்கிளில் தனது பயணத்தைத் தொடங்கி உள்ளார்; அதற்கு இவர் சொல்லும் காரணம் வித்தியாசமானது; இந்திய ராணுவத்தில் இதுவரை மொத்தம் 21,000 வீரர்கள் வீரமரணம் (Martyr) அடைந்துள்ளனர்; இவர்களின் நினைவாக இறந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு நிமிட சைக்கிள் பயணம் வீதம் மொத்தம் 42,000 நிமிடங்கள் சைக்கிள் பயணம் செய்வதாக உத்தேசித்து தன் பயணத்தில் பாதியை முடித்துள்ளார்; இன்னும் அவர் கடக்க வேண்டிய நிமிடங்கள் 11,500 பாக்கி உள்ளதாகச் சொல்லியுள்ளார்;
இவர் கடைசியாக பணியில் இருந்த இடம் ஹரியானாவில் உள்ள அம்பாலா கன்டோன்மெண்ட்; இங்கு கடந்த செப்டம்பரில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்; இவர் மொத்தம் 37 வருடங்களை ஆர்மி இராணுவப் பணியில் செலவு செய்திருக்கிறார்;
இவர் சொல்கிறார், “நம் நண்பர்கள் பலர் தங்கள் வாழ்வை இந்த நாட்டுக்காக அர்பணித்து உள்ளனர்; எனவே நான் பணி ஓய்வு பெற்ற பின்னர், அவர்களின் நினைவாக இந்த சைக்கிள் பயணத்தைத் தொடர்கிறேன்; இறந்த 21,000 வீரர்கள் நினைவாக ஒருவருக்கு 2 நிமிடங்கள் வீதம் மொத்தம் 42,000 நிமிடங்கள் எனது சைக்கிள் பயணம் தொடரும்” என்று கூறியுள்ளார்;
இதுவரை இவர் 24 மாநிலங்களில் சைக்கிளில் சென்று உள்ளார்; இதுவரை எனது பயணம் மிகவும் நினைவுபூர்வமாக இருந்திருக்கிறது; ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நாட்டுப்பற்றுடன் இருப்பதை காண மகிழ்வாக இருக்கிறது என்று கூறுகிறார்;
எனது விருப்பமெல்லாம், “இந்தியக் குடிமகன், ஒவ்வொரு தீபாவளி அன்றும், வீரமரணமடைந்த ஒரு வீரனின் நினைவாக ஒரு விளக்கை ஏற்றினால் போதும்; இது அவனைக் கௌரவப்படுத்தும்” என்பதே என்று உணர்வு பூர்வமாகக் கூறுகிறார்;


It is not how to cast your vote...

It’s not how you cast your vote, but how you vote your caste.”
இந்தியாவில் உத்திரபிரதேசம் என்பதே மிகப் பெரிய மாநிலம்; இங்கு 220 மில்லியன் மக்கள் வாழ்கிறார்களாம்! இப்போது இங்கு மாநில தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது; ஒரே நேரத்தில் இங்கு தேர்தல் நடத்துவதில் சிரமம் இருப்பதாகக் கருதி, ஏழு பிரிவாகப் பிரித்து ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது; உத்திரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஆரம்பித்து, ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்து, இப்போது கடைசிக் கட்டமான ஏழாவது கட்டத் தேர்தல் உ.பி.யின் கிழக்குப் பகுதியான வாரணாசியில் மார்ச் 8-ம் தேதி நடக்க உள்ளது; இத்துடன் அந்த மாநிலத்தின் மொத்த தேர்தல் நிகழ்வுகளும் முடிந்துவிடும்;
அதன்பின்னர், வாக்கு எண்ணிக்கை மார்ச் 11-ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்;
இங்கு பொதுவாக ஜாதிகள் அடிப்படையில் ஓட்டுக்கள் பிரியும் என்றே கணிக்கிறார்கள்; பிற்படுத்தப்பட்ட யாதவர்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், முஸ்லீம்கள் போன்ற ஜாதியினர் அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது;
ஏற்கனவே அகிலேஷ் யாதவ் அங்கு முதன்மந்திரியாக இருக்கிறார்; இவர் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்; இவர் அவரின் தந்தை கட்சியான சமாஜ்வாடி கட்சியின்கீழ் ஆட்சி செய்கிறார்; இந்த கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து இந்த தேர்தலைச் சந்திக்கிறது; மற்றும், ஏற்கனவே முதன் மந்திரியாக இருந்த மாயாவதி அம்மையார் பி.எஸ்.பி. கட்சியில் தேர்தலைச் சந்திக்கிறார்; இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்; மற்றும், பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற எம்.பி.க்கு இங்கு வாரணாசியில்தான் நின்று வெற்றி பெற்றார்; ஆக நான்கு பெரும் கட்சிகள், மூன்று பெரும் போட்டியாளர்காளக இருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறார்கள்;
இங்கு ஜாதி அரசியல் அதிகம் இருக்குமாம்! அதனால்தான், ஓட்டு யாருக்கு போடலாம் என்பதைக் காட்டிலும், ஓட்டை எப்படி நம் ஜாதிக்காரனுக்கு போடவேண்டும் என்றே அரசியல் நடக்குமாம்!
மார்ச் 8-ம் தேதியுடன் கடைசிக் கட்ட தேர்தல் முடிகிறது;
அதனால்தான், பிரதமர் மோடி, வாரணாசி சென்று தேர்தல் பிரச்சாரத்தை நேற்று வேகமாக நடத்தி முடித்திருக்கிறார்; இவர் யாதவர்களைக் கவர வேண்டும் என்று கருதியே, வாரணாயில் உள்ள “கார்வா கோட்டை ஆசிரமத்துக்கு” சென்று அங்குள்ள குருமாரிடம் ஆசி பெற்றுள்ளார்; இந்த கார்வா கோட்டை ஆசிரமத்துக்கு, தலைமுறை தலைமுறையாக ஒரு யாதவர்தான் தலைமை குருவாக இருப்பாராம்! அவரிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றிருப்பது யாதவர்களைக் கவர்வதற்காக என்றும் சொல்லப்படுகிறது; கார்வா கோட்டை ஆசிரமம் வாரணாசியில் கங்கைகரையில் அமைந்துள்ளது;

**

Fake Food Hatanaka

Fake Food Hatanaka
சிறு வயதில் சொப்பு விளையாட்டு இனிமையானது; ஒரு சிறு கொட்டாங்காச்சியில் மணலை அள்ளிப் போட்டு அதை சோறு என்று சாப்பிடக் கொடுப்பர்; இப்படி சாப்பாட்டு விளையாட்டுகள் ஏராளம்;
டீக்கடைகளுக்குப் போனால், அங்கு ஒரு ஜாடியில் பிஸ்கட்டுகளை அழகாக அடுக்கி இருப்பர்; நாம் அதை எடுத்துக் கொள்ளலாம்; பார்க்கும் போதே சாப்பிட தோன்ற வேண்டும் என்பதற்காக இப்படி வெளியில் தெரியும்படி செய்திருப்பர்;
இப்போதைய பெரிய ஓட்டல்களில் உணவுப் பொருள்களை போட்டா எடுத்து படங்களாக மாட்டி இருப்பர்; அப்படியே இலையில் நமக்காக பரிமாறி இருப்பதைப் போன்றே இருக்கும்; இது ஒருவகை வியாபார உத்திதான்! “என்னப்பா இருக்கு சாப்பிட?” என்று கேட்ட காலம் போய் மெனுகார்டும், இந்த போட்டோ பொருள்களும் நமக்கு எதுவேண்டும் என்பதை முடிவு செய்கின்றன;
ஆனால் ஜப்பானில் இப்போது ஒரு புது முறையை அறிமுகம் செய்து ஓஹோ என்று ஓடிக் கொண்டிருக்கிறது; செயற்கையாக உணவுப் பொருள்களை அப்படியே செய்து அதற்கு பெயிண்ட் அடித்து, உண்மையான பொருள்போலவே அடுக்கி வைத்திருப்பர்; அதைப் பார்க்கும்போது, இந்தப் பொருளை நாம் சாப்பிட வேண்டும் என்று ஒருவித ஆசையைத் தூண்டி விடுமாம்!
இப்பவும் இங்கு மெனு கார்டைப் பார்த்து அது என்ன உணவுப் பொருள் என்று யூகிக்க சிரமாக உள்ளது; அதற்கு இது எவ்வளவோ மேல்! கண்ணால் பார்த்த பொருளைச் சாப்பிட ஆர்டர் கொடுக்கலாம்! செயற்கை உணவுப் பொருள், செயற்கை என்று தெரியவே தெரியாதாம்! அப்படியே உண்மையான உணவுப் பொருளாகவே, அல்லது அதற்கும் மேலாகவே கவர்ச்சியாகத் தெரியுமாம்!
இப்படிப்பட்ட செயற்கை உணவுப் பொருள்களை செய்துதரும் வல்லுநர்களுக்கு ஜப்பானில் கிராக்கி உள்ளதாம்!
நம்மூரில் திருமண மண்டபத்தில் பழங்களை வெட்டி, வித்தியாசமான டிசைன்களில் வைத்திருப்பர்; அதைப் பார்த்தவுடன் அந்தப் பழத்தை வாங்கிச் சாப்பிட ஆரம்பிப்போம்! அதுபோலவே இதுவும்;
1920-களில் மருத்துவக் கல்லூரிகளுக்கு, மனிதரின் உடலின் பாகங்களை செயற்கையாகச் செய்து கொடுத்து வந்தனராம்! பின்னர், அந்தக் கலைஞர்களை ஓட்டல் நடத்துபவர்கள் அணுகி, உணவுப் பொருள்களையும், மீன், கோழி, முட்டை இவைகள் உட்பட உணவுப் பொருள்களைச் செயற்கையாகச் செய்து தரும்படி கேட்டு அதை அவர்களின் ஓட்டல்களில் பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்தனராம்!
இப்போது ஒருபடி முன்னேறி, உண்மையான உணவுப் பண்டமாகவே, செயற்கையாக செய்து வைத்துள்ளார்களாம்! இது ஒரு தனிக் கலையாகவே வளர்ந்து வருகிறதாம் ஜப்பானில்!
**


Investigative Power

Investigative Power
அரசாங்க அதிகாரிகளே, அந்த அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை கண்டறிவது; அந்த விசாரனைக்குத் தேவைப்படும் ஆதாரங்களைக் கேட்பது; அரசே சட்டத்தை மீறிய செயலை விசாரனை செய்வது; அரசின் செயல்திறனையும், பண இருப்பையும் விசாரிப்பது போன்ற பல வேலைகளை செய்யும்; இந்த அமைப்பே உண்மை நிலையை கண்டறியும் அமைப்பு ஆகும்;
இந்த உரிமையானது பொதுவாக பாராளுமன்ற சபைக்கு இருக்கும்; அமெரிக்காவில் இது காங்கிரஸ் என்னும் கூட்டுசபைக்கு உண்டு; இது ஒரு கமிட்டி என்னும் உறுப்பினர்களை இதற்காக நியமித்திருக்கும்; இது பல வேலைகளைச் செய்யும்; அதில் மக்களுக்கு இனி தேவைப்படும் சட்டங்களையும் அவற்றின் அவசியத்தையும் கூட விசாரிக்கும்; ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் உள்ள ஓட்டை உடைசல்களையும் சரிசெய்யும் விசாரனையும் செய்யும்; பதவிகளில் இருப்பவர்களின் பாதகச் செயல்களின் விளைவால் அவர்களை வெளியேற்றும் இம்பீச்மெண்ட் நிகழ்வின் ஆரம்ப விசாரனை வேலைகளையும் செய்யும்;
இது அமெரிக்கா காங்கிரஸ் என்னும் கூட்டுசபையில் அதிக அதிகாரம் மிக்கதாக இருந்து வருகிறது; இப்போதுகூட, அங்கு நடந்த 2016 பொதுத் தேர்தலில் பழைய அதிபர் ஒபாமா இத்தகைய இன்வெஸ்டிகேட்டிவ் அதிகாரத்தை தேர்தலின் போது, துஷ்பிரயோகம் செய்தாரா என்று கேட்டு ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் விசாரனை நடத்த வேண்டும் என்று தற்போதைய அதிபர் டிரம்ப் அரசு, அமெரிக்க காங்கிரஸ் கூட்டுசபையைக் கேட்டுக் கொண்டுள்ளது;

**

First Past The Post

“First Past The Post”
குதிரை ரேஸில் ஓடிவரும் குதிரைகளில் எது முதலில் கடைசி கோட்டில் தன் மூக்கை நீட்டுகிறதோ அதுவே வென்றதாக அர்த்தம்; இதைத்தான்  “first past the post” என்கிறார்கள்;
இதைத்தான் மக்களாட்சியில் தேர்தலில் நின்று வென்றவர்களுக்கும் பொதுவான விதியாக வைத்துள்ளனர்; ஒரு தேர்தலில் பலர் போட்டியிட்டாலும், அதில் யார் எல்லோரையும் விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்;
இங்கு வெற்றிக்கு இவ்வளவு வாக்குகள் வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது; சில நாடுகளில் 50% க்கு மேல் வாக்குகள் பெற்ற ஒருவரே வெற்றி பெற்றவர் என்ற விதி உள்ளது; பாதிக்கு மேல் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் வெற்றி பெறுகிறார்;
இந்தியாவில், first past the post  முறையே அமலில் உள்ளது; இங்கு 30% 40% வாக்குகள் பெற்றாலே வெற்றி பெற முடியும். தேர்தல் விதிமுறைகளுக்கு இது இலகுவாக இருப்பதால் பல நாடுகள் இந்த முறையிலேயே வெற்றியை நிர்ணயிக்கின்றன;
இந்த first past the post  (FPTP) முறையில் பல வேட்பாளர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே நாம் வாக்களிக்க முடியும்; இந்த முறையில்தான் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற காலனி நாடுகளில் தேர்தல் நடக்கின்றன;
அமெரிக்க பொதுதேர்தல் இந்த FPTP முறையில்தான் நடக்கின்றன; ஆனால் ஒருசில மாநிலங்களில் மாநிலத் தேர்தலில் இரட்டை ஓட்டு முறையும் உள்ளது; முதல் ஓட்டு ஒருவருக்கும், இரண்டாவது ஓட்டு ஒருவருக்கும் போட வேண்டும்; வேட்பாளர் முதல் ஓட்டுகளில் வெற்றி பெற முடியாவிட்டால், இரண்டாவது ஓட்டுக்களில் எண்ணிக்கையில் கணக்கை எடுத்து வெற்றியை அறிவிப்பர்; இதில் இரண்டாவது ஓட்டுக்களைப் பெற்றவர்கூட வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உண்டு;
இந்த FPTP முறையை ‘ஒற்றைப் பெருவாரி முறை’ என்பர்; ஒரே ஓட்டுத்தான் போட முடியும்; அதில் அதிக ஓட்டுக்களை பெற்றவர் வெற்றிபெறுவார் என்பது இதன் பொருள்;
இந்த FPTP முறையில் தேர்தல் நடத்த எளிமையானது என்பதால் இந்தியாவில் இதைப் பின்பற்றுகிறோம்; படிக்காவதர் அதிகம் இருப்பதால் இது சௌகரிகமாக இருக்கிறதாம்; இரட்டை ஓட்டு முறையில், இரண்டு ஓட்டுப் போட வேண்டும் என்பதால், இது எளிதாக இல்லை என்றும், ஓட்டு எண்ணிக்கையும் காலதாமதம் ஆகும் எனக் கூறுகின்றனர்; குறிப்பிட்ட சதவிகித ஓட்டுகளைப் பெறவேண்டும் என்ற கட்டாய முறையில், யாரையும் தேர்ந்தெடுக்க முடியாமலும் போய்விடக் கூடும் என்பதால், அதுவும் சிரமமான முறை;


Monday, March 6, 2017

இல்லானை இல்லாளும் வேண்டாள்!

நம் சொந்தபந்தங்கள் நண்பர்களுடனேயே வாழ்க்கைப் பிரயாணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்; அதிலிருந்து விலகிவிடக் கூடாது; இந்தக் கூட்டத்திலிருந்து எந்தக் காலத்திலும் விலகிவிட நினைக்கக் கூடாது;
பொதுவாக, நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தால்தான் இந்தக் கூட்டத்தில் இருக்க முடியும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்; அது தவறு; அவ்வாறு தவறாக நினைத்துக் கொண்டு, வாழ்க்கைத் தோல்விகளைத் தழுவியவர், இந்தக் கூட்டத்தை விட்டு விலகி விடுகின்றனர்; அதன்பின், வேண்டாத பழக்க வழக்கங்களை தொடர்கின்றனர்; வாழ்க்கை வெறுத்து விட்டதாகச் சொல்லிக் கொண்டு வேண்டாத பழக்க வழக்கத்தையும், அதற்குறிய நட்புகளையும் தொடர்கின்றனர்; இது மிகப் பெரிய தவறு;
நாம், தொடர்ந்து வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருந்தாலும் பரவாயில்லை; எப்போதும், நம் கூட்டத்தை விட்டு விலகி விடவே கூடாது; ஏன் விலகத் தோன்றுகிறது என்றால், நாம் யாருக்குமே தெரியாமல் சில காரியங்களைச் செய்வோம்; அது தோல்வியில் முடியும்; அல்லது அதனால் அசிங்கப்பட்டு விடுவோம்; இந்த தோல்வியை, நம் கூட்டம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்ற தயக்கத்தில் அந்தக் கூட்டத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்கி விடுவோம்; தவறு இங்குதான் ஆரம்பிக்கிறது;
பொதுவாக, நம் கூட்டம், நம்மைப் பற்றி ஒரு தனிக் கருத்து வைத்திருக்கும்; அது பொதுவான கருத்து; நம் வாழ்வில், இந்தப் பொதுக் கருத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்; அவ்வப்போது, நம் கூட்டம் அதற்கு ஏற்ப கருத்தை மாற்றிக் கொள்ளும்; வசதி வாய்ப்புகள் நமக்கு அதிகமானால், நம்மைப் புத்திசாலி என்று கருத்து வைத்திருக்கும்; நம்மை நெருங்குவார்கள்; நெருங்குவதற்கு முக்கிய காரணம், ஏதாவது ஒரு வழியில் நாம் அவர்களுக்கு உதவியாக இருப்போம் என்று கருதுகிறார்கள்; ஆனால், நமது ஏழ்மையில், நம்மால் அவர்களுக்கு பிரயோசனபட மாட்டோம் என்று உறுதியானால், நம் இருப்பை கண்டு கொள்ளவே மாட்டார்கள்; இது உலக இயல்பு; அப்படித்தான் இப்போதும் உலகவாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது; நாம் வசதியாக உள்ள காலத்தில், நமது கெட்ட நடவடிக்கைகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள்; ஏனென்றால், நம்மால் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் காரியம் கைகூடும் என்ற நப்பாசை இருக்கும்; அதனால் நம்மைச் சகித்துக் கொள்வார்கள்;
ஆக, பிறருக்கு பிரயோஜனப்பட்டால், நம்மை நம் உறவுகள் தேடும்; அது கிடைக்காது என்று உறுதியானால், நம் உறவுகள் நம்மைத் தேடாது; இங்கு, உறவுகள் என்று சொல்வது, சுற்றம் நட்புகள் மட்டுமல்ல; அதையும் தாண்டி, தன் மனைவி/கணவர், பிள்ளைகள், பெற்றோர், சகோதர சகோதரிகளையும் உள்ளடக்கியதே!
இதையெல்லாம் உணர்ந்துதான், ஔவைக்கிழவி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு பாடலைப் பாடி உள்ளார்; “இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள்” என்று பாடுகிறாள்; பொருள் இல்லாதவனை இல்லதரசியும் (மனைவியும்) தேட மாட்டாள்; அது பரவாயில்லை; ஆனால் பெற்ற தாயும் தேடமாட்டாள் என்று சொல்வது நடுங்குகிறது; ஆனாலும் அதுதான் உண்மைநிலை;
எனவே, நாம் வாழ்வில், அதாவது குடும்ப வாழ்க்கையில், செய்யும் தொழிலில், நம்முடைய முயற்சிகளில், தோற்றுக் கொண்டே இருந்தாலும், இந்தக் உறவுகள் என்ற கூட்டத்தை விட்டு விலகி விடக் கூடாது; அவ்வாறு விலக விலக, நமது தோல்விகள் நம்முடைய இயலாமையால் ஏற்பட்டது என்றே இந்தக் கூட்டம் தீர்மானித்து விடும்; எனவே இந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டே, தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே வாழவேண்டும்; எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும், கூட்டத்தை விட்டு விலகிவிடக் கூடாது; நம்மை தனிப்படுத்த விடக் கூடாது; நாம் தனிமையானால், நம் மனைவி மக்கள், பெற்றோர், உற்றோரை விட்டு தனிமையாக இருக்கவே விரும்புவோம்; அது வேறு விவகாரங்களுக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும்; அப்படித்தான் பலர் தன்னைத் தனிமைப்படுத்தி, இந்த உறவுகளை விட்டு விலகி இருக்க விரும்பி, தனிமைபட்டுப் போகிறார்கள்; அதன்பின்னர், யாரும் நம்மை எப்போதுமே தேட மாட்டார்கள்; அது இன்னும் நம்மை காயப்படுத்தும்; அதற்கு இடமே கொடுக்கக் கூடாது;
நாம் தவறு செய்திருந்தால்கூட, அது ஏதோ, நாம் தெரிந்து செய்த தவறில்லை என்றும், சூழ்நிலை காரணமாக அது நடந்து விட்டது என்றும் நம்மை சுற்றி உள்ளவர்கள் ஒரு நேரத்தில் உணருவார்கள்; அதுவரை காத்திருக்க வேண்டும்; நமது அடுத்த முயற்சி வெற்றியடையும் போது, அது அழுத்திப் போய்விடும்; அதற்குப் பயந்து கொண்டு, நாம் இதுவரை கட்டிக்காத்த நமது பெயர் கெட்டு விட்டதே என்று நாமாக நினைத்துக் கொண்டு கூட்டத்தை விட்டு விலகி விடக் கூடாது;
நாமே நமக்கு ஒரு பெயர் (இமேஜ்) இருப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடாது; நம்மைப் பற்றி, நாம் இல்லாதபோது, நம்மைச் சுற்றி இருப்பவர்கள், எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று நாமே கற்பனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் ஒருவிதமாக நம்மைப்பற்றி நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்; அதில் பாதி உண்மை இருந்தாலும் பாதி கற்பனையாகவும் இருக்கும்; ஆனாலும், இந்தக் கூட்டம், நம்மைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறதோ அது நிரந்தரம் இல்லை என்பதை நான் உணர வேண்டும்; இதுதான் வாழ்க்கைப் பாடம்; அது, நம் வாழ்வின் முறையில் மாறிக் கொண்டே இருக்கும்; முடிந்தவரை நாம் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் காலத்தில், இந்த இமேஜ் மாறிவிடும்; தவறாக நினைத்தவர்கள்கூட, சரியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்; எனவே இதற்காக கூட்டத்தை விட்டு விலகி ஓடத் தேவையில்லை;
நம் வாழ்க்கையில் பயணிக்கும் பெரிய சாலையை விட்டு எப்போதும் விலகி விடக் கூடாது; காட்டுப்பாதை, குறுக்குவழிகள், நாம் பயப்படும்போது தெரியும்; ஆனால் அவைகள் செல்லும் வழியில் சென்றால், தனிமைப் படுத்தப் பட்டு விடுவோம்; பெரிய பாதையே சிறந்ததும் நிரந்தரமானதும்கூட; காட்டுப்பாதையில் வழி தெரியாமல் இருக்கும்போது, நம்மை தவறாக வழிநடத்தும் ஆட்கள் அதிகம் இருப்பர்; அந்த ஆட்களுடன் பழக்கம் ஏற்படும்போது, ஒருபோதும் பெரிய சாலைக்கு வரவேண்டும் என்ற எண்ணமே நமக்கு ஏற்படாது; இருட்டில் வாழும் முறையைக் கற்றுக் கொடுத்து விடுவர்;
நாம் எவ்வளவு தவறு செய்தாலும், அது எல்லாமே பெரிய சாலை என்னும் இயல்பான வாழ்க்கையிலேயே நம் கூட்டத்துக்குள்ளேயே இருந்து கொண்டே இருக்க வேண்டும்;
இது ஏதோ புரியாததுபோல இருந்தாலும், திரும்பத் திரும்ப படிக்கும்போது எப்போதாவது ஒரு தெளிவு கிடைக்கும் என்பதற்காகவே எழுதப்பட்டது; கீதையின் விளக்கத்தை வேறு ஒரு மொழிநடையில் எழுதியது என்றும் கருதலாம்;

**