Friday, December 15, 2017

இந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்

EVM -VVPAT  (Electronic Voting Machine - Voter Verifiable Paper Audit Trail.
தேர்தல் என்பது மக்களாட்சி வந்த பின்னர் ஏற்பட்டதே! அதற்கு முன் காலங்களில் மன்னராட்சி முறையே!
மக்களாட்சியில் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறையை பல நாடுகள் அறிமுகப்படுத்தின. ஆரம்ப காலங்களில், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருந்தனர். எனவே கலர் பெட்டிகளை வைத்தனர். எந்தக் கலர்ப் பெட்டி யார் வேட்பாளர் என்று மட்டுமே பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்னர், சின்னங்கள் என்ற பெயரில் படங்களை அறிமுகப்படுத்தினர். பின்னர் சின்னங்களுடன், பெயர்களையும் எழுதி அவர்களுக்கு ஒரு எண்ணையும் குறிப்பிட்ட சீட்டுக்களை கொடுத்தனர்.
காலம் வேகமாக மாறிவிட்டது.
இப்போது பட்டனைத் தட்டினால், ஓட்டு விழும். ஆனாலும் பெயரும், சின்னமும், அடையாளத்துக்காகத் தேவைப்படுகிறது.
ஆனாலும், இது முழுக்க முழுக்க நம்பிக்கையுடன் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்து கொண்டேதான் இருக்கிறது.
குறிப்பாக, எதிர்கட்சிகள், "இயந்திர ஓட்டு முறையில் தில்லு முல்லுக்கு வாய்பிருக்கிறது" என்று கூறும். ஆளும் கட்சிகள் அதை மறுக்கும்.
அந்த இயந்திர ஓட்டிப் பெட்டியில் பட்டன் இருக்கிறது. அதைத் தட்டினால், அதற்குறிய சின்னத்துக்கு வாக்குப் போய் சேரும். அதைச் சரிபார்க்க வேறு வழி இல்லை என்பதால், ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினர். அதுவே, ஓட்டுப் போட்டவருக்கு ஒரு சீட்டு வரும். அதில் அவர் நினைத்த சின்னத்துக்குத் தான் ஓட்டு விழுந்ததா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், அந்தச் சீட்டை வெளியே எடுத்துக் கொண்டு வர முடியாது. வெளியே விட்டால், யாருக்கு ஓட்டுப் போட்டார் என்று தெரிந்துவிடும். அது குழப்பத்தை உண்டாக்கிவிடும்.
ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சி ஒரு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் வைத்தது. அதன்படி, ஓட்டு இயந்திரத்தில் வரும் சீட்டை சேகரித்து வைத்து, இயந்திரம் சொல்லும் ஓட்டு எண்ணிக்கையும், சீட்டில் காண்பிக்கும் ஓட்டு எண்ணிக்கையும் ஒத்துப் போகிறதா என்று சரி பார்க்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று கேட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அதை மறுத்து விட்டது. (அந்த வழக்கு இன்று நடந்தது).
VVPT என்றால் Voter Verifiable Paper Audit Trail என்று பெயர். ஒருவர் பட்டனில் போட்ட சின்னத்துக்குத் தான் அந்த ஓட்டு சேர்ந்தது என்பதை உறுதி செய்யும் சீட்டு அது.
இந்த முறையானது, இந்தியாவில் இப்போது இரண்டாவது தடவையாக குஜராத்திலும், ஹிமாசல பிரதேசத்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. முதன் முதலில், மகாராஷ்டிராவில் உள்ளூர் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோவா மாநில தேர்தலில்  முதன் முதலாகப் பயன்படுத்தப் பட்டது.
இனி வரும் காலங்களில் இது போன்ற சீட்டுடன் கூடிய இயந்திர ஓட்டு முறையே இருக்கும் என தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது.
பொதுவாக, எந்த முறையாக இருந்தாலும் அதனதன் பாதகங்கள் உண்டு. இந்த முறையிலும் பாதகங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது. இயந்திரங்கள் தவறே செய்யாது என்றும் சொல்லமுடியாது. இயந்திரங்களை தயார் செய்யும் வல்லுனர்களும் தவறே செய்ய மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இயல்பான தவறுகள் பராவாயில்லை. பெரும் அளவில் முறைகேடு இருந்தால், இந்த வகை ஓட்டு முறையும் தவறானதே என்பதை மறுப்பதற்கில்லை. சந்தேகம் என வந்துவிட்டால், சம்மந்தப்பட்டவர்கள் அதை தீர்க்க வேண்டும் என்பதே உலக நடைமுறை.

 **

No comments:

Post a Comment