Monday, March 6, 2017

இல்லானை இல்லாளும் வேண்டாள்!

நம் சொந்தபந்தங்கள் நண்பர்களுடனேயே வாழ்க்கைப் பிரயாணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்; அதிலிருந்து விலகிவிடக் கூடாது; இந்தக் கூட்டத்திலிருந்து எந்தக் காலத்திலும் விலகிவிட நினைக்கக் கூடாது;
பொதுவாக, நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தால்தான் இந்தக் கூட்டத்தில் இருக்க முடியும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்; அது தவறு; அவ்வாறு தவறாக நினைத்துக் கொண்டு, வாழ்க்கைத் தோல்விகளைத் தழுவியவர், இந்தக் கூட்டத்தை விட்டு விலகி விடுகின்றனர்; அதன்பின், வேண்டாத பழக்க வழக்கங்களை தொடர்கின்றனர்; வாழ்க்கை வெறுத்து விட்டதாகச் சொல்லிக் கொண்டு வேண்டாத பழக்க வழக்கத்தையும், அதற்குறிய நட்புகளையும் தொடர்கின்றனர்; இது மிகப் பெரிய தவறு;
நாம், தொடர்ந்து வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருந்தாலும் பரவாயில்லை; எப்போதும், நம் கூட்டத்தை விட்டு விலகி விடவே கூடாது; ஏன் விலகத் தோன்றுகிறது என்றால், நாம் யாருக்குமே தெரியாமல் சில காரியங்களைச் செய்வோம்; அது தோல்வியில் முடியும்; அல்லது அதனால் அசிங்கப்பட்டு விடுவோம்; இந்த தோல்வியை, நம் கூட்டம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்ற தயக்கத்தில் அந்தக் கூட்டத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்கி விடுவோம்; தவறு இங்குதான் ஆரம்பிக்கிறது;
பொதுவாக, நம் கூட்டம், நம்மைப் பற்றி ஒரு தனிக் கருத்து வைத்திருக்கும்; அது பொதுவான கருத்து; நம் வாழ்வில், இந்தப் பொதுக் கருத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்; அவ்வப்போது, நம் கூட்டம் அதற்கு ஏற்ப கருத்தை மாற்றிக் கொள்ளும்; வசதி வாய்ப்புகள் நமக்கு அதிகமானால், நம்மைப் புத்திசாலி என்று கருத்து வைத்திருக்கும்; நம்மை நெருங்குவார்கள்; நெருங்குவதற்கு முக்கிய காரணம், ஏதாவது ஒரு வழியில் நாம் அவர்களுக்கு உதவியாக இருப்போம் என்று கருதுகிறார்கள்; ஆனால், நமது ஏழ்மையில், நம்மால் அவர்களுக்கு பிரயோசனபட மாட்டோம் என்று உறுதியானால், நம் இருப்பை கண்டு கொள்ளவே மாட்டார்கள்; இது உலக இயல்பு; அப்படித்தான் இப்போதும் உலகவாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது; நாம் வசதியாக உள்ள காலத்தில், நமது கெட்ட நடவடிக்கைகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள்; ஏனென்றால், நம்மால் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் காரியம் கைகூடும் என்ற நப்பாசை இருக்கும்; அதனால் நம்மைச் சகித்துக் கொள்வார்கள்;
ஆக, பிறருக்கு பிரயோஜனப்பட்டால், நம்மை நம் உறவுகள் தேடும்; அது கிடைக்காது என்று உறுதியானால், நம் உறவுகள் நம்மைத் தேடாது; இங்கு, உறவுகள் என்று சொல்வது, சுற்றம் நட்புகள் மட்டுமல்ல; அதையும் தாண்டி, தன் மனைவி/கணவர், பிள்ளைகள், பெற்றோர், சகோதர சகோதரிகளையும் உள்ளடக்கியதே!
இதையெல்லாம் உணர்ந்துதான், ஔவைக்கிழவி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு பாடலைப் பாடி உள்ளார்; “இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள்” என்று பாடுகிறாள்; பொருள் இல்லாதவனை இல்லதரசியும் (மனைவியும்) தேட மாட்டாள்; அது பரவாயில்லை; ஆனால் பெற்ற தாயும் தேடமாட்டாள் என்று சொல்வது நடுங்குகிறது; ஆனாலும் அதுதான் உண்மைநிலை;
எனவே, நாம் வாழ்வில், அதாவது குடும்ப வாழ்க்கையில், செய்யும் தொழிலில், நம்முடைய முயற்சிகளில், தோற்றுக் கொண்டே இருந்தாலும், இந்தக் உறவுகள் என்ற கூட்டத்தை விட்டு விலகி விடக் கூடாது; அவ்வாறு விலக விலக, நமது தோல்விகள் நம்முடைய இயலாமையால் ஏற்பட்டது என்றே இந்தக் கூட்டம் தீர்மானித்து விடும்; எனவே இந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டே, தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே வாழவேண்டும்; எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும், கூட்டத்தை விட்டு விலகிவிடக் கூடாது; நம்மை தனிப்படுத்த விடக் கூடாது; நாம் தனிமையானால், நம் மனைவி மக்கள், பெற்றோர், உற்றோரை விட்டு தனிமையாக இருக்கவே விரும்புவோம்; அது வேறு விவகாரங்களுக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும்; அப்படித்தான் பலர் தன்னைத் தனிமைப்படுத்தி, இந்த உறவுகளை விட்டு விலகி இருக்க விரும்பி, தனிமைபட்டுப் போகிறார்கள்; அதன்பின்னர், யாரும் நம்மை எப்போதுமே தேட மாட்டார்கள்; அது இன்னும் நம்மை காயப்படுத்தும்; அதற்கு இடமே கொடுக்கக் கூடாது;
நாம் தவறு செய்திருந்தால்கூட, அது ஏதோ, நாம் தெரிந்து செய்த தவறில்லை என்றும், சூழ்நிலை காரணமாக அது நடந்து விட்டது என்றும் நம்மை சுற்றி உள்ளவர்கள் ஒரு நேரத்தில் உணருவார்கள்; அதுவரை காத்திருக்க வேண்டும்; நமது அடுத்த முயற்சி வெற்றியடையும் போது, அது அழுத்திப் போய்விடும்; அதற்குப் பயந்து கொண்டு, நாம் இதுவரை கட்டிக்காத்த நமது பெயர் கெட்டு விட்டதே என்று நாமாக நினைத்துக் கொண்டு கூட்டத்தை விட்டு விலகி விடக் கூடாது;
நாமே நமக்கு ஒரு பெயர் (இமேஜ்) இருப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடாது; நம்மைப் பற்றி, நாம் இல்லாதபோது, நம்மைச் சுற்றி இருப்பவர்கள், எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று நாமே கற்பனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் ஒருவிதமாக நம்மைப்பற்றி நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்; அதில் பாதி உண்மை இருந்தாலும் பாதி கற்பனையாகவும் இருக்கும்; ஆனாலும், இந்தக் கூட்டம், நம்மைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறதோ அது நிரந்தரம் இல்லை என்பதை நான் உணர வேண்டும்; இதுதான் வாழ்க்கைப் பாடம்; அது, நம் வாழ்வின் முறையில் மாறிக் கொண்டே இருக்கும்; முடிந்தவரை நாம் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் காலத்தில், இந்த இமேஜ் மாறிவிடும்; தவறாக நினைத்தவர்கள்கூட, சரியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்; எனவே இதற்காக கூட்டத்தை விட்டு விலகி ஓடத் தேவையில்லை;
நம் வாழ்க்கையில் பயணிக்கும் பெரிய சாலையை விட்டு எப்போதும் விலகி விடக் கூடாது; காட்டுப்பாதை, குறுக்குவழிகள், நாம் பயப்படும்போது தெரியும்; ஆனால் அவைகள் செல்லும் வழியில் சென்றால், தனிமைப் படுத்தப் பட்டு விடுவோம்; பெரிய பாதையே சிறந்ததும் நிரந்தரமானதும்கூட; காட்டுப்பாதையில் வழி தெரியாமல் இருக்கும்போது, நம்மை தவறாக வழிநடத்தும் ஆட்கள் அதிகம் இருப்பர்; அந்த ஆட்களுடன் பழக்கம் ஏற்படும்போது, ஒருபோதும் பெரிய சாலைக்கு வரவேண்டும் என்ற எண்ணமே நமக்கு ஏற்படாது; இருட்டில் வாழும் முறையைக் கற்றுக் கொடுத்து விடுவர்;
நாம் எவ்வளவு தவறு செய்தாலும், அது எல்லாமே பெரிய சாலை என்னும் இயல்பான வாழ்க்கையிலேயே நம் கூட்டத்துக்குள்ளேயே இருந்து கொண்டே இருக்க வேண்டும்;
இது ஏதோ புரியாததுபோல இருந்தாலும், திரும்பத் திரும்ப படிக்கும்போது எப்போதாவது ஒரு தெளிவு கிடைக்கும் என்பதற்காகவே எழுதப்பட்டது; கீதையின் விளக்கத்தை வேறு ஒரு மொழிநடையில் எழுதியது என்றும் கருதலாம்;

**

No comments:

Post a Comment