Tuesday, March 7, 2017

Fake Food Hatanaka

Fake Food Hatanaka
சிறு வயதில் சொப்பு விளையாட்டு இனிமையானது; ஒரு சிறு கொட்டாங்காச்சியில் மணலை அள்ளிப் போட்டு அதை சோறு என்று சாப்பிடக் கொடுப்பர்; இப்படி சாப்பாட்டு விளையாட்டுகள் ஏராளம்;
டீக்கடைகளுக்குப் போனால், அங்கு ஒரு ஜாடியில் பிஸ்கட்டுகளை அழகாக அடுக்கி இருப்பர்; நாம் அதை எடுத்துக் கொள்ளலாம்; பார்க்கும் போதே சாப்பிட தோன்ற வேண்டும் என்பதற்காக இப்படி வெளியில் தெரியும்படி செய்திருப்பர்;
இப்போதைய பெரிய ஓட்டல்களில் உணவுப் பொருள்களை போட்டா எடுத்து படங்களாக மாட்டி இருப்பர்; அப்படியே இலையில் நமக்காக பரிமாறி இருப்பதைப் போன்றே இருக்கும்; இது ஒருவகை வியாபார உத்திதான்! “என்னப்பா இருக்கு சாப்பிட?” என்று கேட்ட காலம் போய் மெனுகார்டும், இந்த போட்டோ பொருள்களும் நமக்கு எதுவேண்டும் என்பதை முடிவு செய்கின்றன;
ஆனால் ஜப்பானில் இப்போது ஒரு புது முறையை அறிமுகம் செய்து ஓஹோ என்று ஓடிக் கொண்டிருக்கிறது; செயற்கையாக உணவுப் பொருள்களை அப்படியே செய்து அதற்கு பெயிண்ட் அடித்து, உண்மையான பொருள்போலவே அடுக்கி வைத்திருப்பர்; அதைப் பார்க்கும்போது, இந்தப் பொருளை நாம் சாப்பிட வேண்டும் என்று ஒருவித ஆசையைத் தூண்டி விடுமாம்!
இப்பவும் இங்கு மெனு கார்டைப் பார்த்து அது என்ன உணவுப் பொருள் என்று யூகிக்க சிரமாக உள்ளது; அதற்கு இது எவ்வளவோ மேல்! கண்ணால் பார்த்த பொருளைச் சாப்பிட ஆர்டர் கொடுக்கலாம்! செயற்கை உணவுப் பொருள், செயற்கை என்று தெரியவே தெரியாதாம்! அப்படியே உண்மையான உணவுப் பொருளாகவே, அல்லது அதற்கும் மேலாகவே கவர்ச்சியாகத் தெரியுமாம்!
இப்படிப்பட்ட செயற்கை உணவுப் பொருள்களை செய்துதரும் வல்லுநர்களுக்கு ஜப்பானில் கிராக்கி உள்ளதாம்!
நம்மூரில் திருமண மண்டபத்தில் பழங்களை வெட்டி, வித்தியாசமான டிசைன்களில் வைத்திருப்பர்; அதைப் பார்த்தவுடன் அந்தப் பழத்தை வாங்கிச் சாப்பிட ஆரம்பிப்போம்! அதுபோலவே இதுவும்;
1920-களில் மருத்துவக் கல்லூரிகளுக்கு, மனிதரின் உடலின் பாகங்களை செயற்கையாகச் செய்து கொடுத்து வந்தனராம்! பின்னர், அந்தக் கலைஞர்களை ஓட்டல் நடத்துபவர்கள் அணுகி, உணவுப் பொருள்களையும், மீன், கோழி, முட்டை இவைகள் உட்பட உணவுப் பொருள்களைச் செயற்கையாகச் செய்து தரும்படி கேட்டு அதை அவர்களின் ஓட்டல்களில் பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்தனராம்!
இப்போது ஒருபடி முன்னேறி, உண்மையான உணவுப் பண்டமாகவே, செயற்கையாக செய்து வைத்துள்ளார்களாம்! இது ஒரு தனிக் கலையாகவே வளர்ந்து வருகிறதாம் ஜப்பானில்!
**


No comments:

Post a Comment