Wednesday, July 16, 2014

நினைவுகள்-8

பொய் சொல்லுங்கள்!
ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவனின் நடவடிக்கைகள், பேச்சு, செயல்பாடு இவைகளைக் கொண்டு, மொத்த கணிப்பாக, கணிக்கப்படுகிறது. நம் செயல்பாடு சிலருக்கு பிடித்தமாதிரி இருந்தாலும், வேறு சிலருக்கு பிடிக்காமலும் இருக்கிறது.

நம் கவனமெல்லாம், நமக்கு வேண்டியவர்களிடம், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும், நம்மைப் பற்றி அவர்கள் என்ன அபிப்பிராயம் கொள்ள வேண்டும் என்பதுமே!
நம்மைப் பற்றிய உண்மைகளை அவசரப்பட்டு அடுத்தவருக்குச் சொல்லிவிட வேண்டாம். அதைக் கொண்டு, அவர், நம்மைப்பற்றி அவசர அவசரமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார். ஏற்கனவே அவருக்கு, நம்மைப் பற்றிய ஒரு தவறுதலான அபிப்பிராயம் இருந்தாலும்கூடப் பரவாயில்லை, மெதுவாக அதையும் மாற்றிவிட முடியும்.

இதற்காக நாம் சொல்ல வேண்டிய பொய்கள்:
  1. உங்களுக்கு 'விதி' (Fate) மீது நம்பிக்கை இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதை பூரணமாக நம்புவதாக வெளியில் சொல்லிக் கொள்ளாதீர்கள்.
  2. அதிஷ்டமே கைகொடுக்கும் என்று ஆணித்தரமாக சொல்லி திரியாதீர்கள். கடுமையான உழைப்பும், அறிவுமே கைகொடுப்பதாக சொல்லுங்கள்.
  3. வேறு ஒருவரின் வெற்றி, அவரின் உழைப்பால், முயற்சியால், அறிவால் வந்ததாக ஒப்புக் கொள்ளுங்கள். அது அவருக்கு வேறு வகையில் கிடைத்ததாக ஒருபோதும் பிறரிடமும் சொல்லாதீர்கள். அது உண்மையாய் இருந்தாலும்கூட, அவ்வாறு உங்களின் மனச்சாட்சியிடம்கூடச் சொல்லி வைக்காதீர்கள்.
  4. நீங்கள் ஜோதிடத்தை நன்றாகப் நம்புங்கள், பாருங்கள். ஆனால், வெளியில் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றே சொல்லிக் கொள்ளுங்கள். ஜோதிடம் பார்ப்பதில்லை என்றும் சொல்லுங்கள்.
  5. உடல்நிலை சரியில்லை என ஒருபோதும் சொல்லாதீர்கள். சர்க்கரை நோய் இருந்தாலும், அது இப்போது தொந்தரவு இல்லை, சரியாகிவிட்டது என்றே சொல்லுங்கள்.
  6. உங்களிடம் பணம் கையிருப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை. மறந்தும், உங்களிடம் காசு இல்லை, சிரமத்தில் இருக்கிறேன் என்று பிறரிடம் சொல்லி விடாதீர்கள்.
  7. நீங்கள். சொத்து, கார், ஆடம்பரபொருள்கள் ஏதும் இப்போதைக்கு வாங்கும் உத்தேசம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவர்களிடம் அதன் விலை, அந்த பொருளின் தரம், எங்கு கிடைக்கும், என்பதைப் பற்றி இயல்பாக விசாரித்துக் கொண்டே இருங்கள்.
  8. உங்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்றாலும், அதை எடுக்கும்  எண்ணமே இல்லையென்றாலும், ஜப்பான் எவ்வளவு தூரம், அதற்கு விமானக் கட்டணம் எந்தெந்த விமான கம்பெனியில் எவ்வளவு என்று சரியான நபர் கிடைக்கும்போது விசாரித்துக் கொண்டிருங்கள்.
  9. மற்றவர்கள், உங்களிடம் ஏதாவது சந்தேகம் கேட்கும்போது, விபரம் கேட்கும்போது, (உங்களின் தொழில்பற்றிக்கூட) உங்களுக்குத் தெரிந்த முழு விபரத்தையும் நூறு சதம் சொல்லிவிடாதீர்கள். அவரின் பிரச்சனைக்கு முதல் பத்து சதம் மட்டுமே போதும். அது தவறுதலாக இருந்தால்கூட பரவாயில்லை.
  10. மற்றவரிடம் பேசும்போது, பதட்டப்படாதீர்கள். வேகமாக பேசாதீர்கள். இது, உங்களுக்கு விபரம் (அறிவு) குறைவு என்று அடுத்தவர் எண்ணும்படி செய்கிறது. அவசரமாகப் பேசும்போது, உண்மையை பேசவேண்டிய சூழ்நிலையும் வருகிறது.
  11. நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பதாகவே பிறரிடம் தெரிவித்துக் கொள்ளுங்கள்.
  1. ஒருபோதும் "ஒருகட்சி அரசியல்" பேசாதீர்கள். (நீங்கள் ஒரு கட்சியை சேர்ந்தவராய் இருந்தாலும் கூட, உங்கள் கட்சிக்காரரிடமே உண்மையான அரசியல் நிலையைப் பேசிவிடாதீர்கள்). நீங்கள் அரசியல் பேசாமல், அடுத்தவர் பேசும்போது 'அவர் சொல்வது சரி' என்றே ஒப்புக் கொள்ளும் முறையில் பேசுவிடுங்கள். உண்மையில் நீங்கள் அரசியலை பிறருடன் அலச வேண்டாம்.
  1. கட்டிய மனைவிதானே, பெற்ற பிள்ளைகள்தானே என்று அவர்கள் முன்னிலையில் தரம்குறைந்த வார்த்தைகளை (அசிங்கமான வார்த்தைகள்) உபயோகிக்காதீர்கள். எப்போதும், நீங்கள் உங்களின் கடவுளிடம் பேசுவதாகவே எண்ணிக்கொள்ளுங்கள்.
  1. வீட்டிலிருக்கும்போதும், சிறப்பாகவே உடுத்திக் கொள்ளுங்கள்; அரைகுறை ஆடையில் யாரையும் சந்திக்காதீர்கள். அது ஏற்கனவே உங்கள் மேல், அவர்கள் வைத்திருந்த அபிப்பிராயத்தை மாற்றிவிடும்.
  1. வெற்றி அடைந்தவர்கள் அனைவரும் இந்த பொய்களை நடைமுறைப் படுத்தியதாக ஒப்புக் கொள்கிறார்கள். 
**************
அதற்காக, பிறரை ஏமாற்றச் சொல்லவில்லை. பிறரிடம், நம்மைப் பற்றிய அபிப்பிராயம், நல்லவிதமாக சென்றிருக்க வேண்டும். இது ஒரு சைக்காலஷி, அவ்வளவே.  ஒருவரிடம் சென்று, 'நான் நல்லவன், நான் நல்லவன்' என்று சொல்லிக் கொள்ளமுடியாது. ஆனால், அவர், வேறுஒருவர் மூலம், 'நாம் நல்லவர்' என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியது நமது கடமையும் அவசியமும் கூட!  "ஏன்  அவ்வாறு தெரிவிக்க வேண்டும்; நான் இயல்பில் நல்லவன்தானே; பிறகென்ன எனக்கு விளம்பரம்" என்று கேட்க வேண்டாம். நல்லவன் என்பது பிறர் விஷயங்களில் எதிலுமே தலையிடாத நல்லதனம், அதாவது முற்றும் துறந்த முனிநிலை. அந்த சாமியார்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவையேயில்லை. சாதாரண மனிதனுக்கு இது அவசியமே!

வேறு ஒருவர், நம்மைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம், அவருக்கு இல்லை. மேலும், ஒருவரை மற்றவர் புகழ்வது என்பது குதிரைக் கொம்பே. நாம் மற்றவரை புகழ மாட்டோம். பின் எப்படி, நம்மை மற்றவர் புகழ்வார். நாம் மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

நம்மை புகழ்வதற்கு ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டால், அதற்குப் பெயர் "அல்லக்கைகள்" என்று இந்தக்காலத்தில் சொல்கிறார்கள். அது நமக்கும் கீழே உள்ள 'தரம் குறைந்த கூட்டமாக' இருந்தால், அந்தக் கூட்டத்திற்கு இந்தப் பெயர் பொருந்தும். அதற்கு, நாம்அவ்வப்போது செலவு செய்யவேண்டும். எனவே நமக்கும் கீழே உள்ள 'அந்த அல்லக்கைகள்' வேண்டாம்.
*************

நமக்கு நிகரான நண்பர்கள், வெளிநபர்கள் இவர்களிடம் மேற்சொன்ன பொய்களை நடைமுறைப்படுத்தி வந்தால், நீங்கள் நல்லவர் என்று இந்த உலகம் நம்பும். ஒரு நல்லவரே வெற்றியாளர் என்று உங்களை ஏற்றுக் கொள்வார். அது உங்களின் வாழ்வை உயர்த்தும்.
.


No comments:

Post a Comment