Sunday, July 6, 2014

நினைவுகள்-2

கட்டிடம்:
இந்த மண்ணில் பிறந்ததன் அடையாளமாக அவரவர் ஒரு வீட்டை கட்டி அதில் வாழ்ந்து செல்கின்றனர். எல்லோருக்கும் அவ்வாறான அடையாளம் கிடைப்பதில்லை. இதற்குமுன் கட்டப்பட்ட வீடுகளுக்கு எந்த கட்டிட விதிமுறைகளும் இல்லாதபோதும் அவை நூற்றாண்டை தாண்டி வாழ்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் வீட்டின் உறுதி தன்மைக்காகவே கட்டிடத்தின்  கட்டுமானப் பொருள்கள் உபயோகிக்கப்பட்டன. இப்போதோ, சிக்கனம், செலவு குறைப்பு, என்ற பல மேதாவிகள் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, கட்டிடத்தின் உறுதித் தன்மையை கோட்டை விடுகின்றனர்.
நம்மிடம் அதிக அளவுக்கு பணம் இருந்தாலொழிய, நம்மால் தனிப்பட்ட வீட்டை கட்டி அழகு பார்க்க முடிவதில்லை. அளவான பணம் இருப்பவர், மற்றவர் சொல்வதை மட்டும் கேட்டு மட்டுமே கட்டிடம் கட்டமுடியும். அதனால் தனி அனுபவம் என்பது கிடைக்காது. அந்த அனுபவம் தேவையில்லை என்றே பலரும் நினைக்கின்றனர்.
நகரங்களில் வீடுகள் வெகுவாக வளர்ந்து வருவதால், அரசு அதை ஒரு வரைமுறைக்குள் கொண்டுவர நினைத்தது. அதை செயல்படுத்துவதில்தான் பல சிக்கல்களை சந்தித்தது. எப்போதுமே இதுபோன்ற ஒரு மிக அத்தியாவசியமான, காலாகாலத்துக்கும் இருக்க வேண்டிய ஒரு சட்ட திட்டத்தை மிக தெளிவாக வரையறுத்திருக்க வேண்டும். ஏனோ அவ்வாறு செய்யவில்லை அல்லது செயல்படுத்தவில்லை. எப்போதுமே, மக்களின் மனநிலையும், கட்டுப்பாடு இல்லை என்றால், அதை மீறுவதில் ஒரு ஆனந்தம் அல்லது அதன் கெடுபிடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமலும் மீறிகின்றனர். மக்கள் மனநிலைக்கு எதிரான எந்த சட்டமும் நிலைத்து நிற்பதிலும், அதை செயல் படுத்துவதிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
ஒரு சட்டம் எவ்வளவு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்கு சிங்கப்பூரில் உள்ள கட்டிட கட்டுமான சட்டம் ஒரு உதாரணமாக சொல்வர். அங்கு ஒருவர் வீடு அல்லது பெரிய கட்டிடம் கட்ட நினைத்தால், அவரின் பண வசதிக்கேற்ப எவ்வளவு உயரத்தில் வேண்டுமானாலும், பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாமாம்; ஒரு கட்டுப்பாடும் கிடையாதாம். ஆனால் அவர்கள் இரண்டு விதிமுறைகளை மட்டும் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டுமாம். ஒன்று, தரைதளத்தை வானக நிறுத்துக்குத் தவிர வேறு எந்த உபயோகமும் செய்யக் கூடாதாம். இரண்டு, அந்த கட்டிடத்தின் வீதியை ஒட்டிய முகப்பில் ஒரு பொதுகழிப்பிட வசதி கண்டிப்பாக செய்யவேண்டுமாம். இதைத் தவிர அவரின் ஆர்கிடெக்ட், ஸ்டக்சுரல் என்ஜினியர் என்ன அறிவுரை சொல்கிறாரோ அதன்படி அந்த வீட்டின் உரிமையாளர் தன் விரும்பம் போல கட்டிடத்தை கட்டிக் கொள்ளலாம்.
ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கட்டிட விதிகளோ மிகக் கடுமையானது; பொதுவாக, கடுமையான விதிகள், விதிமீறலையே சந்திக்கும். அதன்படியே சென்னையும் அதிகப்படியான விதிமீறலையே சந்தித்தது.
நான்கு கிரவுண்ட் மனையில் வீடுகட்டுபவர் வேண்டுமானால், கட்டுமான விதிகளை கடைப்பிடிக்க முடியும். ஆனால் கால் கிரவுண்ட் மனையில் வீடுகட்டி அழகு பார்க்க நினைப்பவருக்கு இந்த விதிகள் உண்மையில் அவர்களின் தலையில் எழுதப்பட்ட விதியே தவிர, அனுசரிக்கவேண்டிய விதிகள் அல்ல.
லண்டனில் ஏற்கனவே நிர்மானிக்கப்பட்ட வீதிகள் உள்ளன. எனவே அங்கு கட்டிட கட்டுமானம் என்பது விதிகளுக்கு பொருந்தி உள்ளன. சென்னையோ, ஏற்கனவே தானாகவே வளைந்து, நெளிந்து பாம்பு வடிவ வீதிகளே அதிகம். இங்கு ஒரே அளவில் எந்த வீதிகள் இருக்காது. எனவே வீதியின் அகலம் என்று எதை எடுத்துக் கொள்வது. வீதியின் அகலத்திற்கு ஒன்னறை மடங்குக்கு மேல் கட்டிடத்தின் உயரம் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி. இந்த உயரப் பிரச்சனை எதற்காக என்றால், அந்த கட்டிடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் (தீ பிடித்தால்) அங்கு தீயனைப்பு வண்டி செல்ல போதுமான வழி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட சட்டமாம். ஏன், தீயனைப்பு வண்டியின் அகலத்தை குறைத்து ஒரு வண்டியை செய்து கொள்ளலாமே. அது ஒரு லிப்ட் போல பல அடி உயரத்துக்கு எழும்பலாமே? யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
மற்றொரு விதி என்னவென்றால், மனையில் பக்கவாட்டில் காலி இடம் விடவேண்டும் என்பதும் ஒரு விதி. வளர்ந்த சென்னையில் இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. புதிதாக உருவாகும் மனைகளுக்கு இது பொருந்தலாம். அதுவும்கூட சிறு மனைகளுக்கு இதில் விதிவிலக்கும் அளிக்கலாம். கேட்டால், ஒரு வீட்டுக்கு வெளிச்சம் வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது என்கிறது சட்டம். சென்னையில் எத்தனை வீடுகள் இந்த விதிகளின் அடிப்படையில் உள்ளது? ஏன் மக்கள் சென்னை நகருக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் உள்ள மனைக்கு பெரிய சலுகைகள் (ரோடுவசதி, மின்வசதி, கழிவுநீர்வசதி) செய்தால் அங்கு மக்கள் குவிவார்களே! யோசிக்க வேண்டிய விஷயங்கள்தான்.

.

No comments:

Post a Comment