தத்துக்
குழந்தை (Adopted child)
பொதுவாக
தத்துக் குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பது என்பது இந்துக்களிடம் வெகுகாலமாக
இருந்துவரும் பழக்கம். இந்து மத தத்துவத்தின்படி ஒருவன் மோட்சத்தை அடைய
வேண்டுமானால் அவன் ஆண்குழந்தையை பெற்று அவன் மூலம் அவனின் மூதாதையருக்கு பிதுர்
கர்மம் செய்ய வேண்டும். இதற்காக மட்டுமே ஆண் குழந்தையை தத்து எடுக்கும் வழக்கம்
இருந்து வந்தது. மற்ற மதங்களான கிறிஸ்தவம், முஸ்லீம் மதங்களில் இந்த வழக்கமே
இல்லை.
இந்து
மதத்திலும், ஒரு ஆண் குழந்தையை மட்டுமே தத்து எடுக்க முடியும் என்றும், அதுவும்
ஒரு ஆண் குழந்தை இல்லையென்றால் மட்டுமே தத்து எடுக்க முடியும் என்று கட்டுப்பாடும்
இருந்தது. ஆனால் அந்த பழைய வழக்கங்களுக்கு முடிவு கட்டி, 1956ல் புதிய சட்டத்தை
சுதந்திர இந்தியா கொண்டு வந்தது. இந்த புதிய சட்டப்படி தற்போதைய நிலை:
- ஆண் குழந்தை மட்டுமல்ல, ஒரு பெண்குழந்தையையும் தத்து எடுக்கலாம்.
- தத்து எடுக்கப்படும் குழந்தை அதே ஜாதியை சேர்ந்திருக்க வேண்டும் என்ற பழைய கட்டுப்பாட்டை நீக்கி, யாரை வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம் என்கிறது புதுச் சட்டம்.
- இந்து கணவன் மட்டுமே (மனைவி சம்மதமில்லாமல்) தத்து எடுக்கலாம் என்ற பழைய சட்டத்தை நீக்கி, மனைவியின் சம்மத்துடன் மட்டுமே தத்து எடுக்க முடியும் என்ற விதியை கொண்டு வந்தது.
- ஒரு ஆண், ஒரு பெண்குழந்தையை தத்து எடுத்தாலும், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்தாலும், தத்து எடுப்பவருக்கும், தத்துக் குழந்தைக்கும் வயது வித்தியாசம் குறைந்த பட்சம் 21 வயது வித்தியாசம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போது உள்ளது.
- தத்து எடுக்கப்படும் குழந்தைக்கு 14 வயதுக்கு கீழே இருக்க வேண்டும், அதற்குமேல் வயதுடைய குழந்தையை(!) தத்து எடுக்க முடியாது. (15 வயது முடிந்திருக்கக் கூடாது).
- குழந்தையின் இயற்கை பெற்றோர் (Biological parents) இருவரும் சேர்ந்தே வளர்ப்பு பெற்றோருக்கு குழந்தையை தத்து கொடுக்க முடியும். (யாராவது ஒருவர் இல்லாமல் போனால், மற்றவர் மட்டும் கொடுக்கலாம்).
- ஒருதரம் தத்துக் கொடுத்த குழந்தையை, வேறு ஒருவருக்கு மாற்றி தத்துக் கொடுக்க முடியாது.
- கணவனை இழந்த பெண்மணியும் ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியும்.
- திருமணமே ஆகாத ஒரு பெண்ணும் ஒரு குழந்தையை தனக்காகத் தத்து எடுக்க முடியும்.
- ஒரு ஆண்குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால், அவருக்கு ஒரு மகனோ, இறந்த மகனின் மகனோ, இறந்த பேரனின் மகனோ உயிருடன் இருக்கக் கூடாது.
- அதேபோல், ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால், அவருக்கு ஒரு மகளோ, இறந்த மகளின் மகளோ, இறந்த பேத்தியின் மகளோ உயிருடன் இருக்கக் கூடாது.
இதையெல்லாம்
இந்து மதத்தை சேர்ந்த ஒருவர்தான் செய்யமுடியும். வேறு மதத்தை சேர்ந்தவர் செய்ய
முடியாதாம். வேறு மதத்தை சேர்ந்தவர் தத்து எடுக்க வேண்டும் என்றால், அவர் சாதாரண
வளர்ப்புக் குழந்தையாக மட்டுமே வளர்த்து அவர் ஏதாவது சொத்தை ஆதரவாக எழுதி
வைக்கலாம். சட்டபூர்வ தத்து குழந்தையாக எடுக்க முடியாது. அதாவது ஒரு வாரிசு என்று
வளர்க்க முடியாது.
ஏழைக் குழந்தைகளைத் தத்து எடுப்பது:
இந்தியாவில்
அதிகமான அனாதை இல்லங்களும், ஆதரவற்ற குழந்தைகளும் உள்ளன. இவர்களை வளர்ப்பதற்கென்றே
பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் உள்ளன. அதில் உள்ள பல குழந்தைகளை வெளிநாட்டில்
இருப்பவர்கள் தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த 'இந்து தத்துச்
சட்டம் தேவையில்லை. நேரடியாக இந்தியாவில் உள்ள மாவட்ட கோர்ட்கள் மூலம் கோர்ட்
அனுமதி பெற்று, தத்து எடுத்துக் கொண்டு அவர்கள் நாட்டிற்கு கூட்டிக் கொண்டு
போகலாம். மத்திய அரசின் சில சட்ட நடைமுறைகளையும், சுப்ரீம் கோர்ட் பரிந்துரைகளையும்
மட்டும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
ஒரு மன உறுத்தல்:
எத்தனையோ
குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளாக ஆகியுள்ளன. சிலர் மட்டுமே,
ஆதரவற்ற இல்லங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பெற்றோர் ஆதரவு கிடைத்த குழந்தைகள்
கடவுளின் பூரண அருள் பெற்றவையே! அது இல்லாமல் போன குழந்தைகளை மற்ற மதத்தினரும்
தத்து எடுத்துக் கொள்ள சட்டவழிகளை ஏற்படுத்தலாமே! இந்துக்களுக்கு மட்டுமே உள்ள
சட்டத்தை மற்ற மதத்தினருக்கும் விரிவு படுத்திக் கொள்ளலாமே! ஒரு இந்து, அவன்
மோட்சத்தை அடைய ஒரு குழந்தை வேண்டும் என்று இருந்த இந்த சட்டத்தை மாற்றியதுபோல,
மற்ற மதத்தினரும் சட்டபூர்வ தத்து எடுத்துக் கொள்வதற்காவது சட்டம்
அனுமதிக்கலாமே? காத்திருப்போம்...
.
No comments:
Post a Comment