Saturday, July 19, 2014

நினைவுகள்-12

சொத்துச் சுதந்திரம்.
நம்மை, கொஞ்சம் பின்னோக்கி கொண்டுசென்றால், நமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்வு கிட்டத்தட்ட அடிமை வாழ்வே!
அந்தக்காலத்தில் அரசர்கள் மக்களை ஆண்டார்கள். ஏதோவொரு அரசரின்கீழ் நமது மூதாதையர் வாழ்ந்திருப்பர். மொத்த நிலமும் அரசருக்கே சொந்தம். அதை விவசாயம் செய்பவர்கள், அனுபவிப்பவர்கள், அந்த நிலத்தில் வரும் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு 'வருமானத்தை' அரசருக்கு கொடுத்துவிட வேண்டும். அதை வசூலிக்க அதற்கென அரசரின் ஆட்கள் இருப்பார்கள்.

நம் நாட்டு அரசர்கள், அந்நிய அரசர்கள், இவர்களின் ஆட்சிமுறை முடிந்து, பிரிட்டீஸ் ஆட்சிமுறை வந்தது. அவர்களும் ஆரம்பத்தில் அரசர்களின் முறை வசூலையே செய்தனர். சில பகுதிகளை அந்தப் பகுதியில் உள்ள பிரபலமானவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். அவர்கள் அந்த நில வருமானங்களை வசூலித்துக் கொள்ளலாம். அதில் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்தி விட்டால் போதும். அந்த மாதிரியானவர்களுக்கு 'ஜமின்தாரர்கள்' என்று பெயர். (ஜமின்=நிலம்).
பிரிட்டீஸ் அரசானது, தன்னிடம் இராணுவத்தில், மற்ற அரசாங்க காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபட்டவர்களுக்கு பரிசாக சில கிராமங்களையே (அல்லது ஒருபகுதி கிராமத்தையே) வழங்கி இருந்தன. அவைகளுக்கு 'இனாம்கள்' எனப்பெயர் (இனாம்=இலவசம்). மொத்த கிராமத்தையும் கொடுத்திருந்தால் அதை 'மேஜர் இனாம்' என்றும், ஒருபகுதி கிராமத்தை வழங்கி இருந்தால், அதை 'மைனர் இனாம்' என்றும் சொல்லுவார்கள். இது அல்லாமல், பொது சமுதாய கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கு (அதாவது கோயில் பூஜாரி, அர்ச்சகர், வேதம் கற்பிக்கும் சமஸ்கிருத பண்டிதர்கள், முடிதிருத்துபவர், துணி வெளுப்பவர், போன்றவர்) இனாமாக நிலம் கொடுத்துள்ளார்கள். இதை 'மானியம்' என்பர். இந்த மானியங்களில் பலவகைகளும் உண்டு. அந்த சமுதாய வேலையை செய்யும்வரை அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு, அதற்குபின் கிடைக்காது. மற்றொன்று, அந்த மானிய நிலத்தை முழுஉரிமையுடன் தலைமுறையாக அனுபவிக்கும் உரிமையும் கொடுத்திருந்தார்கள்.

பின்னர், இந்த பிரிட்டீஸ் அரசு, இதில் பெருத்த சீர்திருத்தத்தை செய்தது. அந்த அரசால், நில வருமானத்தை (Rent, profit) வசூலிக்க முடியவில்லை. எனவே இனி அரசுக்கு யாரும் 'வருமானமாக' ஆறில் ஒருபங்கு கொடுக்க வேண்டாம். நிலத்தை நீங்களே பூர்வீகமாக அனுபவித்துக் கொள்ளுங்கள், ஆனால் நிலத்தின் தரத்துக்கேற்ப வரி (Tax) மட்டும் கட்டிவிடுங்கள் என்று சட்டம் கொண்டுவந்தது. அதன்படி மிக அதிகமானவர்கள் நில உரிமையாளர்கள் ஆனார்கள். ஆனாலும், ஜமின் சொத்துக்கள் எல்லாம் ஜமின்தாரர்களிடமே உரிமை இருந்து வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஜமின் ஒழிப்புச் சட்டமும் வந்தது. அதன்படி நிலத்தில் உழைப்பவர்களுக்கே (பயிர் செய்வர்களுக்கே) நிலம் முழு உரிமையுடன் சொந்தம் என்றும், ஜமின்தாரருக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என்றும் சட்டம் விளக்கியது. தமிழ்நாட்டில் பல ஜமின் நிலங்கள் இருந்தன. சென்னையைச் சுற்றி பல ஜமின் கிராமசொத்துக்கள் இருந்தன. இனாம் ஒழிப்புச் சட்டமும் அவ்வாறே.

இப்போது எந்த நிலமும் இந்த கட்டுப்பாடுகளை கொண்டிருக்கவில்லை. ஒன்று, அது அரசாங்கத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலமாக இருக்கும்; அல்லது தனி நபருக்கு முழுஉரிமையுடன் சொந்தமான பட்டா நிலமாக இருக்கும். (பட்டா=அனுபவத்தில் இருப்பது; பட்டாதாரர் =நிலத்தை அனுபவத்தில் வைத்திருப்பவர்). எல்லா நிலங்களின் பட்டாதாரர்களின் பெயர்களை தயாரித்து அந்தந்த வருட கணக்கில் அரசாங்கம் எழுதிக் கொள்கிறது. இந்த பதிவேடு கிராம அதிகாரியிடம் உள்ளது. வரிவசூல் செய்வதற்காக அவர் வைத்துள்ளார். தற்போதைய கம்யூட்டரின் வழியிலும் அதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த நில ஒப்படைப்பு ஏற்பாட்டின்படி, நிலத்துக்கு அடியில் கிடைக்கும் தங்கம், அரிய உலோகங்கள், எரி எண்ணெய், புதையல், இவைகள் எல்லாம் அரசுக்கு சொந்தம். நிலத்தின் மேல் வரும் வருமானம் எல்லாம் பட்டாதாரருக்குச் சொந்தம்.

சுதந்திர இந்தியாவில், நாம் ஒரு சொத்தை, இந்தியாவில் எங்கிருந்தாலும், (காஷ்மீர் தவிர) வாங்கும் உரிமை பெற்றுள்ளோம். அதை அனுபவிக்கும் உரிமை பெற்றுள்ளோம். விற்கும் உரிமை பெற்றுள்ளோம். நம் வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் உரிமை பெற்றுள்ளோம். நாம் அந்த சொத்தை அனுபவித்து வருவதில், நமது அரசு கூட தலையிடமுடியாது; (ஆனால், அவசியமாக பொது நன்மைக்குத் தேவைப்பட்டால், சட்டபூர்வ காரணத்துடன் எடுத்துக் கொள்ளலாம்).

இந்தச் 'சொத்துச் சுதந்திரமானது' சுதந்திர இந்தியாவில் கிடைத்ததே ஒரு சுதந்திரமே! இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் மூதாதையர் சொந்தம் கொண்டாட முடியாத இந்த மண், இப்போது நமக்கே சொந்தமாகி விட்டது. ஆனாலும், ஒவ்வொரு மண்-துகளும், தங்கத் துகளுக்கு நிகரான விலையாகியும் விட்டது விந்தையே!

.

No comments:

Post a Comment