Thursday, July 17, 2014

நினைவுகள்-9

மூன்று மணி நேர வாழ்வு!

நேற்று, ஒரு தெரிந்த பெண்ணுக்கு ஏழுமாதத்திலேயே குறைபிரசவமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இயற்கை பிரசவம். ஆனால் ஒரு மூன்று மணிநேரத்துக்குப் பின் அது இறந்துவிட்டது.

அது அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை. மூத்த குழந்தை ஒரு மகள். அந்த தாய்க்கு, அந்தக் குழந்தை அவசர அவசரமாக பிறந்ததால் அது இறக்கும் என தெரியும்போலும். அழுகை இல்லை. மன சஞ்சலம் மட்டும் கண்ணில் இருந்தது. ஆனால் அவளின் கணவனுக்கோ இது பெரிய இழப்பு போல கண்ணீர் விட்டு அழுதான்.

எதிர்பார்ப்பு இருந்தால், ஏமாற்றமும் இருக்கும் போல! எதிர்பார்ப்பு இல்லாத விஷயங்களில் இந்த ஏமாற்றம் நிச்சயமாக இருக்காது!

அந்த இறந்த சிசுவை அப்படியே விட்டுவிட முடியாது என, அது ஒரு மனித உயிராகவே கருதி, அதற்கு, மயானக் கரையிலேயே, காதுகுத்தும் செய்து, எல்லாச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப் பட்டது.

பெற்றவளுக்கு அந்த சிசுவின் முகம் தெரியாது. அந்த சிசுவுக்கும் இவள்தான் என் தாய் என்றும் தெரியாது; அவளின் அந்த சிசு ஒரு சொட்டு பால்கூட அவளிடம் அருந்தவில்லை! ஆனால் குருதி பாசம்! மனித உறவுகளில் இந்த இழப்பும் ஒரு இழப்புதானோ!

நம்முடன் வாழ்ந்து, பின்னிப் பிணைந்தவர் மறைந்தால் துக்கம் தொண்டையை அடைக்கும். அறிமுகம் இல்லாதவர் இறந்து விட்டால், அது நிகழ்ச்சியாக மட்டுமே தெரியும்; நம்மை அவ்வளவு பாதிக்காது.

ஆனால், இந்த துக்கம், தன் மகன் தன்னிடம் வாழ வரவில்லையோ என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான் போல.

எத்தனையோ இளம் தாய்கள் இப்படியான இழப்புகளை அன்றாடம் சந்தித்து கொண்டுதானிருக்கிறார்கள். பாவப்பட்ட ஜீவன்கள் அவர்கள்! அவர்களின் மனநிலையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதுதான்.


ஒரு குழந்தை கருவாக உருவாவதற்கு 2 மாதத்துக்கு முன்னரே, இறைவன் அவனுக்கு பெயர்சூட்டிவிடுவான் என்கிறது மதங்கள். அப்படிப்பார்த்தால், இங்கு, அந்த பெயர் சூட்டிய குழந்தையின் இறப்பு ஒரு பெரிய உயிரின் மரணமே!


.

No comments:

Post a Comment