ஒரு எகிப்து
பெண்ணின் துணிச்சலான கடிதம்:
எகிப்தின்
அதிபருக்கு வணக்கம்.
"நான்
ஒரு எகிப்து தேசத்து பெண். நான் எகிப்து மண்ணின் மீது மிகுந்த நம்பிக்கை
வைத்துள்ளேன். இந்த கடிதத்தில் நான் எந்தவித அரசியலையும் சொல்லவில்லை. இந்த கடிதம்
மூலம் நான் நாட்டின் ஒற்றுமைக்கு எந்த குந்தகமும் விளைவிக்கவில்லை. ஒரு சாதாரண
எகிப்து பெண் என்ற முறையில் இந்த நாட்டின் அதிபருக்கு இந்த கடிதத்தை
எழுதியுள்ளேன்.
அதிபர்
அவர்களே!
ஒரு
நாடு, அதன் நேர்மை, மரியாதை, நாட்டுப்பற்று (honesty,
respect and patriotism) இந்த தூண்களைக் கொண்டே
தாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் என்னை இந்த சமுதாயம் நடத்தும் விதத்தில் நான்
குழம்பிப்போய் உள்ளதோடு, தைரியத்தையும்
இழந்துவிட்டேன்.
நான் தெருவில்
நடந்து செல்லும்போது என்னை இந்த சமுதாயம் நடத்தும்விதம் மிகுந்த மனவலியைத்
தருகிறுது. என்னை குறுகுறுப்பாக உற்றுபார்த்தல், மிக அசிங்கமான வார்த்தைகளால்
பேசுதல், சில நேரங்களில் பலவந்தப்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளால் நான் மன
நொந்துபோகிறேன்.
நான் அவ்வாறான
மனவலியுடனும், ஒடுக்கப்பட்டும், இரண்டாம்தர குடிமகளாகவும் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்.
நான் தினமும்
அவ்வாறான மன உழைச்சலுடனேயே தினமும் எழுந்து, படிப்புக்கும், வேலைக்கும்
செல்வதுடன், அன்றாட கடமைகளையும் செய்ய வேண்டியுள்ளது. நான் தெருவில் நடக்கும்போது
என்னையே நான் கீழாக நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. பாதுகாப்பாக உணர
முடியவில்லை. நமது எகிப்து நாட்டில், பத்தில் எட்டுபெண்கள் தெருவில் பாதுகாப்பு
இல்லாமலேயே இருப்பதாக உணர்கிறார்கள். இதையும் காட்டிலும், பொது பிரயாண வாகனத்தில்
(பஸ், இரயில் பிரயாணங்களில்) இன்னும் பாதுகாப்பு குறைவாகவே உள்ளதாக
எண்ணுகிறார்கள்.
நான்,
பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்கும் ஒரேஇடம் எனது வீடுதான். என்வீடுதான்
எனக்கு இவைகளிலிருந்து ஆறுதல் அளிக்கிறது. இந்த நாட்டில், பத்தில் ஒன்பது பெண்களை
கொடுமைக்கு உட்படுத்தி கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளனர். கணவன் அவனின் மனைவியை
அடிப்பதில் தப்பில்லை என்றே இந்த சமுதாயம் கருதுகிறது. எனவே வீட்டில் இளம் கணவன்,
அவனின் இளம் மனைவி எதிர்த்துப் பேசினால் அடிக்க உரிமை உள்ளதாக இந்த சமூகம் ஏற்றுக்
கொண்டுள்ள கொடுமை நடக்கிறது.
இந்த
சமுதாயம், என் மக்கள், என்னை சுதந்திரமாகவும், பாதுகாப்பாவும், வாழ விடுவதில்லை.
இது எனக்கு
வாழ்வில் கிடைத்த நரகம் என்றே நினைக்கிறேன். எகிப்தில், பெண்களுக்கு எதிரான
கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில்
நடந்த கணக்கெடுப்பில், நமது எகிப்து நாடு, உலக அரங்கில், மோசமான அரசியல்
ஸ்திரதன்மையில் ஏழாவது இடத்தில் உள்ளதாக கூறுகிறது. மொத்தமுள்ள 135 நாடுகளில்
எகிப்து 128வது இடத்தில் உள்ளது. பெண்களிடத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இந்த
அரசியல் ஸ்திர தன்மைக்கு காரணமாகிறது. இங்கு எகிப்து நாட்டில், நான்கு ஆண்களுக்கு
ஒரு பெண்ணே வேலை வாய்ப்பை பெறுகிறாள்.
பெண்களின்
கல்வி எகிப்தில் போராட்டமாகவே உள்ளது. பெண்களில் கல்வி கற்றவர் 58% மட்டுமே. ஆனால்
ஆண்களின் கல்வி கற்றவர்கள் 75%. பெண்களை பொருளாதாரத்தில் கைகொடுக்கவும்,
அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் சரியான சட்டங்கள் இல்லை.
பெண்களின்
சுகாதாரம் பற்றிய கல்வியே இங்கு அறவே இல்லை. இங்கு எகிப்தில் பிறப்பவர்களில் 14%
தேவையில்லாமலேயே பிறந்துவிடுகின்றனர். அதை கட்டுப்படுத்தும் செக்ஸ்கல்வியும் இங்கு
இல்லை. பெண்களுக்கு கருவை தடை செய்யும் முறையும் தெரியவில்லை. சொல்லிக் கொடுக்கும்
கல்வியும் இல்லை.
இங்கு,
கேன்சர் நோய் மற்றவருக்குப் பரவக்கூடியது
என்று தவறுதலான பிரச்சாரமும் உண்டு. அவ்வாறு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய்
வந்தால், அதை காரணம் சொல்லி அவளின் கணவன் டைவர்ஸ் வாங்கிவிடுகிறான்.
நானும் பலரைப்
போலவே இவ்வாறான கொடுமைகளுடனேயே வாழ்கிறேன், ஏனென்றால் இந்த சமுதாயம் எனக்கு இந்த
தண்டனை என்ற விதியை கொடுத்துள்ளது. இந்த விதியுடனேயே நான் வளர்ந்து, திருமணம்
செய்து, குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறேன்.
நான், ஒரு
வக்கீலாக ஆக எனக்கு விதியில்லை; ஆசிரியராக ஆக விதியில்லை; ஏன் நாட்டின்
அதிபராகக்கூட ஆக விதியில்லை; நான் மௌனமாக்கப் பட்டுள்ளேன். நான் பேசினாலும் அது
எதுவும் முக்கியமானதாக கருதமாட்டார்கள் என்று எனக்கு சிறுவயது முதலே சொல்லி
கொடுக்கப் பட்டுள்ளது. ஏனென்றால் நான் ஒரு பெண் மட்டுமே. எனக்கும் உணர்வுகள்
ஆசா-பாசங்கள் உண்டு என்றாலும் அதை என்னால் காட்டமுடியாது.
இந்த
உலகத்தில் வாழும் மனித இனம் அல்லாத இனத்துடன் நான் இருப்பதாக கருதுகிறேன்.
என்னுடைய உணர்வுகளை நான் வெளிப்படுத்தினால் நான் பலமில்லாதவள்-கோழை என பட்டம்
சுமத்த தயாராகின்றனர். நான் கோழை இல்லை. நான் கோழையாக இருப்பதற்காக பிறக்கவும்
இல்லை. நான் என்னை கோழை என்று யாரும் கருதவும் விரும்பவில்லை. என்னிடம் உள்ள
உணர்வுகள் பலம் வாய்ந்தவை. என்னுள் இருக்கும் தணல் இந்த சமுதாயத்தை ஒளிமிக்கதாக
மாற்றும் சக்தியுடையது. எவ்வாறு இந்த சமுதாயம் இருக்கவேண்டும் என நினைக்கிறேனோ,
அதை நான் அவ்வாறே மாற்ற முடியும். அதனால்தான், நான் இந்த கடிதத்தை உங்களுக்கு
எழுதுகிறேன். இதுவரை என்னிடமிருந்து பறிக்கப்பட்ட, திருடப்பட்ட எதிர்காலத்தை
மாற்றி எழுத விளைகிறேன். இதற்கு உங்களின் உதவியை கோருகிறேன்.
அதிபர்
அவர்களே,
நீங்கள் இந்த
பிரச்சனையின் ஆழத்தை புரிந்து கொள்ள விரும்பினால் நான் வருகிறேன். கடவுள் எனக்கு
இயற்கையாய் கொடுத்த சுதந்திரத்தை, இந்த சமுதாயம் என்னை அடிமையாக ஆக்கி
வைத்துள்ளது. இது எனது எதிர்காலத்தையே இருண்டதாக்கிவிடும்.
எனக்கு
முத்திரை குத்திவிட்டார்கள். காலங்காலமாக இந்த சமுதாயம் என்னை எதை செய்யச் சொன்னதோ
அதையே காப்பியடிக்கச் சொல்கிறார்கள். என்னுள் இருக்கும் எனது ஒளியை வெளியே
கொண்டுவர முடியவில்லை. எனக்கும் வேறு வழிதெரியாமல் இந்த சமுதாயக்
கட்டுப்பாட்டிலேயே உழன்று கொண்டிருக்கிறேன். அதை சாதகமாக்கிக் கொண்டு, பெண்
என்பதால், என்னை வலைக்குள் விழந்த இரையைப் போல இந்த சமுதாயம் கொடுமைப்
படுத்துகிறது.
நான், இந்த
நாட்டில் இரண்டாந்தர குடிமகளாக நடத்தப்படுகிறேன். இந்த விசாலமான, அழகான
பிரபஞ்சத்தில், எதற்கும் உதவாதவளாகக் கருதப்படுகிறேன்; மதிக்கப்படாதவளாக
இருக்கிறேன்; என்விருப்பத்துக்கு அருகதையில்லாதவளாகவும் இருக்கிறேன்.
இவைகள்
எல்லாம் இருக்க, இப்போதும் நான் சிறப்பாக வாழவே ஆசைப்படுகிறேன். எனக்கு, சூழ்நிலை,
அந்த வாய்ப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய பலம்
என்னவென்று எனக்குத் தெரியும்; அதைக்கொண்டே இந்த சமுதாய மாற்றத்தை கொண்டுவருவேன்;
அதற்காகவே நான் படைக்கப்பட்டதாக கருதி கொள்வேன்; நான் இந்த எகிப்தை இதிலிருந்து
காப்பாற்றுவேன் என்று நம்புகிறேன்.
இதனால்தான்,
நான் உரத்த குரலில் மந்திரமாக இதை சொல்லியும், என் அடித்தொண்டையிலிருந்து குரல்
கொடுத்தும் வருகிறேன். உண்மையில் இதுவே இந்த நாட்டின் வெற்றியும்கூட. ஏனென்றால்,
சுதந்திர எகிப்து எனக்குறிய சுதந்திரத்தையும் அளிக்கும்.
அதிபர்
அவர்களே!
நான் உங்கள்
ஒன்று கேட்டுக் கொள்கிறேன். அதை கேட்கும்முன், ஒரு விஷயத்தை தெளிவாக்கவும்
விரும்புகிறேன். உங்களின் இரக்கத்தையோ, பரிதாபத்தையோ கேட்கவில்லை. நானும்
பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தியாக இருந்துவிட்டுப் போகிறேன், அதற்காக உங்களிடம்
இரக்கம் பெற்று வாழ விரும்பவில்லை. நான் இந்த கொடுமைகளில் பாதிக்கப்பட்டவளாக
நினைத்துக் கொள்ளமாட்டேன். நான் எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கும் ஒரு பெண் என்று
நினைத்துக் கொள்வேன். நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது எல்லாம், இந்த சூழ்நிலையில்
உங்களால் எதை செய்யமுடியும் என்பதை தெரிந்து கொள்ளத்தான்.
இங்கு,
எனக்குள்ள பிரச்சனையானது, இந்த வன்கொடுமைகளைத் தாண்டி உள்ள பிரச்சனைகள்தான்.
இவைகள் இப்போது இங்கில்லை என்று எகிப்தில் இனி செய்திகள் வரவேண்டும்.
இருந்தபோதிலும், கல்வியும், ஆட்சி அமைப்பும், சுகாதாரமும், சமுதாயத்தில்
சரிஉரிமையும் மற்றும் சிலவும் மிக முக்கியம் என்றே கருதுகிறேன்.
அதிபர்
அவர்களே!
நானும்
உங்களுடன் சேர்ந்து நமது எகிப்தை உருவாக்குவதில் உதவுகிறேன். நான் எனது நாட்டை
உயர்த்தப் பாடுபடுகிறேன். எனது பறிக்கப்பட்ட எதிர்காலத்தை திரும்ப
பெறவிரும்புகிறேன். அது கிடைக்கும்வரை நான் ஓயமாட்டேன். நான் கேட்டுக்
கொள்வதெல்லாம், எனக்கு என்னுடைய உரிமையை கொடுத்து சுதந்திரப் பெண்ணாக என்னை
வாழவிடுங்கள் என்பதே! நான் சுதந்திர பெண்ணாக மட்டுமில்லை, என்னை மதிக்கும், என்னை
ஆதரிக்கும் என்ற சமுதாயத்துடன் வாழவிட வேண்டும். அது நீங்கள் அதிபராக இருக்கும்
கடைசி நாள் வரை இதுஇருக்க வேண்டும். நீங்கள் எனது போரட்டத்துக்கு உதவ வேண்டும்.
எனக்கும் சரிநிகர் வருமானம் கிடைக்கவும், சரிநிகர் உரிமைகள் கிடைக்கவும், தெருவில்
நடந்து செல்லும்போது என் சதையை தின்ன எண்ணும் அந்த பசிமிருகங்களை எதிர்க்கவும்
எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
கடைசியாக
ஒன்றை கேட்டுக் கொள்கிறேன்!
நீங்கள்
மேடைகளில் பேசும்போது, என்னை (என்போன்ற பெண்களை), "தாய்மார்களே, மனைவியாக
இருப்பவர்களே, சகோதரிகளே'"என்று பேசாதீர்கள். ஏனென்றால், நானும் ஆண்களைப்
போன்றே ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர்தான். குடும்பத்தில், கணவர்களுக்கு
நாங்களும் ஒரு முதலாளி, டாக்டர், என்ஜனியர் தான். மேலும் ஆண்களை பாதுகாக்கும் ஒரு
பெண்போலீஸூம் கூட.
எனவே நீங்கள்
எனக்கு ஆதரவு தரவேண்டும். ஆதரவு தரவேண்டும்.
இப்படிக்கு,
ஒரு எகிப்திய
பெண்.
(நன்றி:
Egyptian Streets)- a blog
No comments:
Post a Comment