1956ல் நடந்த ஒரு சுவாரசியமான வழக்கு இது.
(Sadasivam
vs State of Madras, in AIR 1957 Mad 144).
சதாசிவம் என்பவர் பழைய மெட்ராஸ் டவுனில் பெரிய அளவில் சலூன்
கடை வைத்திருந்தார். அவரிடம் 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். அப்போது
இருந்த சட்டப்படி, எந்த நிறுவனமாக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக விடுமுறை விடவேண்டும்,
அதை அந்த நிறுவனத்தில் எல்லோருக்கும் தெரியும்படி எழுதியும் வைக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தது.
எனவே இவரும், தன் சலூன் கடைக்கு திங்கட்கிழமை விடுமுறை என்று
போர்டு எழுதி தொங்க விட்டிருந்தார். ஆனால் அன்று திங்கட்கிழமையாக இருந்தபோதும் சலூன்
கடையை திறந்திருந்தார். அவரின் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த, அரசு தொழிலாளர் நல அதிகாரி, சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தி வழக்குப் போட்டார்.
மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவரின் வாதம் என்னவென்றால், (1) 'அவர் தவறே செய்யவில்லை
என்றும், இதுவரை திங்கட்கிழமை விடுமுறை விட்டுவந்ததாகவும்,
பின்னர் ஷிப்ட் முறைக்கு மாறிவிட்டதாகவும்,
எனவே தனக்கு அந்த விடுமுறை சட்டம் செல்லாது என்றும் வாதிட்டார். (2) "ஒரு இந்தியன் அவன் விரும்பும் தொழிலை விரும்பியபடி செய்து கொள்ள அடிப்படை உரிமையை
இந்திய அரசியல் சாசனம் பிரிவு 19(1)(g)ல் வழங்கப் பட்டுள்ளது
என்றும், எனவே அதில் அரசாங்கம், கட்டுப்பாடுகள்,
விதிகள் என்ற பெயரில் எனது அடிப்படை உரிமையில் மூக்கை நுழைக்க எந்த சட்டபூர்வ
உரிமையும் கிடையாது" என்பது அவரின் சட்டபூர்வ வாதம்.
அவரின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாத மாஜிஸ்டிரேட் தண்டனைத் தீர்ப்புக்
கொடுத்தார். அதை எதிர்த்து சலூன் கடைகாரர்,
ஐகோர்ட்டுக்கு ரிவிஷன் மனு செய்தார். இந்த வழக்கானது ஐகோர்ட்டில்,
சலூன் கடைகாரரின் அடிப்படை உரிமையான அவரின் விருப்பம்போல வியாபாரம் செய்து
கொள்ளும் உரிமை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதா என்பதை விசாரித்தது.
அந்த வழக்கில் வாதம் செய்யப்பட்ட விஷயங்கள்;
பழைய காலத்தில்,
யூதர்கள் (Jews) வாழும் பகுதியில் உள்ள சலூன் கடைகள்
ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்திருக்கும். ஆனால் மதியம் 1.30 மணிக்கு மேல் கடையில் வேலை
செய்யும் வேலைக்காரருக்கு விடுமுறை கொடுத்துவிட வேண்டுமாம். ஏனென்றால், யூதர்களுக்கு
சனிக்கிழமைதான் வேலைசெய்யாத நாளாகும். வாரத்தில் ஒருநாள் முழுவதும் விடுமுறைவிட வேண்டும்
என்ற சட்டம் இங்கிலாந்து நாட்டில் 1830களிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், முடிதிருத்தோவோரின் ஞாயிறு விடுமுறை சட்டம் 1830 இருந்தது. (Hairdressers'
and Barbers' Shops (Sunday Closing) Act, 1830). யூதர்களாக இருந்தால்
அவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமை விடுமுறை விட்டுக் கொள்ளலாம் என்பது
சட்டம்.
இந்தியாவில் இந்த விடுமுறை விடும் முறைகள் ஏதும் இல்லாமல்தான்
இருந்ததாம். ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் சட்டத்தைப் போன்றே கடைகளுக்கு விடுமுறைவிடும்
சட்டம் என்ற சட்டத்தை மதராஸ் மாகாணத்துக்கு 1942ல் கொண்டுவந்துள்ளார்கள். அந்த சட்டத்துக்கு
பெயர் The Weekly
Holidays Act, 1942 (Central Act XVIII of 1942). இந்த சட்டம் கடைகள்
நடத்தும் நிறுவனத்துக்கு மட்டும் பொருந்தும். தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில்கள், கப்பல்துறை தொழில்கள் இவைகளுக்கு
பொருந்தாது. சாதாரண கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், கிளாக்குகளாக வேலைசெய்யும் நிறுவனங்களுக்கும் மட்டுமே இது பொருந்தும். இதே போன்ற சட்டத்தை
பம்பாய் மாகாணத்துக்கும் கொண்டு வந்தார்கள். அதுவரை, கடைகளில்
ஒருநாளைக்கு 11 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்வார்களாம். காய்கறி,
பழக்கடைகளில் வேலை செய்பவர்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தார்களாம்.
மதராஸ் மாகாணத்திலுள்ள கிராமப் புறபகுதியில் உள்ள கடைகள் வாரம் முழுவதும்
திறந்திருக்குமாம். எனவே Weekly
Holidays' Act 1942 என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
அரசாங்கமானது, தொழிலாளர்களின் நன்மையை கருத்தில் கொண்டு
சில நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது நியதி. பொதுவாக வாரந்தோறும் விடுமுறையே இல்லாமல் வேலை செய்தால்
சோம்பல் வந்துவிடுமாம். (All
Work and No Play Makes Jack a Dull Boy. என்பது ஆங்கில பழமொழி). ஒருநாளாவது
தான் செய்யும் வேலையை மறந்து இருக்கவேண்டும். அப்போதுதான் புத்துணர்ச்சி கிடைக்கும்.
எனவே கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும், முதலாளிகளுமே,
வாரத்தில் ஒருநாள் முழுவதுமாக கடையை மூடிவிடவேண்டும் என அரசாங்கம் நல்ல
எண்ணத்தில் ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
**
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 19(1)(g)ன்படி, இந்தியக்குடிமகன் அவன் விரும்பும் தொழிலை எந்த இடையூறும் இன்றி செய்யலாம்.
- என்று கூறுகிறது.
எந்தவொரு நியாமான தொழிலையும் ஒருவர் செய்யலாம், ஆனால் அது மற்றவர்களை பாதிக்கும்படி
இருக்கக்கூடாது என்பது உலகளாவிய விதி. இந்த உரிமையானது சரியாக உபயோகிப்படுவதை அரசாங்கங்கள்
சில விதிகளைக் கொண்டு கட்டுப்படுத்த அதிகாரம் உண்டு. எனவே இந்த அடிப்படை உரிமையானது
100 சதம் தடையில்லாத முழு உரிமைஇல்லை என்பதை ஆங்கிலேய சட்டம், அமெரிக்க சட்டம், இந்திய சட்டம் இவைகளும் அவ்வாறே வலியுறுத்துகின்றன.
14-வது அமெரிக்க சாசன சட்ட திருத்தம் -- "ஒரு குடிமகன் அவன் விரும்பும்
தொழிலைச் செய்ய எந்த தடையும் இல்லை என்றாலும், அதை நியாயமான சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தும்
அதிகாரம் அரசாங்கத்துக்கு உண்டு" என்கிறது. அந்தக் கட்டுப்பாடானது, நியாயமான, பொதுவான மக்களின் நன்மையை கருதி இருக்க வேண்டும்
என்றும் அந்த சட்டம் வரையறுக்கிறது.
இவைகளைக் கொண்டு பார்த்தால், ஒரு சலூன் கடையில் வேலைபார்க்கும் வேலையாளுக்கு
வாரத்தில் ஒருநாள் விடுமுறை கொடுத்தால்தான் அவன் மன விருப்பத்துடன் வாழ முடியும் என்பது
பொதுமக்களின் (தொழிலாளர்களின்) நன்மையை கருதிய விஷயமாகவே கருதவேண்டும். எனவே வாரவிடுமுறை
விடவேண்டும் என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தது, தனிமனிதனின்
தொழில் நடத்தும் உரிமையில் தலையிடுவதாகாது. எனவே சலூன் கடைகாரரின்
அப்பீலை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
**
No comments:
Post a Comment