Sunday, July 27, 2014

நினைவுகள்-23

The Bar Council of India (BCI) = இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு

BCI என்பது ஒரு சட்டம் மூலமாக ஏற்படுத்திய அமைப்பு. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து வக்கீல்களும் உறுப்பினர்கள். அந்தந்த மாநிலத்தில் ஒரு சட்ட அமைப்பு உள்ளது.  அதன் பெயர்
The Bar Council of Tamil Nadu
. சட்டம் படித்த ஒருவர் தன்னை வக்கீலாக இங்குதான் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவருக்கு ஒரு பதிவு எண்ணும் கொடுப்பார்கள். அவர் பதவிப் பிரமாணம் போன்ற ஒரு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே அவர் வக்கீல் உடை அணிந்து இந்தியாவில் உள்ள எந்தக் கோர்ட்டிலும் ஆஜராகி வாதாடலாம்.

ஆண் வக்கீலாக இருந்தால், கருப்பு பேண்ட், அல்லது வெள்ளைப் பேண்ட் அல்லது பாரிஸ்டர் பாண்ட் என்னும் வெள்ளை கோடுபோட்ட கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளைச் முழுக்கைச் சட்டை அணியவேண்டும். கருப்பு கோட் அணிய வேண்டும். அதன்மேல் கருப்பு கவுன் என்னும் அங்கி அணிய வேண்டும். பெண் வக்கீல்கள் அந்தந்த மாநில காலாச்சார உடையுடன் கருப்பு மேல் கோட்டும் அணிய வேண்டும். அதன் மேல் கருப்புக் கவுனும் அணிய வேண்டும்.

BCI என்னும் இந்திய பார் கவுன்சில் விதி 3ன்படி கவுன் என்னும் மேல் அங்கியை சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் இவைகளில் ஆஜராகும்போது மட்டும் அணிந்தால் போதும். கீழ்கோர்ட்டில் ஆஜராகும்போது அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி உள்ள போதிலும், எல்லா வக்கீல்களும் அதை எல்லா கோர்ட்டிலும் அணிந்தே இருக்கின்றனர்.

BCI விதி 4ன்படி வெயில் காலங்களான கோடைகாலத்தில், கருப்பு கோட் அணிவதிலிருந்து விதிவிலக்கு கொடுத்துள்ளது. ஆனாலும் எல்லா வக்கீல்களும் கோட், கவுன் அணிந்தே வருகின்றனர். மனம் சார்ந்த பிரச்சனையாகவே இது பார்க்கப் படுகிறது.

வக்கீல் என்பதன் முழு அடையாளம், வெள்ளை கலரில் ஒரு காலர் பேண்ட் (color band) என்னும் கழுத்துப் பட்டி. இது தலைகீழ் V-வடிவத்தில் இருக்கும். இதை சட்டையின் காலருடன் சேர்த்து பொருத்திக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்தால்தான் அவர் வக்கீல் என்று தெரியும். கருப்பு கோட் என்பது கோர்ட் அலுவலக யூனிபார்ம்.

சில வருத்தமான நிகழ்வுகள்:
வசதி இருக்கும் வக்கீல்கள்கூட ஒரு கோட், கவுனுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. கேட்டால், இராசியான கோட் இது என்று சொல்லிக் கொள்வார்கள். அடிக்கடி துவைக்கக்கூட மாட்டார்கள். வருடத்திற்கு ஒருமுறை துவைப்பதே அரிது. அந்த கோட்டானது உப்புப் பிடித்து வெள்ளை வெள்ளையாக படிந்திருக்கும். அதைப் பற்றிய சிறிய கவலைகூட இருப்பதில்லை. உடை விஷயத்தில் மிக அதிகமான வக்கீல்கள் இந்த நாகரீகத்தை பின்பற்றவதில்லை. ஆள் பாதி ஆடை பாதி. கசங்கிய கவுன்களுடன் கோர்ட்டில் வேலைகளை செய்வது தரத்தை குறைத்தே மதிப்பிடச் செய்யும். யாராவது கோட், கவுனை கழற்றி வைத்து விட்டுப் போயிருந்தால் வேறு யாராவது ஒரு வக்கீல் அதை எடுத்துப் போட்டுக் கொண்டு கோர்ட்டுக்கு போயிருப்பார். இது எல்லா வக்கீல்களுக்கும் கிடைத்திருக்கும் அனுபவமே! 

இரண்டு கோட், கவுனுக்கு மேல் வைத்திருக்கும் வக்கீல்கள் உண்மையில் பணக்கார வக்கீல்களே!
.


No comments:

Post a Comment