ஆடுகள், மனித
வாழ்வில் கூடவே வந்தவை. இந்த இரண்டு ஆன்மாக்களுக்கும் ஏதோ ஒரு தொடர்ப்பு இருக்கும்
என்றே நினைக்கிறேன். அவைகளை மனிதனிடமிருந்து பிரித்துவிட முடியாது போலும்.
ஆடுகளிடமிருந்து, அதன் பால், மாமிசம், இவைகள் மனிதனுக்கு கிடைக்கிறது என்ற
சுயநலத்தினால் அவன் அவைகளை வளர்க்கிறான் என்றாலும், அதில் ஏதோ ஒரு முன்-ஜென்ம-சொந்தம் இருக்க
வேண்டும்தான். நகரங்களில் வசிப்பவரும் அந்த தொடர்பை அதன் மாமிச உருவத்தில்
சந்தித்துத்தான் கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக ஆடுகள் மிச்சமீதி உள்ள கழிவுகளையும்
புல்லையும் சாப்பிட்டே வாழும் குணமுடையவை என்றாலும், சில நேரங்களில் செலவு செய்து
போட்டிருந்த பயிர்களையும், அதை பாதுகாக்க போட்டிருந்த வேலிப் பயிரையுமே
மேய்ந்துவிடும் கொடூரமும் உண்டு.
ஆடுவளர்ப்பது
என்பது பழைய தொழிலாகவே ஆகிவிட்டது. இப்போது ஒருசிலர் மட்டுமே அதை செய்கின்றனர்.
மற்றைய நாடுகளைப்போல இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ஆடுவளர்ப்பதில் ஆர்வமில்லாமல்
உள்ளனர். கௌரவக் குறைவான தொழிலாகவும் நினைக்கின்றனர். ஆடுகளை பண்ணைமுறையில் வளர்ப்பவர்கள் மிகக் குறைவே. ஏழ்மை காரணமாகவும்,
லாபம் கிடைக்கும் என்ற நோக்கிலும் பலர் சில நூறு ஆடுகளை மட்டுமே வளர்த்து வருகிற
போதிலும் அவர்களுக்கென்று தனியே மேய்ச்சல் நிலம் ஏதும் இல்லை என்பதால், அதை
பாதுகாப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். மழைகாலம் வந்தாலோ கொடுமையிலும்
கொடுமை இந்த ஆடுகள் படும்பாடு.
மழைகாலங்களில்,
இந்த ஆடு வளர்ப்பு என்பது ஒரு நரக வேதனையான ஒன்றுதான். ஆடு வைத்திருப்பவருக்கு
தனியே மேற்கூரை கொண்ட இடம் இல்லாமையால், ஊரில் உள்ள கோயில், பொதுகட்டிடச் சுவர்கள்
உபயோகத்தில் இல்லாத மண்டபங்கள், மரத்தடிகள் இவைகளில் அந்த ஆடுகள் ஒதுங்கவும்
முடியாமல், நிற்கவும் முடியாமல்
தத்தளித்துத் தடுமாறும்போது அதை வைத்திருப்பவனின் பாடு படு திண்டாட்டமே!
ஆடுகளில் செம்மறி ஆடுகள் அவ்வளவு அழகாகவும் இருக்காது. மனிதனிடம் ஒன்றியும் பழகாது. ஒரு எதிரியே பார்ப்பது போலவே மனிதனை அது சந்திக்கும். மனிதனை எப்போதுமே அது நம்பாது. ஒருவேளை மனிதனைப் பற்றிய உண்மை தெரிந்திருக்குமோ என்னவவோ!
ஆனால், வெள்ளாடு என்பது அப்படியில்லை. நம்முடன் கூடப்பிறந்தவன் போலவே அதன் எல்லா நடவடிக்கையும் இருக்கும். மனிதனை நம்புவதில், வளர்ப்பு நாய்க்கு இது போட்டியாகவே வரும்! வெள்ளாடு சுத்தத்திலும் சிறந்தது. செம்மறி ஆடுபோல் கெட்ட வாசனை வராது. வெள்ளாடு, வளர்ப்பவனின் உடம்பின் மீது முகர்ந்து விளையாடும். அதனுடன் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால், அதை விட்டுப்பிரியவே மனம் வராது.
வெள்ளாடுகளில், இளம் ஆடுகளே
கறிக்குச் சிறந்தது என்பதால், இளம் வயதிலேயே குட்டியாக இருக்கும் 'இளம்குட்டிகளை'
தாயிடமிருந்து பிரித்து விலைக்கு வாங்கிக் கொண்டு சென்றுவிடுவர். அந்த
பிஞ்சுக்குட்டியானது, தாயைப் பிரிந்து பால் குடிக்க முடியாமல் தவித்துக் கத்தித் திரிவதை
பார்க்க பரிதாபமாக இருக்கும். அதைப் பார்த்த எந்த மனித நெஞ்சமும் கரைந்துவிடும்.
அதன் குரலே அம்மாவை கேட்டு 'மே' என்று கத்தும் துயரம் சகிக்காதுதான். அவைகளின்
சாபங்கள்தானோ என்னவோ மனிதனும் பாசத்திற்கு ஏங்கி தவிக்கிறான்.
No comments:
Post a Comment