Sunday, July 6, 2014

நினைவுகள்-3

கோர்ட் வழக்கு தேவையா?

பொதுவாக, எல்லாப் பிரச்சனைகளுக்குமே கோர்ட்டுக்கு போனால்தான்  முடிவு கிடைக்கும் என பலர் நினைக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணம், 'கலகம் பிறந்தால்தான், ஞாயம் பிறக்கும்'. முடிவு வேண்டும் என எதிர்பார்ப்பவர் கோர்ட்டுக்கு போகக் கூடாது. சமாதான வழியிலேயே முடிவை அடைய வேண்டும்.

எதிரி நம்மை விடமாட்டான்:
ஆனால் நமது எதிரியோ அவ்வாறு நம்மை நிம்மதியாக இருக்க விடமாட்டான். அவன் முந்திக்கொண்டு கோர்ட்டுக்கு போய்விடுவான். அந்த வழக்கை, வேறு வழியின்றி, நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். ஏன் என்றால் அவனின் நோக்கமே, நாம் அலைகழிந்து ஓய்ந்துவிடவேண்டும் என்பதே!  அதுவே அவனின் வெற்றியும் கூட!

நாம் எதிரியை விட்டுவிடுவாம்:
நாம் அதுபோன்ற ஒரு வீண் வழக்கை யார்மீதும் தொடரக் கூடாது. முடிந்தவரை சமாதான வழியிலேயே செல்வதால், இந்த பிறவியில் நாம் ஒரு பெரிய காலத்தை வாழாமல் இழக்கும் வாய்ப்பிலிருந்து தப்பிக்கலாம். வழக்கு என்பது ஒருவரின் வாழ்நாளை வீண்டிக்கும், மற்ற வாழ்க்கைமுறையை வாழவிடாமலும் செய்துவிடும். வழக்கு போடுவதில் வைராக்கிய எண்ணம் இருக்கக் கூடாது.

நாம் வழக்கு போடவேண்டிய கட்டாயம் இருந்தால்:
சில நேரங்களில், நமது ஞாயமான பிரச்சனைக்கு எதிரி தீர்வை கொடுக்க மாட்டான். அவனிடம் கோர்ட் மூலமே தீர்ப்பை பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இருக்கும்போது, நாம் கோர்ட்டுக்கு போகலாம். ஆனாலும், அங்கு சமாதானத்துக்கு நாம் முதல் ஆளாகவே இருக்க வேண்டும். இந்த வழக்கில் ஏற்படும் தீர்ப்புதான்  என் வாழ்வை நிர்ணயிக்கும் என்று எண்ணிக் கொண்டே இருக்கக்கூடாது.

பங்காளி சொத்துச் சண்டை:
உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், சித்தப்பா, பெரியப்பா , அத்தை, மாமி, வாரிசுகள், இவர்களிடம் நமது குடும்ப சொத்தை பகிர்ந்து கொள்ள பிரச்சனை ஏற்பட்டால், முடிந்தவரை சமாதான வழிகளையே கடைபிடிக்கவும். கோர்ட்டுக்கு போனால், அங்கு ஒரு நீதிபதியே அந்த நியாயத்தைதான் சட்ட தீர்ப்பாக சொல்லப் போகிறார். அந்த நியாயம் நமக்கும் தெரியும். ஏன், நாமே அதை நமக்குள் செய்து கொள்ளக் கூடாது. ஒருவேளை, கோர்ட்டுத்தான் முடிவு என்று வந்தால், அந்த வழக்கில் கிடைக்கும் சொத்தே தனக்கு வாழ்நாள் வாழ்வு என்று அதைக் கட்டிக் கொண்டே அழாமல், நமக்கென்று உள்ள தனிப்பட்ட சம்பாத்தியத்துக்கும் உத்தியோகத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். வழக்குக்காக வாழ்நாளை விரயமாக்காதீர்கள்.

அரசாங்க வழக்குகளில்...
நமக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய சலுகையோ, பணமோ, உத்தரவோ, அரசாங்க அதிகாரியிடமிருந்து கிடைக்காவிட்டால், (பொதுவாக, பதவி உயர்வு, சம்பளசலுகை, இடமாற்றம், இடைநீக்கம்) அதற்காக கோர்ட்டுக்கு செல்வதில் தப்பில்லை. ஆனால் அது உங்களின் மனச்சாட்சிப்படி ஞாயமானதாக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும், 'அந்த வழக்குத்தான் என் வாழ்வே' என்று இருக்கக்கூடாது. கிடைத்தால் பலன்; இல்லையென்றால் பழைய நிலையே என்ற மனத்திடம் இருக்க வேண்டும்.

எதிலும் ரிஸ்க் எடுக்கலாம் என்பது தவறு!
பொதுவாக, ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்வு என்பது ஒரளவுக்கு பொருந்தும் என்றாலும், எல்லா விஷயத்திலும் அது பொருந்தவில்லை. 100 ரூபாய் வைத்திருப்பவன் 50 ரூபாய்க்கு ரிஸ்க் எடுக்கலாம். அதையே தலைகீழாக எடுப்பவன் கதி, விதி வழியேதான்! அதுபோலத்தான் வழக்கிலும், தனது முழு வருமானத்தையும் வழக்காட செலவிடவேண்டாம்.

இறைவன் தீர்ப்பே கடைசி:
நாம் எவ்வளவுதான் கீழ்கோர்ட், மேல்கோர்ட், அப்பீல் கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம்கோர்ட் என வழக்காடினாலும், கடைசியில் நமக்கு கிடைக்கும் தீர்ப்பே இறுதியானது. அதை எல்லாம் வல்ல இறைவனே நமக்கு அளிக்கிறான். நமது முயற்சியால்தான் ஒரு வழக்கு தீர்ந்ததாக சொல்லிக் கொள்ள முடியாது.
நல்ல வழக்குகள் சில நேரங்களில் தோற்பதும் உண்டு.
மோசமான வழக்குகள் சில நேரங்களில் ஜெயிப்பதும் உண்டு.
கோர்ட் என்பது நாம் போகவேண்டாத இடம் என்று நினைப்பதே சரி.

.

No comments:

Post a Comment