Saturday, July 19, 2014

நினைவுகள்-13

சொல்வதெல்லாம் உண்மை!
ஒருவர், கோர்ட்டில் சாட்சி சொல்ல கூண்டில் ஏறியவுடன் சொல்லும் முதல் வார்த்தைகள், "நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை." இந்த வார்த்தைகளை சொன்னபிறகுதான் அவர் தன் வழக்கையோ, சாட்சியாக வந்ததையோ சொல்ல வேண்டும். இதை "சத்தியப் பிரமாணம்" என்கிறார்கள் கோர்ட்டில்.

பொய்யைச் சொல்பவர்களும், இதைத்தான் சொல்லி ஆரம்பிக்கிறார்கள். பிறகு எதற்கு இந்த சத்தியப்பிரமாணம் என கேட்கத் தோன்றும்!

ஆரம்ப காலத்தில், (பிரிட்டீஸ் நடைமுறையில்) அவரவரின் மதம்சார்ந்த சாஸ்திர புத்தகத்தின் மீது கையை வைத்து இவ்வாறு சொல்ல வேண்டுமாம். இந்துவாக இருந்தால் பகவத்கீதை புத்தகத்தின் மீது கைவைத்தும், கிறிஸ்தவராக இருந்தால் பைபிள் மீது கைவைத்தும், முகமதியராக இருந்தால் குரானின் மீது கைவைத்தும், இந்த சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த முறை இல்லை. மத நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றோ அல்லது அந்த நம்பிக்கைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்றோ தெரியவில்லை.

இன்றைய காலத்தில், நூறு பொய்களை கூசாமல் சொல்பவரும், இந்த சத்தியப் பிரமாணத்தை சர்க்கரைப் பொங்கலாக நினைத்து இனிக்க இனிக்க கூறிவிட்டு அவரின் முழு பொய்யையும் அவிழ்த்து விடுவார். அதுவும் சபை அறிய, சாட்சிக் கூண்டில் ஏறி.

இதனால் என்ன பயன் என்று சிலர் நினைப்பதுண்டு. சட்டம் அவ்வளவு எளிமையாக அவரை விட்டுவிடுவதில்லை. அதற்கு "எஸ்டபெல்" (Estoppel) என்று ஒரு முறை உண்டு. இந்திய சாட்சிய சட்டம் 1872, செக்ஷன் 115ல் உள்ளது (The Indian Evidence Act 1872, Sec.115). இது 1872 ல் இயற்றப்பட்ட சட்டம். சுமார் 145 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்ட பழைமையான சட்டம். இதன்படி ஒரு சாட்சி, ஒரு பொய்யை 'உண்மை என்று' கோர்ட்டில் சொன்னால், அதை வேறு ஒரு தருணத்தில் மாற்றிச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்ன பொய்யானது உண்மை என்றே கருதப்படும். அதை மறுமுறை மாற்றிச் சொல்லமுடியாது. பிறண்டு பிறண்டு பேச முடியாது என்பதைத்தான் எஸ்டபெல் என்ற விதி கூறுகிறது.

உதாரணமாக: ஒருவர், ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போடும்போது மேஜர் வயதில் இருந்தார். ஆனாலும், சாட்சியாக விசாரிக்கும் போது, அவர், அப்போது மைனராக இருந்தார் என பொய் சொல்கிறார். தனக்கு சாதகமான வேறு ஒரு தருணத்தில், இல்லையில்லை, நான் அப்போது மேஜராக இருந்தேன் என்று மாற்றிச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்னது சொன்னதுதான். அதுவே கடைசிவரை உண்மையாகவே சட்டம் கருதும்.

மேலும் பொய்சாட்சி சொல்பவர் வெகுநேரம் சாட்சிக் கூண்டில், வக்கீலின் குறுக்கு விசாரணையில் தாக்குப்பிடிக்கவும் முடியாது. கைதேர்ந்த பொய் சாட்சியைத் தவிர மனச்சாட்சியுள்ள எந்த சாட்சியும் பொய்யை வெகுநேரம் காப்பாற்ற முடியாது.

திறமையான வக்கீல் குறுக்கு விசாரனை செய்யும் முறை பற்றி, ஆங்கிலேயர்கள் இதற்கு ஒரு யுக்தி வைத்துள்ளார்கள்.
(1)"படித்த, விபரம் தெரிந்த சாட்சியாக இருந்தால், அவரை முதலில் கண்டபடி கேள்வி கேட்டு அவருக்கு எரிச்சலை உண்டாக்க வேண்டுமாம். படிக்காத முட்டாளைப்போல பேசுகிறாயே என்று கூட கேட்கலாமாம். அந்த எரிச்சலில் அவரின் 'உஷார் நிலை' மாறிவிடும். வக்கீல் எதிர்பார்த்த பதில் அவரிடமிருந்து கிடைத்துவிடுமாம்." இது ஒரு தந்திரம்.
(2)"படிக்காத பாமர சாட்சியாக இருந்தால், அவரை மிகுந்த மரியாதையுடன் அணுக வேண்டுமாம். எந்தவிதத்திலும் மரியாதைக்குறைவாக இல்லாமல், பணிவாக கேள்விகளைக் கேட்டால், அவர் மனமிரங்கி உண்மையையே பேசுவாராம்." இது ஒரு தந்திரமாம்.
(இவைகள் காலங்காலமாக, கைதேர்ந்த ஆங்கிலேய வக்கீல்கள் கையாண்ட முறைகளாகும்.)

.

No comments:

Post a Comment