Saturday, July 26, 2014

நினைவுகள்-20

காதும் வயதும் ஏற்படுத்தும் பிறந்த தேதிக் குழப்பங்கள்:

1960க்கு முன்னர் பிறந்த பலருக்கு இந்த பிறந்ததேதி குழப்பம் இருந்திருக்கும். இது பல பல நேரங்களில் பல பிரச்சனைகளை உண்டாக்கியும் உள்ளது.

அந்த காலக்கட்டங்களில், சிறுவர்களை பள்ளியில் சேர்ப்பது சுமார் ஐந்து வயது முடியும்போது மட்டுமே. அதற்குமுன் அவர்களை பள்ளிக்கூடத்தின் பக்கத்தில்கூட விடமாட்டார்கள்.

மாடு, குதிரை இவற்றின் வயதை, அதை பல்லைப் பார்த்து தீர்மானிப்பார்கள். அதேபோல இந்த சிறுவர்களின் ஐந்தாவது வயது முடிந்ததை, அவர்களின் வலது கையை தலைக்கு மேல் ஒட்டி அடுத்தபக்கத்துக் காதை தொடச் சொல்வார்கள். தொட்டுவிட்டால் ஐந்து வயது முடிந்தது என தீர்மானிக்கப்படும். உடனே அவனுக்கு ஏதாவது ஒரு பிறந்த தேதியை போட்டு, பள்ளியில் சேர்த்து விடுவார்கள். இப்படித்தான் பல குழந்தைகளின் வயதுகள் தீர்மானிக்கப்பட்டன. வெகுசிலரே சரியான பிறந்த தேதியை பள்ளிக்கூடத்தில் கொடுத்தவர்கள். படித்த பெற்றோர், ஜாதகம் எழுதிவைத்திருந்த பெற்றோர், இவர்களைத் தவிர மற்றவர்களின் பிள்ளைகளுக்கு அவ்வளவாக சரியான பிறந்த தேதி இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. எல்லாப் பள்ளிகளிலும் கண்டிப்பாக பிறப்புச் சான்றிதழைக் கொடுக்கும்படி கேட்கின்றன.

ஒருவரின் பிறந்த தேதி என்பது பிறப்பு சான்றிதழ்அடிப்படையில்தான் நம்பப்படும். அவரின் பள்ளி சான்றிதழில் உள்ள தேதியைக் கொண்டு முடிவெடுக்க முடியாது. அவருக்கு பிறப்பு சான்றிதழே இல்லாதபோது பள்ளி சான்றிதழில் உள்ள தேதியே சரி எனலாம். சரியான பிறப்பு சான்றிதழ் கிடைத்தால், அந்த சரியான தேதியை பள்ளிச் சான்றிதழிலும் கோர்ட் உத்திரவு பெற்று மாற்றிக் கொள்ளலாம். அரசு ஊழியராய் இருந்தால் அவர் பணியில் சேர்ந்த 5 வருடத்திற்குள் இதை செய்து கொள்ளவேண்டும். ஆனாலும், சர்வீஸ் விதி 49-ன்படி, 19.8.1970 தேதிக்குமுன்னர் வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. GO Ms.395 dated 15.12.1992 & GO Ms.66 dated 2.2.1996.
  1. GO Ms No.395 dated 15.12.1992 = amendment was effected to R49.
  2. GO Ms No.66 dated 2.2.1996 = further amendment was made that limitation is not applicable to the Govt servants who entered service before 19.8.1970.

நீதிபதிகளாக பதவிக்கு வந்தபின்னர்கூட இந்த பிரச்சனைகள் பல வந்துள்ளன. ஆனால் ஒரு வேடிக்கையான நிகழ்வு மெட்ராஸ் ஐகோர்ட்டில் (சுதந்திரத்துக்குமுன்னர்) நிகழ்ந்ததாக கூறிக் கொள்வார்கள்.

ஒரு திறமையான ஐகோர்ட் நீதிபதி. இவர் இந்தியர். வெகுகாலமாக ஐகோர்ட் நீதிபதியாக பதவியில் இருந்து நல்ல தீர்ப்புகளையும் கொடுத்து வருகிறார். அப்போதுள்ள நிலவரத்தின்படி நீதிபதியானவர் தனது 60-வது வயதில் பதவியிலிருந்து ஓய்வு பெறுவார். அவருக்கு ஒரு தம்பி. அவர் தனது சஷ்டியப்பபூர்த்தியை ஒரு விழாவாக கொண்டாடி அனைவரையும் அந்த விழாவுக்கு அழைத்திருக்கிறார். மறுநாள் கோர்ட்டில் பரபரப்பு. 'தம்பிக்கு 60 வயது முடிந்ததை சஷ்டியப்பபூர்த்தியாக கொண்டாடும்போது, நீதிபதி அண்ணன் எப்படி 60 வயதை பூர்த்தியாகாமல் பதவியில் இருக்கிறார்.' இதை அறிந்த நீதிபதி, 'அன்றே அப்போதே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவரின் உண்மையான பிறந்த தேதியை பள்ளியில் சேர்க்கும்போது கொடுக்கவில்லை. ஒருவேளை காதை தொட்டு வயதை நிர்ணயித்திருப்பார்கள் போலும்.

.

No comments:

Post a Comment