Wednesday, July 23, 2014

நினைவுகள்-16

பழையனூர் நீலி:
வணிகம் செய்யும் தன் கணவன் நாள்தோறும் பிறமங்கையரிடம் சென்று நட்பாக இருப்பதை அறிந்த அவன் மனைவி, எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறாள். அவன் கேட்பதாக இல்லை. இவளால் தொந்தரவாக இருக்கிறதே என்று எண்ணி, அவளைக் கொன்றுவிட திட்டமும் தீட்டி, அவளிடம் ஆசை வார்த்தைகூறி அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்று கொன்றுவிடுகிறான்.

இறந்தவள், பிசாசாய் அழைந்து திரிந்து, அவளின் கணவனைக் கொல்ல நினைக்கிறாள். இதை ஒரு ஜோதிடன் அறிந்து, அதை அந்த வணிகனிடம், 'நீ வடக்குப் பக்கம் போனால் ஒரு பேயால் இறக்க நேரிடும்; ஆனாலும் அந்த பேய் உன்னை தொடராமல் இருக்க ஒரு மந்திர வாளைத் தருகிறேன்; அந்த வாள் உன்னிடம் இருக்கும்வரை அந்தப் பேய் உன்னை ஒன்றும் செய்யாது' என கூறி அந்த வாளைக் கொடுத்தான்.

ஒருநாள், அவன் வியாபாரத்துக்கு வெளியூர் செல்லும்போது, அந்த நீலி என்னும் பேய், அவனைத் தொடர்ந்து வந்து பழிவாங்கத் துடித்தது. அந்த பேய், அவனின் மனைவியைப் போல உருவம் கொண்டு அவனைப் பின்தொடர்ந்து வந்தது. அவனிடம் இந்த மந்திர வாள் இருந்ததால், அந்த பேயால் ஒன்றும் செய்யமுடியவில்லை; ஆனால் பின்னாடியே தொடர்ந்து வந்தது. இவனும் மெதுவாக ஒரு ஊரை அடைந்து, அங்கு ஆலமரத்தடியில் பஞ்சாயத்தில் அமர்ந்திருந்த வேளாளர்களை கண்டு, தன்னை ஒருத்தி தேவையில்லாமல் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்கிறாள் என்று முறையிட்டான். ஆனால், பெண் உருவத்தில் இருந்த அந்த நீலிப்பேயானது, 'நான் இவரின் மனைவி, என்மீது இவர் வெகுநாட்களாகக் கோபத்தில் இருக்கிறார், நானும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக் கொண்டே அவர் பின்னாலேயே வருகிறேன், ஆனால் அவர் என்னை மதிக்கவில்லை. எனவே பஞ்சாயத்து பெரியவர்கள் அவரிடம் பேசி எங்களைச் சேர்த்து வைக்கும்படி கேட்கிறேன்' என்று புலம்புகிறாள்.

'இல்லையில்லை, இவள் என் மனைவியில்லை. இவள் ஒரு பேய்' என்று அவன் சொல்கிறான்.

அவளோ, 'பெரியோர்களே! என் கணவர் கோபத்தின் உச்சியில் இருக்கிறார். அவரிடம் நான் தனியே பேசினால் அவர் சமாதானம் ஆகிவிடுவார், எனவே எங்கள் இருவரையும் எதிரில் உள்ள மண்டபத்தில் சிறிது நேரம் தனியே பேசவிடுங்கள்' என்று சமாதானமாச் சொல்கிறாள்.

அவனோ, இவள் ஒரு பேய், என் மனைவியே இல்லை, இவள் சொல்வதை தயவுசெய்து நம்பாதீர்கள்' என்று புலம்புகிறான்.

அவளோ, 'ஐயா, நான் சொல்வதை நம்பவேண்டாம், என் இடுப்பில் இருக்கும் இவரின் குழந்தையை இறக்கிவிடுகிறேன், இது இவரிடம் செல்லும் பாருங்கள், அப்போதாவது என்னை நம்புங்கள்' என்று மன்றாடி கேட்டு, அந்த குழந்தையை இறக்கி விட்டாள். அந்த மாயக் குழந்தையோ, அவனை அப்பா என்று கூறிக் கொண்டு அவனிடம் சென்றது.

ஏதோ, கணவன் கோபத்தில், மனைவியை பேயென்று சொல்கிறான் என நினைத்த பஞ்சாயத்துதாரர்கள், 'வணிகரே, இவள் உன் மனைவி இல்லையென நீர் கோபத்தில் சொல்கிறீர்! எனவே நீயும் உன் மனைவியும் இந்த மண்டபத்தினுள் சென்று, அங்கு உமது மனைவிக்கு தகுந்த சமாதானம் செய்துவிட்டு வாரும்!' என கண்டிப்புடன் சொன்னார்கள். அவனோ, தன்னிடம் இருந்த கத்தியை கையில் வைத்துக் கொண்டே மண்டபத்தில் அவளுடன் நுழைந்தான்.

அவளோ, 'ஐயா இவரிடம் உள்ள கத்தியை நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்; இல்லையென்றால், இவர் கோபத்தில் என்னை அந்தக் கத்தியால் குத்திவிடுவார், எனக்குப் பயமாக உள்ளது' என்று நடித்தாள்.

இவளின் பேச்சை உண்மை என நம்பிய பஞ்சாயத்தில் இருந்த வேளாளர்கள், அந்தக் கத்தியை இவனிடமிருந்து வாங்கிக் கொண்டனர்.

அவனோ பதறி, 'ஐயா, நீங்கள் இவள் சொல்வதை நம்பி விட்டீர்கள், இந்த கத்தி இல்லாவிட்டால், இவள் என்னைக் கொன்றுவிடுவாள். இவள் உண்மையில் ஒரு பேயே! என் பேச்சை நம்புங்கள். நான் பொய் சொல்லவில்லை' என்று கதறுகிறான்.

ஆனால், பஞ்சாயத்தில் கூடியிருந்த 17 பேரும் சேர்ந்து, 'உன் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம். நீ துணிந்து போ. ஒருவேளை உன் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நாங்கள் 17 பேரும் உயிர் துறப்போம்! பயப்படாதே! என்று அவனை மண்டபத்துக்குள் கத்தியின்றி அனுப்பி வைத்தனர்.

உள்ளே புகுந்த அவனை, கொஞ்ச நேரத்துக்குள், அந்தப் பேய் கொன்று விட்டது.

அதற்குபின், வேறு பக்கமாக, அவனின் தாய் போல வேடமிட்டுக் கொண்டு, அந்த பஞ்சாயத்துதாரர்களிடம் வந்து, 'உங்களிடம் வந்த என் மகனை என்ன செய்தீர்கள்?' என்று கேட்டு நின்றாள்.

பஞ்சாயத்தில் இருந்தவர்கள், 'உன் மகனும், மருமகளும் இந்த மண்டபத்தினுள் சமாதானம் பேச சென்றுள்ளார்கள், நாங்கள்தான் அனுப்பி வைத்தோம். இப்போது வந்துவிடுவார்கள், காத்திரு.' என கூறி, இவர்களும்  வெகுநேரம் காத்திருந்தார்கள். வாணிகன் வரவில்லை. உள்ளே சென்று பார்த்தால், வாணிகன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறான்.

நம்பமுடியாத பஞ்சாயத்துதாரர்கள், சொன்ன சொல்லைக் காப்பற்ற வேண்டி, 17 வேளாளர்களும் தீயில் குதித்து உயிரை விட்டார்கள்.
(சேக்கிழார் நாயனார் புராணத்தில் சொல்லப்பட்டுள்ள பழையனூர் நீலி என்ற பேயின் கதை).
.

No comments:

Post a Comment