Tuesday, July 29, 2014

‘மார்க ஹிந்தோளம்’

 

காம்போதி, தோடி இவைகள் பணக்கார ராகம். ஆனால், ‘மார்க ஹிந்தோளம்’ லேசில் வசப்படாது. மிக பிரயாசைப்பட வேண்டும். இது கைவசமாகி விட்டால், அந்த சங்கீத தேவதையே அடிமை என்றுதான் அர்த்தம். அதன் ஆரோகணத்தில் ஏழுசுரங்கள், இப்படி போகும். ‘ஸரிகமபதநிஸ’. இதன் அவரோகணத்தில் இப்படி திரும்பும், ‘ஸநிதபமகஸ’. கவனித்தால், திரும்பி வரும்போது ‘ரி’ கிடையாது. அதுதான் விஷேசம்.  மோனலிசா சித்திரத்தை யார் எங்கிருந்து பார்த்தாலும் அது அவர்களையே பார்ப்பதுபோலவே இருக்கும். மனோரஞ்சிதப் பூ, நினைத்த வாசத்தை கொடுக்கும். அதுபோலத்தான் இந்த ராகமும். குதூகலமான நேரங்களில் பாடும்போது சந்தோஷமாக இருக்கும். வேறு சமயங்களில் சாந்தமாக இருக்கும். சில நேரங்களில் சோகமாக இருக்கும். அதுதான் இதன் தனித்தன்மை.--(நன்றி: தமிழறிஞர் திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகளிலிருந்து)

Sunday, July 27, 2014

நினைவுகள்-23

The Bar Council of India (BCI) = இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு

BCI என்பது ஒரு சட்டம் மூலமாக ஏற்படுத்திய அமைப்பு. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து வக்கீல்களும் உறுப்பினர்கள். அந்தந்த மாநிலத்தில் ஒரு சட்ட அமைப்பு உள்ளது.  அதன் பெயர்
The Bar Council of Tamil Nadu
. சட்டம் படித்த ஒருவர் தன்னை வக்கீலாக இங்குதான் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவருக்கு ஒரு பதிவு எண்ணும் கொடுப்பார்கள். அவர் பதவிப் பிரமாணம் போன்ற ஒரு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே அவர் வக்கீல் உடை அணிந்து இந்தியாவில் உள்ள எந்தக் கோர்ட்டிலும் ஆஜராகி வாதாடலாம்.

ஆண் வக்கீலாக இருந்தால், கருப்பு பேண்ட், அல்லது வெள்ளைப் பேண்ட் அல்லது பாரிஸ்டர் பாண்ட் என்னும் வெள்ளை கோடுபோட்ட கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளைச் முழுக்கைச் சட்டை அணியவேண்டும். கருப்பு கோட் அணிய வேண்டும். அதன்மேல் கருப்பு கவுன் என்னும் அங்கி அணிய வேண்டும். பெண் வக்கீல்கள் அந்தந்த மாநில காலாச்சார உடையுடன் கருப்பு மேல் கோட்டும் அணிய வேண்டும். அதன் மேல் கருப்புக் கவுனும் அணிய வேண்டும்.

BCI என்னும் இந்திய பார் கவுன்சில் விதி 3ன்படி கவுன் என்னும் மேல் அங்கியை சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் இவைகளில் ஆஜராகும்போது மட்டும் அணிந்தால் போதும். கீழ்கோர்ட்டில் ஆஜராகும்போது அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி உள்ள போதிலும், எல்லா வக்கீல்களும் அதை எல்லா கோர்ட்டிலும் அணிந்தே இருக்கின்றனர்.

BCI விதி 4ன்படி வெயில் காலங்களான கோடைகாலத்தில், கருப்பு கோட் அணிவதிலிருந்து விதிவிலக்கு கொடுத்துள்ளது. ஆனாலும் எல்லா வக்கீல்களும் கோட், கவுன் அணிந்தே வருகின்றனர். மனம் சார்ந்த பிரச்சனையாகவே இது பார்க்கப் படுகிறது.

வக்கீல் என்பதன் முழு அடையாளம், வெள்ளை கலரில் ஒரு காலர் பேண்ட் (color band) என்னும் கழுத்துப் பட்டி. இது தலைகீழ் V-வடிவத்தில் இருக்கும். இதை சட்டையின் காலருடன் சேர்த்து பொருத்திக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்தால்தான் அவர் வக்கீல் என்று தெரியும். கருப்பு கோட் என்பது கோர்ட் அலுவலக யூனிபார்ம்.

சில வருத்தமான நிகழ்வுகள்:
வசதி இருக்கும் வக்கீல்கள்கூட ஒரு கோட், கவுனுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. கேட்டால், இராசியான கோட் இது என்று சொல்லிக் கொள்வார்கள். அடிக்கடி துவைக்கக்கூட மாட்டார்கள். வருடத்திற்கு ஒருமுறை துவைப்பதே அரிது. அந்த கோட்டானது உப்புப் பிடித்து வெள்ளை வெள்ளையாக படிந்திருக்கும். அதைப் பற்றிய சிறிய கவலைகூட இருப்பதில்லை. உடை விஷயத்தில் மிக அதிகமான வக்கீல்கள் இந்த நாகரீகத்தை பின்பற்றவதில்லை. ஆள் பாதி ஆடை பாதி. கசங்கிய கவுன்களுடன் கோர்ட்டில் வேலைகளை செய்வது தரத்தை குறைத்தே மதிப்பிடச் செய்யும். யாராவது கோட், கவுனை கழற்றி வைத்து விட்டுப் போயிருந்தால் வேறு யாராவது ஒரு வக்கீல் அதை எடுத்துப் போட்டுக் கொண்டு கோர்ட்டுக்கு போயிருப்பார். இது எல்லா வக்கீல்களுக்கும் கிடைத்திருக்கும் அனுபவமே! 

இரண்டு கோட், கவுனுக்கு மேல் வைத்திருக்கும் வக்கீல்கள் உண்மையில் பணக்கார வக்கீல்களே!
.


நினைவுகள்-22

சீனியர் வக்கீல்கள்
வக்கீல்கள் சட்டம் 1961ன்படி வக்கீல்களில் இரண்டு வகை;
1) சீனியர் வக்கீல்கள் (Senior Advocates).
2) மற்ற வக்கீல்கள் (Other Advocates).

சீனியர் வக்கீல் என்பது சட்ட அனுபவத்தில் மூத்தவர் என்றும் அதனால் அவரை மூத்த வழக்கறிஞர் என்றும் சொல்வர். (வயதில் மூத்தவர் அல்ல, வக்கீலாக பலவருடம் இருந்தவர் என்பதாலும் அல்ல).

மூத்த வக்கீல் (Senior Advocate) யார் என்று கோர்ட்டில் அடையாளம் கண்டுபிடிப்பதற்கு அவர் அணியும் கருப்பு கவுனில் சில அடையாளங்கள் இருக்கும். அவரின் இரண்டு கைகளும் தனியே தோள்பட்டை துணிக்குள் இருந்தாலும், மேலும் இரண்டு கைகள் கொண்ட துணி தைக்கப்பட்டு தனியே தொங்கிக் கொண்டிருக்கும். அவரின் முன்னால் நின்று பார்க்கும்போது இது தெரியும். அவரைப் பின்னால் இருந்து பார்த்தால், அவரின் தோள்பட்டையில், சாதாரண வக்கீலின் கவுனுக்கு இருக்கும் மடிப்புகள் இல்லாமல், இவருக்கு அந்த மடிப்புகள் தெரியாமல் ஒரு தனி துணி தொங்கிக் கொண்டிருப்பதுபோல தைத்திருப்பர். (இவைகள் அவரைப் பற்றிய தோன்றத்தில் வித்தியாசம்).

அவர் குறைந்த பட்சம் 10 வருடமாகவது ஐகோர்ட்டில், அல்லது சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக வழக்குகளை வாதாடி இருக்க வேண்டும். அவைகளில் சமுதாய நன்மைகள், சமுதாயப் பிரச்சனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த வழக்குகளை திறம்பட கையாண்டிருக்க வேண்டும். இவ்வாறு திறமைகள் கொண்ட வக்கீலை, அவரின் மற்ற வக்கீல் நண்பர்கள், முன்மொழிந்து, அதன்படி, ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட கமிட்டி, சூப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட கமிட்டி அதை உறுதி செய்து அவருக்கு சீனியர் வக்கீல் என்ற அந்த அந்தஸ்தை வழங்கும். அதுமுதல், அந்த சீனியர் வக்கீல், அவரின் கட்சிக்காரர்களிடம் நேரடித் தொடர்பை விட்டுவிடவேண்டும். அவர்களுக்காக வக்காலத்துப் போட்டு வாதாடக் கூடாது. ஆனால், வேறு வக்கீல்கள் கொடுக்கும் வழக்கில் உள்ள சட்ட சிக்கல்களை இவர் கோர்ட்டில் பேச வேண்டும். அதற்கான வக்கீல் பீஸ் என்னும் கட்டணத்தை இந்த வக்கீல் கொடுக்க வேண்டும்.

கோர்ட்டுகளில், சீனியர் வக்கீல்கள் ஆவது பெருமைக்குறிய விஷயம்தான்இதை தற்போதுள்ள ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட கமிட்டி, அந்த கோர்ட்டில் யார் யாரை சீனியர் வக்கீல்களாக நியமிக்கலாம் என்று முடிவு செய்யும்.

தற்போது கர்நாடகா ஐகோர்ட்டில் 15 சீனியர் வக்கீல்கள் பரிந்துரை பட்டியலில் இருந்தனர். அதை எதிர்த்து ஒரு வக்கீல் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார், இன்னும் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவரின் குறை என்னவென்றால், பல வக்கீல்கள், மாவட்ட கோர்ட்டுகளில் சட்ட திறமையுடன் இருந்துவருகிற போதும், ஐகோர்ட் வளாகத்துக்குள் இருக்கும் வக்கீல்களையே சினியர் வக்கீல்கள் ஆக்குவது சட்டத்துக்கு ஏற்புடையதல்ல என்றும் கூறியுள்ளதாக தெரியவருகிறது.


வழக்கின் முடிவு இனிமேல்தான் தெரியவரும்.
.

Saturday, July 26, 2014

நினைவுகள்-21

மானநஷ்டம் (Defamation)
மானம் இருந்து அது நஷ்டமானால் அது மானநஷ்டம்.
நல்லவர்களை அவதூறாகப் பேசினால் அது தவறு, குற்றம்.

1. மானம் இல்லாதவரின், மானமில்லாச் செயலைச் சொல்வது, மானநஷ்டத்தில் வராது.
2.நஷ்டத்தை ஏற்படுத்தியவர், தனது மானத்துக்கு நஷ்டம் வந்ததாக சொல்லிக் கொள்ளவும் முடியாது.

மானநஷ்ட வழக்குகளை இந்தியக் கோர்ட்டுகளில் அவ்வளவாக போடுவதில்லை.

தனது மான-மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும்படி பிறர் பேசி இருந்தால், அவர் மீது நஷ்டஈடுகேட்டு சிவில் வழக்குப் போடலாம். IPC Section 500-ன்படி கிரிமினல் அவதூறு வழக்கும் போடலாம்.

கோர்ட், 'அந்த வழக்கில், அவரின் மான-மரியாதை அந்த அவதூறுப் பேச்சால் பறிபோனதா' என்று விசாரித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

மான-நஷ்ட/அவதூறு வழக்கில், அவ்வாறு பேசியவர், தன்னை தற்காத்துக் கொள்ள இரண்டு வகை பாதுகாப்பு உண்டு.
1) சட்ட பாதுகாப்புள்ள முழுஉரிமை. (Absolute privilege)
2) அளந்து கொடுத்துள்ள உரிமை. (Qualified privilege).

முதலில் சொன்ன முழுஉரிமையானது (Absolute privilege), சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது. இதை, நீதிபதி, வக்கீல், கோர்ட் சாட்சிகள் இவர்கள் கோர்ட் நடவடிக்கையிலும், எம்.பி, எம்.எல்.. இவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற அரங்கின் நடவடிக்கையிலும் பேசப்படும் பேச்சுக்களை பாதுகாக்கிறது. அதாவது அங்கு பேசிய பேச்சுக்கள் அவதூறு ஆகாது.

இரண்டாவது வகை பாதுகாப்பில் (Qualified privilege) அந்த சொல் உண்மையானதாக இருக்க வேண்டும். பொதுநலனைக் கருதி உண்மையைச் சொல்லி இருந்தால் அது அவதூறு ஆகாது. திருடனை, 'நீ திருடன்' என்று சொல்லி இருந்தால் அது அவதூறு ஆகாது. நல்லவனைத் திருடன் என்று சொல்வது அவதூறு தானே? எனவே இந்த வகையில், அவதூறான வார்த்தையை சொல்லியவர், அந்த சொல் உண்மைதான் என்று அவரே நிரூபிக்க வேண்டும்.

மற்றொன்று:
உலக நடப்புகளை சாதாரணமாக சொல்லி இருப்பார். அவர் யார் மீதும் அவதூறு சொல்லை சொல்லும் எண்ணமில்லை. அவருக்கும் இந்த பாதுகாப்பு உண்டு. அதாவது, 'நாட்டில் லஞ்சம் பெருத்துவிட்டது' என்று கூறி இருந்தால், அவர் யாரையும் குறிவைத்து அவருக்கு அவதூறு உண்டாக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே அது ஒரு பொதுவான கருத்து. அவதூறு இல்லை.

ஆனால், நமது ஊர் சட்டங்கள், இதையெல்லாம், நாம் கோர்ட்டில் போய் நாமே நிரூபிக்கச் சொல்கிறது. இது நமக்குத் தேவையா?
நாயை அடிப்பேனேன்.. அதன் ......யை சுமப்பானேன் என்றே பலர் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கின்றனர். சாமானியனுக்கு இந்த சட்டத்தில் தகுந்த பாதுகாப்புக் கொடுத்தால், போக்கிரித்தனத்தை செய்பவன் உண்மையிலேயே தன் வாலைச் சுருட்டிக் கொள்வான்.
சாமானிய மனிதன் மாறத் தேவையில்லை. சட்டம்தான் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். காத்திருப்போம்.

.கொசுறு:
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500-ன்படி (IPC) அவதூறான சொல்லை தனிமையில் ஒருவர் நேருக்கு நேர் பேசிக் கொண்டால் அது அவதூறு இல்லை. வேறு மூன்றாம் நபர் இருக்கும்போது, அல்லது செய்தித்தாள்களில், அல்லது மூன்றாவது நபருக்கு தெரியும்படி ஒரு அவதூறு வார்த்தையை பேசி இருந்தால், அது IPC-ப்படி அவதூறே. (அவருக்கே எழுதிய லெட்டரில் அவரைத் திட்டி இருந்தால் அவதூறு இல்லை. அவரைத்திட்டி வேறு ஒருவருக்கு லெட்டர் எழுதியிருக்கக் கூடாது).

நாமும் பார்த்து நடந்துகொள்வோம்.
.

நினைவுகள்-20

காதும் வயதும் ஏற்படுத்தும் பிறந்த தேதிக் குழப்பங்கள்:

1960க்கு முன்னர் பிறந்த பலருக்கு இந்த பிறந்ததேதி குழப்பம் இருந்திருக்கும். இது பல பல நேரங்களில் பல பிரச்சனைகளை உண்டாக்கியும் உள்ளது.

அந்த காலக்கட்டங்களில், சிறுவர்களை பள்ளியில் சேர்ப்பது சுமார் ஐந்து வயது முடியும்போது மட்டுமே. அதற்குமுன் அவர்களை பள்ளிக்கூடத்தின் பக்கத்தில்கூட விடமாட்டார்கள்.

மாடு, குதிரை இவற்றின் வயதை, அதை பல்லைப் பார்த்து தீர்மானிப்பார்கள். அதேபோல இந்த சிறுவர்களின் ஐந்தாவது வயது முடிந்ததை, அவர்களின் வலது கையை தலைக்கு மேல் ஒட்டி அடுத்தபக்கத்துக் காதை தொடச் சொல்வார்கள். தொட்டுவிட்டால் ஐந்து வயது முடிந்தது என தீர்மானிக்கப்படும். உடனே அவனுக்கு ஏதாவது ஒரு பிறந்த தேதியை போட்டு, பள்ளியில் சேர்த்து விடுவார்கள். இப்படித்தான் பல குழந்தைகளின் வயதுகள் தீர்மானிக்கப்பட்டன. வெகுசிலரே சரியான பிறந்த தேதியை பள்ளிக்கூடத்தில் கொடுத்தவர்கள். படித்த பெற்றோர், ஜாதகம் எழுதிவைத்திருந்த பெற்றோர், இவர்களைத் தவிர மற்றவர்களின் பிள்ளைகளுக்கு அவ்வளவாக சரியான பிறந்த தேதி இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. எல்லாப் பள்ளிகளிலும் கண்டிப்பாக பிறப்புச் சான்றிதழைக் கொடுக்கும்படி கேட்கின்றன.

ஒருவரின் பிறந்த தேதி என்பது பிறப்பு சான்றிதழ்அடிப்படையில்தான் நம்பப்படும். அவரின் பள்ளி சான்றிதழில் உள்ள தேதியைக் கொண்டு முடிவெடுக்க முடியாது. அவருக்கு பிறப்பு சான்றிதழே இல்லாதபோது பள்ளி சான்றிதழில் உள்ள தேதியே சரி எனலாம். சரியான பிறப்பு சான்றிதழ் கிடைத்தால், அந்த சரியான தேதியை பள்ளிச் சான்றிதழிலும் கோர்ட் உத்திரவு பெற்று மாற்றிக் கொள்ளலாம். அரசு ஊழியராய் இருந்தால் அவர் பணியில் சேர்ந்த 5 வருடத்திற்குள் இதை செய்து கொள்ளவேண்டும். ஆனாலும், சர்வீஸ் விதி 49-ன்படி, 19.8.1970 தேதிக்குமுன்னர் வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. GO Ms.395 dated 15.12.1992 & GO Ms.66 dated 2.2.1996.
  1. GO Ms No.395 dated 15.12.1992 = amendment was effected to R49.
  2. GO Ms No.66 dated 2.2.1996 = further amendment was made that limitation is not applicable to the Govt servants who entered service before 19.8.1970.

நீதிபதிகளாக பதவிக்கு வந்தபின்னர்கூட இந்த பிரச்சனைகள் பல வந்துள்ளன. ஆனால் ஒரு வேடிக்கையான நிகழ்வு மெட்ராஸ் ஐகோர்ட்டில் (சுதந்திரத்துக்குமுன்னர்) நிகழ்ந்ததாக கூறிக் கொள்வார்கள்.

ஒரு திறமையான ஐகோர்ட் நீதிபதி. இவர் இந்தியர். வெகுகாலமாக ஐகோர்ட் நீதிபதியாக பதவியில் இருந்து நல்ல தீர்ப்புகளையும் கொடுத்து வருகிறார். அப்போதுள்ள நிலவரத்தின்படி நீதிபதியானவர் தனது 60-வது வயதில் பதவியிலிருந்து ஓய்வு பெறுவார். அவருக்கு ஒரு தம்பி. அவர் தனது சஷ்டியப்பபூர்த்தியை ஒரு விழாவாக கொண்டாடி அனைவரையும் அந்த விழாவுக்கு அழைத்திருக்கிறார். மறுநாள் கோர்ட்டில் பரபரப்பு. 'தம்பிக்கு 60 வயது முடிந்ததை சஷ்டியப்பபூர்த்தியாக கொண்டாடும்போது, நீதிபதி அண்ணன் எப்படி 60 வயதை பூர்த்தியாகாமல் பதவியில் இருக்கிறார்.' இதை அறிந்த நீதிபதி, 'அன்றே அப்போதே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவரின் உண்மையான பிறந்த தேதியை பள்ளியில் சேர்க்கும்போது கொடுக்கவில்லை. ஒருவேளை காதை தொட்டு வயதை நிர்ணயித்திருப்பார்கள் போலும்.

.

நினைவுகள்-19

தத்துக் குழந்தை (Adopted child)
பொதுவாக தத்துக் குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பது என்பது இந்துக்களிடம் வெகுகாலமாக இருந்துவரும் பழக்கம். இந்து மத தத்துவத்தின்படி ஒருவன் மோட்சத்தை அடைய வேண்டுமானால் அவன் ஆண்குழந்தையை பெற்று அவன் மூலம் அவனின் மூதாதையருக்கு பிதுர் கர்மம் செய்ய வேண்டும். இதற்காக மட்டுமே ஆண் குழந்தையை தத்து எடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. மற்ற மதங்களான கிறிஸ்தவம், முஸ்லீம் மதங்களில் இந்த வழக்கமே இல்லை.

இந்து மதத்திலும், ஒரு ஆண் குழந்தையை மட்டுமே தத்து எடுக்க முடியும் என்றும், அதுவும் ஒரு ஆண் குழந்தை இல்லையென்றால் மட்டுமே தத்து எடுக்க முடியும் என்று கட்டுப்பாடும் இருந்தது. ஆனால் அந்த பழைய வழக்கங்களுக்கு முடிவு கட்டி, 1956ல் புதிய சட்டத்தை சுதந்திர இந்தியா கொண்டு வந்தது. இந்த புதிய சட்டப்படி தற்போதைய நிலை:
  1. ஆண் குழந்தை மட்டுமல்ல, ஒரு பெண்குழந்தையையும் தத்து எடுக்கலாம்.
  2. தத்து எடுக்கப்படும் குழந்தை அதே ஜாதியை சேர்ந்திருக்க வேண்டும் என்ற பழைய கட்டுப்பாட்டை நீக்கி, யாரை வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம் என்கிறது புதுச் சட்டம்.
  3. இந்து கணவன் மட்டுமே (மனைவி சம்மதமில்லாமல்) தத்து எடுக்கலாம் என்ற பழைய சட்டத்தை நீக்கி, மனைவியின் சம்மத்துடன் மட்டுமே தத்து எடுக்க முடியும் என்ற விதியை கொண்டு வந்தது.
  4. ஒரு ஆண், ஒரு பெண்குழந்தையை தத்து எடுத்தாலும், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்தாலும், தத்து எடுப்பவருக்கும், தத்துக் குழந்தைக்கும் வயது வித்தியாசம் குறைந்த பட்சம் 21 வயது வித்தியாசம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போது உள்ளது.
  5. தத்து எடுக்கப்படும் குழந்தைக்கு 14 வயதுக்கு கீழே இருக்க வேண்டும், அதற்குமேல் வயதுடைய குழந்தையை(!) தத்து எடுக்க முடியாது. (15 வயது முடிந்திருக்கக் கூடாது).
  6. குழந்தையின் இயற்கை பெற்றோர் (Biological parents) இருவரும் சேர்ந்தே வளர்ப்பு பெற்றோருக்கு குழந்தையை தத்து கொடுக்க முடியும். (யாராவது ஒருவர் இல்லாமல் போனால், மற்றவர் மட்டும் கொடுக்கலாம்).
  7. ஒருதரம் தத்துக் கொடுத்த குழந்தையை, வேறு ஒருவருக்கு மாற்றி தத்துக் கொடுக்க முடியாது.
  1. கணவனை இழந்த பெண்மணியும் ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியும்.
  1. திருமணமே ஆகாத ஒரு பெண்ணும் ஒரு குழந்தையை தனக்காகத் தத்து எடுக்க முடியும்.
  2. ஒரு ஆண்குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால், அவருக்கு ஒரு மகனோ, இறந்த மகனின் மகனோ, இறந்த பேரனின் மகனோ உயிருடன் இருக்கக் கூடாது.
  3. அதேபோல், ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால், அவருக்கு ஒரு மகளோ, இறந்த மகளின் மகளோ, இறந்த பேத்தியின் மகளோ உயிருடன் இருக்கக் கூடாது.

இதையெல்லாம் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர்தான் செய்யமுடியும். வேறு மதத்தை சேர்ந்தவர் செய்ய முடியாதாம். வேறு மதத்தை சேர்ந்தவர் தத்து எடுக்க வேண்டும் என்றால், அவர் சாதாரண வளர்ப்புக் குழந்தையாக மட்டுமே வளர்த்து அவர் ஏதாவது சொத்தை ஆதரவாக எழுதி வைக்கலாம். சட்டபூர்வ தத்து குழந்தையாக எடுக்க முடியாது. அதாவது ஒரு வாரிசு என்று வளர்க்க முடியாது.

ஏழைக் குழந்தைகளைத்  தத்து எடுப்பது:
இந்தியாவில் அதிகமான அனாதை இல்லங்களும், ஆதரவற்ற குழந்தைகளும் உள்ளன. இவர்களை வளர்ப்பதற்கென்றே பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் உள்ளன. அதில் உள்ள பல குழந்தைகளை வெளிநாட்டில் இருப்பவர்கள் தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த 'இந்து தத்துச் சட்டம் தேவையில்லை. நேரடியாக இந்தியாவில் உள்ள மாவட்ட கோர்ட்கள் மூலம் கோர்ட் அனுமதி பெற்று, தத்து எடுத்துக் கொண்டு அவர்கள் நாட்டிற்கு கூட்டிக் கொண்டு போகலாம். மத்திய அரசின் சில சட்ட நடைமுறைகளையும், சுப்ரீம் கோர்ட் பரிந்துரைகளையும் மட்டும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஒரு மன உறுத்தல்:
எத்தனையோ குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளாக ஆகியுள்ளன. சிலர் மட்டுமே, ஆதரவற்ற இல்லங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பெற்றோர் ஆதரவு கிடைத்த குழந்தைகள் கடவுளின் பூரண அருள் பெற்றவையே! அது இல்லாமல் போன குழந்தைகளை மற்ற மதத்தினரும் தத்து எடுத்துக் கொள்ள சட்டவழிகளை ஏற்படுத்தலாமே! இந்துக்களுக்கு மட்டுமே உள்ள சட்டத்தை மற்ற மதத்தினருக்கும் விரிவு படுத்திக் கொள்ளலாமே! ஒரு இந்து, அவன் மோட்சத்தை அடைய ஒரு குழந்தை வேண்டும் என்று இருந்த இந்த சட்டத்தை மாற்றியதுபோல, மற்ற மதத்தினரும் சட்டபூர்வ தத்து எடுத்துக் கொள்வதற்காவது சட்டம் அனுமதிக்கலாமே?  காத்திருப்போம்...

.

Friday, July 25, 2014

நினைவுகள்-18

மௌனமும் ஒரு பொய்யே!
சொத்தின் விற்பனையில், அந்தச் சொத்தைப் பற்றிய குறைகள் இருந்தால், அதை வாங்குபவரிடம் முன்னரே சொல்லிவிட வேண்டும். இல்லையென்றால், அவர் பொய் சொன்னதாகக் கருதி அதற்குறிய நஷ்டத்தை ஈடுசெய்ய நேரிடும்.

எவையெல்லாம் சொத்தைப் பாதிக்கும் குறைகள் (Material defects) என்றால், "அந்த குறைகள் நேரடியாக அந்த சொத்தின் மதிப்பை குறைக்கும் அல்லது அந்த சொத்துக்கு நஷ்டத்தை உண்டாக்கும் குறைகள் எல்லாம்" (அதாவது அதிலுள்ள கடன்கள், வரிபாக்கிகள், வழக்குகள், போன்றவை) 'சொத்தைப் பாதிக்கும் குறைகளே (material defects).

இந்தியாவில் உள்ள சொத்துரிமை மாற்றுச் சட்டத்திலும், பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள சொத்துரிமை மாற்றுச் சட்டங்களிலும் இதே நிலைதான். "வாங்குபவர்தான் உஷாராக இருக்க வேண்டும் (Purchasers Beware)" என்ற பொதுவிதி இங்கு சொத்து வாங்கும் விஷயத்தில் செல்லாது.

வேடிக்கையும், பரிதாபகரமும் கொண்ட ஒரு வழக்கு அமெரிக்க பெனிசில்வேனியா சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் வந்தது.

பெனிசில்வேனியா மாகாணத்தில் ஒரு நகரில் (Philadelphia) உள்ள ஒரு குடியிருக்கும் வீடு விற்பனைக்கு வந்தது. அதை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலம் அந்த வீட்டுக்காரர் விற்பனை செய்தார். அந்த வீட்டின் முன் உரிமையாளர், அவரின் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் அதே துப்பாக்கியால் தற்கொலையும் செய்து கொண்டார். அந்த விஷயம், அந்த வீட்டை சமீபத்தில் வாங்கியவருக்கு தெரியவருகிறது. உடனே அவர் அந்த வீட்டை ரிப்பேர் செய்து, பெயிண்ட் அடித்து, வேறு ஒருவருக்கு விற்கிறார். அந்த வீட்டில் இதற்குமுன், ஒரு கொலையும், தற்கொலையும் நடந்துள்ளது என்று வாங்கியவரிடம் சொல்லவில்லை. புதிதாக வீட்டை வாங்கியவர் வேறு ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் இந்த விபரமும் தெரியாது. வீட்டை வாங்கி, இங்கு குடிவந்தவுடன், பக்கத்து வீட்டுக்காரர் அந்த கதையைச் சொல்கிறார். வீட்டை வாங்கிய பெண்மணி, சமீபத்தில் அவரனி கணவரை இழந்தவர். தன் குழந்தைகளுடன் அங்கு வசிப்பதில் பயம் வந்துவிட்டது. இந்த சொத்தை விற்றவர், அங்கு நடந்த கொலையையும், தற்கொலையும், வீடுவாங்குவதற்கு முன், என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். அவ்வாறன செயல்கள் 'சொத்தில் உள்ள குறைகளே (material defects). எனவே சொத்து மாற்றுச் சட்டப்படி, சொத்தில் உள்ள குறைகளை மறைத்து என்னிடம் விற்றது  ஒரு மோசடியே! அவ்வாறு முன்னரே  என்னிடம் சொல்லி இருந்தால், நான் அந்த சொத்தை வாங்கலாமா, வேண்டாமா என்பதை முன்னரே முடிவெடுத்திருப்பேன். என்னைக் கண்ணைக் கட்டி, விற்பனை செய்த வீட்டின் முன் உரிமையாளரும், அந்த ரியல் எஸ்டேட் புரோக்கரும் இந்த மோசடிக் குற்றத்தை செய்தவர்களே என்று கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

மாவட்ட கோர்ட்டானது, "கொலை, தற்கொலைகள், ஒரு சொத்தில் நடப்பது போன்றவை, சொத்தின் குறைகள் என்று சொல்ல முடியாது" என தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து மாகாண சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கு, இந்த விவரங்களை வாங்குபவரிடம் சொல்லாதது அவரின் மனநிலையை பாதிக்கும் என்பதால், அது சொத்தின் குறையே என முதலில் தீர்ப்பு வழங்கியது. ஆனால், அதன் மீது மறுபரிசீலனை என்னும் ரெவியூ (Review) மனுவின் மீதான விசாரனையில் அது சொத்தின் குறையாக கருதமுடியாது என சொல்லி விட்டது.

ஒரு சொத்தில் அசம்பாவிதமான சம்பவம் நடந்திருந்தால் (தூக்குப் போட்டு தற்கொலை, கொலை, தீக்குளிப்பு தற்கொலை, பேய்நடமாட்டம்) அதை வாங்குபவருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என சட்டம் சொன்னாலும், அது மனதை பாதிப்பதுடன், அந்த சொத்தின் விலையையும் பாதிக்கவே செய்யும். சொத்தின் விலையை பாதிக்கும் எந்த செயலும் "சொத்தின் குறையாகவே" கருத வேண்டும் என்பதே எனது எண்ணமும்.

.

Thursday, July 24, 2014

நினைவுகள்-17

நம்பிக்கை
நம்பிக்கை என்பது காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. நமக்கு முன் உள்ள காலத்தில், வாய்ச்சொல்லுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற உயிரையும் கொடுக்கத் துணிந்தனர். எனவே எந்த விற்பனைக்கும் வாய்சொல்லே பிரதானம். அது கடவுளுக்குப் பயந்த காலம்.

பின் உள்ள காலங்களில், இருவர் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றால், நடுவில் ஒரு சாட்சி வேண்டி இருந்தது. அந்த சாட்சியும் ஒரு தகுதியுள்ள நபராக இருக்க வேண்டும். அவர் முன்னர் செய்து கொண்ட அந்த ஒப்பந்தத்தை நம்பிக்கைக்கு உரியதாக கருதினார்கள். ஒரு பத்திரத்தை எழுதிக் கொள்ள வேண்டும் என்றால், அதில் கையெழுத்துப் போடவேண்டியவர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பேனாவைப் பிடித்து அந்த பத்திரத்தில் ஒரு கீரல் (கோடு) செய்தால் போதும். அதை இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் செய்தால் போதுமானது என பிரிட்டீஸ் அரசு சட்டமும் கொண்டு வந்தது. அந்த பத்திரத்தின் கடைசியில் அவ்வாறு கோடு செய்தோ, கையெழுத்துப் போடத் தெரிந்தவர் கையெழுதுத்துப் போட்டும் எழுதிக்  கொண்டார்கள். இதுகூட பேப்பர், பத்திரம் கண்டுபிடித்த காலத்துக்கு பின்னரே.

தற்போதுள்ள காலங்களில் பல தில்லுமுல்லுகள் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் நம்பும் காலமே இல்லை. பத்திரத்தின் எல்லாப் பக்கங்களில் கையெழுத்துப் போட்டாலும், அவரின் கைரேகை, போட்டோ, அடையாள அட்டை என்ற நவீன முறைகளுக்கு வந்துவிட்டாலும், ஆள் மாறாட்டத்துக்கும், பொய்களுக்கும் குறைவில்லை.

தான் எழுதிய பத்திரத்தையே, 'இது எனது கையெழுத்து இல்லை' என்று கூசாமல் பொய் சொல்கிறான்.

நம்பிக்கை எந்த அளவுக்கு வந்துவிட்டது என்றால், 'பணத்தைக் கொடு, பத்திரத்தில் கையெழுத்துச் செய்கிறேன்' என்கிறான் சொத்தை விற்றவன். சொத்தை வாங்குபவனோ, 'பத்திரத்தில் கையெழுத்தைப் போடு, நான் பணத்தைத் தருகிறேன்' என்கிறான். இதில் எதை முந்திச் செய்ய வேண்டும்? எதையுமே முந்திச் செய்ய முடியாது. ஒருவருக்கு ஒருவர் சிறிது நேரம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளத்தான் வேண்டும். அதற்காக, நடுவில் ஒரு நியாயஸ்தன் இருக்கத்தான் வேண்டும். நம்பாமல் வாழவே முடியாது. அந்த நம்பிக்கையை யார் மேல் வைக்கலாம், யார் மேல் வைக்கக் கூடாது என்பது நமது அறிவும், அனுபவமும் சார்ந்த விஷயம்.

.

Wednesday, July 23, 2014

நினைவுகள்-16

பழையனூர் நீலி:
வணிகம் செய்யும் தன் கணவன் நாள்தோறும் பிறமங்கையரிடம் சென்று நட்பாக இருப்பதை அறிந்த அவன் மனைவி, எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறாள். அவன் கேட்பதாக இல்லை. இவளால் தொந்தரவாக இருக்கிறதே என்று எண்ணி, அவளைக் கொன்றுவிட திட்டமும் தீட்டி, அவளிடம் ஆசை வார்த்தைகூறி அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்று கொன்றுவிடுகிறான்.

இறந்தவள், பிசாசாய் அழைந்து திரிந்து, அவளின் கணவனைக் கொல்ல நினைக்கிறாள். இதை ஒரு ஜோதிடன் அறிந்து, அதை அந்த வணிகனிடம், 'நீ வடக்குப் பக்கம் போனால் ஒரு பேயால் இறக்க நேரிடும்; ஆனாலும் அந்த பேய் உன்னை தொடராமல் இருக்க ஒரு மந்திர வாளைத் தருகிறேன்; அந்த வாள் உன்னிடம் இருக்கும்வரை அந்தப் பேய் உன்னை ஒன்றும் செய்யாது' என கூறி அந்த வாளைக் கொடுத்தான்.

ஒருநாள், அவன் வியாபாரத்துக்கு வெளியூர் செல்லும்போது, அந்த நீலி என்னும் பேய், அவனைத் தொடர்ந்து வந்து பழிவாங்கத் துடித்தது. அந்த பேய், அவனின் மனைவியைப் போல உருவம் கொண்டு அவனைப் பின்தொடர்ந்து வந்தது. அவனிடம் இந்த மந்திர வாள் இருந்ததால், அந்த பேயால் ஒன்றும் செய்யமுடியவில்லை; ஆனால் பின்னாடியே தொடர்ந்து வந்தது. இவனும் மெதுவாக ஒரு ஊரை அடைந்து, அங்கு ஆலமரத்தடியில் பஞ்சாயத்தில் அமர்ந்திருந்த வேளாளர்களை கண்டு, தன்னை ஒருத்தி தேவையில்லாமல் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்கிறாள் என்று முறையிட்டான். ஆனால், பெண் உருவத்தில் இருந்த அந்த நீலிப்பேயானது, 'நான் இவரின் மனைவி, என்மீது இவர் வெகுநாட்களாகக் கோபத்தில் இருக்கிறார், நானும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக் கொண்டே அவர் பின்னாலேயே வருகிறேன், ஆனால் அவர் என்னை மதிக்கவில்லை. எனவே பஞ்சாயத்து பெரியவர்கள் அவரிடம் பேசி எங்களைச் சேர்த்து வைக்கும்படி கேட்கிறேன்' என்று புலம்புகிறாள்.

'இல்லையில்லை, இவள் என் மனைவியில்லை. இவள் ஒரு பேய்' என்று அவன் சொல்கிறான்.

அவளோ, 'பெரியோர்களே! என் கணவர் கோபத்தின் உச்சியில் இருக்கிறார். அவரிடம் நான் தனியே பேசினால் அவர் சமாதானம் ஆகிவிடுவார், எனவே எங்கள் இருவரையும் எதிரில் உள்ள மண்டபத்தில் சிறிது நேரம் தனியே பேசவிடுங்கள்' என்று சமாதானமாச் சொல்கிறாள்.

அவனோ, இவள் ஒரு பேய், என் மனைவியே இல்லை, இவள் சொல்வதை தயவுசெய்து நம்பாதீர்கள்' என்று புலம்புகிறான்.

அவளோ, 'ஐயா, நான் சொல்வதை நம்பவேண்டாம், என் இடுப்பில் இருக்கும் இவரின் குழந்தையை இறக்கிவிடுகிறேன், இது இவரிடம் செல்லும் பாருங்கள், அப்போதாவது என்னை நம்புங்கள்' என்று மன்றாடி கேட்டு, அந்த குழந்தையை இறக்கி விட்டாள். அந்த மாயக் குழந்தையோ, அவனை அப்பா என்று கூறிக் கொண்டு அவனிடம் சென்றது.

ஏதோ, கணவன் கோபத்தில், மனைவியை பேயென்று சொல்கிறான் என நினைத்த பஞ்சாயத்துதாரர்கள், 'வணிகரே, இவள் உன் மனைவி இல்லையென நீர் கோபத்தில் சொல்கிறீர்! எனவே நீயும் உன் மனைவியும் இந்த மண்டபத்தினுள் சென்று, அங்கு உமது மனைவிக்கு தகுந்த சமாதானம் செய்துவிட்டு வாரும்!' என கண்டிப்புடன் சொன்னார்கள். அவனோ, தன்னிடம் இருந்த கத்தியை கையில் வைத்துக் கொண்டே மண்டபத்தில் அவளுடன் நுழைந்தான்.

அவளோ, 'ஐயா இவரிடம் உள்ள கத்தியை நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்; இல்லையென்றால், இவர் கோபத்தில் என்னை அந்தக் கத்தியால் குத்திவிடுவார், எனக்குப் பயமாக உள்ளது' என்று நடித்தாள்.

இவளின் பேச்சை உண்மை என நம்பிய பஞ்சாயத்தில் இருந்த வேளாளர்கள், அந்தக் கத்தியை இவனிடமிருந்து வாங்கிக் கொண்டனர்.

அவனோ பதறி, 'ஐயா, நீங்கள் இவள் சொல்வதை நம்பி விட்டீர்கள், இந்த கத்தி இல்லாவிட்டால், இவள் என்னைக் கொன்றுவிடுவாள். இவள் உண்மையில் ஒரு பேயே! என் பேச்சை நம்புங்கள். நான் பொய் சொல்லவில்லை' என்று கதறுகிறான்.

ஆனால், பஞ்சாயத்தில் கூடியிருந்த 17 பேரும் சேர்ந்து, 'உன் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம். நீ துணிந்து போ. ஒருவேளை உன் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நாங்கள் 17 பேரும் உயிர் துறப்போம்! பயப்படாதே! என்று அவனை மண்டபத்துக்குள் கத்தியின்றி அனுப்பி வைத்தனர்.

உள்ளே புகுந்த அவனை, கொஞ்ச நேரத்துக்குள், அந்தப் பேய் கொன்று விட்டது.

அதற்குபின், வேறு பக்கமாக, அவனின் தாய் போல வேடமிட்டுக் கொண்டு, அந்த பஞ்சாயத்துதாரர்களிடம் வந்து, 'உங்களிடம் வந்த என் மகனை என்ன செய்தீர்கள்?' என்று கேட்டு நின்றாள்.

பஞ்சாயத்தில் இருந்தவர்கள், 'உன் மகனும், மருமகளும் இந்த மண்டபத்தினுள் சமாதானம் பேச சென்றுள்ளார்கள், நாங்கள்தான் அனுப்பி வைத்தோம். இப்போது வந்துவிடுவார்கள், காத்திரு.' என கூறி, இவர்களும்  வெகுநேரம் காத்திருந்தார்கள். வாணிகன் வரவில்லை. உள்ளே சென்று பார்த்தால், வாணிகன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறான்.

நம்பமுடியாத பஞ்சாயத்துதாரர்கள், சொன்ன சொல்லைக் காப்பற்ற வேண்டி, 17 வேளாளர்களும் தீயில் குதித்து உயிரை விட்டார்கள்.
(சேக்கிழார் நாயனார் புராணத்தில் சொல்லப்பட்டுள்ள பழையனூர் நீலி என்ற பேயின் கதை).
.

Monday, July 21, 2014

நினைவுகள்-15

ரெவின்யூ ஸ்டாம்ப்
(Revenue Stamp)
இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.

1)புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட்டில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும்.
2)எந்த பணத்தையாவது யாரிடமிருந்தாவது வாங்கும்போது அதற்கான ரசீது கொடுக்க வேண்டுமென்றால், அப்போதும் அந்த ரசீதில் இந்த ரூ.1/- ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ரசீதை கொடுக்க வேண்டும்.

ரசீது (Receipts)
மாதச் சம்பளம் வாங்குபவர் இதை அதிகமாக உபயோகிப்பார்கள். அலுவலகங்களில் ரசீது கொடுக்கும்போது இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய ரசீதை கொடுப்பார்கள்.

மத்திய அரசின் சட்டப்படி, ரசீதுகளுக்கு (Receipts), அதாவது யாரிடமாவது எதற்காகவாது பணம் வாங்கினால், அதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ரசீதுகளுக்கு, இந்த சட்டப்படி ரூ.1/- மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதுவும், அந்த பணமதிப்பு ரூ.5,000/-க்கு மேல் இருந்தால் அந்த ரசீதில் ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதற்கு குறைவான மதிப்புள்ள தொகைக்கு ரசீது கொடுத்தால், அதற்கு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்டத் தேவையில்லை. வெறும், ஸ்டாம்ப் இல்லாத ரசீதை கொடுக்கலாம். (இதற்கு முன்பு இருந்த பழைய சட்டப்படி ரூ.500/-க்கு மேல் உள்ள தொகைக்கே 20காசு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதனால், ரெவின்யூ ஸ்டாம்ப் அதிகமாக புழக்கத்தில் இருந்தது.)

ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய ரசீதுக்கு, அதை ஒட்டாமல் வாங்கி இருந்தாலும், பரவாயில்லை. எங்காவது அதை சாட்சியமாக கொடுக்க நேர்ந்தால் அப்போது அதற்கு ரூ.10/- அபராதமாக கட்டி அதை சரிசெய்தும் கொள்ளலாம். சட்டப்படி அது செல்லும்.

புராமிசரி நோட்டு கடன் (Promissory Note)
புராமிசரி நோட் கடனுக்கு, கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும், (கோடிக்குமேல் இருந்தாலும்), ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும். (அந்தச் சட்டத்தின்படி வெறும் 25 காசு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும் என்று சட்டம் சொல்லி உள்ள போதிலும், அவ்வாறான 25 காசு ஸ்டாம்புகளை அரசு அச்சடிக்கவில்லை. எனவே ஒருரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி எழுதி வாங்கிக் கொள்ளலாம்.)

இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல் வாங்கிய புரோநோட்டு சட்டப்படி செல்லாது. எந்த கோர்ட்டிலும் வழக்கும் போடவும் முடியாது. அபராதம் கட்டினாலும் அதை ஏற்க முடியாது. எனவே புரோநோட் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

.

Sunday, July 20, 2014

நினைவுகள்-14

பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு:
2005-ல் வந்த புதிய சட்டத் திருத்தம்:
இதுவரை குழப்பமாகவே இருந்துவந்த சட்டத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது.

சொத்துக்களில் 2 வகைகள்;
1)தனிச் சொத்து. (தானே கிரயம் வாங்கியது போன்றவை).
2)பூர்வீகச் சொத்து (அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா சொத்துக்கள்).
தனிசொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரிசமமான உரிமை உண்டு என 1956ல் வந்த இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டத்தில், பூர்வீக சொத்துக்களில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும், மகள், பேத்திகளுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதை ஒருவாறு சரிசெய்து, 1989-ல் தமிழ்நாடு அரசு தனியே ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதன்படி, இந்த சட்டம் வந்த நாளான 1989-வரை திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை மட்டும் கூட்டுகுடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பூர்வீக சொத்தில் மகனைப்போலவே மகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்ற மகளுக்கு, தந்தையின் பூர்வீக சொத்தில் பங்கு கிடையாது என்றும் சட்டத் திருத்தம் வந்தது.

பின்னர், மத்திய அரசு, 2005 ல் இந்தியா முழுமைக்கும் உள்ள அந்த 1956ம்வருட இந்து வாரிசு உரிமைசட்டத்தை திருத்தி, அதன்படி மகள்கள் திருமணம் ஆகி இருந்தாலும், ஆகாமல் இருந்தாலும் எல்லோருமே கூட்டுக்குடும்ப உறுப்பினர்கள்தான் என்றும் எனவே மகனைப் போலவே, மகளுக்கும் பூர்வீக சொத்தில் சரிசம பங்கு உண்டு என்றும் புதிய சட்டத்தை இயற்றியது.

இந்த 2005 புதிய மத்திய திருத்தச் சட்டத்தின்படி கீழ்கண்ட புதிய விளக்கம் உள்ளது.
  1. இந்த திருத்தல் சட்டம் 9.9.2005 முதல் அமலுக்கு வந்தது.
  2. அதற்குபின் எல்லா மகள்களும், மகன்களைப் போலவே  பூர்வீக சொத்தில் சரிசமமான சொத்துரிமை பெறலாம்.
  3. மகள்கள் பிறந்தவுடனேயே, மகன்களைப்போலவே, பூர்வீக சொத்தில் பங்கு ஏற்கனவே வந்துவிட்டது என்றும், எனவே அவர்கள் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருந்தாலும், இந்த உரிமை உண்டு.
  1. ஆனால், 20.12.2004 க்கு முன், அவர்களின் பூர்வீகச் சொத்தை பழைய சட்டப்படி பாகப்பிரிவினை செய்து பிரித்துக் கொண்டிருந்தால், அல்லது வெளிநபர்களுக்கு விற்று விட்டிருந்தால் அவ்வாறு பத்திரம் எழுதிப் பதிவு செய்து கொண்ட சொத்தில் மகள்கள் பங்கு கேட்கமுடியாது.
  1. 20.12.2004 வரை பூர்வீக சொத்தானது அந்த குடும்பத்தில் இருந்தால், அந்த சொத்தில் மகள் சரிசம பங்கு கோரலாம்.
  1. பொதுவாக ஒரு சட்டமானது, அது அமலுக்கு வந்த தேதியிலிருந்துதான் உரிமைகள் வரும், (Prospective). ஆனால் இந்த சட்டம் (Retrospective) அதாவது, மகள் பிறந்த தேதியிலிருந்தே அவருக்கு உரிமை கொடுத்துவிட்டது. அதுதான் இந்த சட்டத் திருத்ததின் சிறப்பம்சம் என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.
Bombay High Court, Nagpur Bench, in a Second Appeal.
Leelabai vs Bhikabai Shriram Pakhare, 2014(4) MHLJ 312 Bom.

**

Saturday, July 19, 2014

நினைவுகள்-13

சொல்வதெல்லாம் உண்மை!
ஒருவர், கோர்ட்டில் சாட்சி சொல்ல கூண்டில் ஏறியவுடன் சொல்லும் முதல் வார்த்தைகள், "நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை." இந்த வார்த்தைகளை சொன்னபிறகுதான் அவர் தன் வழக்கையோ, சாட்சியாக வந்ததையோ சொல்ல வேண்டும். இதை "சத்தியப் பிரமாணம்" என்கிறார்கள் கோர்ட்டில்.

பொய்யைச் சொல்பவர்களும், இதைத்தான் சொல்லி ஆரம்பிக்கிறார்கள். பிறகு எதற்கு இந்த சத்தியப்பிரமாணம் என கேட்கத் தோன்றும்!

ஆரம்ப காலத்தில், (பிரிட்டீஸ் நடைமுறையில்) அவரவரின் மதம்சார்ந்த சாஸ்திர புத்தகத்தின் மீது கையை வைத்து இவ்வாறு சொல்ல வேண்டுமாம். இந்துவாக இருந்தால் பகவத்கீதை புத்தகத்தின் மீது கைவைத்தும், கிறிஸ்தவராக இருந்தால் பைபிள் மீது கைவைத்தும், முகமதியராக இருந்தால் குரானின் மீது கைவைத்தும், இந்த சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த முறை இல்லை. மத நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றோ அல்லது அந்த நம்பிக்கைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்றோ தெரியவில்லை.

இன்றைய காலத்தில், நூறு பொய்களை கூசாமல் சொல்பவரும், இந்த சத்தியப் பிரமாணத்தை சர்க்கரைப் பொங்கலாக நினைத்து இனிக்க இனிக்க கூறிவிட்டு அவரின் முழு பொய்யையும் அவிழ்த்து விடுவார். அதுவும் சபை அறிய, சாட்சிக் கூண்டில் ஏறி.

இதனால் என்ன பயன் என்று சிலர் நினைப்பதுண்டு. சட்டம் அவ்வளவு எளிமையாக அவரை விட்டுவிடுவதில்லை. அதற்கு "எஸ்டபெல்" (Estoppel) என்று ஒரு முறை உண்டு. இந்திய சாட்சிய சட்டம் 1872, செக்ஷன் 115ல் உள்ளது (The Indian Evidence Act 1872, Sec.115). இது 1872 ல் இயற்றப்பட்ட சட்டம். சுமார் 145 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்ட பழைமையான சட்டம். இதன்படி ஒரு சாட்சி, ஒரு பொய்யை 'உண்மை என்று' கோர்ட்டில் சொன்னால், அதை வேறு ஒரு தருணத்தில் மாற்றிச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்ன பொய்யானது உண்மை என்றே கருதப்படும். அதை மறுமுறை மாற்றிச் சொல்லமுடியாது. பிறண்டு பிறண்டு பேச முடியாது என்பதைத்தான் எஸ்டபெல் என்ற விதி கூறுகிறது.

உதாரணமாக: ஒருவர், ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போடும்போது மேஜர் வயதில் இருந்தார். ஆனாலும், சாட்சியாக விசாரிக்கும் போது, அவர், அப்போது மைனராக இருந்தார் என பொய் சொல்கிறார். தனக்கு சாதகமான வேறு ஒரு தருணத்தில், இல்லையில்லை, நான் அப்போது மேஜராக இருந்தேன் என்று மாற்றிச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்னது சொன்னதுதான். அதுவே கடைசிவரை உண்மையாகவே சட்டம் கருதும்.

மேலும் பொய்சாட்சி சொல்பவர் வெகுநேரம் சாட்சிக் கூண்டில், வக்கீலின் குறுக்கு விசாரணையில் தாக்குப்பிடிக்கவும் முடியாது. கைதேர்ந்த பொய் சாட்சியைத் தவிர மனச்சாட்சியுள்ள எந்த சாட்சியும் பொய்யை வெகுநேரம் காப்பாற்ற முடியாது.

திறமையான வக்கீல் குறுக்கு விசாரனை செய்யும் முறை பற்றி, ஆங்கிலேயர்கள் இதற்கு ஒரு யுக்தி வைத்துள்ளார்கள்.
(1)"படித்த, விபரம் தெரிந்த சாட்சியாக இருந்தால், அவரை முதலில் கண்டபடி கேள்வி கேட்டு அவருக்கு எரிச்சலை உண்டாக்க வேண்டுமாம். படிக்காத முட்டாளைப்போல பேசுகிறாயே என்று கூட கேட்கலாமாம். அந்த எரிச்சலில் அவரின் 'உஷார் நிலை' மாறிவிடும். வக்கீல் எதிர்பார்த்த பதில் அவரிடமிருந்து கிடைத்துவிடுமாம்." இது ஒரு தந்திரம்.
(2)"படிக்காத பாமர சாட்சியாக இருந்தால், அவரை மிகுந்த மரியாதையுடன் அணுக வேண்டுமாம். எந்தவிதத்திலும் மரியாதைக்குறைவாக இல்லாமல், பணிவாக கேள்விகளைக் கேட்டால், அவர் மனமிரங்கி உண்மையையே பேசுவாராம்." இது ஒரு தந்திரமாம்.
(இவைகள் காலங்காலமாக, கைதேர்ந்த ஆங்கிலேய வக்கீல்கள் கையாண்ட முறைகளாகும்.)

.

நினைவுகள்-12

சொத்துச் சுதந்திரம்.
நம்மை, கொஞ்சம் பின்னோக்கி கொண்டுசென்றால், நமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்வு கிட்டத்தட்ட அடிமை வாழ்வே!
அந்தக்காலத்தில் அரசர்கள் மக்களை ஆண்டார்கள். ஏதோவொரு அரசரின்கீழ் நமது மூதாதையர் வாழ்ந்திருப்பர். மொத்த நிலமும் அரசருக்கே சொந்தம். அதை விவசாயம் செய்பவர்கள், அனுபவிப்பவர்கள், அந்த நிலத்தில் வரும் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு 'வருமானத்தை' அரசருக்கு கொடுத்துவிட வேண்டும். அதை வசூலிக்க அதற்கென அரசரின் ஆட்கள் இருப்பார்கள்.

நம் நாட்டு அரசர்கள், அந்நிய அரசர்கள், இவர்களின் ஆட்சிமுறை முடிந்து, பிரிட்டீஸ் ஆட்சிமுறை வந்தது. அவர்களும் ஆரம்பத்தில் அரசர்களின் முறை வசூலையே செய்தனர். சில பகுதிகளை அந்தப் பகுதியில் உள்ள பிரபலமானவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். அவர்கள் அந்த நில வருமானங்களை வசூலித்துக் கொள்ளலாம். அதில் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்தி விட்டால் போதும். அந்த மாதிரியானவர்களுக்கு 'ஜமின்தாரர்கள்' என்று பெயர். (ஜமின்=நிலம்).
பிரிட்டீஸ் அரசானது, தன்னிடம் இராணுவத்தில், மற்ற அரசாங்க காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபட்டவர்களுக்கு பரிசாக சில கிராமங்களையே (அல்லது ஒருபகுதி கிராமத்தையே) வழங்கி இருந்தன. அவைகளுக்கு 'இனாம்கள்' எனப்பெயர் (இனாம்=இலவசம்). மொத்த கிராமத்தையும் கொடுத்திருந்தால் அதை 'மேஜர் இனாம்' என்றும், ஒருபகுதி கிராமத்தை வழங்கி இருந்தால், அதை 'மைனர் இனாம்' என்றும் சொல்லுவார்கள். இது அல்லாமல், பொது சமுதாய கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கு (அதாவது கோயில் பூஜாரி, அர்ச்சகர், வேதம் கற்பிக்கும் சமஸ்கிருத பண்டிதர்கள், முடிதிருத்துபவர், துணி வெளுப்பவர், போன்றவர்) இனாமாக நிலம் கொடுத்துள்ளார்கள். இதை 'மானியம்' என்பர். இந்த மானியங்களில் பலவகைகளும் உண்டு. அந்த சமுதாய வேலையை செய்யும்வரை அந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு, அதற்குபின் கிடைக்காது. மற்றொன்று, அந்த மானிய நிலத்தை முழுஉரிமையுடன் தலைமுறையாக அனுபவிக்கும் உரிமையும் கொடுத்திருந்தார்கள்.

பின்னர், இந்த பிரிட்டீஸ் அரசு, இதில் பெருத்த சீர்திருத்தத்தை செய்தது. அந்த அரசால், நில வருமானத்தை (Rent, profit) வசூலிக்க முடியவில்லை. எனவே இனி அரசுக்கு யாரும் 'வருமானமாக' ஆறில் ஒருபங்கு கொடுக்க வேண்டாம். நிலத்தை நீங்களே பூர்வீகமாக அனுபவித்துக் கொள்ளுங்கள், ஆனால் நிலத்தின் தரத்துக்கேற்ப வரி (Tax) மட்டும் கட்டிவிடுங்கள் என்று சட்டம் கொண்டுவந்தது. அதன்படி மிக அதிகமானவர்கள் நில உரிமையாளர்கள் ஆனார்கள். ஆனாலும், ஜமின் சொத்துக்கள் எல்லாம் ஜமின்தாரர்களிடமே உரிமை இருந்து வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஜமின் ஒழிப்புச் சட்டமும் வந்தது. அதன்படி நிலத்தில் உழைப்பவர்களுக்கே (பயிர் செய்வர்களுக்கே) நிலம் முழு உரிமையுடன் சொந்தம் என்றும், ஜமின்தாரருக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என்றும் சட்டம் விளக்கியது. தமிழ்நாட்டில் பல ஜமின் நிலங்கள் இருந்தன. சென்னையைச் சுற்றி பல ஜமின் கிராமசொத்துக்கள் இருந்தன. இனாம் ஒழிப்புச் சட்டமும் அவ்வாறே.

இப்போது எந்த நிலமும் இந்த கட்டுப்பாடுகளை கொண்டிருக்கவில்லை. ஒன்று, அது அரசாங்கத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலமாக இருக்கும்; அல்லது தனி நபருக்கு முழுஉரிமையுடன் சொந்தமான பட்டா நிலமாக இருக்கும். (பட்டா=அனுபவத்தில் இருப்பது; பட்டாதாரர் =நிலத்தை அனுபவத்தில் வைத்திருப்பவர்). எல்லா நிலங்களின் பட்டாதாரர்களின் பெயர்களை தயாரித்து அந்தந்த வருட கணக்கில் அரசாங்கம் எழுதிக் கொள்கிறது. இந்த பதிவேடு கிராம அதிகாரியிடம் உள்ளது. வரிவசூல் செய்வதற்காக அவர் வைத்துள்ளார். தற்போதைய கம்யூட்டரின் வழியிலும் அதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த நில ஒப்படைப்பு ஏற்பாட்டின்படி, நிலத்துக்கு அடியில் கிடைக்கும் தங்கம், அரிய உலோகங்கள், எரி எண்ணெய், புதையல், இவைகள் எல்லாம் அரசுக்கு சொந்தம். நிலத்தின் மேல் வரும் வருமானம் எல்லாம் பட்டாதாரருக்குச் சொந்தம்.

சுதந்திர இந்தியாவில், நாம் ஒரு சொத்தை, இந்தியாவில் எங்கிருந்தாலும், (காஷ்மீர் தவிர) வாங்கும் உரிமை பெற்றுள்ளோம். அதை அனுபவிக்கும் உரிமை பெற்றுள்ளோம். விற்கும் உரிமை பெற்றுள்ளோம். நம் வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் உரிமை பெற்றுள்ளோம். நாம் அந்த சொத்தை அனுபவித்து வருவதில், நமது அரசு கூட தலையிடமுடியாது; (ஆனால், அவசியமாக பொது நன்மைக்குத் தேவைப்பட்டால், சட்டபூர்வ காரணத்துடன் எடுத்துக் கொள்ளலாம்).

இந்தச் 'சொத்துச் சுதந்திரமானது' சுதந்திர இந்தியாவில் கிடைத்ததே ஒரு சுதந்திரமே! இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் மூதாதையர் சொந்தம் கொண்டாட முடியாத இந்த மண், இப்போது நமக்கே சொந்தமாகி விட்டது. ஆனாலும், ஒவ்வொரு மண்-துகளும், தங்கத் துகளுக்கு நிகரான விலையாகியும் விட்டது விந்தையே!

.

நினைவுகள்-11

உயில் எழுதவேண்டாம்.

சொத்து இருப்பவர்தான் உயில் எழுதமுடியும்.
சொத்து இல்லாதவர்களுக்கு அதைப் பற்றிய கவலையே தேவையில்லை.

சொத்து இல்லாதவர்கள், "இந்த பிறவியில் அந்த கொடுப்பினை இல்லாமலேயே, வாழ்ந்து மறைய வேண்டியதுதான்" என்ற மனவருத்தம் இருந்தாலும், உயில் எழுதிவைக்க வேண்டுமே என்ற கவலை இருக்காது. (ஒன்று இருந்தால், இன்னொன்று இருக்காது என்பது பிரபஞ்ச விதி!)

சொத்து இருப்பவர், அவரின் வாழ்நாளின் கடைசி காலங்களில் உயில் எழுதி வைப்பது, அவரின் வாரிசுகளுக்குள் சண்டையில்லாமல் இருக்க வழிவகுக்கும் என சட்டமும், அதைப்படித்த வக்கீல்களும், அனுபவமிக்க பெரியவர்களும் சொல்லி வருகிறார்கள்.
ஆனால், எனக்கென்னவோ, அது சரி என்றுபடவில்லை. கட்டாயமாக உயில் எழுதிவைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் குடும்ப சூழ்நிலை, தேவை, இவைகளைப் பொறுத்து உயில் அவசியமா இல்லையா என்பதை அவரவரே முடிவு செய்ய வேண்டும்.
  1. சொத்து இருக்கிறது என்பதற்காகவே மட்டுமே உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  1. தனக்கு வயதாகிவிட்டது என்பதற்காகவே மட்டுமே உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  2. நாம் உயிருடன் இருக்கும்போதே, நம் சொத்துக்களை பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தால், நம் பிள்ளைகள் மகிழ்வார்கள் அல்லது சண்டையிருக்காது என்பதற்காக மட்டுமே உயில் எழுதவைக்க வேண்டாம்.
  3. பிள்ளைகள், நம்மைக் கட்டாயப் படுத்துகிறார்கள் என்பதற்காக மட்டும் உயில் எழுத வேண்டாம்.
  4. நமது ஒத்த வயதுடைய நண்பர்கள் அதுபோல உயில் எழுதி வைத்துள்ளார்கள் என்பதற்காகவோ, அவரைப்போலவே நாமும் எழுதி வைத்து விடுவோம் என்பதற்காகவோ மட்டும் உயில் எழுத வேண்டாம்.
  5. நாம் இந்த உலகைவிட்டு சென்றபின், நமது பிள்ளைகள், 'உயிருடன் இருக்கும்போதே, இந்தப்பாவி சொத்தை பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம்' என்று நம்மை திட்டிவிடுவார்கள் என்பதற்காக பயந்து கொண்டு உயில் எழுதி வைக்க வேண்டும்.
  6. ஒரு மகனோ/ மகளோ நம்மை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வாஞ்சையால் உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  7. ஒரு மகனோ/ மகளோ நமது கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதற்காக அவனுக்கு/அவளுக்கு மட்டும் சொத்து போய் சேரவே கூடாது என்பதற்காக மட்டும் ஒரு உயிலை எழுதி வைக்க வேண்டாம்.
  8. கோபப்பட்டுக் கொண்டு கோயிலுக்கும், தர்மத்துக்கும் எழுதி வைக்க வேண்டாம். (தர்மத்துக்கு எழுதிய சொத்துக்கள் எல்லாம், கோர்ட்டில் வழக்குகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.)

இதில் சொல்லியுள்ள எந்த காரணமும் உயில் எழுதுவதற்கு போதுமான காரணமாக கொள்ள முடியாது.

முடிந்தவரை நம் வாழ்நாள்வரை நாமே நமது சொத்தையும் பணத்தையும் 100 சதம் அனுபவித்து இறப்பதே சாலச் சிறந்த முடிவு. நமது வாழ்நாளுக்குப் பின்னர் நமது பிள்ளைகளுக்குத்தான் அந்த சொத்து போய்ச் சேரப் போகிறது. இதில் எந்த சட்டப் பிரச்சனையும் வராது. வேறு மூன்றாம் மனிதர்களுக்கு எந்தக்காலத்திலும் அவை போய் சேராது. எல்லா மதங்களிலும் இதற்கென தெளிவான தனித்தனி சட்டங்கள் உள்ளன. எனவே உயில் எழுதும் எண்ணத்தை உங்களின் வாழ்நாள் வரை ஒத்தி போடுங்கள்.

ஆனால், கீழ்கண்ட சூழ்நிலை இருந்தால் மட்டும் உயில் எழுதி வைக்க நீங்கள் முயற்சி எடுங்கள்.
  1. உங்களிடம் ஒரேயொரு சொத்து மட்டும் இருந்து, உங்கள் மனைவிக்கு வேறு எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தால், அந்த சொத்தை, உங்களின் காலத்துக்குப் பின், அந்த சொத்து முழுவதையும் உங்களின் மனைவிக்கே கொடுத்து விடுவதாய் உயில் எழுதி வைத்து விடுங்கள். (உங்களின் பிள்ளைகளிடமோ, மருமகளிடமோ கையேந்த வைக்காதீர்கள்.)
  2. உங்களிடம் பல சொத்துக்கள் இருந்து, உங்களுக்கும் நல்ல வசதி இருந்தால், ஆதரவற்ற உங்களின் உறவினர்கள் உங்களை எதிர்பார்த்து இருந்தால், (மகன், மகள் தவிர, அதாவது, உங்களின் இறந்த மகனின் மனைவி,  உங்களின் இறந்த சகோதரன்/ சகோதரி வாரிசுகள், உங்களின் மனைவியின் இறந்த சகோதர/சகோதரி வாரிசுகள் போன்றோர் இருந்தால்) உங்களிடம் அதிகப்படியாக உள்ள சொத்துக்களை அவர்களுக்கு பிரித்து உயில் எழுதி வைத்து விடுங்கள்.

நாம் இறந்தபின்னும், இந்த உலகம் எந்த சிக்கலும் இன்றி இயங்கத்தான் போகிறது. எல்லாச் சட்டங்களும் இருக்கத்தான் போகிறது. நாமே எல்லாவற்றையும் சரிசெய்து வைத்துவிட்டுப் போய்விடுவோம் என்றும், இல்லையென்றால் மற்றவர்களுக்கு அது சிக்கலை உண்டாக்கிவிடும் என்றும் எண்ணிக் கொண்டு எதையும் செய்ய வேண்டாம். நமது மறைவுக்குப் பின்னர், அவைகளை நிறைவேற்ற இறைவன் இருக்கிறான் என்பதை மறந்துவிட வேண்டாம். ஏனென்றால், உயிருடன் இருக்கும்போது எழுதி உயில்கள், செட்டில்மெண்ட் பத்திரங்கள் அதில் சொல்லியுள்ள நிபந்தனைகள் எல்லாம், அவர் மறைந்தபின்னர், அவசியமே இல்லாமல் போன பல நிகழ்வுகள் உண்டு; அதற்கு நேர்மாறாக நடந்த நிகழ்வுகள் பல உண்டு. "நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் வேறொன்றை நடத்தத்தான் செய்வார், சந்தேகமில்லை."

தன் வாழ்நாளிலேயே செட்டில்மெண்ட் பத்திரங்கள் மூலம் தனது வாரிசுகளுக்கு சொத்தை பங்கிட்டு கொடுத்துவிட்டு, அவரின் வாழ்நாளின் கடைசி காலங்களில் கண்ணீர் விட்டு அழுத சம்பவங்கள், அவைகளை எழுதிய வக்கீல் என்ற முறையில் ஏராளம்! ஏராளம்!! காரண-காரியங்கள் தேவையில்லை. பந்த-பாசங்கள் பொய் எனவும் சந்தேகிக்கும் சூழ்நிலைகள். ஏமாந்துவிட்டோம் என்ற ஏக்கங்கள். போக்கிடம் இல்லாத தனிமைத்துயரம்! வயதான காலத்தில் ஒருவர் தனக்கென சொத்தோ, பணமோ இல்லாமல் இருந்துவிடக் கூடாது. ஆனால், வறுமையில் இருந்தால், "ஏமாந்து, தனக்கு உதவிசெய்து காப்பாற்றும் பிள்ளையொன்று தனக்கு இருந்தால்", அவர் உண்மையில் அதிர்ஷ்டசாலியே!

நமது மறைவுக்குப் பின், இந்த உலகில் நமது பிள்ளைகள், 'நாம் சொல்லிச் சென்ற வார்த்தைகளை' எத்தனைபேர் மதித்துள்ளார்கள். மிகக் குறைவே. நமக்கு முகத்துக்குநேர், மரியாதை செய்யும் நம் பிள்ளைகள்கூட, நமது கண்ணுக்குப் பின், அலட்சியமாகத்தான் நடந்துகொள்கின்றன. நாம் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை பொய்யாகத்தான் போகிறது.

2000 வருடங்களுக்குமுன் வாழ்ந்த கிழவி சொன்னதுபோல, "இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாய் வேண்டாள்......."
பணம் இல்லாவிட்டால் பெண்டாட்டி மதிக்கமாட்டாள், அது இயற்கை; ஆனால் பெற்றதாயும்கூடவா! ஆச்சரியமே!!!

.

Friday, July 18, 2014

நினைவுகள்-10

1956ல் நடந்த ஒரு சுவாரசியமான வழக்கு இது.
(Sadasivam vs State of Madras, in AIR 1957 Mad 144).
சதாசிவம் என்பவர் பழைய மெட்ராஸ் டவுனில் பெரிய அளவில் சலூன் கடை வைத்திருந்தார். அவரிடம் 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். அப்போது இருந்த சட்டப்படி, எந்த நிறுவனமாக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக விடுமுறை விடவேண்டும், அதை அந்த நிறுவனத்தில் எல்லோருக்கும் தெரியும்படி எழுதியும் வைக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. எனவே இவரும், தன் சலூன் கடைக்கு திங்கட்கிழமை விடுமுறை என்று போர்டு எழுதி தொங்க விட்டிருந்தார். ஆனால் அன்று திங்கட்கிழமையாக இருந்தபோதும் சலூன் கடையை திறந்திருந்தார். அவரின் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த, அரசு தொழிலாளர் நல அதிகாரி, சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தி வழக்குப் போட்டார்.

மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவரின் வாதம் என்னவென்றால், (1) 'அவர் தவறே செய்யவில்லை என்றும், இதுவரை திங்கட்கிழமை விடுமுறை விட்டுவந்ததாகவும், பின்னர் ஷிப்ட் முறைக்கு  மாறிவிட்டதாகவும், எனவே தனக்கு அந்த விடுமுறை சட்டம் செல்லாது என்றும் வாதிட்டார். (2) "ஒரு இந்தியன் அவன் விரும்பும் தொழிலை விரும்பியபடி செய்து கொள்ள அடிப்படை உரிமையை இந்திய அரசியல் சாசனம் பிரிவு 19(1)(g)ல் வழங்கப் பட்டுள்ளது என்றும், எனவே அதில் அரசாங்கம், கட்டுப்பாடுகள், விதிகள் என்ற பெயரில் எனது அடிப்படை உரிமையில் மூக்கை நுழைக்க எந்த சட்டபூர்வ உரிமையும் கிடையாது" என்பது அவரின் சட்டபூர்வ வாதம்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாத மாஜிஸ்டிரேட் தண்டனைத் தீர்ப்புக் கொடுத்தார். அதை எதிர்த்து சலூன் கடைகாரர், ஐகோர்ட்டுக்கு ரிவிஷன் மனு செய்தார். இந்த வழக்கானது ஐகோர்ட்டில், சலூன் கடைகாரரின் அடிப்படை உரிமையான அவரின் விருப்பம்போல வியாபாரம் செய்து கொள்ளும் உரிமை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதா என்பதை விசாரித்தது.

அந்த வழக்கில் வாதம் செய்யப்பட்ட விஷயங்கள்;
பழைய காலத்தில், யூதர்கள் (Jews) வாழும் பகுதியில் உள்ள சலூன் கடைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்திருக்கும். ஆனால் மதியம் 1.30 மணிக்கு மேல் கடையில் வேலை செய்யும் வேலைக்காரருக்கு விடுமுறை கொடுத்துவிட வேண்டுமாம். ஏனென்றால், யூதர்களுக்கு சனிக்கிழமைதான் வேலைசெய்யாத நாளாகும். வாரத்தில் ஒருநாள் முழுவதும் விடுமுறைவிட வேண்டும் என்ற சட்டம் இங்கிலாந்து நாட்டில் 1830களிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், முடிதிருத்தோவோரின் ஞாயிறு விடுமுறை சட்டம் 1830 இருந்தது. (Hairdressers' and Barbers' Shops (Sunday Closing) Act, 1830). யூதர்களாக இருந்தால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமை விடுமுறை விட்டுக் கொள்ளலாம் என்பது சட்டம்.

இந்தியாவில் இந்த விடுமுறை விடும் முறைகள் ஏதும் இல்லாமல்தான் இருந்ததாம். ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் சட்டத்தைப் போன்றே கடைகளுக்கு விடுமுறைவிடும் சட்டம் என்ற சட்டத்தை மதராஸ் மாகாணத்துக்கு 1942ல் கொண்டுவந்துள்ளார்கள். அந்த சட்டத்துக்கு பெயர் The Weekly Holidays Act, 1942 (Central Act XVIII of 1942). இந்த சட்டம் கடைகள் நடத்தும் நிறுவனத்துக்கு மட்டும் பொருந்தும். தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில்கள், கப்பல்துறை தொழில்கள் இவைகளுக்கு பொருந்தாது. சாதாரண கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், கிளாக்குகளாக வேலைசெய்யும் நிறுவனங்களுக்கும் மட்டுமே இது பொருந்தும். இதே போன்ற சட்டத்தை பம்பாய் மாகாணத்துக்கும் கொண்டு வந்தார்கள். அதுவரை, கடைகளில் ஒருநாளைக்கு 11 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்வார்களாம். காய்கறி, பழக்கடைகளில் வேலை செய்பவர்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தார்களாம்.
மதராஸ் மாகாணத்திலுள்ள கிராமப் புறபகுதியில் உள்ள கடைகள் வாரம் முழுவதும் திறந்திருக்குமாம். எனவே Weekly Holidays' Act 1942 என்ற சட்டம் அமலுக்கு வந்தது.

அரசாங்கமானது, தொழிலாளர்களின் நன்மையை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது நியதி. பொதுவாக வாரந்தோறும் விடுமுறையே இல்லாமல் வேலை செய்தால் சோம்பல் வந்துவிடுமாம். (All Work and No Play Makes Jack a Dull Boy. என்பது ஆங்கில பழமொழி). ஒருநாளாவது தான் செய்யும் வேலையை மறந்து இருக்கவேண்டும். அப்போதுதான் புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும், முதலாளிகளுமே, வாரத்தில் ஒருநாள் முழுவதுமாக கடையை மூடிவிடவேண்டும் என அரசாங்கம் நல்ல எண்ணத்தில் ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
**
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 19(1)(g)ன்படி, இந்தியக்குடிமகன் அவன் விரும்பும் தொழிலை எந்த இடையூறும் இன்றி செய்யலாம். - என்று கூறுகிறது.

எந்தவொரு நியாமான தொழிலையும் ஒருவர் செய்யலாம், ஆனால் அது மற்றவர்களை பாதிக்கும்படி இருக்கக்கூடாது என்பது உலகளாவிய விதி. இந்த உரிமையானது சரியாக உபயோகிப்படுவதை அரசாங்கங்கள் சில விதிகளைக் கொண்டு கட்டுப்படுத்த அதிகாரம் உண்டு. எனவே இந்த அடிப்படை உரிமையானது 100 சதம் தடையில்லாத முழு உரிமைஇல்லை என்பதை ஆங்கிலேய சட்டம், அமெரிக்க சட்டம், இந்திய சட்டம் இவைகளும் அவ்வாறே வலியுறுத்துகின்றன.

14-வது அமெரிக்க சாசன சட்ட திருத்தம் -- "ஒரு குடிமகன் அவன் விரும்பும் தொழிலைச் செய்ய எந்த தடையும் இல்லை என்றாலும், அதை நியாயமான சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உண்டு" என்கிறது. அந்தக் கட்டுப்பாடானது, நியாயமான, பொதுவான மக்களின் நன்மையை கருதி இருக்க வேண்டும் என்றும் அந்த சட்டம் வரையறுக்கிறது.

இவைகளைக் கொண்டு பார்த்தால், ஒரு சலூன் கடையில் வேலைபார்க்கும் வேலையாளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை கொடுத்தால்தான் அவன் மன விருப்பத்துடன் வாழ முடியும் என்பது பொதுமக்களின் (தொழிலாளர்களின்) நன்மையை கருதிய விஷயமாகவே கருதவேண்டும். எனவே வாரவிடுமுறை விடவேண்டும் என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தது, தனிமனிதனின் தொழில் நடத்தும் உரிமையில் தலையிடுவதாகாது. எனவே சலூன் கடைகாரரின் அப்பீலை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

**