Saturday, March 26, 2016

வெறும் பானை பொங்குமோ!


வெறும் பானை பொங்காது!

"செய்தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் -- வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! (நல்வழி-17)

நான் யார், நான் ஏன் பிறந்தேன்; என்னை ஆக்கியவன் யார்; நான் படும் துன்பத்திற்கும், நான் அனுபவிக்கும் இன்பத்துக்கும் காரணம் என்ன; என்ற அத்தனை கேள்விகளைக் கேட்டுக் கிடைத்த பதிலால் வந்ததே இந்து சமயம்;

உயிர்கள் உண்டு; கடவுள் உண்டு; செய்யும் செயலுக்கு ஏற்ப பயன் உண்டு; செயல் அறும் வரைக்கும் மறுபிறப்பு உண்டு; என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்து சமயம்; தனிப்பட்ட ஒருவரைச் சமயக் கடவுளாகக் கொள்ளாமல், தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது இந்து சமயம்; சிவன் என்றும், மால் (திருமால்) என்றும், பிரம்மன் என்றும் கூறுவதெல்லாம் தத்துவங்களை விளக்க வந்த குறியீட்டுப் பெயர்களே!

இதனாலேயே கிபி எட்டாம் நூற்றாண்டுக்கு உரியவராய்ச் சொல்லப்படும் மணிவாசகர் "ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று திருவாசகம் பாடினார்;

மேலே கூறிய இந்துசமயத் தத்துவத்தைத் தமிழ்த் தாயான அவ்வையார் மேற்படி நல்வழி வெண்பா மூலம் விளக்குகின்றார்;

துன்பம் வந்தபோதும், துயரம் நீங்காத போதும், வறுமை நெருங்கியவிடத்தும், நமக்கு விருப்பமான தெய்வத்திடம் போய் முறையிட்டு ஆறுதல் கேட்கிறோம்; ஆறுதல் கிடைக்காத போது, அந்தத் தெய்வத்தைக் குறைகூறி "உனக்குக் கண் இல்லையா! நீ வெறும் சிலைதானா!" என்று கேள்வி கேட்கிறோம்;

இப்படியான கேள்விகளைக் கேட்டவுடன் நமக்குத் தேவையான செல்வமும் ஆறுதலும் கிடைத்துவிடுமா? மனம் போன போக்கெல்லாம் போய், அறம் பிறழ்ந்த செயல்களைச் செய்ததன் பயனாக நாம் அனுபவிக்கின்ற சிரமங்களை இல்லாமல் ஒழிப்பதற்குத் தெய்வத்திடம் போவதால் உடனடியாகப் பயன் என்ன விளைய முடியும்? கஷ்டங்களைத் தாங்குவதற்கான பலத்தைத் தெய்வம் தரமுடியும்; கஷ்டத்தை நீக்கத் தெய்வம் உதவாது; உதவும் முடியாது; ஏனென்றால், அது வினைப்பயன்! வினை விதைத்தவனே வினையை அறுவடை செய்தாக வேண்டும்; வேறு வழியில்லை;

இந்தப் பிறவியில் நல்வாழ்வு கிடைக்கவில்லையே, பிறந்த நாளிலிருந்து இந்நாள்வரை துன்பத்தின்மேல் துன்பம்தானே வந்து கொண்டிருக்கிறது என்று இப்போது புலம்பி என்ன பயன்? வெறும் பானையை அடுப்பில் வைத்து எரித்துவிட்டுப் பொங்கி வரவில்லையே என்று அங்கலாய்க்கலாமா? பானையில் அரிசி போட்டிருந்தால் அது தானே பொங்கி வந்திருக்கும்! வெறும் பானை எப்படி பொங்கும்? வரும் பிறவியில் நன்மை வேண்டும் என்பதற்காக இன்று நல்ல காரியங்களைச் செய்தால்தானே மற்ற பிறவிகளில் நன்மை அனுபவிக்க முடியும்;

ஆகவே இன்றே நன்மை செய்வோம்; அதுதான் இம்மையிலும் மறுமையிலும் உங்களைத் துயரக்கடலில் ஆழாமல் மிதக்கச் செய்யும் தெப்பமாக உதவும் என்று அவ்வை சொல்கிறாள்;

இன்று நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் நீங்கள் கடந்த பிறவியில் செய்த வினைதான்; நல்வினைக்கு நற்பயனும், தீவினைக்கும் தீயபயனும் உண்டு; இந்த நிலையை மாற்ற முடியாது; ஆகவே இயன்ற போதெல்லாம் அறம் செய்யுங்கள்; மறம் தவிருங்கள் என்கிறாள் அவ்வை;

அவ்வையார் கூறிய மேற்படி கருத்தை அவருக்குப் பல்லாண்டுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவரும் வேறொரு விதமாகச் சொல்லி இருக்கின்றார்; "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை."

அதோ பாருங்கள்! ஒருவன் பல்லக்கின் மேல் அமர்ந்திருக்கிறான்; வேறு நான்குபேர் அந்தப் பல்லக்கைக் தூக்கிக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடந்து கொண்டிருக்கிறார்கள்; பல்லக்கில் இருப்பவன் (ஊர்பவன்) அப்படிச்  சொகுசாக இருப்பதற்கும், பல்லக்கைக் தூக்கிச் செல்பவர்கள் துன்பப்படுவதற்கும் காரணம் என்ன? அவர்களின் வாழ்க்கை முறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம் என்ன? என்று கேட்டுவிட்டு, மறுமொழியாக வள்ளுவனே சொல்கிறார்; காரணம் காண வெகுதூரம் போகத் தேவையில்லை; பல்லக்கில் ஊர்பவன் செய்த புண்ணியம் அவனுக்கு சுகவாழ்வு அளித்துள்ளது; பல்லக்குத் தூக்குபவன் பாவம் அவர்களுக்கு அடிமை வாழ்வு கொடுக்கப் பட்டுள்ளது: ஆகவே நற்செயலின் விளைவைப் புரிந்து கொள்வதற்கு அங்கே இங்கே என்று நாம் எங்கும் போகத் தேவையில்லை; பல்லக்குக் காட்சியைப் பார்த்தால் போதும் என்று வள்ளுவன் விளக்கம் அளிக்கிறார்;

அவ்வையோ, அடுப்படிக் காட்சியை காட்டி, வெறும்பானை பொங்குமோ? என்று கேட்கிறார்;
(நன்றி: சிறீ கந்தராசா அவர்களின் "அவ்வையார் காட்டிய வழி" என்ற நூலில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கு)
**



2 comments: