Sunday, March 20, 2016

எத்தனையோ சீதைகள்!

எத்தனையோ சீதைகள்!
பொறுமைக்கு இலக்கணமாக சீதையை குறிப்பிடுவர்; அவள் கற்பிலும், பொறுமையிலும், துன்பத்தை சகித்துக் கொள்வதிலும், வாழ்க்கையை அர்பணித்து வாழ்வதிலும் மிகச் சிறந்த பெண்மணி; ஒரு இந்து பெண்மணி, திருமணத்துக்குப்பின் எப்படி பொறுமையுடன் வாழவேண்டும் என்பதை இவரது வாழ்க்கை ஒரு படிப்பினையாக சொல்லும்;
ராமன் ஏக-பத்தினி விரதன்; அவன் வாழ்க்கையில் ஒரே மனைவியை மட்டுமே திருமணம் செய்து கொள்ளும் கொள்கை உடையவன்; அப்படியே நேர் எதிரானவன் இராமனின் எதிரியான இராவணன்; இராவணன் இராட்சசன்; எனவே அவன் இயல்புக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள்;
எப்படி மனைவி, தன் கணவனுக்கு கற்புடையவளாக இருக்கிறாளோ, அதுபோலவே, கணவனும் ஏக-பத்தினி விரதனாக இருக்க வேண்டும்; ஆனால் இங்கு, இராவணன், பல மனைவிகளுடன் வாழ்கிறான்; ஆனால் அவன் மனைவியான “மண்டோதரி” பெண்களில் ஒளிவிளக்காக திகழ்கிறாள்; கணவன் எப்படி இருந்தபோதிலும், மனைவி பொறுமையின் சிகரமாக விளங்குவது கிடைத்தற்கறிய பொக்கிஷம்!
மண்டோதரி கற்பில் சிறந்தவள்; இராவணனுடன் போர் புரியும் இராமன் சாதாரண மனிதன் இல்லை என்றும் அவர் கடவுளின் அவதாரம் என்றும் தன் ஞான அறிவால் கண்டுகொள்கிறாள்; மண்டோதரி கற்பு அப்படிப்பட்டதாம்;
இராவணன் போரில் இறக்கிறான்; இராமன் அவனைக் கொன்று விட்டார்; இது தெரிந்த, இராவணன் மனைவி மண்டோதரி கதறிக் கொண்டு, அவள் கணவன் இறந்து கிடக்கும் இடத்துக்கு வருகிறாள்; அங்கு இப்படிப் புலம்புகிறாள்;
“ஐயகோ! நீங்கள் தேவர்களை எல்லாம் அழித்தீர்கள்; தேவர்கள் மனிதன் கையால் மாண்டனர்; இராமன் மனிதன் இல்லை என்று நீங்கள் நம்ப மறுத்து விட்டீர்கள்; எல்லாம் வல்ல கடவுளான விஷ்ணுவே, மனிதனாக அவதரித்து இந்த மண்ணில் வந்து இந்த மனிதர்களுக்கு நன்மை செய்ய வந்தார்; நான் உங்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்; இறைவனிடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று; நீங்கள் கேட்கவில்லை; நீங்கள் விதைத்ததை அறுத்து விட்டீர்கள்; எல்லோருக்கும் ஒருநாள் இறப்பு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; ஆனால், இது உங்களுக்கு கற்புடைய பெண்ணான சீதையின் உருவில் வந்துவிட்டது; கற்புடைய மாற்றான் மனைவிகளை மதிக்க வேண்டும்; அவர்களின் சாபம் பொல்லாதது; நீர் சீரழித்த எல்லா கற்புடைய மனைவிகளின் சாபமும் உமக்கு சாவாகவே வந்தது; ஆம்! உண்மையில் கற்புக்கரசிகளின் சாபம் பொல்லாதது! அது வீண்போகாது!"
இவ்வாறு இறந்த கணவனின் உடலைப் பார்த்து கதறி அழுத மண்டோதரியின் ஆன்மா அவள் உடலை விட்டு அப்போதே பிரிந்து மேலுலகு சென்றது; இராமனின் பிரம்மாஸ்திரத்தால் தாக்குண்டு இறந்த தன் கணவன் இராவணனின் ஆன்மாவை தேடிச் சென்றதாம்;

**

No comments:

Post a Comment