தமிழ்
ஊமை
("உலகளாவிய
தமிழ்" என்ற நூலுக்கு ஈழத்து பூராடனார் எழுதிய ஆசிரிய ஆதங்கம் என்ற பகுதியின் ஒரு
சிறு பகுதி)
“விவாகத்தின்
பின்னர், குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வந்த எனது நண்பரொருவர்
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தாயகத்திற்கு திரும்பினார்; அப்போது எனது
வீட்டிற்கு அவரின் 10 வயது மகனுடனும், 8 வயது மகளுடனும், தமிழ்ப் பண்பாடு மாறாத
அவரின் மனைவியுடனும் வந்திருந்தார்;
எனது
பிள்ளைகள் அவர்களுடன் கூடி விளையாடினர்; அதன்பின், என் பிள்ளைகள் என்னிடம் வந்து, “அப்பா!
இவர்களுக்கு ஒரு தமிழ்ச் சொல்கூட தெரியவில்லை; அப்பா அம்மா என்பதைக் கூட டடா, மமி
என்றுதான் சொல்கிறார்கள்” என்று கூறினர்;
தமிழ்ப்
பெற்றோருக்குப் பிறந்த இந்தப் பிள்ளைகளுக்கு அதுவும் தமிழாசியர் குடும்பங்களில்
பிறந்து வளர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்குப் பிறந்த பிள்ளைகள் தமிழ் தெரியாமல்
இருப்பது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை;
சற்று
நேரத்தின் பின்பு அவர்களுடன் உரையாடிய பின்னர், எனது சந்தேகம் தெளிந்தது; தமிழ்ப்
பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாத நிலை என்பது எனக்கு
அதிர்ச்சியை ஊட்டியது; என் மனதில் ஏற்பட்ட ஆத்திரத்தில், “என்ன நண்பரே! இவ்வளவு
அழகான குழந்தைகளைப் பெற்று இருக்கிறீர்கள்; ஆனாலும் அவர்கள் “ஊமையாக” இருப்பதைக்
கண்டு மனம் வருந்துகின்றேன்” என்று சொன்னேன்;
நண்பர்
சற்று அசந்து போனார்; பின்பு, ஆத்திரத்துடன் என்னிடம், “என் பிள்ளைகள் பேசுவது
உமக்கு கேட்கவில்லையா? உமது காது செவிடாகி விட்டதா? அதுவும் பெற்றோராகிய எங்களிடமே
எங்களின் பிள்ளைகள் ஊமை என்று சொல்லிகிறீர்களே?” என்று ஆத்திரமாகக் கேட்டார்;
“நீ
சொல்வது சரிதான்! ஆனால், உன் பிள்ளைகளுக்கு தமிழ் பேசவே தெரியவில்லையே!
அப்படியென்றால், அவர்கள் தமிழில் ஊமைகள்தானே!” என்று கேட்டேன்;
இப்படி
நான் பேசியதால், என் நண்பருடனான உறவு முறிந்து விட்டது; நாங்களும் நட்பில் ஊமைகள்
ஆகிவிட்டோம்;
இன்றும்
லட்சக்கணக்கான “தமிழ் ஊமைகள்” உலகில் வாழ்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகள்
மாத்திரமின்றி பெற்றோர்களும் தமிழ் ஊமைகள்தாம்! பெயரளவில்தான் தமிழர்; செயல்
அளவில் அவர்கள் யாரோ பிற இனத்தவர்கள்; பேசும் மொழி தமிழ் அல்ல! வாழும் வாழ்க்கை
தமிழ் வாழ்க்கை அன்று! இவர்களைப் பார்க்கும்போது, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற
பாரதியின் கோபம்தான் நினைவுக்கு வருகிறது;"
**
No comments:
Post a Comment