Friday, March 25, 2016

மானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)

“மானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)
(இந்த நூல் பற்றி ஈழத்துப் பூராடனார் “உலகளாவிய தமிழ்” என்ற நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.)

1956-ம் ஆண்டு மாசி மாதத்தில் ஒரு ஞாயிறு வாரத்தன்று நான் ஒரு முடிதிருத்தும் நிலையத்திற்குப் போயிருந்தேன்; அந்த நிலையம் ஈழத்தின் தென்பாகத்தில் அமைந்திருந்தது; அதன் சொந்தக்காரர் ஒரு தமிழர்;  ஆனால் அப்பகுதியில் சிங்களமொழி பேசும் சிங்கள மக்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர்; அந்த நிலையத்தில் முகம் மழித்தபின்னர் வழித்தெறியும் சவக்காரத்தைத் துடைத்தெறிய கடதாசியைப் பாவிப்பார்கள்; அவ்வாறு அன்று பாவிப்பதற்காக ஒரு புத்தகத்தை வைத்துக் கிழித்துப் பாவித்தார்கள்; பொன்முலாம் எழுத்திட்டு அழகாகக் கட்டிய அந்தப் புத்தகம் ஒரு தமிழ்ப் புத்தகம்; ஏறக்குறைய மூன்றங்குல உயரமானது; அங்கு எனது முறைவரும் வரையுங் காத்துக் கொண்டிருந்த நான் எனது காத்திருக்கும் நேரத்தைக் கழிப்பதற்காக அதனை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்; அது கிடைத்தற்கரிய ஒரு நூலாக இருந்தபடியால் அதற்கு ஈடாகத் தினத்தாள்களைக் கொடுத்து அதை நான் எனது சொந்தமாக்கிக் கொண்டேன்; அந்த நூல்தான் இக்கட்டுரையை வரைவதற்கு எனக்கு ஆதாரமாக இருந்தது;

அதன் விபரமாவது;
நூலின் பெயர்: மானிட மர்ம சாஸ்திரம்;
பதித்த இடம்; தென்காஞ்சி- இரங்கூன், சாமிவேல் பிரஸ்;
முதற்பதிப்பு; 1908
இரண்டாம் பதிப்பு; 1918
அளவு: 12 பாகங்களைக் கொண்ட 1000 பக்கங்கள் 250 விளக்கப் படங்கள்
நூலின் ஆசிரியர்: எஸ்.சாமிவேல் (வீ.ஏ)
நூலாசிரியரின் விபரங்கள்: கல்கத்தா சர்வ சங்கத்தின் தமிழ்ப் பரீட்சகர், ரெங்கூன் சென் ஜோன்ஸ் கலாசாலைப் பிரதம ஆசிரியர், கணித சாத்திரம், பூமி சாத்திரம் எனும் நூல்களையும் இயற்றியவர்; மானித மர்ம சாத்திரப் பண்டிதர் வைத்திய சாமிவேல் வைத்திய சாலையின் தலைவர்; ஆங்கிலம், தமிழ், வடமொழிப் பண்டிதர்;

இதன் அரங்கேற்றம் 24.6.1908-ம் தினத்தன்று இரங்கூனில் நடைபெற்றபோது, இந்தியாவிலிருந்து மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாகத் தண்டாலயம் பாலசுந்தரம்பிள்ளை என்பவர் வந்திருந்தார்; இவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சகர்; இவர் தனது மதிப்புரையில் ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்;
Some books are to be tasted, others to be swallowed and some to be chewed and digested.” என்று Bacon கூறினார்; I sincerely hope that the book which is the first of kind in Tamil என்று சங்க முத்திரையிட்டுள்ளார்; அத்துடன் தமிழில் இது ஒரு சித்தாந்த, வேதாந்த, வைத்திய, வாழ்க்கை நூற் களஞ்சியம் என்றும் கூறியுள்ளார்;
**

1 comment:

  1. வணக்கம் ஐயா. “மானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு) இந்த நூலின் பிரதி கிடைக்குமா? அருள்கூர்ந்து தெரியப்படுத்தவும்.

    ReplyDelete