Sunday, January 3, 2016

தோம்புக் கதை

தோம்புக் கதை
சில முதலாளிகள் காசுக் கட்டுகளை எண்ணும்போது ஒன்றினை "லாபம்" என்று ஒதுக்கி விடுகிறார்கள். பத்து ரூபா கட்டில், முதற் பத்தும், நூறு ரூபாவானால் முதல் நூறும், ஆயிரங்களில் முதலாயிரமும் லாபங்கள். அவரவர் தரத்துக்கு ஏற்ப புளக்கத்தில் இல்லாமல் முடக்கப் படுகின்றனவா என நினைத்ததுண்டு.
ஒரு நாற்பது , நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன், செம்பு லோகத்தினாலான, தடித்த ஒரு சதம், அரைச் சதம், காற்சதக் குற்றிகளும் அதன்மேல் வெண்பொன்னாலான ஐந்து, பத்து, இருபத்தைந்து, ஐம்பது சத நாணயங்களும், முழு ஒரு ரூபாக் குற்றிகளும் புளக்கத்தில் இருந்தன. ஒரு வல்லுவம் (சாசுப்பை) நிறையச் சில சில்லறைகள் போதும். அக்கால வழக்கில் என் பாட்டனார் ஒன்றரைச் சதங்களை "ஒரு துட்டு" என்றும், ஆறு சதங்களை "ஒரு பணம்" என்றும் ஐம்பது சதக் குற்றியை "சில்லிங்" என்றும், பத்து ரூபாவை "ஒரு பவுன்" என்றும் கூறுவார். உண்மையில் அன்று ஒரு தங்கப் பவுன் பத்து ரூபா பெறுமதியானதென்றும் அறிந்திருந்தேன்.
எங்களுக்கிருக்கும் ஒரு காணியை இரண்டு இறசாலுக்குத் தனது முன்னோர் வாங்கியதாக எனது பாட்டனார் கூறினார். அந்த இறசாலின் பெறுமதியை இன்றைய ரூபாவில் சொல்ல, அவர் அறிந்திருக்கவில்லை. உலாந்தாக்காரர் என்ற ஒல்லாந்தர்கள், நிலங்களை அளந்து விற்று, இறசால் கணக்கில் பணத்தினைப் பெற்றுக் கொண்டு நொத்தரிசு (Notary) மூலம் உறுதி முடித்துக் கொடுத்துள்ளார்கள். இவ்வுறுதிகளைத் தோம்பு என்று கூறுகிறார்கள். இவ்வாறே பழைய கதைகளைச் சொல்லும் போது, தோம்புக் கதைகள் என்றும் சொல்வார். இவை டச்சுக் காலக் கதைகளாக இருக்குமோ என்னவோ, எனது பாட்டனார் சொன்ன, ஒரு புத்தியுள்ள கிழவனின் அந்திம காலம் பற்றிய கதை இது.
வயோதிகம் மிகக் கொடுமையானது. "இந்தக் கிழடுகளைக் கட்டிக் கொண்டு அழ யாரால் முடியும், நேரகாலத்துக்குப் போகாமல் கிடக்குதுகளே" என்று வருத்தப்பட்டு கொள்வாரும் உண்டு.
பாட்டனுக்கு கஞ்சி கொடுக்கும் சிரட்டையைக் காணாது தேடியபோது, "உங்களுக்குக் கஞ்சிதர எனக்குத் தேவைப்படும், அதனால் அந்த சிரட்டையை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்" என்று மகன் சொன்னதை நினைப்பவர்களும் உண்டு.
பிள்ளைகளின் நினைப்பையும் நிலையையும் உணர்ந்து, "கண் கெட்ட கடவுள் என்னைக் கொண்டு போறார் இல்லையே" என்று உறவோடிரங்கும் வயோதிகர்கள் பலர்.
இளமையோடு இருக்கும்போதே இறந்துவிட்டால், "ஐயோ நாம் என்ன செய்வோம்" என்றே அழும் மனைவி மக்கள், தாமும் வயது சென்று கிழடான பின், "ஏன் இன்னமும் கிடக்குது" என்று அலுத்துக் கொள்வார்கள்.
கைப்பொருள், சம்பாத்தியம் வைத்திருக்கும் வயோதிகப் பெற்றோரைப் பராமரிக்க, "நான் முந்தி, நான் முந்தி" என்று முந்திக் கொண்டு சேவை செய்யப் பிள்ளைகள் வருவர். இன்றும் அன்றும் எமது சமுதாய நிலை இது. ஒன்று இரண்டு புறநடை இருக்கலாம்.
"அன்னையும் பிதாவும் பின்னடிக் கிடைஞ்சல்" என்ற புதுமொழி பகடியாகக் கூறப்பட்டாலும், சிந்தனைக்குரியதே. நாலைந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்த தந்தை தாயாரைப் பார்ப்பது யார் என்ற தகராறு குடும்ப உறவுகளையே பிரித்துப் போட்ட சமாச்சாரங்கள் பல. இவற்றினைத் தெரிந்து கொண்ட அனுபவஸ்தர்களான சிலர், எய்ப்பினில் வைப்பாக பணச் சேமிப்புகளைத் தமது கையிலேயே வைத்திருப்பர். அப்படி இல்லாத ஏழைக் கிழவர்கள் தமது அடிப்படைத் தேவைகட்கே அல்லற்படுவது உலக அனுபவம். இத்தகையவர்கள் தமது இறுதிக் காலத்தில் அனுபவித்த சோகங்களை அறிந்த எனது பாட்டனார் சொன்ன கதை வருகிறது.
ஒரு கிழவன், தனது ஐந்து பிள்ளைகளில், ஒருவரோடும் இன்றித் தானும் தன் பாடுமாய் ஒரு குடிலில் இருந்தார். உழைத்து வாழக்கூடிய தெம்பு இருக்கும்போது மற்றவர்கட்கு இடைஞ்சல் தரக்கூடாது என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.
பனாட்டுப் பினைதல், கடகம் பெட்டி இழைத்தல், ஈர்வாணிக் கொடி, உறி என்பன பின்னுதல், குத்துக் கண்ணி, கந்துவான், பாதக்கண்ணி நாற்கயிறு திரித்தல் போன்றன அவரின் தொழில்கள். இத்தொழிலில் இவர் நிபுணருங்கூட. இத்தொழிகளாற் கிடைக்கும் பண்ட மாற்றுத் தானியங்களையும் சொற்ப கட்டுக்களையும் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
இல்லாத பொல்லாத காலத்தில் காடும் கடலுங் கை கொடுக்க வாழ்க்கை சுகமாக நடந்தது.
சிறிது காலத்தில், அவர் நோய்வாய் பட்டுப் போனார். வயோதிக நோய். தொழில் செய்ய முடியவில்லை. வெளியில் சென்று வரவும் முடியவில்லை. ஐந்து பிள்ளைகள் குடும்பங்களுடன் ஒரே வளாகத்தில் பக்கம் பக்கமாக இருந்தும், கிழவரைக் கவனிப்பதில்லை. ஏனோ தானோ என்று அலுத்துப் போன நிலையில் எப்போதாவது வருவார்கள், போவார்கள்.
ஒருநாள், மூத்தமகன் வந்து எட்டிப் பார்த்தார். அவரைக் கண்டதும், மெல்லவே தனது படுக்கையில் கிடந்து எழுந்திருத்த கிழவர், தலையனைபோல் ஓலையால் இழைக்கப் பெற்றிருந்த ஒன்றைத் தலையின் கீழே இருந்து எடுத்து, மடியில் வைத்துக் கொண்டார். கைகள் மெல்லவே தலையனையில் தாளம் போட மகனைப் பார்த்துச் சொன்னார்.
"எனது நிலைமை சரியில்லை. இன்றோ நாளையோ சில நாட்களோ வாரங்களோ தெரியாது மகனே! எனது "சாவீட்டை" எளிய முறையில் நடத்திவிடுங்கள். பெற்று வளர்த்தது என் கடமை என்று அதை ஏதோ என் வசதிக்கேற்பச் செய்தேன். உங்கள் ஐந்து பேரையும் வளர்த்தெடுக்க நான் பட்ட பாட்டை உங்கள் ஆத்தாள் இருந்தாள் சொல்வாள், அந்த இலட்சுமி இந்தப் பாடுகளைக் காணமலே கண்மூடிவிட்டாள், புண்ணியவதி...." "இனி உங்கள் கடமை, ஊரார் நகைக்காமல், எல்லோரும் ஒற்றுமையாக நின்று சிக்கனமாக நடத்தி விடுங்கள்" என்று கூறினார்.
மகன் மௌனமாகவே இருந்தார். தகப்பனின் நிலை கவலை கொடுத்தது, அவர் மடி மீது இருந்த தலையனையிலும் கருத்துச் சென்றது. கிழவன் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த சில்லறைகளாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பினார். ஆனால் வாய் திறந்து அதைப் பற்றி விசாரிக்காமலேயே வெளியே சென்றார்.
சிறிது நேரஞ் செல்ல, மூத்தவனின் மனைவி உணவுப் பெட்டியுடன் கிழவனாரின் கொட்டிலுள் நுழைந்தாள். இப்போது போல அக்காலத்தில் கடுதாசுப் பைகள் கிடையாது. உணவுப் பெட்டியைக் கிழவனிடம் கொடுத்து விட்டுத் திரும்பியவள், தலையனை உமலையும் கடைக்கண்ணாற் கண்டு கொண்டே சென்றாள்.
இவர்கள் இப்படியாகத் தொடர்புகள் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, ஏணைய மக்கள் மருமக்கள் தாமும் ஏதோ விசேடம் அறிவார் போலப் போக வரத் தொடங்கினர். குசலம் விசாரித்தார்கள். எல்லோருக்கும் தனது அந்திம காலத்தை வெளிப்படுத்திக் கொண்ட கிழவனார், மடியிலிருக்கும் தலையனையில் தாளம் போட மறக்கவில்லை. கேள்விகளுக்குக் கூறும் பதிலோடு பதிலாக, தலையனையில், தாளம் போட்டபடி, அதனுள் இருந்து "கல் கல்" என ஒலி எழ, அதற்கு ஒத்திசைவாகக்
"கேட்டுக்க பொக்கணம் (பொட்டலம்)
கேட்டுக்க பொக்கணம்,
சோறும் வந்தது கேட்டுக்க பொக்கணம்,
கறியும் வந்தது கேட்டுக்க பொக்கணம்,
மீனும் வேணும் கேட்டுக்க பொக்கணம்,
மேலும் வேணும் கேட்டுக்க பொக்கணம்"
என்ற பாட்டும் வரும்.
மக்கள் மருமக்கள், 'கிழவர் எங்களை வாயாற்கேளாது, பொக்கணத்திடம் அல்லவா கேட்கிறார்.' பொக்கணத்துள் ஏதோ பெருஞ் சங்கதி இருக்குது போல என்று நினைத்து கொண்டார்கள். கிழவர் பொக்கணத்திடம் கேட்பதனைப் பிள்ளைகள் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் பொக்கணத்தையும் ஒரு கண் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள். இவற்றை அவதானித்த கிழவருக்கு உள்ளூர மகிழ்ச்சி. பொக்கணத்தைப் பற்றிய நம்பிக்கை வலுத்த வேளையில் அதன் பாதுகாப்புப் பற்றிய கவலையும் வலுத்தது. அது களவு போக முடியவே முடியாது, ஐயிரண்டு பத்துப்பேர் ஒருவர் அறியாமல் ஒருவர் அதற்குக் காவல். இவர்களை மிஞ்சி எவன் வரப் போறான்? என்ற நினைவுடனே இருந்த கிழவர், ஒருநாள் திடீரென்று மண்டையைப் போட்டுவிட்டார்.
ஏதோ ஒரு அரவங்கேட்டு ஒருவர் பின் ஒருவராக ஓடிவந்த பிள்ளைகள், நிலைமையைப் புரிந்து கொண்டு முதலிற் பார்த்தது தலையனையைத் தான். ஒருவரும் அதனைத் தட்டிப் பார்க்காது விடவில்லை. அதன் திண்மையும் 'கல்' என்ற ஒலியும் எல்லார் உள்ளத்திலும் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. முதல் வேளையாகத் தலையனையை ஒரு பாயாற் சுற்றி மறைத்துக் கட்டி, வீட்டு முகட்டுக் கூரையில் தொங்க விட்டார்கள். இதன் பின்னரே இறந்து போன கிழவனைத் துடைத்து ஒரு பாயில் வளர்த்தி, ஊர் உறவிற்கு அறிவிக்கவும் செலவைப் பற்றி சிந்திக்கவும் தொடங்கினார்கள்.
சாவீட்டு நிகழ்வுகளை முதன் மகன் ஒழுங்குபடுத்தினார். தந்தையார் தனக்குச் சொன்ன புத்திமதிகளை இம்மியும் பிசகாது அவர் சொற்படி நிறைவேற்றுவேன் என்று விடாப் பிடியாய் நின்றதால் சாவீட்டுச் செலவு ஒரு நூறினைத் தாண்டவில்லை.
இந்தச் செலவினைக் கேட்கும்போது இன்றைய சாவீட்டை ஒப்பிட்டால் மண்ணாங்கட்டிக்கும் மலைக்கும் உள்ள உயரம். இரண்டும் சாவீடுகள் தான். இறந்த உயிர்கள் திரும்பப் பிறக்காமல் விடப்போவதில்லை. தமது பெற்றோரை உயர் பதவிகளில் பணத்தினால் இருத்தலாம் என நினைக்கிறார்களோ இல்லையோ, தமது பெருமையைக் காட்டச் செய்யும் செலவினையும், குறைத்துக் கொண்டால், வசதியற்றோர்க்கு உதவாவிடினும் வழிகாட்டுதலாக அமையுமே என்ற ஆதாங்கத்தோடு தொடர்ந்து கதையைக் கேட்டேன்.
ஒரு சாப்பறையும், தம்பட்டமும் முழங்க ஆட்பேர்கள் சேர்ந்து விட்டார்கள், தடி வெட்டுபவன் தடி வெட்ட, பாடை கட்டுபவன் பாடை கட்ட, கட்டாடி பாடையைச் சுற்றிச் சேலை கட்டி முடிஞ்சுது. நாவிதன் பனணாங்கு பின்னியாச்சு, நாலு மூலைக்கு நாலு வாழைக் குட்டிகளைக் கட்ட வேண்டியதுதான். பாடை தயாராச்சு.
அடுத்தென்ன? கட்டைதறிச்சு வண்டியில் சுடுகாடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் பிரதேதத்தை அரப்பெண்ணெய் வைத்து முழுக்காட்டிப் புத்தாடை புனைந்து, திருநீறு பூசிச் சந்தனம் குங்கும திலகமிட்டு, ஒரு மரக்கட்டிலில் தெற்கே தலை வைத்து வளர்த்தியாச்சு. நாலு தேவாரம் தெரிந்தோர் தேவாரம் பாடக் கற்பூர தீபப்புகையில் சாம்பிராணிப் புகையும் சந்தன வாசமும் பரிமளிக்க வாய்க்கரிசியிட்டு வழியனுப்புவோர் கட்டி ஒப்பாரி வைக்கப் பிரேதம் பவனியாகச் சுடுகாடு சென்றடையும்.
பிரேதத்தைக் கட்டையில் வைத்து, எழும்பி நிமிராதவாறு பாரமான நெஞ்சாங் கட்டையைப் பொருத்தி, குடம் உடைத்துக் கொள்ளி வைத்தவர் திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர வேண்டியதுதான். சாவீடு முடிந்தது.
அடுத்த மூன்றாம் நாள் காடாத்து. நாவிதர் பிரதான பாத்திரம் வகிக்க, மூன்று நான்கு பேரோடு காரியம் சரி. அடுத்துள்ள எட்டுச் சிலவு. ஏழுக்கும் ஆறுக்கும் ஐந்துக்கும் கூட நடத்தலாம். நடத்தும் தினத்தைக் குறிப்பிட்டு உற்றார் உறவினருக்குத் தெரிவித்து விட்டுவந்து பந்தலுள் இரண்டு மூன்று கடகங்களை வைப்பர். வீடுகளில் அரிசி, காய்பிஞ்சு, தேங்காய், வெற்றிலை, பாக்கு என்பனவும், குறைந்தது ஆளுக்கு ஒரு பணம் (ஆறு சதம்) வீதம் காசும் வந்துசேரும்.
அரிசி தந்த ஒவ்வொரு வீட்டினருக்கும் அன்று சாப்பாடு. இறந்தவர் விரும்பி உண்ட உணவுகளனைத்தும் படையல் இட்டுக் குடிப்பறையன், குடிமை வண்ணான், குடிமை நாவிதன், என்பவர்கட்குக் கொடுப்பதுடன் அன்றுதான் சாவீட்டு வரவு செலவுகளைப் பார்த்து முடிப்பது வழக்கம்.
இவ்வாற்றே எல்லாவற்றையும் நிறைவேற்றியபின், சகோதரர் அனைவரும் சேர்ந்திருந்த சபையில், முகட்டில் தொங்கிய தலையனை அவிழ்க்கப் பெற்றது. எல்லா விழிகளும் பொட்டணத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நிற்க, பொட்டணம் ஒரு சத்தகத்தால் கீறிக் கொட்டப்பட்டது. எல்லோர் மனதிலும் தோன்றி எழுந்த ஆவலின் பிரதிபலிப்பைக் கலகலவென்று கொட்டிய சிப்பி சோக்கிக் குவியலைக் கண்டு, "அட அண்ண வெறுச் சிப்பியடா" என்று எல்லோரும் அலுத்துக் கொண்ட போதிலும், கிழவரின் தந்திரத்தை எண்ணித் தம்முள் வெட்கமுங் கொண்டனர்" என்றார்.
இந்த கதையை கேட்டதும், "பாட்டா, நீங்கள் ஏமாற்ற மாட்டீர்கள் அல்லவா" என்று கேட்டுச் சிரித்தபோது, எனது தாயார், 'அவர்தான் ஒவ்வொரு காணியாய் விற்றுக் கொண்டு வாராறே" என்றார். எப்படி கவலை என்று பாருங்கள்.

(நன்றி:: தில்லை சிவன் அவர்களின் "அந்தக் கால கதைகள்" என்ற கதை தொகுப்பிலிருந்து ஒரு பகுதி.)
**


No comments:

Post a Comment