வலம்புரி சங்கு
பௌர்ணமி அமாவாசை இரவு
வேளைகளில் தீவுப் பகுதியைச் சுற்றியுள்ள பெருஞ் சமுத்திரங்களில் இருந்து "ஓம்"
எனப் பேரொலி எழுந்து ஒலிப்பதைச் சிலர் கேட்டிருப்பர். பலர், இவ்வொலி, கடல் அலை வீசும்போது உண்டாகும் அலையோசை என,
அவதானிக்காதுமிருப்பர். ஓங்காரத் துவத்த தொனியில் கேட்கும் ஒலி சமுத்திரங்களின்
முழக்கம் என எனது பாட்டனார் கூறுவார். சமுத்திரத்தின் மையத்தில் தோன்றி, வரவரக் கரைந்து, கரையோர மக்களின் செவியில் வண்டின் ஒலிபோல
மெலிதாக இசைத்துக் கொண்டிருப்பதை, அவதானிப்போரால் கேட்க முடியும்.
ஊரி, ஊட்டி, சிப்பி, சங்கு முதலானவை
ஒரே இன உயிரிகள். எமது "நாய்வெட்டி வாய்க்கால்" கரைகளில் ஊரிகள் பாடுவதை,
சில வேளைகளில் அவதானிக்கலாம். இரவிலோ பகலிலோ அமைதியான ஒரு இடத்தில்,
ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு கேட்டால் ஒரு மெல்லிய நாதம் கேட்பதை
உணர முடியும். இதனைச் சிலர் சுவர்க்கோழியின் ஓசை எனவும் கூறுவர். இவ்வோசைகளையும்
"பாஞ்சசன்நியத்தின்" ஓங்காரத் தொனியையும் பிரித்து, இதோ பாஞ்சசன்நியம் என்று என் பாட்டனார் சொல்லுவார். ஆயின் அதை என்னால் கேட்க
முடிவதில்லை.
ஆயிரம் சிப்பிகள் சூழ, ஒரு இடம்புரி சங்கும், ஆயிரம் இடம்புரி சூழ, ஒரு வலம்புரிசங்கும், ஆயிரம் வலம்புரி சூழ ஒரு சலஞ்சமும்,
ஆயிரம் சலஞ்சஞ்சூழ ஒரு பாஞ்சசன்நியமும் ஒரே கூட்டமாக வாழும் என்றும், பாஞ்சசன்நியம் ஊதும்போது, மற்றெல்லாச் சங்குகளும் சேர்ந்தொலிப்பதால்,
கடலுள் பேரொலி எழுமென்றும், அப்பேரொலிச் செறிவில்
பாஞ்சசன்நியத்தின் ஒலி கெம்பீரமாய் கேட்கும் என்றும், எனது பாட்டனார்
கூறுவார். அவரது அவதானிப்பு ஏதும் தவறாது. இப்படியான ஒரு பாஞ்சசன்நிய சங்கினையே பரமாத்மாவாகிய
கண்ணபிரான் கையில் வைத்துள்ளார் என்று கூறுவர்.
(நன்றி:: தில்லை சிவனின்
"அந்தக் காலத்துக் கதைகள்" என்ற தொகுப்பிலிருந்து ஒரு பகுதி இது)
No comments:
Post a Comment