Saturday, January 16, 2016

தூக்கணாங்குருவியும், கரிக்குருவியின் "மிருத்துயுஞ்சய" மந்திரமும்

தூக்கணாங்குருவியும், கரிக்குருவியின் "மிருத்துயுஞ்சய" மந்திரமும்;
அன்று எங்கள் வளவுக்குமுன் பல இலந்தைகள் வரிசையாக நின்றன; பக்கங்களில் வேம்பு, அரசு, இலுப்பை, இப்படியாகப் பலவகை மரங்கள் நெருங்கி நின்ற இலந்தை மரக்கொப்புகளில் அநேக தூக்கணாங் குருவிக் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன; பார்க்க மனோரம்மியமான எழில் கொண்டவை;
பன்ணாடைத் தும்புகள், தென்னோலைக் கீற்றுகள், இவைகளைக் கொண்டு அடிமுடி அறிய முடியாதவாறு அழகாக அமைக்கப் பெற்ற கூடுகளவை; அக்கூடுகளும் இரண்டு வகையானவை; ஒன்று நீண்டதாயும், கங்காருவின் வயிறு போன்ற நடுப்பகுதியும், குளாய் வடிவாய் கீழே இருந்து உள்ளே வரவும் போகவும் உரிய வழியும் உடையது; மற்றது பிட்டு மூடி போல அமைந்து நடுவாக இரண்டு பக்கங்களையும் நேராக இணைத்துள்ள ஒரு கயிறும் உடையது: இவ்விருவகைக் கூடுகளும் கொப்புகளின் நுனியில் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக அமைந்திருக்கும்;
பெண் குருவி தன் நீண்ட பெரிய கூட்டின் வயிற்றறையில் முட்டையிட்டு அடைகாக்கும் பொழுதெல்லாம், ஆண் குருவி தனது சிறிய கூட்டின் நடுவே கயிற்றாசனத்தில் அமர்ந்திருந்து காவல் காக்கும்; ஏதும் அரவம் கேட்டால் அல்லது மரங்களின் கீழே நாய் பூனை போன்ற மிருகங்கள் காணப்பட்டால் ஆண் குருவி தன் பெண்ணின் கூட்டைச் சுற்றிச் சுற்றிப் பறந்து கத்தித்திரியும்; அம்மரத்தில் காகம் போன்ற வேற்றினப் பறவைகள் வந்தாலோ நிலமை வேறு; ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து அவற்றைக் குட்டிக் கலைக்கும்; இந்த வேளையில் இவைகட்கு உதவியாக எங்கிருத்தோ பறந்து வரும் ஒரு கரிக்குருவி இவைகளுடன் சேர்ந்து பகைப் பறவைகளைக் குட்டுவதை பார்த்து வியந்துள்ளேன்;
இந்த கரிக்குருவி ஒரு கிளைவையிலோ, மரத்திலோ இலைகள் குறைவாக உள்ள 'பட்ட கொம்பின்நுனியில் தனிமையாகவே இருக்கும்; சாதாகாலமும் "ச்,சு...,ச்.சு..." என்று சத்தம் இட்டுக் கொண்டிருக்கும்; இக்கரிக்குருவி சாகாவரம் பெற்றெதென்றும், அவை எப்போதும் "மிருத்துயுஞ்சய" மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது" என்று எனது பாட்டனார் சொல்லுவார்;
இந்த தூக்கணாங்குருவிகள் இரண்டும், காலை மாலை வேளைகளில் ஒன்றாக ஒரே கூட்டின் ஆசனத்தில் இருந்து கொண்டு கதைப்பதும் ஒன்றையொன்று தமது அலகுகளால் இறகுகளைக் கோதி விட்டு களிப்பதுமாக இருக்கும்; அடிக்கடி வெளியே பறந்து சென்று இரைதேடிக் கொண்டு வந்து கூட்டுள் இருக்கும் குஞ்சுகளுக்கு இரண்டு குருவிகளும் மாறிமாறி ஊட்டும்; எப்போதும் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதில் ஆணே முன் நிற்கும்; ஆண் குருவின் தலை தட்டையாகவும் சற்றுக் கறுத்தும் இருக்கும்; பெண்குருவியின் தலை சிறிதாய் பழுப்பு நிறத்தில் இருக்கும்;
(நன்றி; தில்லைச்சிவனின் "அந்தக் காலத்துக் கதைகள்" தொகுப்பிலிருந்து)
**

மிருத்யுஞ்சய மந்திரம்:

ஓம் திரியம்பகம் யஜா மகே!
சுகந்திம் புஷ்டீ வர்தனம்!
உருவா ருகமிவ பந்தனான்!
மிரித்யோ மோட்சியே மா அம்ருதாத்!

(முக்கண்ணனும் என்னை வாழ்விப்பவனுமான சிவனே போற்றி!
விளாம்பழம் முதிர்ந்ததும் தானே விழுவதைப் போல, பந்தங்களிலிருந்து என்னை விடுவித்து, 
மரண பயத்திலிருந்தும் விடுவித்து, அழிவில்லா நிலையான அமிர்தமான மோட்சத்தை அடைய 
வழி செய்வாய் ஈசுவரனே!)

No comments:

Post a Comment