Sunday, January 3, 2016

மண்டைக்கயிறு

மண்டைக்கயிறு
பலவகை சங்குகள் மலிந்துள்ள எமது சமுத்திரங்களில், சங்கு குளிக்கும் பொருட்டுக் கீழைக்கரை சோனகர் பலர், காலத்துக்குக் காலம் தீவுப் பகுதி மண்ணில் ஜாகை அடித்துத் தொழில் செய்து, திரும்பும் வழமை, தொன்று தொட்டே இருந்தது. இப்படித் தொழில் நிமித்தம் வந்த கீழைக் கரையாரிற் சிலர் நிரந்தரமாகவே இப்பகுதிகளில் தங்கி விட்டார்கள். இன்று நயினா தீவில் வாழும் முசுலிம்கள், புலம் பெயர்ந்து வந்து, தொழில் காரணமாகத் தரித்துள்ளவர்களின் சந்ததியினர் என்பர்.
நாலைந்து பாகத் தண்ணீரில் முக்குளித்துச்  சுழியோடிச் சங்கெடுத்து விற்றுப் பிழைக்கும் தொழில் அவர்களுடையது. நாலைந்து பாகம் ஆழமான கடலிற் சுழியோடும். சுழியோடி, அரையிற் கட்டிய கயிற்றின் தலைப்பைக் குல்லாவில் நிற்பவரிடம் கொடுத்துப் போவர் என்றும், கயிற்றைச் சுண்டும் அசைவு கண்டவுடன், மேலுள்ளவர் இழுக்கத்தவறினால், ஆள் "மவுத்" ஆகிவிடுவார் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எம்மூரில், மச்சான் முறை உள்ளவரை "மண்டைக்கயிறு" என்று சொல்வதுண்டு. சுழியோடியின் கயிறு அவரது மனைவியின் சகோதரனிடம் கொடுக்கும் வழக்கத்தினால், மைத்துனனை மண்டைக்கயிறென்று அழைத்தனர் போலும்.
சமுத்திரத்தில் சங்கு குளிப்பவர்களின் நிலை இவ்வாறாக, எமதூர் சரவணையிலும், ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டுகளின் முன், பலர் சங்கெடுத்தார்கள். சமுத்திரங்களில் சுழியோடி அல்ல, நிலத்தில் குழிதோண்டி.
(நன்றி:: தில்லைச் சிவனின் "அந்தக்காலத்துக் கதைகள்" என்ற தொகுப்பிலிருந்து ஒரு பகுதி இது).

**

No comments:

Post a Comment